Site icon சக்கரம்

தாராளவாதக் கொள்கைகளும், சூழலியலும் ஏன் எப்போதும் சண்டையிட்டுக் கொள்கின்றன?

க.சுபகுணம்

ந்த சர்வதேசப் பொருளாதார வியூகத்தில் பின்விளைவுகளும் இருக்கின்றன. அது அனைவராலும் உணரப்படாமலும், புரிந்துகொள்ளப் படாமலுமே இருந்தன. இந்தப் பின்விளைவுகள் எதுவும் நேரடியானதில்லை, மறைமுகமானது.

“வெப்பமயமாதல் பற்றி நாம் பேசப் போகிறோமா? அப்படியென்றால் உலகமயமாக்கல்தான் அதை ஊக்குவிக்கும், உலகமென்னும் மரத்தை வெட்டிக்கொண்டிருக்கும் ரம்பம்”

1990-களுக்கு முன் அரிதாகவும் ஆச்சர்யமாகவும் கேட்ட ஒரு வார்த்தை. இன்று அதுவே உலகின் வாழ்வாகிப் போனது. உலகமயமாக்கல், நாளுக்கு நாள் சக்திவாய்ந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது.

இந்த சர்வதேசப் பொருளாதார வியூகத்தில் பின்விளைவுகளும் இருக்கின்றன. அது அனைவராலும் உணரப்படாமலும், புரிந்துகொள்ளப் படாமலுமே இருந்தன. இந்தப் பின்விளைவுகள் எதுவும் நேரடியானதில்லை, மறைமுகமானது. அவை உடனடியாகத் தெரிவதில்லை. தெரியவுமில்லை.

பொருளாதார உலகமயமாக்கலின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமானதாக இருக்கப்போவதில்லை. அது தொடர்ச்சியான அரசியல் நெருக்கடிகளால் தகர்த்தெறியப்படும். மிகப்பெரிய வர்த்தகச் சந்தையை உண்டாக்கித் தரும் ஐரோப்பிய யூனியன் குழுவிலிருந்து பிரிட்டன் வெளியேறியது, அமெரிக்காவின் உலக வர்த்தகத்தைவிட அமெரிக்கர்களே முக்கியமென்று நினைத்த ட்ரம்ப் வெற்றிபெற்றது, பிரான்சிலும் ஜெர்மனியிலும் தேர்தலின்போது உலகமயமாக்கக் கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்குக் கிடைத்த ஆதரவு; போன்ற உலக அரசியல் நிகழ்வுகள் உலகமயமாக்கலின் ஆபத்தான விளைவுகளை அவர்கள் புரிந்துகொண்டார்களோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

உலகமயமாக்கல் கொள்கையை ஆதரித்த, முன்னெடுக்க ஊக்குவித்த டொம்பிஸா மோயோ (Dombisa Moyo) இப்படியாகக் கூறுகிறார்,

“நாம் முன்னெடுத்த கொள்கை பல நஷ்டங்களைக் கொடுத்துவிட்டது. அதையெல்லாம் சரிசெய்ய இப்போதிருக்கும் திட்டங்களும், முன்னெடுப்புகளும் எந்த அளவுக்கு உதவுமென்று எனக்குப் புரியவில்லை. இது உண்மையை எதிர்கொள்ள வேண்டிய நேரம். நமது கொள்கை தோற்றுவிட்டது. அதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.”

உலகமயமாக்கல் பல விஷயங்களை உள்ளடக்கியது. அதில் முக்கியமானது, நாடுகளுக்கிடையிலான எளிய வணிகத்தைச் சாத்தியமாக்குவது. `நாம்’ அதைச்சொல்லி என்னவெல்லாம் செய்துள்ளோமோ, அவற்றைச் சரிசெய்து மீட்டுக் கொண்டுவருவது மொத்த மனித இனத்துக்குமே மிகப்பெரிய சவால். உலகின் அத்தனை மனிதர்களுக்குமே அடிப்படை உரிமைகள் உள்ளது. அந்த உரிமைகள் சிலரிடம் மட்டுமே தேங்கிக்கிடக்க இந்தக் கொள்கைதான் காரணம். அதில் சுத்தமான காற்றும் குடிநீரும் அடக்கம். சூழலியல் பாதிப்புகள் அனைத்திற்கும் சந்தையில் ஏற்படும் தேவையும் பற்றாக்குறையுமே காரணம். அது அப்படி மாறியதற்கு உலக முதலாளித்துவமே காரணம். அதாவது கார்ப்பரேட். எந்த மூலையிலுள்ள எவ்வளவு சிறிய நாடாக இருந்தாலும் இப்போதைய உலகச் சூழலில் இந்த வார்த்தை யாருக்குமே அந்நியமில்லை. நம் வாழ்வில் உலகப் பொருளாதாரத்தில் அவ்வளவு ஒன்றிப்போய்விட்டது. அதற்கு உதவியது உலகமயமாக்கம் ஊக்குவித்த தாராளவாதக் கொள்கை. அதுதான் சூழலியல் சமநிலையைச் சுத்தியலால் அடித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலில் அப்படியென்ன பாதிப்புகளை அந்தக் கொள்கை உண்டாக்கிவிட்டது?

தாராளமயப் பொருளாதாரக் கொள்கை உலகளவில் காலநிலைச் செயற்பாடுகளையும், சுற்றுச்சூழலையும் மொத்தமாகச் சீரழித்துக் கலைத்துப் போட்டுவிட்டது. நடந்தது என்ன? “உலக வெப்பமயமாதலைப் பற்றிக் கவலையில்லை. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று ஒருவரும் சொல்லமுடியாத அளவுக்கு மொத்த மனித இனத்தையுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்கள். இந்த நவீன உலகில் சூழலியல் பிரச்னைகளிலிருந்து தப்பிப்பது யாராலும் முடியாது. அதற்கான பொறுப்பு மொத்தமும் மொத்த பேருக்குமே சொந்தம். அந்தப் பொறுப்பின் விகிதம் மாறுபடலாம், ஆனால் யாரும் தப்பிக்கமுடியாது. வளர்ந்த நாடுகள் தேவையான உற்பத்தித் தொழிற்சாலைகளைத் தங்கள் நாடுகளுக்கு வெளியே வளரும் நாடுகளில் அமைத்துவிடுகிறார்கள். அதன்மூலம் தங்கள் சுற்றுச்சூழலை மட்டும் பாதுகாப்பதில் பேரார்வம் கொண்டு முனைந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு தங்களுக்குத் தேவையான லாபத்தை வளரும் நாடுகளின் சூழலைப் பலியாக்கிச் சம்பாதித்துக் கொள்கிறார்கள். அங்கு ஏற்பட்டிருக்க வேண்டிய சூழலியல் கேடுகளை ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அங்கிருந்து லாபங்களை இறக்குமதி செய்கிறார்கள். சுற்றுச்சூழல் பிரச்னைகள் அனைவராலும் சரிசமமாகப் பங்கிடப் படுவதில்லை. சிலருக்கு வெற்றியையும் அபரிமித லாபத்தையும் கொடுத்த உலகமயமாக்கல் பலருக்கு வறுமையையும், சுகாதாரச் சீர்கேடுகளையும், மோசமான குடிநீர், மாசடைந்த காற்று ஆகியவற்றையும் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கண்ணீர் சிந்தவைத்தது.

வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்ற மோசமான சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீவிரப்படுத்தியதில் தாராளவாதக் கொள்கைக்கு அதிகப் பங்குண்டு. இராட்சசத்தனமான காடழிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, அதைச் சீரழித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்தியதும் அந்நிய முதலீடுகள்தான். சூழல்மீது அக்கறையின்றி முறையாகச் செயல்படாத பன்னாட்டு நிறுவனங்களும் அப்படி ஏழை நாடுகளில் ஊடுருவும் விதமாக முதலீட்டுக் கொள்கைகளை பாதுகாப்பற்றதாக்கியதும் அதே தாராளவாதக் கொள்கைதான். 1990-க்குப் பிறகே சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதும், வெப்பமயமாதலும், இவற்றுக்குக் காரணமான கார்பன் வெளியேற்றமும் அதிகமாக நடப்பதாக அரசுகளுக்கிடையேயான காலநிலை மாற்றக் குழு தெரிவித்தது. இந்த விளைவுகளுக்குக் காரணமும் மனிதத் தலையீடுகள்தான். உலகமயமாக்கலே தற்போதைய சூழலியல் பிரச்னைகளுக்குக் காரணமென்பதைச் சர்வதேச அளவில் பல சூழலியலாளர்கள் உரக்கப் பேசுகிறார்கள். அவர்களின் பேச்சு தற்போது எளிய மக்கள் மத்தியிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. அளவுக்கு அதிகமான தொழிற்சாலை உற்பத்தி, சர்வதேச வணிகத்தில் நுகர்வோர் கலாச்சாரத்தை அதிகப்படுத்தக் கையாளப்படும் வர்த்தக உத்திகள் அனைத்துமே இந்தக் குற்றத்துக்குப் பங்குதாரர்கள்.

கரிமவளி வாயுக்களை (CO2)அதிகமாக வெளியேற்றுவது, சரக்குப் போக்குவரத்துத் துறை, தொழிற்சாலைகள், காடழிப்பு போன்ற செயல்கள்தாம். 1990-ம் ஆண்டு கரிமவளி வாயுவை வெளியேற்றுவதில் வெறும் 9% மட்டுமே பங்கு வகித்த போக்குவரத்துத் துறை அடுத்த பதினைந்து ஆண்டுகளிலேயே 86 சதவிகிதமாக உயர்ந்ததில் சரக்குப் போக்குவரத்துக்குப் பெரும் பங்குண்டு. அதிலும் கப்பல், வான் போக்குவரத்து அதிக பாதிப்புகளை வளிமண்டலத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவை உயர்ந்ததற்குக் காரணம் உலகமயமாக்கலால் அதிகமான வெளிநாட்டு முதலீடுகள். முன்பு உற்பத்தி செய்த சரக்குகளில் தத்தம் நாட்டுக்குள் விற்றதுபோக வெளிநாடுகளில் விற்பதற்காகக் கொண்டு சென்றார்கள். தற்போது வெளிநாடுகளில் உற்பத்தியாகும் தங்களின் மொத்த சரக்குகளையும் திரும்பக் கொண்டுவருகிறார்கள். அதோடு மற்ற நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள். இதனால் சரக்குப் போக்குவரத்து அதிகமானது. விமானமற்ற வானையும், சரக்குக் கப்பலற்ற கடலையும் பார்க்கவே முடியாத அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதன் விளைவுகள் வளிமண்டலத்தையும், கடலையும் அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

போக்குவரத்துத் துறைதான் அதிக இலாபம் கொழிக்கும் தொழிலாகத் தற்போது பார்க்கப்படுகிறது. சர்வதேச உள்நாட்டு போக்குவரத்துகள் குறித்த நிறுவனம் 2016-ம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கைப்படி கரிமவளி வாயு வெளியேற்றம் முன்பைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளது நமக்குத் தெரியவந்தது. அதாவது ஆண்டுக்குச் சுமார் 16.4 மில்லியன் தொன்கள் கரிமவளி வாயு வெளியேற்றப் படுகின்றது. இந்த விஷயத்தில் நம் அனைவரின் மனநிலையும் ஒரே மாதிரியாகத் தானிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் என்ற இரண்டில் ஏதாவதொன்றைத்தான் தேர்வு செய்யவேண்டும். ஒன்று வேண்டுமெனில் ஒன்றைத் தியாகம் செய்யத்தான் வேண்டும் என்பதுதான் அந்த மனநிலை. பொருளாதார வளர்ச்சியும் சூழலியல் கேடுகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் பிணைக்கப்பட்டுவிட்டது. உலகமயமாக்கலின் முக்கிய அங்கமான நுகர்வுக் கலாச்சாரம் இருக்கும்வரை உலக வெப்பமயமாதலும் அதிகரித்துக்கொண்டே தானிருக்கும்.

உலகமயமாக்கல் பொருளாதாரம் என்ற புத்தகத்தில் ஹூவர்ட், வெர்டியர் என்ற இரண்டு பொருளாதார நிபுணர்களும் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்,

“இந்தத் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை, அதிகரித்துவிட்ட சரக்குப் போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டுக்கு மட்டும் காரணமாக அமையவில்லை. மனிதர்களின் பேராசையை அளவுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. அதன் விளைவாக காடழிப்பும், பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் கடந்த 30 ஆண்டுகளில் இராட்சசத்தனமாக அதிகரித்துவிட்டது. மக்களின் ஆசைகளைத் தூண்டிவிட்ட நுகர்வுக் கலாச்சாரம் ஊக்குவிக்கப் பட்டதே இதற்குக் காரணம்.”

ஆசைகளைத் தேவைகளாக்கி அதைச் சரக்குகளாக்கி அந்தச் சரக்குகளை வியாபாரமாக்கி அவற்றுக்குச் சந்தைகளில் பற்றாக்குறையையும் உண்டாக்கி மேலும் மேலும் உற்பத்தி செய்துகொண்டே போகிறார்கள். அது மேலும் மேலும் சூழலை அழித்துக் கொண்டேயிருக்கிறது. உதாரணத்துக்குச் சீனாவுக்கு பிரேசில் ஏற்றுமதி செய்யும் சோயா உற்பத்தி 2003-ம் ஆண்டு 6 மில்லியன் தொன்கள். அதுவே தற்போது 50 மில்லியன் டன்கள். உலகின் மிகச் சிறந்த பல்லுயிர்ச்சூழல் பகுதியான அமேசானோடு அமைந்திருக்கும் பிரேசிலில் இந்தச் சோயா உற்பத்திக்காகப் பல இலட்சம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன. வியாபார நோக்கில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. அதுவும் சீனாவின் முதலீடுகளில். சீனாவின் இலாபத்துக்காகப் பிரேசிலின் காடும் காட்டுயிர்களும் அப்பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரமும் பிடுங்கப்படுகிறது. அதுவும் சீனா உலகச் சந்தையை பிடிப்பதற்காக. அதேபோல் பருத்தி, பயிர்கள், அரிசி வகைகள் போன்றவற்றை இந்தியா உலகின் பல்வேறு முக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. ஆனால் இந்தியாவில் இன்னமும் பல்லாயிரம் மக்கள் உணவின்றித் தவித்துக்கொண்டு தானிருக்கிறார்கள். அதேசமயம் பல ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்தித் தொழிற்சாலைகளும் இந்தியாவில்தான் இயங்கி வருகின்றன. இந்த அனைத்து செயல்களுமே ஒருவித சங்கிலித்தொடரால் பிணைக்கப்பட்டுள்ளன. அந்தச் சங்கிலித்தொடர் சூழலியல் கேடுகளை நோக்கி நீள்கின்றன. இயற்கைப் பேரிடர்களுக்கும், கடல்மட்ட மாற்றங்களுக்கும் அவை வழிவகுக்கின்றன. அது குறைவான கடல்மட்ட உயரத்தில் அமைந்துள்ள துவாலு, பலாவு, மாலத்தீவு போன்ற தீவுகளையும் அதன் மக்களையும் நீருக்கிரையாக்குகின்றன. உலகச் சூழலியல் கேடுகளில் பங்கு வகிக்காத அந்த மக்களின் அழிவு உலகமயப் பொருளாதாரக் கொள்கையால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரப் பலன்கள் எப்படிச் சமமாகப் பங்கிடப் படுவதில்லையோ! அதேபோல் இந்தப் பேரழிவுகளும் அனைவருக்கும் சமமாகப் பங்கிடப் படுவதில்லை. ஆம், லாபம் ஒருவருக்கும் விளைவுகள் ஒருவருக்குமாகச் சென்றடைந்து கொண்டிருக்கின்றது. இதுதான் தாராளவாத உலகமயப் பொருளாதாரக் கொள்கை இந்த உலகில் உண்டாக்கிய விளைவுகள். இது மாறவேண்டுமென்றால் புதிய பொருளாதாரக் கொள்கைகள் சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட வேண்டும். அது அனைத்து நாடுகளுக்கும் நன்மை பயப்பதாக அமையவேண்டும். ஒரு நாட்டைச் சுரண்டி மற்றொரு நாடு வளம்பெறுவதாக அமையக்கூடாது.

“உலகமயப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பூமியின் வடகோளம் உலகச் சுற்றுச்சூழலை அழித்துக் கொண்டிருக்கிறது. பூமியின் தென்கோளம் அதனால் ஏற்படும் அழிவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.”

Exit mobile version