இலங்கையில் கொவிட் 19 தொற்றின் தற்போதைய நிலைமை, புத்தாண்டு காலப்பகுதியில் நடந்து கொண்ட வேண்டிய ஒழுங்கு, இத்தொற்று தவிர்ப்புக்கான தடுப்பூசியின் இரண்டாம் சொட்டு வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் தடுப்பு பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர ‘தினகரன் வார மஞ்சரி’க்கு அளித்த விஷேட பேட்டி.
கே: நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்ற தற்போதைய சூழலில் சித்திரை புத்தாண்டு அண்மித்துள்ளது. இந்த நிலையில் இத்தொற்று தவிர்ப்பு தொடர்பில் மக்கள் கவனம் செலுத்தாது நடந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றனவே?
பதில்: கடந்த நத்தார் பண்டிகையின் பின்னரான இரண்டு மூன்று வாரங்களில் இத்தொற்று நாட்டில் தீவிரமடைந்தது. ஏனெனில் அப்பண்டிகைக் காலப்பகுதியில் இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்களில் மக்கள் அசிரத்தை காட்டினர். குறிப்பாகப் பொருட்கள் கொள்வனவுக்கு கொடுத்த முக்கியத்துவம் இத்தொற்றைத் தவிர்ப்பதற்கு அளிக்கப்படவில்லை. அதனால் நத்தார் பண்டிகையின் பின்னர் இத்தொற்று தீவிரமானது.
அவ்வாறான அனுபவத்தைப் பெற்றிருக்கையில் இந்த சிங்கள – தமிழ் புத்தாண்டு காலப்பகுதியிலும் இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் கவனயீனமாக நடந்து கொள்வது அது மீண்டும் தீவிரமடைய உதவுவதாகவே அமையும். அதனால் இத்தொற்றைத் தவிர்ப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களாக விளங்கும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்களப் பேணிக்கொள்ள வேண்டும். குறிப்பாக பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக கடையினுள் செல்ல முன்னரும் சென்று வௌியே வந்த பின்னரும் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.
அதேபோன்று பொதுப்போக்குவரத்துகளில் பயணிகள் நிறைந்து நெரிசலாக போக்குவரத்து வசதி குறைவாகக் காணப்படுவதே காரணமாகும். அதனால் பயணம் நிறைவடையும் வரையும் முகக்கவசத்தை அணித்திருப்பதோடு, தூரப் பயண பஸ் வண்டிகள் சிற்றுண்டி உண்பதற்காக தரித்து செல்லும் இடங்களிலும் முகக்கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும். சிற்றுண்டிகளை உண்பதாயின் சமூக இடை வெளியைப் பேணிக்கொள்வதே சிறந்தது. அத்தோடு பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் வீடு திரும்பியதும் அல்லது தாம் பயணிக்கும் இடத்தைச் சென்றடைந்ததும் கைகளை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். புத்தாண்டு காலப்பகுதியின் நிமித்தம் இத்தொற்று தவிர்ப்புக்காக வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
கே: இத்தொற்று தவிர்ப்புக்காக புத்தாண்டின் நிமித்தம் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் பற்றி சொல்கிறீர்களா?
பதில்: கடந்த வருடம் புத்தாண்டைக் கொண்டாடக் கிடைக்காத போதிலும் இம்முறை கொண்டாடக் கூடிய சூழல் காணப்படுகிறது. ஆனாலும் சுபவேளைக் கருமங்களை தம் குடும்பங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்வதோடு, உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்கச் செல்வதையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செல்கையில் சுகாதார வழிகாட்டல்களை உரிய ஒழுங்கில் பேணிக்கொள்ளத் தவறக்கூடாது. மக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் நிறைப் பேர் நுவரெலியாவுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போதைய சூழலில் அவ்வாறான இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து வீடுகளில் இருப்பதே ஆரோக்கியமானது.
மேலும் கிராம மட்டத்தில் புத்தாண்டு விளையாட்டுகள் ஒழுங்கு செய்யப்படும் போது சமூக இடைவெளியைப் பேணி நெருங்கி செயற்படாதிருக்க வேண்டும். இவ்வாறான வழிகாட்டல்களின்படி செயற்படத் தவறினால் புத்தாண்டின் பின்னரான இரண்டு மூன்று வாரங்களில் இத்தொற்று தீவிரமடையக்கூடிய அபாயம் ஏற்படும். அதன் விளைவாகப் பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றைத் தனிமைப்படுத்தவும் முடக்கவும் மூடவும் வேண்டிய நிலைமை உருவாகும். ஏனெனில் இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இத்தொற்று மீண்டும் தீவிரமாகப் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன. அதனால் அந்நாடுகளை முடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அதேநேரம் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதால், தாம் பாதுகாப்பு பெற்றுள்ளோம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதன் காரணத்தினால் இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் குறித்து அசிரத்தை காணப்படுகிறது. ஆனால் இத்தடுப்பூசியைப் பெற்றாலும் கூட இத்தொற்று ஏற்படலாம். இத்தடுப்பூசியானது இத்தொற்று தீவிர நிலையை அடைவதையும் மரணம் நிகழ்வதையுமே குறைக்கும் என்பதை மறக்கலாகாது.
கே: இத்தொற்று தவிர்ப்புக்கான தடுப்பூசியின் இரண்டாம் சொட்டு வழங்கப்படுவது தொடர்பில் கூறுங்கள்?
பதில்: இந்நாட்டில் இற்றை வரையும் 09 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அஸ்ட்ரா செனகா (இந்திய உற்பத்தியான கொவிஷீல்ட்) தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 03 இலட்சம் தடுப்பூசி தான் கையிருப்பில் உள்ளது. இத்தடுப்பூசியின் இரண்டாம் சொட்டை வழங்குவது தொடர்பில் புதிய சான்றுகளுடன் செல்ல வேண்டியுள்ளது. நாம் இத்தடுப்பூசியை வழங்கத் தொடங்கும் போது இரண்டாம் சொட்டை 04 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என மருத்துவ உலகம் தெரிவித்தது. அதன் பின்னரான ஆராய்ச்சி முடிவுகளில் இரண்டாம் சொட்டு வழங்கலை 12 வாரங்கள் வரை தாமதப்படுத்தினால் அதிக பிரதிபலன் கிடைக்குமெனத் தகவல் வௌியானது. கனடா போன்ற நாடுகள் இத்தடுப்பூசியின் இரண்டாம் சொட்டு வழங்குதலை 18 வாரங்கள் வரை தாமதப்படுத்தியுள்ளன. இவை தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
எனினும் இரண்டாம் சொட்டு வழங்கலை நாம் ஆரம்பித்த மூன்று வாரங்களுக்குள் எமக்கு கிடைக்கப்பெற வேண்டிய தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுவிடும். இதனை இந்திய அரசாங்கமும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் ‘கொவெக்ஸ்’ திட்டமும் உறுதிப்படுத்தியுள்ளன. அதன் பயனாக இத்தடுப்பூசி கிடைக்கப்பெறுவதில் நிலவும் தாமதம் மே மாதமாகும் போது சீரடைந்துவிடும் என நம்புகின்றோம். இத்தடுப்பூசி கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் தடுப்பூசி வழங்குதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும் கொழும்பு மாநாகர சபை எல்லைக்குள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
கே: அஸ்ட்ரா செனகா தடுப்பூசிப் பெற்ற ஒரு சிலருக்கு இலங்கையிலும் இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனவே?
பதில்: இத்தடுப்பு மருந்தைப் பெற்றவர்களுக்கு இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படுவது ஐரோப்பிய நாடுகளில் முதலில் பதிவாகியது. அதனால் இத்தடுப்பு மருந்துப் பாவனையைச் சில நாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தின. சில நாடுகள் மீண்டும் இத்தடுப்பூசி வழங்கலை ஆரம்பித்துள்ளன. இந்த இரத்தம் உறைதல் பாதிப்பு இளம் வயதினருக்கு ஏற்படுவதைச் சில நாடுகள் அவதானித்துள்ளன. அதனால் சிரேஷ்ட பிரஜைகளுக்கு, குறிப்பாக 50முதல் – 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இத்தடுப்பு மருந்து தொடர்ந்தும் வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் இலங்கையில் இத்தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களில் வெவ்வேறு காரணங்களுக்காக வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற வந்த சுமார் 20 பேர் பதிவாகியுள்ளனர். அவர்களில் சிலர் இரத்தம் உறைதல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் சிலருக்கு மூளையிலும் இன்னும் சிலருக்கு ஈரலிலும் இன்னும் சிலருக்கு சிறுநீரகத்திலும் என்றபடி இரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளது. இது இத்தடுப்பு மருந்தினால் ஏற்பட்டது என்பதற்குரிய உறுதியான சான்றுகள் இன்னும் இல்லை. ஆனால் ஒரு சில தொற்று நோய்கள் காரணமாகவும் இவ்வாறு ஏற்படலாம். இத்தடுப்பூசி வழங்கப்பட முன்னரும் இவ்வகை இரத்தம் உறைதலை இலங்கை மருத்துவர்களும் அவதானித்துள்ளனர். அதனால் தற்போது பதிவாகியுள்ள இரத்தம் உறைதலுக்கும் இத்தடுப்பூசிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை நாம் தீவிரமாக ஆராய்கின்றோம். அவ்வாறு இருக்குமாயின் அது தொடர்பில் உடனடியாக நாட்டு மக்களுக்கு அறிவிப்போம். இது தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் நடவடிகைககளை முன்னெடுத்துள்ளோம்.
கே: அந்நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிட முடியுமா?
பதில்: இந்நாட்டில் இரத்தம் உறைதலுக்கு உள்ளான ஒரிருவரை அவதானித்ததும் அது தொடர்பில் நாம் விழிப்படைந்துள்ளோம். இத்தடுப்பூசியைப் பெற்று 03 நாட்கள் முதல் 3 வாரங்களுக்குள் எந்தவொரு மருத்துவக் காரணத்திற்காகவாவது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற எவராவது வந்தால் அது தொடர்பில் எமது தொற்று நோயியல் பிரிவுக்கு அறிவிக்குமாறு நாட்டிலுள்ள எல்லா வைத்தியசாலைகளுக்கும் அறிவித்துள்ளோம். இதன் நிமித்தம் 24 மணிநேரமும் செயற்படக்கூடிய அவசர தொலைபேசிச் சேவையையும் நாம் ஆரம்பித்துள்ளோம். இங்கு இரண்டு மருத்துவ நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். அவர்கள் 24 மணி நேரமும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கின்றனர்.
இதேவேளை இது குறித்து உலக நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். அத்தோடு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆய்வு செய்யும் வகையில் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள், குருதியியல் நிபுணர்கள், பொது மருத்துவ நிபுணர்கள், தொற்று நோயியல் நிபுணர்கள், நிணநீர் தொகுதி நிபுணர்கள் அடங்கிய விஷேட மருத்துவ நிபுணத்துவ குழுவொன்றை நியமித்துள்ளோம். இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசுகளை பெற்றுக்கொள்வதும் அவ்வாறான நிலைமையின் போது எவ்வாறு முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டல் முறைமைகளைத் தயாரித்துக் கொள்வதுமே இதன் நோக்கமாகும்.
அதேநேரம் பல நோய்கள் தொடர்பில் சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை மேற்கொள்ளக்கூடிய மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கி மருத்துவ நிபுணத்துவ குழுவை தேசிய வைத்தியசாலையில் அமைக்குமாறும் தீவிர சிகிச்சை பிரிவொன்றைத் தயார்படுத்துமாறும் பிரதிப் பணிப்பாளருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகின்றவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளுமின்றி பராமரித்து சிகிச்சை அளிக்கவே இவ்வேற்பாடுகள் மேற்கொள்ளப்படுன்றன. அதனால் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்கள் பதிவானார்களாயின் உடனடியாக தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு நாட்டிலுள்ள எல்லா வைத்தியசாலைகளுக்கும் அறிவிக்க உள்ளோம்.
கே: ‘சினோபாம்’ தடுப்பூசியை மக்களுக்கு வழங்குதலில் தாமதம் ஏன்?
பதில்: சீன உற்பத்தியான சினோபாம் தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பீடுகளைத் தற்போது மேற்கொண்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு அவசரத் தேவையின் நிமித்தம் அதனைப் பாவிக்க அவர்கள் அனுமதி வழங்குவர். அப்போது எவ்விதப் பிரச்சினையும் இன்றி நாம் அதனை வழங்கலாம். அதேநேரம் பரீட்சார்த்தமாக இத்தடுப்பூசி வழங்கப்பட்ட போது கிடைக்கப்பெற்ற பாதுகாப்பு தரவுகளை நாம் கோரியுள்ளோம். இத்தரவுகள் உலக சுகாதார ஸ்தாபத்தின் அங்கீகாரத்திற்கு முன்னர் கிடைக்கப்பெறுமாயின் தேசிய மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அது குறித்து மதிப்பீடுகளை மேற்கொண்டு அவசர தேவையின் நிமித்தம் இத்தடுப்பூசியை பயன்படுத்த வழங்க அனுமதியளிக்கும்.பொதுவாகத் தடுப்புசியைப் பரீட்சிப்பதற்கு நோயாளர்கள் இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிடில் ஒப்பிட்டு பார்க்க முடியாது. சீனாவில் இத்தொற்று பெரிதும் கட்டுப்பாட்டு நிலையில் உள்ளது. அங்கு நோயாளர்கள் இல்லை. அதனால் இத்தடுப்பூசியைப் பாவித்தவர்களின் தரவுகளைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது. அதனால் நோயாளர்கள் உள்ள வேறு நாடுகளில் தான் இத்தடுப்பூசி பரீட்சிப்புகள் சிலவும் இடம்பெறுகின்றன. அவை கிடைக்கப்பெற்றாலும் அவற்றை மதிப்பீடு செய்யலாம். இதன் விளைவாகவே இத்தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதில் இங்கு தாமதம் நிலவுகிறது. ஆனால் இத்தடுப்பூசியை சுமார் இரு வருடங்களுக்கு களஞ்சியசாலைகளில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். தடுப்பூசி பாதிப்படையாது.
கே: வேறு சில நாடுகள் சினோபாம் தடுப்பூசியைத் தம் பிரஜைகளுக்கு வழங்குகின்றனவே?
பதில்: ஒவ்வொரு நாட்டினதும் மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தல் விதிமுறைகளுக்கு இடையில் வித்தியாசமுள்ளது. அவற்றின் ஊடாகவே மருந்துப்பொருட்கள் மற்றும் தடுப்பூசிகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்க முடியுமா? பாதுகாப்பானதா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.
அந்தடிப்படையில் தேசிய மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அங்கீகாரமின்றி எந்தவொரு மருந்துப்பொருளையும் இந்நாட்டில் பாவிக்க முடியாது. ஆனால் நோய் நிலையில் இருக்கும் ஒருவருக்கு அவசியப்படுமிடத்து இங்கு பதிவு செய்யப்படாத மற்றும் அங்கீகாரம் அளிக்கப்படாத மருந்துப்பொருள் தேவைப்படுமாயின் அதனைக் கொண்டுவந்து வழங்கலாம். சமூகத்திற்கு வழங்குவதாயின் அங்கீகாரம் அத்தியாவசியமானது. அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், கனடா, ஐரோக்கிய நாடுகள் போன்ற நாடுகள் மருந்துப்பொருட்கள் தொடர்பில் அனைத்து விடயங்கள் குறித்தும் தீவிர கவனம் செலுத்தியே பாவனைக்கு அங்கீகரிக்கும். அவ்வாறான இறுக்கமான விதிமுறைகளே இங்குமுள்ளது.
ரஷ்யத் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் – வீ ‘ தடுப்பூசி தொடர்பிலான அனைத்து தரவுகளும் கிடைக்கப்பெற்று மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மதிப்பீடுகளை பூர்த்தி செய்து அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கேற்ப அமைச்சரவை அங்கீகாரத்துடன் அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனம் இத்தடுப்பு மருந்தை இறக்குமதி செய்கிறது. இம்மாத இறுதியாகும் போது இத்தடுப்பூசி நாட்டுக்குள் வந்து சேரும். அதனை அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் போன்று பாவிக்கலாம்.
கே: நிறைவாக மக்களுக்கு நீங்கள் கூறவிரும்புவதென்ன?
பதில்: இது புத்தாண்டு காலம். கொவிட் 19 தொற்று பரவுதல் அச்சுறுத்தல் நிலவும் சூழலியே நாம் இப்புத்தாண்டைஇகபண்டாடுகின்றோம். அதனால் இத்தொற்றின் பரவுதலுக்கு துணை போகாத வகையில் முன்னவதானத்துடன் சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப செயற்படுவது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். உலக சுகாதர ஸ்தாபனத்தின் தெற்காசிய பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்றான கொரியாவில் தற்போது இத்தொற்று பதிவாவதில்லை. இலங்கையிலும் இந்தோனேசியாவிலும் கடந்த இரு வாரங்களாக இத்தொற்றுக்குள்ளானவர்களாகப் பதிவாகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இவற்றைத் தவிர பங்களாதேசம் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் இத்தொற்றுக்குள்ளவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எமது நாட்டில் சிறந்த பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு காணப்படுவதன் பயனாகவே இத்தொற்று கட்டுப்பாட்டு நிலையை அடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்தும் பேணிக்கொள்ள மக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்
(இந்தப் பேட்டி சித்திரைப் புத்தாண்டிற்கு எடுக்கப்பட்டு, தினகரன் பத்திரிகையில் 11.04.2021 அன்று வெளியானது)