Site icon சக்கரம்

கண்ணதாசனின் நிறைவேறாத கனவு!வள்ளியம்மை கண்ணதாசன்!

டிதத்தைப் படித்தேன், எழுதியவளைப் பார்த்தேன், அவளது கரத்தைப் பிடித்தேன், நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்… என்று கண்ணதாசன் காதல் வசப்பட்டபோது அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள்.

அவரது மனதை ஆட்கொண்டவர் 23 வயது கல்லூரி மாணவி வள்ளியம்மை. 46 வயதான கண்ணதாசன் அப்போது பிரபல திரைப்படக் கவிஞர்.

ஏற்கனவே மனைவிகள் இருந்தும் உணர்வு ரீதியாக, அறிவு ரீதியாக ஏற்புடைய ஒரு துணைவி தேவைப்பட்டதால் இலக்கியப் பற்றுமிக்க வள்ளியம்மையை ரகசிய திருமணம் செய்து கொண்டார் கவிஞர்.

கவிஞருடன் பத்து வருடங்களே வாழ்ந்தாலும் இலக்கிய ரசனை மிகுந்த வள்ளியம்மைக்கு அவரை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

மனதில் நிறைந்திருக்கும் தன் கவிஞர் கணவனின் உருவத்தை தன் சின்மயா நகர் வீட்டின் ஜன்னல்களிலும் பதித்து வைத்திருக்கிறார் வள்ளியம்மை.

கண்ணதாசன் காதல் கடிதம் அனுப்பியதிலிருந்து தன் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் அந்தக் கவிஞர் இறந்தது வரை வள்ளியம்மை அந்த பத்து வருட மனசு நிறைந்த இன்பப் பயணத்தை நினைவு கூறுகிறார்.

“கவிஞரின் ரசிகையாக இருந்தவள் எப்படி அவருடைய துணைவியாக மாறினேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. 71-ல் ஏற்பட்ட இலக்கிய அறிமுகம் அது.

நான் அப்போது புதுச்சேரி அருகிலுள்ள மயிலம் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது கவிஞரின் புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஞான மாலிகா என்ற புத்தகம், கவிஞன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதைப் பற்றி எழுதி இருந்தது.

மற்ற கவிஞர்களுக்கு ஒவ்வொரு உந்துதல் இருந்தது. ஆனால் இளங்கோவடிளுக்கு மட்டும் எதுவும் இல்லை என்றும் அதில் அவர் எழுதி இருந்தார்.

அதைப் படித்த பிறகு, நான் “இளங்கோவடிகளுக்கு ஒரு காதலி இருந்தாள் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன” என்பதைக் குறிப்பிட்டு அவருக்குக் கடிதம் எழுதினேன்.

அவரிடம் பதில் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் ஒரு வாரத்திற்குள் பதில் வந்தது.

அதில் அவர், “இவ்வளவு விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே, நீங்கள் செட்டிநாட்டுப் பெண்ணா?” என்று கேட்டு எழுதி இருந்தார்.

இந்தக் கடிதம் எனக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது. பதில் கடிதத்தில் நான், “தமிழ்ப் புலமை எந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இருக்கலாம். கவிஞர்களுக்கு இவ்வளவு தீவிர ஜாதிப்பற்று இருக்கலாமா?” என்று கேட்டேன்.

அதற்கு பதில் வரவில்லை. அவரே நேரில் கல்லூரிக்கு வந்து விட்டார்.

தன் வாழ்க்கையில் நல்ல தோழியாக, தமிழ் புலமை உள்ளவளாக இருப்பவர் தனக்குத் துணைவியாக இருக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் தவமாம்.

என் எழுத்தில் இருந்த நம்பிக்கை என்னைப் பார்த்ததும் காதலாக மாறியது. அதன்பிறகு கடிதப் போக்குவரத்தால் எங்கள் நட்பு வளர்ந்து, மெல்ல மெல்ல காதலாக மலர்ந்து கடைசியில் திருமணத்தில் வந்து முடிந்தது.

1975-ல் தொடங்கிய என் இல்லற வாழ்க்கை, இரவு நேரங்களில் அவருக்கு புத்தகங்கள் படிப்பது, அவர் சொல்வதை எழுதுவது இலக்கிய ஆன்மீக விஷயங்களை விவாதிப்பது என்று ஒரு இலக்கிய பயணமாக பத்து வருடம் தொடர்ந்தது.

சில கவிஞர்கள் வார்த்தைகள் வெளிவருவது பிரசவ வேதனை என்கிறார்கள். அவருக்கு இந்த வேதனை இருந்ததே இல்லை. நினைத்த மாத்திரத்தில் அருவிபோல் வார்த்தைகள் கொட்டும்.

அவருக்குத் தூக்கத்தில் கூட கவிதை உணர்வு ஊற்றெடுக்கும். நடு ராத்திரியில் எழுந்து ஏதாவது பாடலை எழுதுவார்.

ஒருமுறை டைரக்டர் பாலச்சந்தர் தன் படத்துக்கு ஒரு பாடல் அவசரமாகத் தேவை என்று போனில் கேட்டார். கவிஞர் சிச்சுவேஷன் கேட்டுக்கொண்டு போனிலேயே பாட்டைச் சொல்லி விட்டார்.

பாலச்சந்தருக்கு பாட்டின் பல்லவி திருப்திகரமாக இல்லை. உடனே, “பாலு இந்தப் பல்லவிகளை எழுதிக் கொள்ளுங்கள்” என்று சொல்லி 8 பல்லவிகளை மளமளவென ஒன்றன்பின் ஒன்றாகச் சொன்னதை இன்றைக்கு நினைத்து பார்த்தாலும் எனக்கு புல்லரிப்பு ஏற்படுகிறது.

ஒருமுறை நான் குழந்தையை அழைத்துக் கொண்டு தனியாக சினிமாவுக்கு சென்றிருந்தபோது பக்கத்தில் உட்கார்ந்த சில ஆண்கள் வம்பு செய்தார்கள்.

அதை அவரிடம் சொன்னதிலிருந்து நான் சினிமா போவதென்றால் 15 டிக்கெட் வாங்கி விடுவார். இரண்டு பக்கங்களிலும் 7 சீட் காலியாக இருக்க வேண்டும் என்பதற்காக.

என்னை மனதில் வைத்து பல பாடல்கள் எழுதியதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்.

என்னைக் காதலித்துக் கொண்டிருந்தபோதுதான் ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ ‘திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி’ போன்ற பாடல்களை எழுதினாராம்.

எங்கள் மகள் விசாலி பிறந்தவுடன் அவர் எழுதிய பாட்டுதான் ‘ஐம்பதிலும் ஆசை வரும்’.

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற சேரமான் காதலியில் வரும் நாயகியைக் கூட என்னை மனதில் வரித்து படைத்ததாகச் சொல்லியிருக்கிறார்.

எங்கள் திருமணத்திற்குப் பிறகு தான் ஆன்மீகம் அவர் வாழ்க்கை முழுவதும் ஆக்கிரமித்தது என்று சொல்லலாம்.

விவேகானந்தரின் கருத்துக்களின் தொகுப்பான ‘ஞானதீபம்’ என்ற புத்தகத்தில் இருந்து பல விஷயங்களை நான் படித்துச் சொல்ல அந்தக் கருத்துக்களை உள்ளடக்கி கட்டுரைத் தொகுப்பு ஒன்றை எழுதினார்.

பகவத் கீதைக்கு உரை, பஜகோவிந்தம் உரை, அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற புத்தகங்களை எங்கள் திருமணத்திற்குப் பிறகு தான் எழுதினார்.

நாத்திகராக இருந்தவர் எப்படி கண்ணனே கதி என்று மனம் மாறினார் என்று பலர் கேட்பார்கள்.

ஆனால் அடிப்படையில் அவர் நாத்திகரே இல்லை. சூழ்நிலைக்காக நாத்திக வேடம் போட்டுக் கொண்டார் அவ்வளவுதான்.

சுயமரியாதை இயக்கத்தில் அவர் தீவிரமாக இருந்தபோதுகூட அவருடைய சொந்த ஊரில் உள்ள மலையரசி கோவில் விபூதி குங்குமத்தைப் பூசி கொள்வாராம்.

பொதுக்கூட்டத்தில் பேசும்போது மட்டும் விபூதி குங்குமத்தை அழித்து விடுவார்.

பிறகு 70-ல் அவர் ஒரு சாலை விபத்தில் சிக்கிக் கொண்டபோதுதான் கிருஷ்ண பக்தராக மாறினார்.

தன்னை மருத்துவமனையில் சேர்த்த டிரைவரின் பெயரைக் கேட்டபோது அவர் கிருஷ்ணன் என்று சொன்னதும், சாட்சாத் பகவானே தன்னைக் காப்பாற்றி விட்டதாக அவா் நினைத்தார்.

கிருஷ்ணன் என்றால் அவருக்கு உயிர். ஏதாவது பணக்கஷ்டம் வந்துவிட்டால், உடனே கிருஷ்ணர் சிலைக்கு முன்பு நின்று கொண்டு, “கிருஷ்ணா என்னடா பண்ணப் போறே?” என்று கேட்பார். மறுநாளே யாராவது பணத்தோடு வருவார்கள்.

கவிஞருக்கு மிக்க சந்தோஷத்தை ஏற்படுத்திய விஷயம், அவருக்கு ஆயுள் கால ஆஸ்தான கவிஞர் பதவியைத் தரப்போவதாக எம்.ஜி.ஆர் போனில் தெரிவித்துதான்.

அவரை அவ்வளவு சந்தோசமாக நான் அதுவரை பார்த்ததே இல்லை. “உன் கணவன் இனிமேல் கவிஞன் இல்லை, அரசு கவிஞன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஆனால் வாழ்க்கையில் அவருக்கு நிறைவேறாத ஆசை இரண்டு இருந்தது. ஒன்று, அவருக்கு அரசியல் பதவி தரப்பட வேண்டும் என்று விரும்பினார்.

இன்னொன்று எம்.ஜி.ஆர் கொடுத்த தங்கப் பதக்கத்தைத் தான் இறக்கும்போது மாா்பில் வைத்து எரிக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

குடும்பக் குழப்பத்தில் அதுவும் நடக்கவில்லை.

நன்றி: இந்தியா டுடே பெண்கள் சிறப்பு மலருக்காக (1996) ராதா வெங்கடேசன் எடுத்த பேட்டி.

Exit mobile version