–ஜி.ராணி,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்
சமத்துவம், சுதந்திரம் ஆகிய கோரிக்கைகளுக்காக ஒரு நூற்றாண்டுக்கு மேல் நடந்து வரும் பெண்களின் பெருந்திரள் இயக்கங்களுக்கான கொண்டாட்டமே உலக மகளிர் தினம். உழைக்கும் பெண்கள் நடத்திய உரிமைக்கான போராட்டங்களில் உருவான நாள். சோசலிச சமுதாயம் படைத்த பெரும் புரட்சிக்கு முன்னோடியாக உழைக்கும் பெண்கள் போராட்டம் தொடங்கப்பட்ட நாள்.
1886 மே 1 அன்று எட்டு மணி நேர வேலைநாள் கோரி அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள். போராட்டத்தின் மையமாக சிக்காக்கோ நகரம் இருந்தது.இப்போராட்டத்தின் போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பல தோழர்கள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டார்கள். எட்டு மணி நேர வேலை நாள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து நாடுகளிலும் மே 1 அன்று தொழிலாளர் போராட்டங்களை நடத்த வேண்டும் என்ற புகழ்பெற்ற மேதின தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சோஷலிஸ்ட் அகிலமும் கிளாரா ஜெட்கின் உள்ளிட்ட தலைவர்களும் புதிய எழுச்சியை ஏற்படுத்தினர். இதன் வளர்ச்சிப்போக்கில் தான் சோஷலிஸ்ட் பெண்கள் இயக்கம் உதயமானது. சோஷலிஸ்ட் அகிலத்தின் நான்காவது மாநாடு லண்டனில் 1896 இல் நடந்தது. சோஷலிஸ்ட் பெண் பிரதிநிதிகள் முதன்முறையாக கூடினார்கள்.
முதல் மகளிர் தினம்
1907 ஆகஸ்ட் 17 அன்று முதன்முறையாக உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. முதல் மாநாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டுமென தீர்மானம் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேறியது. இந்த மாநாடு சோஷலிஸ்ட் பெண்கள் மத்தியில் புதியஎழுச்சியை ஏற்படுத்தியது. உலக பெண்கள் செயற்குழுவின் செயலாளராக கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) தேர்வுசெய்யப்பட்டார்.
1908 மே 3 ஞாயிறு அன்று சிக்காக்கோ நகரத்தின் காரிக் தியேட்டரில் சோஷலிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவு மகளிர் தினக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. இதுவே முதல்முறையாக கடைப்பிடிக்கப்பட்ட மகளிர் தினம்ஆகும். 1909 பிப்ரவரி28 ஞாயிறு அன்று அமெரிக்காவில் பல இடங்களில் பெண்களின் வாக்குரிமைக்கான ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடந்தது.1910 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வரை டென்மார்க் நாட்டில் கோபன் ஹேகனில் சோஷலிஸ்ட் அகிலத்தின் மாநாடு நடைபெற்றது. இதை ஒட்டி 1910 ஆகஸ்டு 26, 27 ஆகிய நாட்களில் உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு கருவுற்ற பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1911 மார்ச் 19 ஞாயிறு அன்று ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
காவல்துறை அனுமதிக்காக…
1913 மார்ச் 26 அன்று மகளிர் தினத்தை கொண்டாடுவதுஎன ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட சில நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மகளிர் தின கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி பெறுவதற்கு பல உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டன. அறிவியல் காலை என்ற தலைப்பில் பெண்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கான கூட்டம் என்று கூறி போலீஸ் அனுமதி பெறப்பட்டது. அக்கூட்டத்தில் ஆயிரம் பெண்களுக்கு மேல் திரண்டனர். காவல்துறையை எப்படி கையாள்வது என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்கள் கண்டறிந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.
“1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் வெடிக்கும் சூழ்நிலை ஜெர்மனி, ரஷ்யா மற்றும் சில நாடுகளில் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஞாயிறு அன்று கடைப்பிடிக்கப்பட்டது அக்காலகட்டத்தில் பெண்தொழிலாளர்களுக்காக தனியாக “ரபோட்னிட்சா” (பெண் தொழிலாளி) என்ற பத்திரிகையின் முதல் இதழை மார்ச் 8 அன்று வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்ற வேளையில் போலீசார் உள்ளே சென்று 30 பெண்களை கைது செய்தனர். பெண்களை கைது செய்தால் பயந்து ஒதுங்கி விடுவார்கள் என்று காவல்துறை நினைத்த நேரத்தில் மகளிர் தினத்தன்று 12,000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.
பெண்களின் வேலைநிறுத்தம்
ஒரு ரொட்டித் துண்டு கூட கிடைக்காமல் தானும் குழந்தைகளும் மற்றவர்களும் பசியால் துடிப்பதை இனியும் பொறுக்க முடியாது என்று பெண் தொழிலாளர்கள் கொதித்து எழுந்தார்கள் ரஷ்ய தலைநகர் பெட்ரோகிராடில். அங்கு தொழிற்சாலைகள் நிறைந்த வைபோர்க் பகுதியில் துணி ஆலைகளில் வேலை செய்த பெண் தொழிலாளர்கள் 1917 மார்ச் 8 மகளிர் தினத்தன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினார்கள்.1917 நவம்பர் 8 அரசியல் அதிகாரத்தை சோவியத் மேற்கொண்டபோது லெனின் தலைமையிலான அமைச்சரவை அமைக்கப்பட்டது. சமாதானம், நிலம் தொடர்பான சமகளிர் தின கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி பெறுவதற்கு பல உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டன. ட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆண் – பெண் சமத்துவத்தையும் பெண்களுக்கான தனி உரிமைகளை யும் நிலைநாட்டுவதற்கு வரலாறு காணாத சட்டங்கள் உருவாக்கப்பட்டன. உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
1920 ஆகஸ்ட் 2 கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின் முதல் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது. 1921 ஜூன் 9 -15ல் உலக கம்யூனிஸ்ட் பெண்களின் இரண்டாவது மாநாடு மாஸ்கோவில் நடைபெற்ற போது தான், மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்திற்கான வரலாற்று புகழ்மிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டது. 1975 டிசம்பர் 1 அன்று உலக மகளிர் ஜனநாயக சம்மேளனம் நிறுவப்பட்டது. 1975ஆம் ஆண்டு உலக மகளிர் ஆண்டாக அறிவிக்குமாறு ஐநா பொது சபைக்கு கமிஷன் பரிந்துரை செய்தது. கமிஷன் பரிந்துரையை ஏற்றுஉலக பெண்கள் ஆண்டாக அறிவித்தது. அதனடிப்படையில் 1975 மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தை ஐநா கொண்டாடியது. 1975 ஜூன் 19, ஜூலை 2 இல் உலக மகளிர் ஆண்டின் உலக மாநாடு மெக்சிகோ நகரில் வெற்றிகரமாக நடந்தது. பெண்கள் போராட்ட களத்தில் ஈடுபட்டால்தான் ஆளும் வர்க்கங்களின் அட்டகாசங்களை ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதற்கு ரஷ்ய பெண்களின் புரட்சிகரமான போராட்டங்கள் நம் கண் முன்னால் உள்ள சான்று.
பெண்களின் மோசமான நிலை
‘‘ இப்படி வரலாறு நெடுகிலும் போராளிகளாக இருந்த போதும் அடிப்படையில் ஆணாதிக்க சிந்தனை கொண்ட நிலப்பிரபுத்துவ- முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை தகர்க்காததன் விளைவாக இன்றும் பெண்களின் நிலை மோசமாகவே உள்ளது.“உலகம் முழுவதும் 63 நாடுகள் மட்டுமே மகப்பேறு விடுமுறை அளித்துள்ளன. 28 சதவீத பெண்கள் மட்டுமே சம்பளத்தோடு கூடிய விடுமுறையை அனுபவிக்கின்றனர்.ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்களே இரண்டரை மடங்கு அதிகமாக செய்கின்றனர். அதிலும் பெண்களே பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
சர்வதேச அளவில் 66சதவீத பணியை பெண்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 10சதவீதம் மட்டுமே பெறும் நிலையில் உள்ளனர். பணிபுரியும் வயது விகிதம் கூட ஆண்களுக்கு 76சதவீதம் ஆகும்.பெண்களுக்கு 49 .6சதவீதமாக இருக்கிறது. சர்வதேச அளவில் 13.9சதவீதம் இளம் பெண்கள் வேலை இல்லாமல் உள்ளனர். தொழிற்சாலைகளில் 13.5சதவீதம் விவசாயத்தில் 25சதவீதம் நாடாளுமன்றத்தில் 23சதவீதம் தலைமை அதிகாரிகளாக 4சதவீதம் மட்டுமே பெண்கள் பணிபுரிகின்றனர்.
“முறைசாரா வேலைவாய்ப்பின் கீழ் அதாவது வீட்டு வேலை செய்பவர்கள், தெருவோர வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், கிடைக்கும் வேலையை செய்பவர்கள், பூ கட்டும் பெண்கள் என தெற்காசியாவில் மட்டும் 95 சதவீத பெண்கள் அன்றாடம் கடும் உழைப்பை செலுத்தி சிறிதளவு வருமானத்தையே ஈட்டுகின்றனர்.“பாலின பாகுபாடுக்கு எதிராக 67 நாடுகளில் மட்டுமே சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 18 நாடுகளில் மனைவி பணிபுரிவதை கணவர் சட்டபூர்வமாக எதிர்க்க முடியும். பணி ஓய்வுக்குப் பின்னால் கூட 35.5 சதவீதம் பெண்களுக்கு மட்டும்தான் ஓய்வு ஊதியம் கிடைக்கிறது.
இரண்டு லட்சத்திற்கும் மேல் பெண் விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாக்குரிமை வேண்டும், எட்டு மணி நேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை, முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டம், இன்று உணவு வேண்டும் என்று போராடக்கூடிய போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களுடைய நாற்காலியை மட்டும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் அவல நிலைமை தொடர்ந்து கொண்டிருக் கின்றது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
தேசிய குற்ற ஆவண காப்பகம் 2019ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள குற்ற அறிக்கையின்படி,
– கணவர் மற்றும் இதரர் கொடுமை செய்த வழக்கு 1,25,298.
– பெண்களை சீண்டியது மற்றும் தாக்கியது 88,367 வழக்குகள். பெண்களை கடத்தியது 72 780 வழக்குகள்.
– பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்குகள் 46,005.
– பாலியல் வன்கொடுமை 32 0333.
வரதட்சணை கொடுமை 13,297, வரதட்சணைக் கொடுமையால் மரணம் 71.15, பெண்களை அவமதித்தது 69.39, பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு 50.09, வன்கொடுமை செய்யப்பட்டு கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் 283, ஆசிட் வழக்குகள் 150 என இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பதில் முதல் இடமாக உத்தரப்பிரதேச மாநிலமும் 16-வது இடத்தில் தமிழ்நாடும் இருக்கின்றது.
நமது நாட்டில் பெண்கள் ஜனாதிபதியாக, பிரதமராக, சபாநாயகராக, முதலமைச்சராக, நீதிபதியாக, மாவட்ட ஆட்சித் தலைவராக, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக, விளையாட்டு வீரராக, விண்வெளி வீராங்கனையாக இருக்கிறார்கள் என பெருமை கொள்ளும் அதேநேரத்தில், பெண்களின் பாதுகாப்பு சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை. கடந்த சில நாட்களாக பெண் காவல்துறை கண்காணிப்பாளருக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டலை தமிழகமே அறியும். சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய உயர்மட்ட காவல்துறை அதிகாரி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் மோசமான நடவடிக்கை செயல்பாடு, பெண்களின்பாதுகாப்பை நிலைநாட்டுவதில் எத்தனை சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லா அதிமுக ஆட்சி
காவல்துறையிலேயே ராஜேஷ் தாஸ் போன்று கருப்பு ஆடுகள், பெண்களை கேவலமாக பார்க்கக்கூடிய மோசமான அதிகாரிகள், அதற்கு துணை போகக் கூடிய மிக முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரிகள் எந்தவிதமான மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம். ராஜேஷ் தாஸ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவருடைய பணி டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து கொண்டிருக்கின்ற அதிமுக அரசாங்கம் அம்மா வழியில் ஆட்சி செய்கின்றேன் என்று சொல்லிவிட்டு, பெண்களுக்கு பாதுகாப்பை கொடுக்க முடியாத ஒரு அரசாங்கமாக வலம் வருகிறது. பெண்கள் நினைத்தால் நிச்சயமாக, ஒரு நல்ல அரசாங்கத்தை பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய ஒரு அரசாங்கத்தை கொண்டு வர இயலும்.
ஆகவேதான் அனைத்து இடங்களிலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் புகாரை பெறும் காவல் அதிகாரி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை சார்ந்தவர்களும் துரிதமாக புகாரை கையாளத் தவறும்பட்சத்தில் துறைவாரியான நடவடிக்கை மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனையோ ஆணவக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு, காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துகொலை, ஆசைக்கு உடன்படாத காவல்துறை கண்காணிப்பாளரை மிரட்டுவது என ஏராளமான சம்பவங்கள் நம் காதுகளில் அனலாகக் கொட்டுகின்றன. இப்படி பரபரப்பாக பேசப்படும் செய்திகள் ஒரு சில தினங்களில் கண்டுகொள்ளப்படாமல் போகத்தான் செய்கின்றன.
பெண்ணின் வாக்குகளை அதிகமாகபெற்று ஆட்சிக்கு வந்த தமிழக அதிமுக அரசுக்கு இதுவெல்லாம்பெண்ணினத்தின் மீதான கொடிய குற்றங்களாகப்பட வில்லை. இப்படி ஒரு பிரச்சனையே அரசின் கவனத்தில் இல்லை. மறுபுறம் மதவாத மோடி அரசு பெண்களையும் குழந்தைகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. 2021 மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தின் ஒரு அரசியல்ப்பூர்வமான சூளுரை இருக்குமென்றால் அது பெண்குல விரோதிகளான இவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றுவதுதான்.
–தீக்கதிர்
2021.03.08