Site icon சக்கரம்

நீங்கள் தான் குற்றவாளிகள், அவர்கள் அல்ல – ஒரு நேரடி சாட்சியின் குமுறல்

Farmers sit on a tractor during a protest against the newly passed farm bills at Singhu border near Delhi, India, December 5, 2020. REUTERS/Adnan Abidi

(விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே களத்திலிருப்பவர் குர்பிரீத் சிங் வாசி (Gurpreet Singh Vasi). இவர் முன்னாள் இராணுவ வீரர். அவர் சமூக வலைத்தளத்தில் எழுதியிருக்கும் பதிவு இது)

இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நான் நம்புகிறேன்
நான் ஒரு பெருமைமிகு இந்தியன்
வன்முறை என்கிற சிந்தனையையே வெறுக்கிறேன்
நான் காந்தியின் விசிறி
நான் டெல்லியை நேசிக்கிறேன்,
நான் தேசியத் திருநாட்களை நேசிக்கிறேன்
இவற்றையெல்லாம் நான் யாரிடமும் விளக்காமல் இருக்கவே விரும்புகிறேன்.
ஆனால் ஒரு அமைதியான போராட்டம் குரோதமான ஒன்றாக மாறிப் போனதால் நான் யாரென்று நினைப்பதற்கான காரணங்கள் அனைத்துமே இன்று சந்தேகத்திற்குள்ளாக்கப் பட்டிருக்கின்றன. இரண்டு மாதங்களாக நம் எல்லைகளில் தகித்துக் கொண்டிருந்த வலியையும் விரக்தியையும் நாம் பார்க்க மறுத்தோம். இன்று அது கொதித்தெழும் போது ஏதோ ஒன்று எங்கிருந்தோ நம்மைத் தாக்கியது போல் வாய் பிளந்து நிற்கிறோம்.

நீங்கள் எதை எதிர்பார்த்தீர்கள்?

20000 பேரைக் கொண்ட இராணுவப் பிரிவும், புகழ் பெற்ற காவல் துறையும், கலவர எதிர்ப்புக் குழுக்களும், துணை இராணுவப் படையும் சில நூறு ஜோக்கர்கள் செங்கோட்டைக்குள் நுழைவதைத் தடுத்திருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?

தன்னுடைய பிரதேசத்திற்குள் விவசாயிகள் ஊடுருவிய போது உறுதியான மனிதர் என்றறியப் பட்ட உள்துறை அமைச்சர் தியானத்தில் இருந்திருப்பார் என நினைக்கிறீர்களா?

விவசாயிகளின் போராட்டத்தைச் சிதைப்பதற்காகப் போடப்பட்ட மிக அபாயகரமான சதிதான் இது என்று உங்களுக்குத் தெரியவில்லையா?

40 அமைப்புகளைக் கொண்ட சம்யுக்த கிசான் மோர்ச்சாவில் (Samyukta Kisan Morcha) இடம் பெறாத ஒரு பிரிவு விவசாயிகள் ஏற்கெனவே டிராக்டர் பேரணிக்காக ஒப்புக் கொள்ளப் பட்ட வழியில் செல்ல மாட்டோம் என்று திடீரென சிங்கு எல்லையில் நேற்று இரவு அறிவித்த போது நான் அங்கிருந்தேன். அவர்கள் தனியான பேரணியை நடத்துவோம் என்றனர்.

பிஜேபியின் உளவாளி என்று நன்கு அறியப்பட்ட தீப் சித்து திடீரென்று மேடையில் தோன்றி, விவசாயிகளின் போராட்டத்தைச் சிதைக்கும் நோக்கத்துடன் பிரிவினை வாதத்தைத் தூண்டும் வகையில் பேசினார். நூற்றுக்கணக்கில் இருந்த நாங்கள் இதை நேரடியாகப் பார்த்தோம். இது எத்தகைய அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் என்கிற கவலையில் நாங்கள் இரவு முழுவதும் கண்ணயர வில்லை. எனக்கு சரியாக சுவாசிக்கக் கூட முடியவில்லை. இன்று நண்பகலில் பேரணி துவங்க வேண்டுமென்பதுதான் திட்டம். ஆனால் காலையிலேயே என்னுடன் பேரணிக்கு வர வேண்டியவர் எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். ஊடகத்தில் பணி புரியும் ஒருவர் காலையிலேயே ‘நடவடிக்கை தொடங்கும்’ என்று அவருக்குச் சொன்னார் என்பதுதான் அந்தச் செய்தி. அவருக்கு எப்படி இது தெரியும் என்று இப்போது நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அவர் சொன்னது போலவே சம்யுக்த கிசான் மோர்ச்சாவைச் சேராத ஒரு பிரிவு விவசாயிகள் காலை 8 மணிக்கே எல்லையில் தோன்றினர். டெல்லி போக்கு வரத்துக் கழக பஸ்களும் பிற வாகனங்களும் ‘பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பதற்கும்’, அதைக் கேமராவில் படம் பிடிப்பதற்கும் வாகாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதைத்தான் அனைத்து விலை போன ஊடகங்களும் இடையறாது காட்டிக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் பிஜேபியின் ஒற்றன் தீப் சித்து சினிமாத்தனமாக செங்கோட்டைக்குள் செல்ல உடனடியாக அனுமதிக்கப் படுகிறான். அதுவும் குடியரசு தினத்தன்று! நாம் என்ன முட்டாள்களா அல்லது அப்பாவிகளா? இது என்ன நெட்பிளிக்ஸ் நாடகமா? அரசின் உளவுத் துறை போன்ற ஏஜன்சிகளின் ஈடுபாடில்லாமல் இது நடக்குமென்று நினைக்கிறீர்களா?

அதற்குப் பின் நிஷான் சாஹிம் என்கிற மதக் கொடியை செங்கோட்டையில் பறக்கவிட்டு ஏதோ விவசாயிகள் அனைவரும் காலிஸ்தானிகள் என்று நிறுவும் முயற்சி நடந்தது. இந்தச் சொல்லாடலை முன்னிறுத்துவதற்குத்தான் அரசு தொடக்கத்திலிருந்தே முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
கம் ஆன், உங்களுக்கு ஊட்டப் படும் இந்தக் கருமத்திற்கே நீங்கள் உண்மையில் வீழ்ந்து விட்டீர்களா நண்பர்களே?

இதில் சோகம் என்னவென்றால் 40 கிசான் அமைப்புகள் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட பாதையில் குறித்த நேரத்தில் டிராக்டர் பேரணியைத அப்பாவித்தனமாகத் துவங்கின. நானும் எனது நண்பர்களும் அந்த அமைதியான பேரணியை மணிக் கணக்கில் பார்த்தோம். டெல்லிவாழ் மக்கள் பேரணியை மலர் தூவி வரவேற்றனர். ஒரு தேசிய ஊடகம் கூட இந்த அதிகாரபூர்வ பேரணியைக் காட்டவில்லை. இது சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் இணைய தளத்தின் மூலமாக சமூக வலைத் தளங்களில் வரக் கூடாது என்பதற்காக இணைய சேவை நிறுத்தப் பட்டது.

முகநூலில் நெளியும் சில புழுக்கள் வன்முறைக்கு வாழ்த்துச் சொல்லி எனக்கு செய்திகள் அனுப்பின. உங்கள் செய்திகள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு திணித்துக் கொள்ளுங்கள்! குடியரசு தினம் உங்கள் தாத்தாவின் திருமண நாள் அல்ல!

குடியரசு தினம் பிறரைப் போலவே என்னுடையதும் ஆகும். தொலை தூரத்திலிருந்து வந்து, தங்கள் டிராக்டர்களை அலங்கரித்து, புதிய துணிகளை அணிந்து தங்களுடையை குடியரசு தினப் பேரணியை நடத்திய விவசாயிகளை உங்களுடைய அழுக்கான அரசியலின் பகடைக் காய்களாக மாற்றுவதைக் காணும் போது வலிக்கிறது. 72ஆவது குடியரசு தினத்தின் புனிதத்தை மாசுபடுத்தும் உங்களின் அழுக்கான அரசியல் என்னைப் புண் படுத்துகிறது. நீங்கள்தான் குற்றவாளிகள். அவர்கள் அல்ல.

— குர்ப்ரீத் சிங் வாசி

Exit mobile version