-ஆர்.அருண்குமார்
மத்தியக் குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மியான்மரில் இந்த பிப்ரவரியில் ராணுவக் கலகம் நடந்ததற்குப் பிறகு, அந்த நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ராணுவக் கலகத்திற்கு எதிராக, ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக்கப்பட்டதற்கு எதிராக, ஆங் சான் சூகியும் அவரது கட்சியின் தலைவர்களும் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடைசியாக கிடைக்கப் பெற்றுள்ள விவரங்களின்படி 570-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை.
பின்னணி என்ன?
மியான்மரில் ராணுவக் கலகம் நடப்பதோ, ராணுவ ஆட்சி நடப்பதோ புதிதல்ல. நமது அண்டைநாடுகளில் ஒன்றான மியான்மர் 1988 முதல் 2011 வரை தொடர்ந்து ராணுவ ஆட்சியின் கீழ்தான்இருந்து வந்தது. அந்த சமயத்தில் ஜனநாயகத்திற்கான நீண்ட நெடிய போராட்டம் நடந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி அமைய வேண்டும் போன்ற வேட்கை மிக்க போராட்டம் அது.போராட்டத்தின் விளைவாக, தனது அதிகாரங்களில் சிலவற்றைக் கைவிடவும் சுதந்திரமான தேர்தலை நடத்தி, ஓர் அரசு அமையவும் ராணுவ ஆட்சி ஒப்புக் கொண்டது. மக்கள் போராட் டங்களின் விளைவாகவும் சர்வதேச சமூகத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவும் ஜனநாயகப் போராளிஆங் சான் சூகியை ராணுவ ஆட்சியாளர்கள் விடுதலை செய்தனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அவரை ராணுவ ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் சூகியின் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (என்எல்டி) பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது என்ற போதிலும், அவரை அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்க ராணுவ ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. மியான்மர் அரசாங்கத்தின் உயர் பதவிகளில், ஒரு வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டவர் பொறுப்பேற்பதை தடை செய்து, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியது ராணுவ அரசு. எனவே, சூகி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அரசாங்கத்தின் அனைத்து கொள்கைகளிலும் முடிவு எடுப்பவராக அவரே இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால்தான், மியான்மரில் ரோஹிங்கியா இனமுஸ்லீம் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தபோது, ஒட்டுமொத்த உலகமே சூகியை கண்டித்தது. அவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற போதிலும், அந்தப் படுகொலையை அவர் வேடிக்கை பார்த்தார்.
இந்தப் பின்னணியில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் சூகியின் கட்சி படுதோல்வி அடையும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது பொய்த்துப் போனது. குறைந்தவாக்குகள் வித்தியாசத்தில்தான் சூகியின் கட்சியினர் வெற்றி பெற்றார்கள் என்றபோதிலும், அக்கட்சி நாடாளுமன்றத்தில் தனது பலத்தை மேலும் அதிகரித்துக் கொண்டது. துவக்கத்தில், ராணுவத்தின் ஆதரவு அக்கட்சிக்கு இருந்தது. ஆனால், தேர்தலில் பெற்ற அதிகப்படியான வெற்றியைராணுவம் எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால், வாக்குப்பதிவில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சூகிகட்சியின் மீது ராணுவத் தலைவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், தேர்தல் ஆணையம் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது. இந்தப் பின்னணியில் ராணுவத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இடையே விரிசல்களும் மோதல்களும் தீவிரமடைந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதவியேற்க ராணுவம் அனுமதிக்காது என்ற தகவல்கள் பரவின. சில நாட்களிலேயே அத்தகவல் உண்மையானது.
சூகி மீது இராணுவம் குற்றச்சாட்டு
ராணுவம் கலகத்தில் ஈடுபட்டது. நாட்டின் அதிகாரத்தை ஓராண்டுக்கு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாக ராணுவம் அறிவித்தது. அதிகாரம் ராணுவத் தளபதி மின் ஆங் கிளைங்-கிடம் சென்றது. அரசாங்கத்தின் மூத்த தலைவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. அதற்கு காரணம், அவர்கள் பொதுத் தேர்தலில் மிகப்பெரிய அளவிற்கு மோசடியில் ஈடுபட்டார்கள் என்று கூறியது. இன்னும் குறிப்பாக, ஆங் சான் சூகி மீது அதிர்ச்சிகரமான ஊழல் குற்றச்சாட்டை ராணுவம் முன்வைத்தது. ஓர் அரசியல் கூட்டாளி, சூகிக்கு 6 லட்சம் டாலர்பெறுமான தங்கக் கட்டிகளை சன்மானமாக அளித்திருக்கிறார் என்று ராணுவம் கூறியது. மோசடியான ஒரு தொழிலதிபர் சமீபத்தில் பகிரங்கமாக சூகி கட்சியின் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தனது வர்த்தகத்திற்கு உதவுவதாக கூறி, தனிப்பட்ட முறையில் அந்த அமைச்சர்கள் ஏராளமான பணம் பெற்றதாக அவர் கூறினார். 2018 ஆம் ஆண்டில் ஓர் அறக்கட்டளை நிறுவனத்திற்கு அந்த தொழிலதிபரின் தாயாரின் பெயரை வைப்பதற்காக சூகிக்கு ஒரு லட்சம் டாலர் பணம் கொடுத்ததாகவும், அதற்கு பிறகு 2019-ல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலரும், பிப்ரவரி 2020-ல் 50 ஆயிரம் டாலரும், ஏப்ரல் 2020-ல் இரண்டு லட்சத்து 50 ஆயிரம்டாலரும் என பெருமளவிலான தொகையை சூகிக்கு கொடுத்திருப்பதாகவும் அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இந்நிலையில், மியான்மரின் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சூகி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது. அதுமட்டுமல்ல, சூகி மீதும் ஜனாதிபதி வின் மியின்ட் மீதும் – வன்முறைப் பதற்றத்தை தூண்டியது, அனுமதியின்றி ராணுவத்திற்கான வாக்கிடாக்கி உள்ளிட்ட கருவிகளை வைத்திருந்தது, பெருந்தொற்று தடுப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் ராணுவ ஆட்சி தொடுத்தது.
சூகி ஆட்சி எப்படி இருந்தது?
சூகி கட்சியின் தலைமையிலான ஆட்சியில் மியான்மர் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவில்லைஎன்பது உண்மை. அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதி அளித்தபடி, மியான்மர் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக ஆட்சிக்காலத்தில் எதுவும் செய்யவில்லை. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தீவிரமடைந்தது. ஒட்டுமொத்த பொருளாதார நிலைமையும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம் சரியில்லை. ஜனநாயகத்தின் போராளியாக, ஜனநாயக எழுச்சியின் ஓர் அடையாளமாக மக்கள் எந்த சூகியை பார்த்தார்களோ, அந்த சூகி ஆட்சிக்கு வந்தபிறகு, மக்களின் நம்பிக்கையை தகர்த்தார். அவரைச் சுற்றி ஒரு விசுவாச வட்டாரம் உருவானது. அவர்களில் பலரும் நிர்வாகத் திறமையற்றவர்கள், ஊழல் பெருச்சாளிகள், கொடூரமான எண்ணம் கொண்டவர்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எத்தகைய ஜனநாயக விழுமியங்களை முன்மொழிந்தாரோ, அந்த ஜனநாயக மாண்புகளை பின்பற்றுவதற்கு சூகி ஆர்வமாக இல்லை. அவரது அரசு மிகக் கொடூரமான பல சட்டங்களை இயற்றி அமலுக்கு கொண்டு வந்தது. அந்த சட்டங்களின்படி, பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். விமர்சனத்தை சூகி அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை. படிப்படியாக சூகி ஒரு எதேச்சதிகாரியாக உருவாகிக் கொண்டிருந்தார்.
சூகிக்கு எதிரான இந்த புகார்களையெல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது ராணுவம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைத்து விட்டு சூகியையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்தது. ஆனால் சூகிக்கு ஆதரவாக மக்கள் போராட மாட்டார்கள் என்றுராணுவம் தவறாக கணக்கு போட்டது. அந்த கணக்கு இப்போது தவறாகியிருக்கிறது. வழக்கமாக ராணுவக் கலகத்திற்கு எதிராக போராட்டம் நடக்கும்; எனினும் அதை ஒடுக்கிவிடலாம் என்றுராணுவ தளபதிகள் கணித்திருந்தனர். ஆனால் போராட்டம் மிகப் பெரிய அளவிற்கு தீவிரமடையும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. சூகியின் அரசால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றபோதிலும் மீண்டும் ராணுவ ஆட்சிக்கு அவர்கள் தயாராக இல்லை; மிகப் பெரும் போராட்டம் நடத்திப் பெற்ற ஜனநாயக உரிமைகளை இழப்பதற்கு மியான்மர் மக்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதைத்தான் தற்போது நடந்து வரும் எழுச்சி மிக்க போராட்டங்கள் உணர்த்துகின்றன.
எழுச்சியைத் துவக்கிய இளைஞர்கள்
ராணுவக் கலகத்திற்கு எதிரான மியான்மரின் தற்போதைய எழுச்சி இளைய தலைமுறையினரால் துவக்கி வைக்கப்பட்டது. ராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து வீதிகளுக்கு வந்த இளைஞர்களுடன் தொழிற்சங்கங்களும் இணைந்து கொண்டன. இந்த மாபெரும் எதிர்ப்பு இயக்கம் சூழலடுக்கில் ஏறுவது போல மிகப் பெரிய அளவிற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் சில நாட்களிலேயே பெற்றது. பெரும் எண்ணிக்கையிலான தொழிற்துறை வல்லுநர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்களின் ஆதரவு குவிந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், மளிகை வியாபாரிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளும் நேரடியாக போராட்டக் களத்திற்கு வந்தனர். தொழில் துறையில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் இந்தப் போராட்டங்களுக்கு நிதி, உணவு, உறைவிடம் மற்றும் சட்ட உதவிகளை அளித்து வருகின்றனர். மளிகை கடை வியாபாரிகள் நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தில் மிக தீவிரமாக பங்கேற்றிருக்கிறார்கள். போராட்டக் களத்தில் அவர்கள் பொருட்களை தாராளமாக விநியோகித்து வருகிறார்கள். போராட்டக் களத்திலேயே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து கொண்டிருக்கிறார்கள்.
இராணுவ ஆட்சிக்கு எதிரான இந்த எழுச்சியின் விளைவாக மியான்மர் முழுவதும் அரசு அலுவலங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளும் கூட மூடப்பட்டிருக்கின்றன. ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களது குடும்பத் தைச் சேர்ந்த ராணுவத்தினரின் செயல்களால் தாங்கள் வெட்கமடைவதாக கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு எந்த பொருளும் சப்ளை செய்யக் கூடாது என்று நாடு முழுவதும் உள்ள மளிகைப் பொருள் வணிகர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.மியான்மரை முற்றாக ஸ்தம்பிக்கச் செய்வதன் மூலம் ராணுவ ஆட்சியை வீழ்த்துவது தான் எங்களது
இலக்கு என்று முழங்குகிறார்கள் மக்கள்.
இராணுவம் ஒடுக்கு முறை
அதேவேளை இந்தப் போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குகிறது ராணுவ அரசு. போராட்டத்திற்குதலைமை ஏற்பவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் மியான்மரின் பிரபலமான கலைஞர்கள், எழுத்தாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். தனது உத்தரவை மதிக்காதஅனைவரும் ஒத்துழையாமை இயக்கத்தை பின்பற்றுவதாகத்தான் அர்த்தம் என்று ராணுவம் அறிவித்துள்ளது. கண்ணில் படுபவர்களையெல்லாம் ராணுவத்தினர் அடித்து நொறுக்குகிறார்கள். சித்ரவதை செய்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் களை பயங்கரவாத குழுக்கள் என்றும் ராணுவம் முத்திரை குத்தியிருக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு உதவுவதாக கூறி தாய்லாந்து எல்லையையொட்டி உள்ள சில கிராமங்களை ராணுவம் குண்டு வீசித் தகர்த்துள்ளது.
இனக்குழுக்களின் ஆயுதப் படைகள்
மியான்மரின் மக்கள் தொகையில் எண்ணற்ற இனங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 135 இனக் குழுக்களை கொண்ட நாடுமியான்மர். இவர்களில் பெரும்பான்மை இனமாக சுமார் 50 சதவீதம் மக்களை கொண்ட பாமர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள்தான் மியான்மரின் மையமான பகுதிகளில் வாழ்கிறார்கள்.எஞ்சியுள்ள 50 சதவீத மக்கள் – பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள். அந்நாட்டின் எல்லைப் பகுதியை ஒட்டித்தான் வாழ்கிறார்கள். இந்தியாவுடன் 1600 கி.மீ. நீள எல்லையை பகிர்ந்து கொள்கிறது மியான்மர். அதேபோல சீனா, தாய்லாந்து, வங்கதேசம் ஆகியநாடுகளுடனும் நீண்ட எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லைப் பகுதிகளில் உள்ள தொலைதூர கிராமப் பகுதிகளில்தான் ஏராளமான இனக் குழுக்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மை இனத்தவருக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் இடையே நீண்டகாலமாக பதற்றச் சூழல் இருந்து வருகிறது. இவர்களில் பல இனக் குழுக்கள் தங்களுக்கென்று தனியாக ஆயுத பயிற்சி பெற்ற இளைஞர்களை கொண்ட படைகளையே நடத்தி வருகிறார்கள். அவர்கள் மியான்மரின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கும் மியான்மரின் ராணுவத்திற்கும் பல பத்தாண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
இனக்குழுக்களிடையே ஒன்றுபட்ட சிந்தனை
இந்தச் சூழலில், மியான்மரில் தற்போது நடந்துவரும் போராட்டங்கள் பிரதானமாக மத்திய மியான்மரில் உள்ள நகரங்களில் நடந்து வருகிறது. இந்தப்போராட்டங்களில் பெரும்பான்மை இனமான பாமர்இன மக்களே ஈடுபட்டுள்ளனர். தாய்லாந்தை ஒட்டியுள்ள இனக் குழுக்களை சேர்ந்த காரென் ஆயுதப் படையினர் மற்றும் சீன எல்லையை ஒட்டியுள்ள இனக்குழுக்களைச் சேர்ந்த கச்சின் ஆயுதப் படையினர், தற்போதைய ஜனநாயக இயக்கத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். மார்ச் 14 அன்று சூகி கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது முதல் தலைமறைவாக இயங்கும் அரசு என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, எல்லைப் பகுதிகளில் வசிக்கிற பல்வேறு இனக் குழுக்களின் சுயேட்சையான ஆயுதப் படைகளை, அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும், சட்டவிரோத அமைப்புகள் அல்ல என்றும் இப்போது கூறத் துவங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இனக்குழுக்களின் படைகளுடன் இணைந்து செயல்பட விரும்பமும் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினருக்குமான ஓர் ஒன்றுபட்ட இலக்காக மியான்மரில் ஒரு‘கூட்டாட்சி ஜனநாயக ஒன்றியத்தை’ உருவாக்குவது என்ற நோக்கத்தை கச்சின் அரசியல் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை இனக் குழுக்களின் அரசியல் தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் சூகி இன்னும் அமைதியாக இருக்கிறார். அவரை சுற்றியுள்ள விசுவாசக் கும்பல் அமைதி காக்கிறது. இந்தக் கும்பல்தான்ரோகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடிய வன்முறைக்கு பகிரங்க ஆதரவு அளித்தது.
இந்தக்கும்பலுக்கு ஆதரவாக இருந்த பலரும் தற்போது சமூக ஊடக தளங்களில், தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வருகிறார்கள். அனைத்துமக்களும் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒன்று சேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தங்களை அடக்கி ஒடுக்கும் ராணுவத்திற்கு எதிராக,அனைத்து இனக் குழுக்களின் ஆயுதப் படைகளும் இணைந்து ஒரு கூட்டாட்சி ராணுவத்தை உருவாக்குவோம் என்றெல்லாம் கூடப் பேசி வருகிறார்கள்.இதைக் கண்டு சற்று தயங்கியுள்ள ராணுவ ஆட்சியாளர்களும் கூட, மேற்கண்ட சிறுபான்மை இனக் குழுக்களின் ஆயுதப் படைப் பிரிவினரை அங்கீகரிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறத் துவங்கியுள்ளனர். மியான்மரின் ராக்கைன் மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினரின் ஆயுதப் படையான அராக்கன் ஆயுதப் படையை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்குவதாக ராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த அராக்கன் ஆயுதப் படையினரை எதிர்த்துத் தாக்குவதாக கூறித்தான் ரோஹிங்கியா இன மக்களை மியான்மர் ராணுவம் கொடூரமான முறையில், உலகையே உலுக்கும் விதத்தில் இனப் படுகொலை செய்தது என்பது நினைவு கூரத்தக்கது.
மக்கள் நம்பவில்லை
ஆனால் ராணுவ ஆட்சியாளர்களின் வார்த்தைகளையோ, சூகி கட்சியினரின் வார்த்தைகளையோ நம்புவதற்கு இல்லை என்று பல்வேறு இனக் குழுக்கள் கருதுகின்றன. சூகியோ, அவரது ஆதரவு கூட்டமோ பெரும்பான்மை பாமர் இனத்தின் நலன்களைமட்டும்தான் பாதுகாப்பார்கள் என்றும், அவரது கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக், பெரும் பான்மை இனத்தவருக்காக செயல்படும் ஒரு ‘தேசிய இனவாதக் கட்சி’ என்றும் அவர்கள் கூறுகின்றனர். அக்கட்சியின் தலைமையிலான ஆட்சி சிறுபான்மை இன மக்களுக்கு எந்தவிதத்திலும் பலன் அளிக்கவில்லை; கடந்த 10 ஆண்டு காலமாக நடந்த சூகி கட்சியின் ஆட்சி சிறுபான்மை இன மக்கள் மீதான தாக்குதல்களைத்தான் அதிகரித்தது. அதற்கு மிகச் சிறந்தஉதாரணம்தான் ரோஹிங்கியா மக்கள் மீதான படுகொலையும், சூகியின் மவுனமும் என்று சிறுபான்மை மக்கள் குழுக்கள் குமுறுகிறார்கள்.எனவே, மியான்மரில் ராணுவ ஆட்சி அமலாக்கப்பட்ட நிலையில், மக்களிடையே நடந்து கொண்டிருக்கும் இந்த நகர்வுகளும், எதிர்முனைப்புகளும் அங்கு பல்வேறு இனக் குழுக்களிடையே பதற்றமானசூழலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த பதற்றம் நிச்சயம் நீண்ட எல்லையை பங்கிட்டு கொண்டிருக்கும் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏகாதிபத்திய சக்திகளின் குறி
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் ஒரு பகுதி சிறுபான்மை மக்களின் ஆயுதப் படையான காரென் விடுதலை ராணுவம் என்பது பிரிட்டிஷ் உளவாளிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று. மியான்மர் ராணுவத்திற்கு எதிராக இந்தப் பகுதி இளைஞர்களை புரட்சியாளர்கள் என்று கூறி அணி திரட்டியதில் அப்பகுதியில் செயல்பட்ட பி.பி.சி, அமெரிக்க ஆதரவு ரேடியோ ஆசியா, வாய்ஸ் ஆப் அமெரிக்கா ஆகிய ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்தன என்பதை மறந்துவிட முடியாது. மியான்மரில் இப்படிப்பட்ட ஆயுதப் படைகளை உருவாக்குவதில் பிரிட்டனுக்கு என்ன அக்கறை என்ற கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது.இதற்கு விடை, மியான்மர் என்ற நாடு புவியியல்ரீதியாக அமைந்துள்ள இடம்தான். மியான்மர் இந்தியாவுடனும், சீனாவுடன் மிக நீண்ட எல்லையைக் கொண்டிருக்கிறது. வங்காள விரிகுடா கடலை ஒட்டியுள்ளது.
வங்காள விரிகுடா கடலையும், மலாக்கா ஜல சந்தியையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டால் இந்தியப் பெருங்கடலின் ஒட்டுமொத்த கடல் போக்குவரத்தையும் கண்காணிக்க முடியும். இது இன்றைக்கு அமெரிக்காவுக்கு மிக முக்கியத் தேவையாக இருக்கிறது. ஆசியாவைச் சுற்றி வளைப்பது என்ற நோக்கத்துடன் அமெரிக்கா வகுத்துள்ள இந்தோ – பசிபிக் ராணுவ சூழ்ச்சித் திட்டத்திற்கு மியான்மர் ஒரு பொருத்தமான இடம் என்று அமெரிக்க நிர்வாகம் கணக்கு போட்டுவைத்திருக்கிறது. மியான்மரில் ஏற்படுகிற எந்தவொருபதற்றமும் அந்த நாட்டை மீளாத மோதலுக்குள், ரத்தவெள்ளத்திற்குள் ஆழ்த்தும். அது அந்த நாட்டை மீண்டு எழ முடியாதபடி பலவீனப்படுத்தும். அத்தகையதருணத்தில் அங்கு நுழைவது என்பதுதான் இப்போதுஅமெரிக்காவின் திட்டம். மேற்கு ஆசிய நாடுகளில் எதை செய்ததோ, அதை இப்போது மியான்மரில் செய்ய திட்டமிட்டிருக்கிறது அமெரிக்கா.
எனவே, மியான்மரில் ஏகாதிபத்திய சக்திகளின் திட்டங்களை செயல்படுத்த அனுமதிப்பது மிகப் பெரும் ஆபத்தானது. சீனாவை குறிவைப்பதற்காக அமெரிக்கா இத்தகைய நகர்வுகளை மேற்கொள்கிறது என்று எவரேனும் மகிழ்ச்சி அடைந்தால், இந்தியாவும் மிகக் கடுமையாக பாதிக்கப்படப் போகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, நமது அண்டை நாடான மியான்மரில் ஏற்பட்டுள்ள ஜனநாயகப்பூர்வமற்ற நிலை முடிவுக்கு வர அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் வெகு மக்களின் எழுச்சியை ஆதரிப்போம். ராணுவம் நடத்தும் ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுப்போம்!
தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்