Site icon சக்கரம்

கோவிட்-19 என்ற போர்வையில், மோடி ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது

பேரா. ராமச்சந்திர குஹா

ந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல்,ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்துக்கே 2020ஆம் ஆண்டு பெரும் துயரங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. அதிகாரத்துவத்துக்கு பேர் போன மோடி ,அமித் ஷா கூட்டணி இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தை உருக்குலைத்து, தங்கள் ஆளுமையை,அழுத்தத்தை அரசு மற்றும் சிவில் சமூகத்தை இந்த பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி நிலைகுலைய வைத்துள்ளனர் . அவர்களின் இலக்குகளை முழுமையாக அடைந்திட, இந்திய நாடாளுமன்றம், கூட்டாட்சி, ஊடகம், சிவில் சமூக அமைப்புகளின் மீது பன்முக தாக்குதலை தொடுத்துள்ளனர். 

மோடியின் கடந்த காலம்…
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, சட்டமன்ற ஜனநாயக நெறிமுறைகளை கிஞ்சிற்றும் பின்பற்றாதவர். சொல்லப்போனால் அதன் மீது துளியும் நம்பிக்கை கொள்ளாதவர். அந்த நெறிமுறைகளை எதிர்த்தே பணியாற்றியவர். குஜராத் என்ற மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் மோடி முதலமைச்சராக இருந்த ஆண்டுகளில் தான் அம்மாநில சட்டமன்றம் குறைவாக கூட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் வந்த ஒரு ஆய்வு அறிக்கை சொல்லுகிறது. 

அவரது ஆட்சிக் காலத்தில் பல மாதங்களுக்கு சட்டமன்றமே கூடாது. அப்படியே தப்பி தவறி கூடினாலும், அவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் எனும் பேரில் வீணாக நேரத்தை கழித்து அவையை இரங்கல் கூட்டமாக மாற்றுவார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு வாய்ப்பே இருக்காது. அப்படியே பேசினாலும் அதை மோடி கண்டு கொள்ளவே மாட்டார். இது ஏதோ எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நிலையல்ல. தன் சொந்தக் கட்சி உறுப்பினர் கூட எதையும் பேச முடியாது, அனுமதியும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால், முக்கிய முடிவுகளை எடுக்கும் போது தன் அமைச்சரவை கூட்டத்தைக்  கூட நடத்தியதில்லை. இந்த அதிகாரத் திமிரோடு தான் மோடி தில்லிக்கு வந்தார். ஏற்கெனவே செய்ததை பிரதமராக ஆன பின்பும் செய்கிறார்.

மோடியும்- நாடாளுமன்றமும்
இந்திய நாடாளுமன்ற அவை என்பது மோடியை பொறுத்தவரை,   வெறும் உரைகள் நிகழ்த்தும் மண்டபம் அவ்வளவே. மாறாக  நாடு, அதன் குடி மக்கள் குறித்த பிரச்சனைகள் பற்றி விவாதிக்கும் இடமல்ல. தற்போதுள்ள நாடாளுமன்ற சபாநாயகரும், மாநிலங்களவையின் தலைவரும் தங்கள் அரசியல் தலைவரின் சிந்தனைக்கேற்ப  அடியொற்றி இந்த இரு அவையின் மாண்புகளை குலைத்து “சார்புத் தன்மையோடு” நடந்து கொள்கின்றனர். இதற்கு சான்றுகள்  ஏராளம் உள்ளன. சமீபத்தில் “ வேளாண் திருத்தச் சட்டங்கள்” எப்படி இரு அவையிலும், “ நிறைவேற்றப்பட்டது” என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதுவும் குறிப்பாக மாநிலங்களையில்,அதன் துணை தலைவர் ஹரிவன்ஷ் நேரடி வாக்கெடுப்புக்கு அனுமதிக்காமல், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த மசோதாக்களை  சட்டமாக்கியதை பார்த்தோம். நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.டி.டி ஆச்சாரி இம்மாதிரியான ஜனநாயக விதி மீறல்நல்லதல்ல என்றும்  நாடாளுமன்ற முறைமையே எதிர்க் கட்சிகளை விவாதிக்க விடுவதிலும், அம்மாதிரியான விவாதங்களின் வழியாக இறுதியாக  அரசுகள் முடிவெடுப்பதும் என்பது தான். எதிர்க்கட்சிகளை பேச விடாமல், விவாதங்களே நடத்தாமல் போனால் ஜனநாயகத்தின் மிக முக்கியமான நிறுவனமான நாடாளுமன்றம் நீண்ட நாட்கள் நீடிக்காது என அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

எல்லாவற்றையும் கண்மூடித் தனமாக
மோடியின் “ பக்தர்கள்” எப்போதும் போல இந்த ஜனநாயக விதிமீறல்களையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், வேளாண் திருத்தச் சட்டங்களை வரலாற்றுச் சிறப்பு மிக்கவை என்று போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நேசிக்கும், அதற்கு மதிப்பளிக்கும் சிலர் இந்த சட்டங்களை ஆதரித்தாலும், அது சட்டமாக்கப்படும் போது அவையின் மாண்புகள் எப்படி மீறப்பட்டன. அதன் அதிகாரம் எவ்வாறுசிறுமைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வேதனையுற்று தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். இதோ ஒரு சான்று..மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் பின் வருமாறு எழுதுகிறார், “ கடுமையான பொருளாதார இழப்பையும், தலைநகர் தில்லியைச் சுற்றிஇயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருப்பதையும் நாடாளுமன்றத்தில் இந்த வேளாண் சட்டங்களை முறையாக விவாதித்திருந்தால் தடுத்திருக்க முடியும். விவசாயிகளின் இந்தப் போராட்டம் நாடாளுமன்ற ஜனநாயகம் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது. 

மத்திய அமைச்சர்களோ இந்தப் போராட்டத்திற்கு நகர்ப்புற நக்சல்களே, காலிஸ்தான் தீவிரவாதிகளே, எதிர்க்கட்சிகளே காரணமென கூறலாம். ஆனால் தத்தார் சொல்கிறார்“ எதிர் வினைகளை பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், ஒரே குறிக்கோளோடு பெரும் எதிர்ப்பையும் மீறி, இந்தச் சட்டங்களை இரு அவையிலும் நிறைவேற்றிய விதமே இந்த போராட்டங்களுக்கு அடிப்படை. பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதாரப் பாதிப்பை இந்த போராட்டங்கள் மேலும் அதிகமாக்கும்.” இது மத்திய ஆட்சியாளர்களால் வலிந்து திணிக்கப்பட்டதே. ஒரு பக்கம்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரைமொத்தமாக கொரோனா தொற்று என ரத்து செய்து விட்டு, அமித் ஷா மேற்கு வங்கத்திலும், அசாமிலும் பெரும் பொதுக் கூட்டங்களை நடத்துகிறார். குஜராத்தின் முதலமைச்சராக இருக்கும் போது கூட்டுறவு கூட்டாட்சியின் தனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என சொன்ன மோடி, இப்போது பிரதமரான பிறகு மாநிலங்களின் உரிமைகளை காட்டுமிராண்டித்தனமாக, காலில் போட்டு மிதித்து, அனைத்தையும் மறுக்கிறார். இதற்கும் இப்போதைய வேளாண் சட்டங்களின் திருத்தங்களே சான்று. 

நமது அரசியலமைப்பு சட்டம் “விவசாயம்” மற்றும் “சந்தை”யை மாநில அரசு பட்டியலில் வைத்துள்ளது. மத்தியஅரசு அதை ஊக்குவிக்க, மேலும் சில சலுகைகளை வழங்க, மாநில அரசுகளை கேட்டுக் கொள்ளலாம் . ஆனால்ஒரு போதும் “ தானாக” எந்த சட்டத்தையும் இயற்றிட முடியாது என்பதை தெளிவாகச் சொல்கிறார்  ஹரிஷ் தாமோதரன். ஆனாலும், ஒருங்கியல் அதிகாரப் பட்டியலில், வேண்டுமென்றே தவறான விளக்கத்தை முன்வைத்து, உணவுக்கான  வர்த்தக மற்றும் பொருளாதாரப் பட்டியலில் மாற்றம்செய்து,மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல்  இந்தமசோதாக்களை நிறைவேற்றியுள்ளனர் என வேதனையோடு பதிவிடுகிறார். கூட்டாட்சி தத்துவத்திற்கே இந்த பெருந்தொற்றுக் காலத்தில் ஆகப்பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தேசியப் பேரிடர் நிர்வாகச் சட்டம் இக்காலத்தில் திருத்தப்பட்டு மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கவகை செய்யபட்டுள்ளது. எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசியல் குழப்பங்களை உருவாக்குவது, பெருந்தொகைகளை கொடுத்து சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, என அநாகரீக அரசியலில் பாஜக ஈடுபடுகின்றது. 

மக்கள் நலனை பற்றி ஒரு சிறு கவலை கூட இல்லாமல், பதவி மற்றும் அதிகார வெறிக்காகவே மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தான் நான்கு மணி நேர அவகாசத்தில் கொடூரமான ஊரடங்கை மத்திய அரசு பிறப்பித்தது. 

பாரபட்சமான ஆளுநர்கள் 
கூட்டாட்சியை ஒட்டு மொத்தமாக குலைப்பதற்காக, இரு மாநிலங்களான மகாராஷ்ட்ராவையும், மேற்கு வங்காளத்தையும் குறி வைத்துள்ளது. இங்குள்ள ஆளுநர்கள்அரசியலமைப்பு சட்டத்தின் படி நடக்காமல், பாஜக தலைமைஎன்ன சொல்லுகிறதோ அதை அமல்படுத்துகிறார்கள். அதே போல் மத்திய புலனாய்வுத் துறையும் அமைச்சர்களின் கட்டளைப்படியே எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்திட முயல்கிறது. இதை அப்பட்டமாக போட்டு உடைத்தது பாஜகவின் முன்னாள் கூட்டாளியான சிவசேனா கட்சி. 

அக்கட்சி பின்வருமாறு கூறியது“ எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க ஏன் பிரதமரேமுயற்சிக்கிறார்.. அவர் இந்நாட்டின் பிரதமர். இந்த நாடுகூட்டாட்சித் தத்துவத்தின் படி இயங்குகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆட்சி செய்யும் கட்சிகளுக்கும் தேச நலன் மற்றும் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளது. ஆனால் இவர்கள் அதை ஒட்டுமொத்தமாக குலைக்கப் பார்க்கிறார்கள். மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போதேஅரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மீது நம்பிக்கையற்றவராகவே இருந்தார்.அதை பிரதமராக இருக்கும் போதும் தொடர்கிறார். 2020ல் அரசு சாரா நிறுவனங்கள் மீது மேலும்கடுமையான நெருக்கடிகளை தொடுத்துள்ளார். வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டுச் சட்டத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்து, அதன் மூலம் அதிகாரிகள் அவர்கள் மீது சட்டப்பூர்வமான தன்னிச்சையான நடவடிக்கைகள் எடுக்க புது சட்டத் திருத்தம் வாய்ப்பளிக்கிறது. அரசு சாரா நிறுவனங்களை கட்டுப்படுத்துவது என்பது சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பல துறைகளில் நமக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மோடி கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளர்களை சந்தித்ததே இல்லை. அவருக்கு ஊடகவியலாளர்களை கண்டாலே பிடிக்காது. 2020 ஆம் ஆண்டு ஊடக சுதந்திரத்திற்கு ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்ட ஆண்டு. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபின், கிட்டத்தட்ட, 55 ஊடகவியலாளர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பாஜக ஆளும் மாநிலங்களான உபி, இமாச்சல் பிரதேசம், மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தான் அதிகமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. 

சுதந்திர ஊடகத்துக்கான அமைப்பு 2020 ஆம்ஆண்டு தான் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சோதனையான ஆண்டாக மாறியது. கொலை, நேரடி தாக்குதல், இந்த ஆண்டே அதிகரித்தது. ஊடகங்களின் மீதான அரசின் கட்டுப்பாடு பன்மடங்கு அதிகரித்து, நிர்வாக, கொள்கை முடிவுகளே தலைகீழாக மாறியது.  ஊடகத்துக்கான சுதந்திரத்துக்கான அட்டவணையில் நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட கீழே 142ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. மோடி பக்தர்களுக்கும்,சங்கிகளுக்கும் ஒரே ஒரு ஆறுதலான விசயம் என்னவென்றால் பாகிஸ்தான் நம்மை விட மூன்று இடம் கீழே உள்ளது. 

இஸ்லாமியர்களை களங்கப்படுத்துவது 
நாடாளுமன்றம், கூட்டாட்சி,ஊடகம், அரசு சாரா நிறுவனங்கள் என எல்லாவற்றையும் ஒரு பக்கம் தாக்கிக் கொண்டே 2020 ஆம் ஆண்டில் இஸ்லாமியர்களை களங்கப்படுத்துவது, அவர்களை தாக்குவது அதிகமாக நடந்துள்ளது. இதை முன் நின்று அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் செய்கின்றனர். மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையில் அமித் ஷா பேசியது, தில்லி கலவரத்தின் போது, காவல் துறையின் அராஜகம், அலட்சியம், அதை அவர்கள் கையாண்ட விதம், இஸ்லாமிய இளைஞர்கள் மீது யோகி அரசு போடும் பொய் வழக்குகள், சிறை சித்ரவதைகள் என பெரிய பட்டியலிடலாம். அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சமீபத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பிரதமர் யோகி அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை போல் மற்றைய மாநிலபாஜக முதல்வர்களும்  கொண்டு வரவேண்டும் என சொன்னதன் மூலம் சிறுபான்மையினர் மீதான இவர்களின் தீரா வெறுப்புணர்வை புரிந்து கொள்ள முடியும். 

Prof Ramachandra Guha

சுதந்திரச் சந்தை வர்த்தகத்தை ஆதரிக்கும் பல பெரிய கட்டுரையாளர்கள் வேளாண் சட்டங்கள் ஒரு பெரிய மாற்றத்தை  உருவாக்கும் என கைதட்டி ஆரவாரம் செய்தனர். சீரான பொருளாதார வளர்ச்சி காண சரிசமமான தளமும் அதற்கான சட்டங்களும்  தேவை. மோடி ஆட்சியில் அவை தற்போது இல்லை; இனி என்றும் இருக்காது என்பது தான் உண்மை. தேர்தல் பத்திரங்களுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கும் பெரிய கார்ப்பரேட்டுகளுக்கும் சலுகை நிச்சயம்.  அளிக்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசியல்வாதிகள் பாஜகவில் சேர்ந்தால், நிரபராதிகளாக மாறிவிடுவார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டும் காணாமல் போய்விடும். காவல் துறை, அரசு நிர்வாகம், நீதிமன்றம் என அனைத்துமே சட்டத்தின் வழி நடக்காமல், ஆட்சியாளர்களின் கட்டளைப்படியே  ஆடுகின்றன. அரசு மற்றும் தனியாரின் பங்களிப்பை பொறுப்புள்ளதாக்க சுதந்திரமான ஊடகம், வெளிப்படையான உரையாடல்கள் கொண்ட நாடாளுமன்றம், அரசு சாரா நிறுவனங்கள் அவசியம் தேவை. ஆனால் 2020ல் நடந்துள்ளதை பார்த்தால் முன்னர் இருந்தது போல் இனி இருக்காது என்பது மட்டும் புலப்படுகிறது. இந்துக்களை தவிர அனைவரும் கீழானவர்கள் எனும் மதப் பிரிவினைவாத கருத்தியலை உருவாக்கும் பாஜக, சமூக நல்லிணக்கத்தை ஒட்டு மொத்தமாக சிதைக்கிறது. 

பிரதமருக்கும் அவரது கட்சிக்கும் மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை  விட அவர்களின்  அரசியல் அதிகாரம், சித்தாந்தக் கட்டுப்பாடு, சுயபுராணங்களே முக்கியம். அதனாலேயே இந்த பெருந்தொற்று காலத்தில் இந்திய ஜனநாயகத்தின் நிறுவனங்களை சிறுமைப்படுத்தி, கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி,  பலவீனமடைய வைத்துவிட்டனர். தங்களின் இறுதி லட்சியமான “ஒற்றை இந்தியாவை” உருவாக்க இந்த பெருந்தொற்றுக் காலத்தை கேடயமாகப் பயன்படுத்தி  இந்தியாவின் பன்முகத்தன்மையை ஜனநாயகத்தை சிதைத்து வருகிறார்கள் என்ற பேராபத்தை உணர்த்தியுள்ளது.  

 மூலம்:  Under cover of Covid-19, Modi regime has stepped up its attack on Indian democracy

தமிழாக்கம்: என்.சிவகுரு / தீக்கதிர்

Exit mobile version