-ஷோபனா திருநாவுக்கரசு
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”என்ற தாக்கம் குறைந்து தனித்து சமூக இடைவெளியுடன் வாழ்தலே சமுதாயத்திற்கு நன்மை என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரைவீட்டிற்குள்ளேயே இருத்தலே நலம் என்கிறது அரசு. முடிந்தது என்று எண்ணியிருந்த வேளையில் உருமாறி வந்திருக்கிறது நுண்கிருமி. கால்களால் அளந்து பார்க்க வேண்டிய பூமியின் அழகை நிஜத்தில் காண முடியாத நிலை இருந்தாலும் பண்டைய கால மரபையும் நிகழ்காலம் எதிர்காலம் என அனைத்தையும் மனக் கண்களுக்கு முன் நிறுத்தி விருந்து படைக்கும் சக்திமிகுந்த ஆயுதங்கள் தான் புத்தகங்கள்.
எதற்கு இந்த தினம்
புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித இனத்தை இணைக்க உதவுகின்றன. 1995 முதல் ஒவ்வொரு ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருஆண்டும் ஒரு நகரமானது உலக புத்தக நகரமாக தேர்வு செய்யப்பட்டு புத்தக தினம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படவில்லை. ஆனால், பெற்றோர், வீடுகளில் உலக புத்தக தினத்தை கொண்டாடலாம்.புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை, குழந்தைகளுக்கு உணர்த்துவதோடு, புத்தகங்களை பிறருக்கு பரிசாக கொடுப்பதின் வாயிலாக, வாசிப்பு பழக்கத்தை அனைவர் மத்தியிலும் கொண்டு செல்லலாம்.
புத்தகங்கள் என்னும் அரியஅறிவின் வாயிலைத் திறப்பதற்காகவே இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது. உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்மை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள் என்ற அமெரிக்க கவிஞர் லாங்பெலோவின் கருத்து வாழ்வின் புத்தகத்தை துணையாக்கிக் கொள்வதன் இன்றியமையாமையை உணர்த்தும். “நாளும் பொழுதும் என்னோடு உறவாடிக் கொண்டிருக்கின்ற என்னை எப்போதும் வீழ்த்திடாத நண்பர்கள் புத்தகங்களே”என்கிறார் கவிஞர் ராபர் கதே.
ஏப்ரல் 23 புத்தக தினம் கொண்டாடும் இதே நாளில் இன்னொரு நிகழ்வும் உண்டு. உலகப் புகழ்பெற்ற சேக்ஸ்பியர் பிறந்தநாளும், நினைவு நாளும் ஏப்ரல் 23 என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை பாதை
ஒரு மனிதன் எத்தகைய நுால்களைப் படிக்கிறான் என்பதைப் பொறுத்தே அவனது வாழ்க்கை யின் பாதை நிர்ணயிக்கப்படுகிறது. வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது என்று பிரான்சிஸ் பேகன் என்ற அறிஞர் கூறியது போல் நுால்களைத் துணையாகக் கொள்பவருக்கு நேரம் போகவில்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நேரம் போதவில்லை என்று வேண்டுமானால் எண்ணம் வரலாம். எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் அக்பர் தன் அவையில் நல்ல நுால்களை வாசிக்கச் சொல்லி கேட்டதன் விளைவே அவரை சான்றோராக்கியது. கிரேக்கநாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம்.நேரு தன் மறைவிற்குப் பின் தன் சடலத்தின் மீதுமலர்களுக்குப் பதிலாகபுத்தகங்களையே வைக்கச் சொன்னார். புத்தக வாசிப்புக்காக தன் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்ட அண்ணாத்துரை என புத்தகத்தின் மீது தங்களுக்கு இருந்த தீரா காதலை வெளிப்படுத்திய சான்றோர்களின் பட்டியல் ஏராளம்.
அழியாத செல்வம்
ஒரு முறை எட்டயபுர மகாராஜாவுடன் சென்னைக்கு சென்ற சுப்ரமணிய பாரதியார், மனைவியிடம் நான் திரும்பிவரும் போதுவீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிவருகிறேன் என்று கூறிச் சென்றார். ஆனால் ராஜா கொடுத்த பணத்தில் மூடை மூடையாய் புத்தகங்கள் வாங்கிவந்துவிட்டார். கோபமாய்ப் பார்த்த மனைவியிடம் “செல்லம்மா! அழியும் பொருளைக் கொடுத்து அழியாத செல்வத்தைக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறிச் சமாதானம் செய்தார்.அனைத்து வாழ்க்கை அனுபவங்களையும் தனிமனிதன் தானேபட்டுதான் பெறவேண்டும் என்றால் அவனது வாழ்க்கை போதுமானதாக இருக்காது. மற்றவர்களின் வாழ்க்கையில் இருந்துபாடம் பெறுவதுதான் அவர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பதுதான் சிறந்த வாழ்க்கை முறையாக இருக்கும்.’துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவை விட வீரியமானஆயுதம் புத்தகம்’என்பார் மார்டின் லுாதர்கிங்.
எழுத்துக்களஞ்சியம்
ஒவ்வொரு புத்தகமும் படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கும் எழுத்துக் களஞ்சியம்.’தொட்டனைத் துாறும்மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் துாறும் அறிவு’என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப ஒருமனிதன் எவ்வளவு புத்தகங்களைத் தேடிப் படிக்கிறானோ அந்த அளவு அறிவின் தேடல் விசாலப்படும். முலாலா யுஷெப் கூறியதுபோல் ஒரு பேனா, ஒரு புத்தகம், ஒருகுழந்தை, ஆசிரியர் நினைத்தால் உலகை மாற்ற இயலும். கதைதேடும் கதாரசிகர்களுக்கு புத்தகங்கள் கதைசொல்லிப் பாட்டிகள். என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருக்கும் நெஞ்சங்களுக்கு தடம் மாறாமல் தாங்கிப் பிடிக்கும் துாண்கள் நல்ல புத்தகங்கள். வாழ்வில் தனிமை என்பது சாபமாகிவிடுமோ என்று தவிப்பவருக்கு தன்னுள் இருக்கும் படைப்பாளியை உலகிற்கு அறிமுகம் செய்யும் ஆசான் தான் நல்ல புத்தகங்கள்.
நல்ல ஆசான்
புத்தகம் வாசித்தல் என்னும் கலை கைவசம் உள்ளவருக்கு வாழ்வில் ஒருநல்ல ஆசானும் நண்பரும் என்றும் அவரை வழிநடத்திச் செல்லும் நல்லபுத்தகங்களே. உண்ணுதல், உறங்குதல் போன்றுஉறங்கச் செல்லும்முன் புத்தகத்தின் ஒருபக்கமாவது படித்தல் என்ற பழக்கத்தை அறிமுகம் செய்தால் அதுவே இன்றையதலைமுறையினருக்கு அளிக்கும் மிகப்பெரியசொத்தாகும்.கண்கவர் வண்ணங்களை காட்சிக்கு இனிமையாக்கிஎடுக்கப்படும்பல குழந்தைகளுக்கான குறும்படங்கள் எல்லாம் மற்றவர்களின் கற்பனைத் திறனைநாம் கண்டுகழிப்பதற்கான வழி. ஆனால் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்டகற்பனைத்திறனும் உருப்பெற வேண்டுமெனில் கண்களின் வழியே எழுத்துக்களின் ஊடே மனதிற்குள் நுழையும் புத்தகங்களேசிறந்த ஆசான்.நுாலகங்கள் உள்ள இல்லங்கள் உள்அகத்தின் ஆற்றலைக் கூட்டிடும் மையங்கள்.
புத்தக குவியல்
“புனிதமுற்று மக்கள் புதுவாழ்வுவேண்டின் புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”என்றார் பாரதிதாசன். ஆம் ஒவ்வொரு வீட்டிலும் புத்தகக் குவியல் வேண்டும். வாழ்க்கையை மாற்றும் அரிய புத்தகங்கள் ஒவ்வொருநாளின் அங்கமாக உருவாகவேண்டும். புத்தகங்களுக்கு மாற்றாக டிஜிட்டல் புத்தகம் என எத்தனை வந்தபோதும் பிள்ளையை காணொலியில் கொஞ்சுவதற்கும் கையில் ஏந்திக் கொஞ்சுவதற்கும் உள்ள வித்தியாசம் தான் புத்தகத்தை கையில் ஏந்திப் படிப்பதற்கும் மற்ற மாற்றுமுறைகளுக்கும் இடையேயானது. புத்தகத்தை கையில் ஏந்திப் படிக்கும் போது ஒரு மனிதனின் அகக்கண்களும் புறக்கண்களும் முழுமைபெறுகின்றன. நாம் யார் என்பதை நமக்கும் உலகிற்கும் எடுத்துக் காட்டும் அற்புதம் தான் புத்தகம்.மனதையும் மனிதனையும் பண்படுத்தும் புத்தகங்களின் துணைகொள்வோம்; அறிவின் பார்வையை விசாலமாக்குவோம்.
“வீடுகளை அலங்கரிப்பவை புத்தகங்களே!” – உலகப் புத்தக தினம் சிறப்புப் பகிர்வு!
-ஜெ.பிரகாஷ்
“வீட்டை அலங்கரிக்க புத்தகங்களைவிட, அழகான பொருள்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்பார், ஹென்றி வார்ட் பீச்சர் எனும் அறிஞர். ஆம், உண்மைதான். புத்தகங்கள் வீட்டை மட்டும் அலங்கரிப்பதில்லை; மனிதனின் அறிவு வளர்ச்சியையும் அலங்கரிப்பவை. அந்தப் புத்தகங்களைக் கொண்டாடும் தினம் இன்று…
‘உலகப் புத்தக தினம்’ என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாள் உலகப் புத்தக தினம் என்று மட்டுமல்லாது,‘புத்தக உரிமை தினமாகவும்’ கொண்டாடப்படுகிறது.
ஷேக்ஸ்பியர், ஜான் மில்டன்!
சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலகச் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் அனைவரும் இந்தப் புத்தக தினத்தன்று நிறைய புத்தகங்களை விரும்பி வாங்குவதோடு, இந்த நாளில் பிறந்த மற்றும் இறந்த மாமனிதர்களுக்கு மரியாதையும் செய்கின்றனர். குறிப்பாக, ஆங்கிலேய நாவலாசிரியர் ஷேக்ஸ்பியர் இந்த நாளில்தான் இறந்துபோனார். வாசிப்பின்மீது அவர் கொண்டிருந்த தீராக்காதல், அவரை உலகமறியும் அளவுக்கு உயர்த்தியது. அவர், பல காவியங்களை எழுதினார். அதேபோல், பார்வை திறனற்ற ஜான் மில்டன் உலகம் காலத்தால் அழியாத நூல்களைப் படைத்தார்.
புரட்சியாளர் பகத்சிங்கோ, தான் சாகும்வரை படித்துக்கொண்டிருந்தார். “சாகப்போகிறோம் என்றாகிவிட்டது… இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு” என்று அவரிடம் கேட்டதற்கு, “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையாவது கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்”என்று புன்னகைத்தவாறே பதிலளித்தார் பகத்சிங்.
‘மூலதன’த்தைக் கொடுத்த கார்ல் மார்க்ஸ்!
தான் தேடிய புத்தகம் பல மைல் தொலைவில் இருப்பதை அறிந்து, அங்குசென்று அதை வாங்கிப் படித்தவர் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அதேபோல கார்ல் மார்க்ஸ், புத்தக அறைகளுக்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததால்தான், அவரால் உலகுக்கு ‘மூலதன’த்தைக் கொடுக்க முடிந்தது. நம் நாட்டின் எளிமையான ஜனாதிபதி என்று பெயர்பெற்ற ஏ.பி.ஜே.அப்துல் கலாமும் மிகப்பெரும் புத்தக வாசிப்பாளராகவே மறையும்வரை இருந்தார். இப்படிப் பலரும் புத்தகங்களுக்குள் ஆழ்ந்திருந்ததால்தான், அவர்கள் அனைவரும் உலகம் வியக்குமளவுக்கு அறிஞர்கள் ஆக முடிந்தது.
சுவர்களிலும், எலும்புகளிலும், துணிகளிலும், களிமண்களிலும், ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டு வந்த எழுத்துகள் இன்று, அறிவியல் முன்னேற்றத்தால் புத்தகங்கள் மூலமாகவும், கணினி மூலமாகவும் வளர்ந்திருக்கிறது. ‘மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே’ என்று சொல்லப்படும் இந்த உலகில், இன்றைய புத்தகங்களின் தாக்கம் எப்படியிருக்கிறது என்று பிரபலங்கள் சிலரிடம் பேசினோம்.
“மரியாதையே தனிதான்!”
“முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் வந்தபிறகு வாசிப்பு என்பது, நுனிப்புல்லை மேய்வது போன்றுதான் இருக்கிறது. அதாவது, துணுக்கு வாசிப்பதைப்போன்று இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல நூல் என்பது வழித்துணைவன் மாதிரி ஆகும். ஒருவர் எந்தப் பெரிய அலுவலகத்துக்குச் செல்வதாக இருந்தாலும், அவருடைய கையில் ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்றால், அவருக்குக் கிடைக்கும் மரியாதையே தனிதான். ஒரு புத்தகமானது, எப்படிப்பட்ட மன இறுக்கத்தில் இருக்கும் மனிதனையும் வெளியில் கொண்டுவந்துவிடக் கூடியது. நான், அதை நிறைய தருணங்களில் உணர்ந்து இருக்கிறேன்” என்று சொல்லும் எழுத்தாளர் கண்மணி குணசேகரன், “நல்ல நாவல், கதை, கவிதை உள்ளிட்டவற்றை வீடுகளில் அவசியம் வாங்கிவைக்க வேண்டும்” என்கிறார்.
மேலும் அவர், “பொதுவாக எங்கள் நடுநாட்டுப் பகுதிகள் என்று சொல்லப்படும் இடங்களில் எல்லாம் விவசாயம்தான் பிரதானத் தொழில். இவர்களுக்கு, விவசாயத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது. இப்போதுகூட இந்த நடுநாட்டு மக்கள் விவசாயத்தை விட்டு வெளியே வராததால், இவர்களுக்கு வாசிப்பு என்பது மந்தமாகவே இருக்கிறது. முதன்முதலில் இவர்களுக்கு நூலக வாசிப்பு என்பது தெருக்கூத்து, வசனம், பாடல்கள் அடங்கிய ‘புருதி’ எனும் ஒரு குறிப்பேடுதான். அந்தப் ‘புருதி’க் குறிப்பேடுதான் இவர்களுடைய ஒவ்வொரு வீட்டிலும் ஜாதகம் இருப்பதைப்போன்று இருக்கும். அதிலிருந்துதான் புத்தகம் வந்தாலும்கூட, அதன்மூலம்தான் பிற்காலத்தில் பலதரப்பட்டவர்களின் வாசிப்பும் இருக்கிறது” என்றார்.
உலகப் புத்தக தினம் கொண்டாட்டம்!
தொடர்ந்து அவர், “அனைத்து வீடுகளிலும் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு வாசலில் கண்ணாடி வைத்திருப்பர். அதை வைத்தால் கண் திருஷ்டி போகும் என்பார்கள். ஆனால், அதை எல்லாம் வைப்பதைவிட அழகான புத்தக அலமாரி ஒன்றுவைத்தால், அந்தக் குடும்பத்துக்குள் இருக்கும் அனைத்துக் கெட்ட விஷயங்களுமே போய்விடும். குடும்பத்துக்குள் புத்தகங்கள் குவியும்போது, அந்த வீட்டின் அழகே மாறிவிடும். புத்தக வாசிப்பு ஒருபுறம் என்றால்… மறுபுறம், புத்தகம் எழுதுபவர்களும் மக்களுடைய எண்ண, கால ஓட்டத்துக்குத் தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொண்டு எழுத வேண்டும்” என்றார் மிகத் தெளிவாக.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவரும் (பபாசி), வனிதா பதிப்பக உரிமையாளருமான பெ.மயிலவேலன், “1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் நாள் உலகப் புத்தகத் தினத்துக்கான முதல் தீர்மானம் யுனெஸ்கோ அமைப்பால் நிறைவேற்றப்பட்டது. இதற்கடுத்தே முதன்முதலாக உலகப் புத்தகத் தினம் கொண்டாடப்பட்டது. இந்தப் புத்தக தினத்தின்போது, ரஷ்யாவில் புத்தகம் ஒன்றுடன் ஒரு ரோஜா மலரையும் கொடுத்து அந்த நாளைக் கொண்டாடியிருக்கின்றனர். இப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புத்தக தினம், இன்று உலக நாடுகளில் எல்லாம் பரவியிருக்கிறது. நம் தமிழகத்தைப் பொறுத்தவரை புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக வருடந்தோறும் சுமார் 1,200 இடங்களில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இன்று (23-ம் தேதி) காலை கன்னிமரா நூலகத்தில் உலகப் புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும், பொது மைய நூலகத் துறையும் இணைந்து நடத்திய இந்தப் புத்தக தின நிகழ்ச்சியில் பதிப்பாளர்கள் சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்களை விற்பனை செய்தனர். அதிலும் குறிப்பாக, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் ரூ.15 ஆயிரத்துக்குப் புத்தகங்கள் விற்பனையாகின. இதுதவிர, இன்றைய மக்களிடம் இன்னும் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பெரும்பாலான பதிப்பகத்தார் 10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி தந்து புத்தகங்களை விற்கின்றனர். குறிப்பாக, இன்றைய தலைமுறையினரிடம் கல்விப் புத்தகங்களைத் தவிர, மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைவாக இருக்கிறது. அதை ஊக்குவிக்கும் விதமாகவே இன்று வாசிப்பதற்கான ஒரு விழிப்புஉணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைகளிடம் மன இறுக்கம்!
குழந்தைகளின் மனநிலையை வைத்துத்தான் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. குழந்தைகளிடம் காணப்படும் மன இறுக்கத்துக்குக் காரணம், புத்தகம் வாசிப்பு இல்லாததுதான். 90 சதவிகிதக் குழந்தைகள் கல்விப் புத்தகங்களைத் தவிர, மற்ற புத்தகங்களைப் படிப்பதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதாவது, கல்விப் புத்தகங்களைத் தவிர, வேறு புத்தகங்களைப் படிக்கும்போது அவர்களுடைய மனம் மகிழ்ச்சியடைகிறது. ஒரு நல்ல தெளிவான சிந்தனை கிடைக்கிறது. ஆனால், இவற்றை கணினியில் முழுவதுமாகப் படிக்க முடியாது. அதேநேரத்தில் அதிலிருந்து முழுத் தகவலையும் அறிந்துகொள்ள முடியாது. மிகவும் குறைவான தகவல்களை மட்டுமே அறிந்துகொள்ள முடியும். அதிலும் குறிப்பாக, கணினியில் இடம்பெறக்கூடிய தகவல்களில் 60 சதவிகித தகவல்கள் உண்மையாக இருப்பதில்லை. கணினியில், தவறான தகவல்களை ஒருவர் பதிவுசெய்யும்போது… அதுவே மற்றவருக்கும் சென்றடைகிறது. இதனால், தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், புத்தகங்களில் அப்படி இருக்காது. குழந்தைகளிடம் இதுபோன்ற புத்தகங்களைக் கொடுத்து படிக்கவைத்தால், அடுத்த தலைமுறை சிறந்த தலைமுறையாக உருவாகும். ஆகவே, புத்தக வாசிப்பு என்பது எல்லோருக்கும் இன்றியமையானது” என்றார் மகிழ்ச்சியுடன்.
“ஒரு நூலகம் திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படும்” என்றார் பேரறிஞர் அண்ணா. அந்தவகையில், மற்ற நாள்களில் புத்தகங்கள் வாசிப்பை மறந்தாலும்கூட, உலக புத்தக தினத்தன்று மட்டுமாவது, சிறந்த புத்தகங்களை வாங்கி, நண்பர்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசளிப்பதோடு, நாமும் நல்ல பல புத்தகங்களை வாசிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.