Site icon சக்கரம்

உலகப் பொருளாதார இயங்கு விசையுடன் இலங்கையும் இணைந்து செயல்பட வேண்டும்

கலாநிதி எம். கணேசமூர்த்தி

டந்த மூன்று மாத காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகளவு தளம்பல்களுக்கு ஆளாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 186.6 ரூபாவாக இருந்த நாணய மாற்றுவீதம் 2021 ஜனவரி 25ஆம் திகதி 199.10 ஆக உச்சத்தை எட்டியது. கடந்த 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை இது 196.17 ரூபாவாக சற்றுக் குறைந்திருந்தது. இவ்வாறு ஒரு நாணயத்தின் வெளிநாட்டுப் பெறுமதி குறுகிய காலப்பகுதியொன்றில் சடுதியான ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுவது எவ்வகையிலும் ஆரோக்கியமானதல்ல.

கடந்த சில வருடங்களாகவே இலங்கை ரூபாவின் பெறுமதியானது தொடர்ச்சியாகத் தேய்வடைந்து சென்றுள்ளது. நாட்டின் வெளிநாட்டுத்துறைச் செயற்பாடுகள் மோசமடைந்து செல்வதையே அது வெளிப்படுத்துகிறது. இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாகத் தேய்வடைந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் பங்களித்திருக்க வேண்டும்.

ஒன்று இலங்கைக்குள் வரும் டொலர் உட்பாய்ச்சல்களின் அதாவது, டொலர் நிரம்பலின் அளவு வீழ்ச்சியடைந்திருக்க வேண்டும்.

இரண்டாவது, இலங்கையிலிருந்து வெளியேறும் வெளிப்பாய்ச்சல்களின் அதாவது டொலருக்கான கேள்வியின் அளவு அதிகரித்திருக்க வேண்டும் அல்லது இவை இரண்டும் ஏக காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். உலகளாவிய கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்துறை மிகமோசமாக அடிவாங்கியுள்ளமை வெளிப்படையானது. இதனால் நாட்டுக்குள் வரும் அந்நியச் செலாவணிப் பாய்ச்சல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.

அது மட்டுமன்றி சர்வதேச இறைமைக் கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையின் கடன் மீளச்செலுத்தும் ஆற்றல் பற்றிய தரப்படுத்தலை இடரபாயம் கொண்ட வகுதிக்குள் கீழ் நோக்கி நகர்த்தியுள்ளமை காரணமாகவும் இலங்கைக்குள் வரும் முதலீட்டுப் பாய்ச்சல்களின் அளவும் சடுதியாகக் குறைந்துள்ளது. ஒரு காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத்திற்குரிய தெரிவாக இருந்த திறைசேரிப் பிணையங்கள் செல்வாக்கிழந்து போனமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கையில் குறுங்கால ஆவணங்களில் முதலீடு செய்தோர் தமது முதலீடுகளை மீளப்பெற்றுக் கொண்டமையும் கூட டொலர் வெளிப்பாய்ச்சல்களை அதிகரித்தன. இவற்றுக்கு அப்பால் கடந்தாண்டு அரசாங்கக் கடன்மீளச் செலுத்தல்கள் காரணமாக பெரியளவு டொலர் வெளிப்பாய்ச்சல் இடம்பெற்றமையையும் குறிப்பிட வேண்டும்.

அண்மையில் இடம்பெற்ற இலங்கை ரூபாவின் பெறுமதித் தேய்வு தேவையற்றதெனவும் ஏற்றுக்கொள்ள முடியாததெனவும் மத்திய வங்கி கருதுகிறது. ஏற்கனவே அத்தியாவசியமற்ற பொருள்கள் மீது தீவிரமான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள அதிகாரிகள் தற்போது ஒருபடி மேலே சென்று நாணயமாற்றுக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வணிக வங்கிகள் வெளிநாட்டு நாணயங்களை வாங்கவோ விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னோக்கிய ஒப்பந்தங்கள் (forward contracts) ஊடாக வணிக வங்கிகள் அதிகளவு வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளமை இப்போதைய நாணயமாற்றுத் தளம்பல்களுக்கு ஒரு காரணமென மத்திய வங்கி கருதுகிறது.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படப்போகும் வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களில் நாணயமாற்றுத் தளம்பல் காரணமாக ஏற்படக்கூடிய இடரபாயங்களுக்கு எதிராகப் பாதுகாப்புத் தேடும் ஒரு நடவடிக்கையாக முன்னோக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, ஒரு இறக்குமதியாளர் இறக்குமதிக் கொள்வனவுக் கட்டளையை இன்று பிறப்பித்தால் அதற்குரிய பணத்தை எதிர்காலத்திலேயே வெளிநாட்டு நிரம்பலாளருக்கு செலுத்தவேண்டும். நாணய மாற்றுவீதம் அதிக தளம்பலுக்கு உட்படும்போது எதிர்காலத்தில் நாணயமாற்றுவீதம் தேய்வடையலாம் அல்லது அதிகரிக்கலாம்.

இதனால் எதிர்காலத்தில் இறக்குமதிக்காகச் செலுத்த வேண்டிய ரூபாப் பெறுமதி மாற்றமடையும். இது ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி தீவிரமான தேய்வுக்கு உட்பட்டால் சிலவேளை இறக்குமதி வர்த்தகத்தின் ஊடான இலாபத்தையும் முழுமையாக இழக்கவேண்டிய நிலை உருவாகலாம்.

இவ்வாறான இடரபாயங்களால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையை தவிர்த்து பாதுகாப்புத் தேடும் பொருட்டு வணிகர்கள் தமது வங்கிகளுடன் தொடர்பு கொண்டு நாணயமாற்றை முன்கூட்டியே கொள்வனவு செய்யும் ஒப்பந்தங்களை மேற்கொள்வர். வணிகர்கள் மட்டுமன்றி திறைசேரி உண்டியல்கள் போன்ற குறுங்கால முதலீடுகளில் ஈடுபட்டுள்ளோரும் தமது நாணயமாற்றுவீத இடர்களைத் தவிர்க்கும் பொருட்டு முன்னோக்கிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவர்.

தற்போது இலங்கை மத்திய வங்கி இச்செயற்பாடுகளைத் தடை செய்திருக்கிறது.

சரிந்து செல்லும் ரூபாவின் பெறுமதியைத் தடுத்து நிறுத்திச் சரிப்படுத்தும் பகீரதப் பிரயத்தனத்தின் ஒரு அங்கமாக மத்திய வங்கி இதனை நியாயப்படுத்தினாலும் இந்நடவடிக்கை நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான இடரபாயத்தை அதிகரிக்கும் என்பதை நினைவிற்கொள்வது பொருத்தம்.

அதேவேளை, இந்தியாவிலிருந்து கடந்த வருடம் ஜூலை மாதம் பெற்றுக் கொண்ட 400 மில்லியன் டொலர் கடனை கடந்த இரண்டாம் திகதி இலங்கை மீளச் செலுத்தியிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்று மாதகால இடைவெளிக்கு பெற்றுக்கொண்ட இக்கடன் இலங்கையின் வேண்டுகோளின் பேரில் மீள்செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டதுடன் 2022 வரை அது செல்லுபடியாகும். ஆயினும் கால நீடிப்புக்கு இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு உடன்பாட்டிற்கு வரவேண்டுமென்ற நிபந்தனை இருந்தபடியினால் இலங்கை கடனை மீளச் செலுத்தும் முடிவுக்கு வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

துறைமுக முனையம் தொடர்பான கரிசனைகளும் அதற்கொரு காரணமாக இருந்திருக்கக் கூடும். எவ்வாறாயினும் இம்மாதத்தில் இலங்கை சீனாவிடமிருந்து 1500 மில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளும் எனத் தெரிகிறது. இது வணிக ரீதியிலான கடனாக இருக்கக்கூடும். இக்கடன் நாட்டுக்குள் வரும்போது டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 2020 ஆரம்பத்தில் காணப்பட்ட 185 ரூபா மட்டத்தை மீண்டும் அடையும் என மத்தியவங்கி எதிர்பார்க்கிறது.

அத்துடன் வெளிநாட்டு நிதிநிலைமை சீராக உள்ளதாகவும் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய ஒதுக்குகளின் பெறுமதி 5.7 பில்லியன் டொலர் என்ற மட்டத்தில் உள்ளதாகவும் இது 3, 4 மாதங்களுக்கு இறக்குமதிகளை மேற்கொள்ளும் அளவுக்குப் போதுமானதெனவும் நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பில் எவ்வித பிரச்சினைகளும் காணப்படவில்லை எனவும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர இறக்குமதிக் கட்டுபாட்டுடன் ஏற்றுமதிகளை தீவிரமாக ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகவும் கூறுகிறது.

இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளும் பண அனுப்பல்கள் கடந்தாண்டு அதிகரித்துள்ளதாகவும் கோவிட் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத்துறையை மீள இயங்கச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறது. அண்மையில் உக்ரைனிலிருந்து சில தொகுதி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துசென்றமை நினைவிருக்கலாம். தற்போது ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை அழைத்துவர எத்தனிக்கப்படுவதாகத் தெரிகிறது.

தீவிரமான இறக்குமதிக் கட்டுப்பாடுகளுடன் ஏற்றுமதிகளை அதிகரிக்க எத்தனிப்பது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது எனத் தெரியவில்லை. ஏனெனில் இலங்கை கையாளும் இதே உத்தியை இலங்கையின் வர்த்தகப் பங்காளி நாடுகளும் கடைப்பிடித்தால் இலங்கையின் நிலை என்னவாகும்? இலங்கையின் ஏற்றுமதிகள் பிரதானமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்குலக நாடுகளுக்கே செல்கின்றன.

அதேவேளை இலங்கை தனது இறக்குமதிகளை பிரதானமாக சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலிருந்தே பெற்றுக்கொள்கிறது. மிகச் சமீப காலத்திலிருந்தே ஆசிய நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இப்போதுள்ள சூழ்நிலையில் தீவிரமான இறக்குமதிக் கட்டுப்பாடுகளுக்குள் செல்வது இலங்கைக்கு எவ்விதத்திலும் நன்மை தராது.

தலைவலிக்கு தற்காலிகத் தைலமாக அதனைத் தடவலாமே ஒழிய நீண்டகாலத்தில் அது பயன்தாராது. மாறாக இலங்கையை முடக்கி விடக்கூடும். வேறும் 21 மில்லியன் மக்களை கொண்ட ஒரு உள்நாட்டு சந்தையை நம்பி இறக்குமதிப் பதிலீட்டுக்குள் செல்வது ஆபத்தானது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பொருளாதாரம் தொடர்பாக ஆற்றிய உரையில் உலகப் பொருளாதாரத்தையும் இணைத்துக்கொண்டு அமெரிக்கா முன்னேறும் எனக்கூறி இருக்கிறார். சீனா தொடர்பான அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்கள் இல்லாதுவிடினும் ஏனைய நாடுகளுடன் அமெரிக்காவின் பொருளாதார உறவுகள் சீரடையும் என்பதற்கான ஒரு கோடிகாட்டலாக அதனைக் கொள்ளலாம்.

அத்துடன் ஊக்குவிப்புப் பொதிகள் ஊடாக அமெரிக்காவின் உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தொழில்வாய்ப்புகளை அதிகரிக்கும் யோசனைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீட்சி இலங்கை உட்பட பல நாடுகளின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

சுயதேவைப்பூர்த்தி, தன்னிறைவுப் பொருளாதாரம், தேசியப் பொருளாதாரம் குறித்த சிந்தனைகள் தற்போது எல்லா மட்டங்களிலும் வெளிப்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள நன்மை தீமைகளை சீர்தூக்கிப்பார்த்து உலகம் இயங்கும் திசையில் இலங்கையும் இயங்க வேண்டியது அவசியம்.

அவ்வாறு செய்யாமல் வெறும் கோட்பாட்டு ரீதியான சித்தாந்தங்களைத் துாக்கிப் பிடித்துக்கொண்டு கடந்த காலங்களில் விட்ட தவறுகளையே தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் அடுத்துவரும் சந்ததிகளும் பின்தங்கிய வறிய பிற்போக்கு சிந்னைகொண்ட ஒரு நாட்டின் பிரஜைகளாக வாழ்வதைத் எவராலும் தடுக்க முடியாது. 

-தினகரன்
2021.02.07

Exit mobile version