-பி.கிருஷ்ண பிரசாத்
நாட்டின் தலைநகர் டெல்லியின் எல்லைகளில், ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ பதாகையின்கீழ் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் தன்னெழுச்சியான கிளர்ச்சி என்று சொல்வதற்கில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் மிகப்பெரிய அளவில் வெகுஜன பங்கேற்புடன்,ஆட்சியாளர்களுக்குக் கிடுக்கிப்பிடி போடுமளவிற்கு நடந்துகொண்டிருக்கும் இந்தப் போராட்டம், அரசின் கொள்கைகளுக்கு எதிராக, குறிப்பாக அடுத்தடுத்து வந்த மத்திய அரசாங்கங்களின் நவீன தாராளமயக் கொள்கைகளால் மக்கள் மீது திணிக்கப்பட்ட சுமைகளுக்கு எதிராக, கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளாலும், தொழிலாளர் வர்க்கத்தாலும் நடத்தப்பட்டுவந்த கிளர்ச்சிப் போராட்டங்களின் தொடர்ச்சியேயாகும்.
தற்போது இந்தியாவில் பெரும் முதலாளித்துவ வர்க்கம் ஆழமான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நிதி மூலதனத்துடன் கைகோர்த்துக்கொண்டு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கம் ஆகிய இரு உழைக்கும் வர்க்கத்தையும் மேலும் தீவிரமானமுறையில் சுரண்டுவதன் மூலம் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவிடலாம் என்று பெரு முதலாளித்துவ வர்க்கம் ஒருவிதமான மாயையின் கீழ் இருந்துவருகிறது.
விவசாயிகளின் பிரதான வருமானம்
தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தையும் ரத்துசெய்துவிட்டு அதற்குப் பதிலாகபுதிதாக நான்கு தொழிலாளர் சட்டங்கள்என்ற பெயரில் முதலாளிகள் நலச்சட்டங்களையும், வேளாண் உற்பத்திப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மறுதலிக்கக்கூடிய விதத்தில் புதிய வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றியிருப்பதற்குக் காரணம் இவர்கள் இந்தத் திசைவழியில் சென்று கொண்டிருப்பதேயாகும். மறுபக்கத்தில் விவசாயிகளும், தொழிலாளர் வர்க்கமும், தங்களின் வாங்கும் சக்தியை வீழ்ச்சியடையவைத்து, தங்களை ஓட்டாண்டிகளாக்கிட கார்ப்பரேட்டுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்களை எதிர்த்து முறியடிப்பதற்கான போராட்டத்தில் இறங்கியிருக்கிறது. இது முதலாளித்துவத்தை மேலும் ஆழமான நெருக்கடிக்குள் மூழ்க வைத்திருக்கிறது.
வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலைகள்தான் விவசாயக் குடும்பங்களுக்கு இருந்துவரும் ஒரேயொரு பிரதானவருமானமாகும். எனவேதான், விவசாயிகள் தங்கள் வேளாண் நிலம் மற்றும் கால்நடைச் செல்வம் ஆகியவற்றைப் பாதுகாப்பதுடன் வேளாண் விளைபொருள்கள் அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலையையும் தங்கள் போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக முன்வைத்திருக்கிறார்கள்.விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பிரதான கோரிக்கைகள் கண்ணியமான வாழ்க்கைக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவையாகும். இந்தப்பின்னணியில் விவசாயப் பிரச்சனை, நாட்டின் அரசியல் நிலைமையில் முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்தப் பிரச்சனை பிராந்தியத்திற்குப் பிராந்தியம் அதன் தீவிரத்தன்மையில் சற்றே கூடுதல் குறைச்சல் இருந்தபோதிலும் நாட்டின் முக்கியப் பிரச்சனையாக மாறி இருக்கிறது.
கார்ப்பரேட் மயம் தீர்வல்ல
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தின் கேந்திரமான அம்சம், விவசாயப் பிரச்சனை மீதான தீர்மானமேயாகும். நாட்டில் சுதந்திரத்திற்குப்பின் இந்திய அரசுக்குத் தலைமை தாங்கும் பெரும் முதலாளித்துவ வர்க்கம், வேளாண்மை சார்ந்த தொழில்கள் மீது உந்துதலை ஏற்படுத்தும்விதத்தில் உள்நாட்டுத் தொழில்மயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியைகுறிக்கோளாகக் கொண்டு விவசாய சீர்திருத்தங்கள் மூலமாக உற்பத்திச் சக்திகளைக் கட்டவிழ்த்துவிடுவதற்குப் பதிலாக, ஒருங்கிணைந்த நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்குப் பதிலாக, நிலப்பிரபுவர்க்கத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டது. சர்வதேச நிதி மூலதனத்துடன் கைகோர்த்துக்கொண்டு நவீன தாராளமய மாடல்வளர்ச்சிக்கு சரணடைந்து கொண்டிருக்கிறது.
சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கழிந்த பின்பும், நிலம் வைத்திருப்பவர்களில் 60 சதவீதத்தினர் வேளாண் நிலத்தில் வெறும் 5 சதவீத அளவிற்கே இருக்கும் அதே சமயத்தில், நிலம் வைத்திருப்பவர்களில் 10 சதவீதத்தினர் 55 சதவீத நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். மிகப்பெரிய அளவில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் ஓட்டாண்டிகளான நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களாகத் தங்களை இணைத்துக்கொண்டிருப்பதால், நிலம் ஒருசிலரிடம் குவிவது இப்போது மேலும் அதிகமாகியிருக்கிறது.மிகப்பெரும்பான்மையான விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்திட ஒருங்கிணைந்த நிலச் சீர்திருத்தங்களும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சியும் அவசியம் என்பதை ஆளும் வர்க்கங்கள் ஏற்றுக்கொள்ளாததால், பாஜக தலைமை தாங்கும் மத்திய அரசாங்கம், விசாய நெருக்கடிக்குத் தீர்வு விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதே என்கிற முன்மொழிவை முன் வைத்திருக்கிறது.
வேளாண் தொழில்களில் ஏகபோகம் லாபக்குவிப்பு
உலக அளவில், வேளாண் உற்பத்திப்பொருள்களின் மதிப்பைக் கூடுதலாக்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ள உணவுப் பதப்படுத்தும் துறை உயர் வளர்ச்சியைக்காட்டுகிறது. உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட மதிப்புக்கூட்டும் நுகர்வுப் பொருள்களின் மதிப்புக்குக் கீழேதான் அல்லது 10 சதவீத அளவிற்குத்தான் அந்தப் பயிரை உற்பத்தி செய்த விவசாயிகளுக்குப் போய்ச் சேர்ந்திருப்பதாகச் சித்தரிக்கின்றன. பஞ்சாப்பில், பாசுமதி நெல்லுக்கு, விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலமாக ஒரு கிலோவிற்கு 18 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும் மட்டுமே பெறுகிறார்கள். இதேசமயத்தில் இதனை வாங்கும் அதானி குழுமம் இதனைசிறப்பு பாசுமதி அரிசி என்று தன்னுடைய ஃபார்ச்சூன் பிராண்ட் (Fortune Brand) பெயரில் ஒரு கிலோ அரிசியை 208 ரூபாய் வீதம் விற்கிறது. உலகச் சந்தையில் பாசுமதி அரிசியைக் கொண்டு தயார்செய்யப்பட்ட உற்பத்திப் பொருள்கள் ஒவ்வொரு கிலோவும் சுமார் 700 ரூபாயிலிருந்து 2200 ரூபாய்வரையிலும் விற்கப்படுகின்றன.
கர்நாடகாவிலும், கேரளாவிலும் காப்பி பயிரிடும் விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்திடும் காப்பிக் கொட்டைகளுக்கு, ஒரு கிலோவுக்கு 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனைப் பெற்றிடும் நெஸ்லே குழுமம் இதனைப் பயன்படுத்தி சுமார் இரண்டரை கிலோ காப்பிக் கொட்டையில் ஒரு கிலோஇன்ஸ்டண்ட் காப்பித் தூள் தயார் செய்து,ஒரு கிலோ காப்பித் தூளை, சராசரியாக 3000ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, பல பெயர்களில் கிலோ 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாய்வரையிலும் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. உண்மையில், பெரிய அளவில் வேளாண் தொழில்களில் ஏகபோக உடைமை வருவதென்பது, கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் குவிப்பதற்கே வழிவகுத்திடும்.
விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் சட்டமே தேவை
மூன்று புதிய வேளாண் சட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களையே பிரதிபலிக்கின்றன. இப்போது தேவை, விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்திடக்கூடிய விதத்தில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பதே. ஒப்பந்த விவசாயத்தை நோக்கித் தள்ளப்படும் அரசின் கொள்கை அது சார்ந்திருக்கிற வர்க்கத்தின் நலன்களையே பிரதிபலிக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளையும் மற்றும்விவசாயத் தொழிலாளர்களையும் விவசாயத் துறையிலிருந்தே அந்நியப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், கடும் சமூக-அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மையில் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது. சர்வதேச நிதி மூலதனத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ள பெரும் முதலாளித்துவ வர்க்கம் மிகப்பெரிய அளவில் விவசாயிகளுக்கு எதிராக ஒரு வர்க்க மோதலை ஏவியிருக்கிறது. விவசாயிகள் என்று குறிப்பிடும்போது இதில் பணக்கார விவசாயிகள் மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுக்களும் (capitalist landlords) அடங்குவர். ஆளும் வர்க்கக் கூட்டாளிகளுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் தொழிலாளி வர்க்கத்திற்கும், ஏழை விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் தங்களுடைய கார்ப்பரேட்-நிலப்பிரபு ஆதிக்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை உக்கிரமானமுறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.
உருவாகியிருக்கும் புதிய வாய்ப்புகள்
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்க்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதன் மூலம் நம் நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதுடன் நவீனதாராளமய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மிகவும் மூர்க்கத்தனமானமுறையில் பின்பற்றுவதும் நாட்டில் உள்ளபெரும் முதலாளிகளுக்கும் இதர முதலாளிகளுக்கும் இடையே புதிய மோதல்கள் அதிகரிப்பதற்கும் இட்டுச் சென்றிருக்கிறது. இந்த மோதல்கள் பாஜக-விற்கு எதிராக விரிவான அளவில் ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி இருக்கிறது.விவசாயம், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் மாநிலப் பட்டியலில் வரக்கூடியதாகும். பாஜக தன்னுடைய ஒட்டுமொத்த மேலாதிக்கத்தை நிறுவிடும் முயற்சியின் காரணமாக, நாட்டில் நம் அரசமைப்புச்சட்டம் அமைத்துத் தந்துள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பையே ஒற்றை ஆட்சி முறையை நோக்கி மாற்றும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் உரிமைகள் மீதுகடும் தாக்குதல்களை ஏற்படுத்தி இருக்கிறது. பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் மாநிலக் கட்சிகள் இதன் காரணமாக கூர்மையான தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய மேலாதிக்க நடவடிக்கைகளுடன் மதவெறித் தீயை விசிறிவிடும் நடவடிக்கைகளும் சேர்ந்துகொண்டிருப்பதால், மாநிலக் கட்சிகளின் தலைமையில் உள்ள பல மாநில அரசாங்கங்கள் இப்போது வெளிப்படையாகவே பாஜக-வை எதிர்க்கத் தள்ளப்பட்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்துவந்த மகாராஷ்ட்ராவின் சிவ சேனைக் கட்சியும், பஞ்சாப்பின் அகாலி தளமும் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாஜக-விற்கு எதிராக வெளிப்படையாகவே வெளியேறிவிட்டன. பாஜக-விற்கும், மாநிலக் கட்சிகளுக்கும் இடையே அதிகரித்துவரும் முரண்பாடுகள் பாஜக-விற்கு எதிராகவிரிவான அளவில் ஒற்றுமையைக் கட்டிஎழுப்புவதற்கான வாய்ப்புகளை அளித்திருக்கிறது.
விவசாய வர்க்கங்கள் மத்தியில் வேறுபாடுகள் நீடிக்கக்கூடிய அதே சமயத்தில்,விவசாயிகளின் பல்வேறு பிரிவினருக்கிடையேயும், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக வளர்ந்து கொண்டிருக்கும் ஒற்றுமை, ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக மக்களின் அரசியல் ஒற்றுமையை மேலும் விரிவுபடுத்திடும். விவசாயிகளுக்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையேயான ஒற்றுமை பல்வேறுஅரசியல் கட்சிகள் மத்தியிலும் ஒன்றுபட்டுச் செயல்படுவதற்கான வாய்ப்புகளுக்கும் வழிவகுத்திருக்கிறது. எதிர்வரும் காலங்களில் இந்தப் போராட்டம் மேலும் உக்கிரமாகும், நாட்டின் அரசியல் நிலைமையில் தீர்மானகரமான செல்வாக்கைச்செலுத்தும்.
கேரளா போன்ற மாநிலங்களில், விவசாயிகளும், தொழிலாளர்களும் விவசாய நிலச்சீர்திருத்தத்தின் அடுத்த கட்டத்தைக் கோரிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பயிர்கள் அடிப்படையிலான விவசாயப் பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான நவீன சந்தை வலைப்பின்னல் மற்றும் வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்தல், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை முதலானவற்றைக் கோரிக் கொண்டிருக்கிறார்கள்.
குறைந்தபட்ச ஆதார விலையை சி2+50 சதவீதம் (C2+50%) உத்தரவாதப்படுத்துவதற்கும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்துவதற்கும், இரு வழிகள் இருக்கின்றன. முதலாவதாக, விவசாயிகளிடமிருந்து வேளாண் உற்பத்திப் பொருள்களை வாங்கி மதிப்புக்கூட்டி, சந்தைப்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து உபரித்தொகையில் ஒரு பங்கினை அளித்திடவகைசெய்யும் விதத்தில் சட்டம் இயற்றவேண்டும். இரண்டாவதாக, ‘சமூகக் கூட்டுறவு சங்கங்கள்’ நிறுவ சட்டமியற்றவேண்டும். இத்தகைய சமூகக் கூட்டுறவு சங்கங்கள் மீது அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாடு இருக்கக்கூடாது. இவை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தலைமையின் கீழ் நிதி மற்றும் நிர்வாக சுயாட்சித்தன்மையுடன் செயல்பட வேண்டும். இவை பயிர்கள் அடிப்படையிலான வேளாண் பதப்படுத்தும் தொழில்களையும், நவீன கட்டமைப்பு வசதிகளுடன் சந்தை வலைப்பின்னலையும் மேற்கொள்ள வேண்டும். இவைகளுக்கு அரசின் நிதி உதவி மற்றும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இவற்றின்மூலம் கிடைக்கும் உபரித் தொகைகள், இதன் பிரதான உற்பத்தியாளர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கேரளாவில் கூட்டுறவுத் துறையின்கீழ்சந்தைத் தலையீட்டு மாடல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நாடு முழுதும் விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். மத்திய அரசு கொள்முதலை உத்தரவாதப்படுத்தாமலேயே நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,868 ரூபாய் குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவித்திருக்கும்போது, கேரளா அரசாங்கம் தன்னுடைய கூட்டுறவு சங்கங்களின் ஆதரவுடன் அனைத்து வேளாண் பொருள்களையும் கொள்முதல் செய்திடும் அமைப்புமுறையை ஏற்படுத்தி, நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,850 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. ரப்பர் மற்றும்தேங்காய் உட்பட அனைத்துப் பயிர்களுக்குமான கூட்டுறவு சந்தையையும் வளர்த்தெடுத்திருக்கிறது.
2021-22ஆம் ஆண்டுக்கான நடப்பு பட்ஜெட்டில், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் காப்பி செர்ரி (coffee cherry)-க்கு, இந்தியாவிலேயே முதன்முறையாக, குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு கிலோவுக்கு 90 ரூபாய் அறிவித்திருக்கிறது. இப்போது இதுதொடர்பாக இருந்துவரும் சந்தை விகிதம் ஒரு கிலோவுக்கு 65 ரூபாய் என்பதாகும். காப்பியைப் பதப்படுத்தி, சந்தையில் காப்பித் தூளை “வயநாடு காப்பி” (“Wayanad Coffee”) என்ற பெயரில் விற்பதற்குத் திட்டமிட்டிருக்கிறது. பின்னர் இதில்வரும் உபரித் தொகையை காப்பி உற்பத்திசெய்திடும் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கவும் திட்டமிட்டிருக்கிறது. இதேபோன்றே, ரப்பர், தேங்காய் உட்பட அனைத்துப் பயிர்களுக்கும் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு நேரெதிரான விதத்தில் மோடி அரசாங்கம் விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது.
விவசாயி கூட்டுறவு திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்
விவசாயி கூட்டுறவுத் திட்டம் (PCP-Peasant Cooperative Plan) இல்லாமல் இந்தியாவில் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாத்திட முடியாது. விவசாயி கூட்டுறவுத் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த நிலச்சீர்திருத்தங்கள் கொண்டுவந்தும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்மயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சந்தை வலைப்பின்னல் மூலமாக விவசாயம் நவீனப்படுத்தப்பட வேண்டும். நம் நாட்டில் சுமார் 86 சதவீத விவசாயிகள், இரண்டு ஹெக்டேருக்கும் குறைவாகவே நிலம் வைத்திருப்பவர்கள். இவர்கள்தங்கள் நிலங்களை தங்களின் அடுத்த தலைமுறைக்கு மாற்றும்போது அவர்களுக்கான நிலத்தின் அளவு மேலும் குறைகிறது. எனவே அவர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பாதுகாக்கக்கூடிய அளவிற்குப் போதுமான வருமானத்தைத் தங்களின் நிலத்தின்மூலம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு என்ன?இவர்கள் அனைவரையும் விவசாயி கூட்டுறவுத் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைத்திட வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் சமூகக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒருங்கிணைத்திட வேண்டும். இவற்றின்மூலமாக வேளாண் பதப்படுத்தும் தொழில்களையும், நவீன சந்தை வலைப்பின்னலையும் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு இவை சமூக உடமையாக்கப்பட்டபின் இதில் வரும் உபரித்தொகையை இதில் உள்ள விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளித்திட வேண்டும். மேலும் இவற்றின்மூலம் புதிய வேலை வாய்ப்புகளையும் கட்டம் கட்டமாக அதிகரித்திட வேண்டும். அவற்றின்மூலம் விவசாயத்தையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவரின் வாழ்வாதாரங்களையும் பாதுகாத்திட வேண்டும்.
‘சுபிக்ஷ கேரளம்’ (‘Subhiksha Keralam’) மற்றும் இத்தகைய கூட்டுறவு சங்கங்களின் தலையீடுகள் மூலமாக, கேரளாவில் இடதுஜனநாயக முன்னணி அரசாங்கம், மோடி தலைமையிலான பாஜக-வின் மத்திய ஆட்சியின் நவீன தாராளமய மாடலுக்கு எதிராகஓர் இடது ஜனநாயக மாற்றை, பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தியாவில் விவசாயப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் விவசாயி கூட்டுறவு திட்டம் மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.விவசாயிகள் போராட்டத்தின் கோரிக்கைகளை, தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலமும், இடது, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையை மேலும் விரிவுபடுத்துவதன் மூலமும் மட்டுமே நிறைவேற்றிட முடியும். நாட்டின் அரசியலில் விவசாயப் பிரச்சனை தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது. அது தற்போது தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் நன்குபிரதிபலித்திடும். கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மீண்டும் அமைவது திண்ணம். இதர மாநிலங்களிலும் இடது, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெறுவதும் திண்ணம். இவ்வாறு இவை வெற்றிபெறுவது, கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியமாகும்.
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி,
தமிழில்: ச.வீரமணி