
இலங்கையில் உள்ள மாநகர சபைகளில் முக்கியத்துவம் பெற்ற ஒரு நகர சபையாக யாழ். மாநகரசபை விளங்குகிறது. தமிழர்கள் செறிந்து வாழும் ஒரு நகரத்தில் தமிழர்கள் ஆளும் தரப்பிலும் எதிர்த் தரப்பிலும் அமர்ந்து சபை எல்லைக்குட்பட்ட நிர்வாகத்தையும், அபிவிருத்தி நடவடிக்கைகளையும் நடத்தவும் வகுக்கவும் கூடிய ஒரே சபை இலங்கையில் யாழ். மாநகர சபை மட்டுமே. மிகச் சிறப்பாக இயங்கிய சபையாக இது விளங்கிய போதிலும் 1975 துரையப்பா படுகொலையின் பின்னர் நகர நிர்வாகம் படிப்படியாக நலிவடைந்து தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றதும் பின்னர் 2009 செப்டம்பர் முதலாம் திகதி யோகேஸ்வரி பற்குணராஜா புதிய மாநகர முதல்வராக பதவியேற்கும் வரை யாழ். மாநகரம் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியில் இருக்கவில்லை. கைவிடப்பட்ட நிலையில் இருந்தது என்பதே உண்மை.
வடபுலத்து தமிழ்ச் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை, தமது அபிவிருத்தியைத் தாமே திட்டமிட்டு நிர்வகிக்கும் அதிகாரம் தம் வசம் வழங்கப்பட வேண்டும் என்பதே. கேட்கப்படும் அதிகார அலகுகளின் எல்லைகளில்தான் பிரச்சினை காணப்படுகிறதே தவிர, கோரிக்கையில் அல்ல. அதேபோல யுத்ததின் பின்னர் முதல் தடவையாக வடமாகாண சபைத் தேர்தலும் நடைபெற்று முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் ஆட்சியும் நடைபெற்றது. இம் மாகாண சபையின் ஆட்சி எவ்வாறு அமையும், மிகச் சிறப்பாகவும் எடுத்துக்காட்டாகவும் அமையுமா என நாடெங்கும் ஒரு எதிர்பார்ப்பு நிலவியதும் அந்த எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போடப்பட்டதும் நாம் அறிந்தவையே.
யாழ். மண் நிறைய பிரச்சினைகள் கொண்டது. ஒரு போரைச் சந்தித்து மீண்டு வந்த மண் என்பதால் உறுதியாக நின்று செம்மையாக செயல்பட வேண்டிய அவசியம் இம் மண்ணில் இயங்கும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கு உண்டு. அதேபோல, யாழ். மாநாகர சபையும் சக்திமிக்கதாக இயங்கி மாநகர எல்லைவாழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டிய பொறுப்பையும் கொண்டிருக்கிறது.
யாழ். நகரில் ஒரு நிர்வாக அமைப்பு 1923ம் ஆண்டு தோற்றம் பெற்றது. பத்து உறுப்பினர்களைக் கொண்ட நகர மாவட்ட கவுன்சில் நகர நிர்வாகத்தை பொறுப்பேற்றது. பின்னர் 1940ம் ஆண்டு யாழ். நகரசபை உதயமானது. 1949ம் ஆண்டு ஜனவரி மாதம் 15 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகரசபை இயக்கத்துக்கு வந்தது. கனகரட்னம் சபையின் முதல் முதல்வராக தெரிவாகினார்.
நகர சபை இயற்க ஆரம்பித்தாலும் 1975க்குப் பினன்ர் ஏற்பட்ட அசாதாரண சூழல்களினால் நகரசபை இயங்கவும் இல்லை; வரி அறவிடப்படவும் இல்லை. திருமதி யோகேஸ்வரி நகர முதல்வராக பதவியேற்ற போது இறுகிப்போயிருந்த மாநகரசபையின் சக்கரங்களை இயங்கச் செய்வதே அவர் முன்பிருந்த பாரிய சவாலாக இருந்தது.
விக்னேஸ்வரனின் காலத்தில் மாகாணசபை மக்கள் அபிலாசைகளை பூர்த்தி செய்வதாக அமையவில்லை என்பது உண்மையானாலும் தற்போது அச் சபையே முடங்கிக் கிடக்கிறது. இவ்வருட இறுதிக்குள் தேர்தல் நடத்துவதற்கு அரசு முயற்சித்தாலும் அதில் சிக்கல்கள் இருப்பதால் மாநகரசபை தேர்தல் சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. நகரசபையை எடுத்துக் கொண்டால் அது இயங்க ஆரம்பித்து பத்து ஆண்டுகளே கடந்துள்ளன. யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள். அபிவிருத்தித் திட்டங்கள். கட்டமைப்புகளை மேலும் விருத்தி செய்தல் போன்ற பலவற்றை அடையாளம் காணவும் தீர்க்கவும் மற்றும் நிதி ஆதாரங்களைத் தேடவும் வேண்டும். இதற்கு சீரான நிர்வாகம் அவசியம்.
2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாநகரசபையை இலங்கை தமிழ் அரசு கட்சி கைப்பற்றியது. இமானுவேல் ஆர்னோல்ட் மாநகர முதல்வரானார். அவரால் மூன்று ஆண்டுகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. எதிர்த் தரப்பின் காய் நகர்த்தல்களின் விளைவாக அவர் பதவி கவிழ்க்கப்பட்டு 2020 டிசம்பர் 30ம் திகதி இன்றைய முதல்வர் மணிவண்ணன் மாநகர பிதாவானார். அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே கடந்த வாரம் ஒன்பதாம் திகதி காலை அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடப்பட்டுள்ளார். அது ஒரு நீல நிற சீருடை விவகாரம்தான். விசாரணைகளின் பின்னர் அவர் குற்றம் புரிந்துள்ளாரா என்பது தெரியவரும். நாம் கவலைப்படுவதெல்லாம் மூன்று வருட காலத்தில் இரண்டு முதல்வர்கள் பதவியேற்றிருப்பதும் அதனால் மாநகர சபையின் செயற்பாடுகள், திட்டமிடல், நிதி ஆதாரங்களை அடைதல் என்பனவற்றிலும் ஒட்டு மொத்தமாக ஏற்பட்டுவரும் பின்னடைவும், சரிவும், இயங்கா நிலையையும் தான். முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் இதுபோலவே வேறு இடங்களிலும் உள்ளூராட்சிச் சபைகளின் தலைவர்கள் ஆளுநர்மார்களினால் நீக்கப்படும் சம்பவங்களைப் பார்க்கிறோம்.
மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பதவி காலத்தில் நீக்கப்படுவது தற்போது அதிகரித்து வருவதைக் காண்கிறோம். இது கவனமாக ஆராயப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படும் கணிசமான உறுப்பினர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர் என்பதும் அவர்கள் மீது ஏற்கனவே பல குற்றச் சாட்டுகள் இருப்பதும் அல்லது தமது பதவி காலத்திலேயே குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் நாம் அவதானித்துள்ளோம். இவர்களை தெரிவு செய்து அரசியல் கட்சிகளே வேட்பாளர்களாக நியமித்து அவர்களை வெற்றிபெறவும் செய்கின்றன. வாக்காளர்களும் இத்தகையோரின் குற்றப் பின்னணியைப் பற்றிக் கவலை கொள்ளாமல் கட்சியை நினைவில் இருத்தி இத்தகையோருக்கு வாக்களித்து விடுகிறார்கள். அரசியல் கட்சிகள் செய்யும் தவறினால் பாதிக்கப்படுவது அந்தந்தப் பகுதிகளின் அபிவிருத்தியும் மக்களின் வரிப்பணமுமே.
யாழ். மாநகரசபை மூன்றாண்டுகளில் இருவேறு கட்சிகளின் இரண்டு முதல்வர்களை கண்டிருக்கிறது. அவரது கைது தொடர்பாக பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணிகளை இன்னொரு சீருடை அணிந்தோர் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று காட்டாமகப் பேசினார். எனவே இச்சீருடை அணிந்தோர் ஏன், எதற்காக நியமனம் செய்யப்பட்டனர் என்பது கண்டறியப்பட வேண்டும் என்பது ஒரு புறமிருக்க மாநகரசபையின் இயக்கத்தை சீர்குலையச் செய்யும் இத்தகைய நடவடிக்கைகளை முறைப்படியும் முன் அனுமதிகளுடனும் செய்திருந்தால் இந்த அனாவசிய குழப்பங்களையும் சந்தேகங்களையும் தவிர்ந்திருக்கலாம்.
தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். கிடைக்கும் வாய்ப்புகளை செம்மையாகப் பயன்படுத்தி மக்கள் சேவையாற்ற வேண்டியதே முக்கியம். அதே சமயம் எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும் அதை பூதாகரமாக முன்நிறுத்துவதும் தவிர்த்தல் நல்லது. காயங்கள் ஆற வேண்டும் என்பதே முக்கியம்.
-தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் தலையங்கம்
2021.04.11