Site icon சக்கரம்

திமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன?

– சமஸ்

புது டெல்லியின் கருத்துருவாக்கர்கள் 2021 ஐந்து மாநிலத் தேர்தலை எப்படி அணுகுகிறார்கள்? தேர்தல் ஆய்வாளரும், சமூகவியலாளருமான யோகேந்திர யாதவ் விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார், ‘பாஜகவின் அஸ்வமேத யாகத்தை நிறுத்தி இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது வங்கம்!’ முதல்வர் மம்தா இந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமே இல்லை. கட்டுரையில் ஓரிரு வரிகளில் தமிழ்நாட்டைக் கடந்திருக்கிறார் யோகேந்திர யாதவ்.

பத்திரிகையாளர் சேகர் குப்தா ட்விட்டரில் தன்னுடைய இணையப் பத்திரிகையின் இரு தலையங்கங்களைப் பகிர்ந்திருந்தார். வங்கத்தைப் பற்றிய தலையங்கம் சொல்கிறது, ‘வங்கத் தேர்தலில் மூன்று முக்கியமான விஷயங்களைக் காண முடிகிறது. முதலாவது, மோடி யுகத்தில் பாஜக அடைந்த பெரிய தேர்தல் தோல்வி இது. பிரிவினை, வகுப்பியச் செயல்திட்டங்கள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை வெல்ல பாஜகவுக்கு உதவாது. மூன்றாவது, எல்லாம் வல்ல நரேந்திர மோடி என்ற ஆளுமை வழிபாடு இந்தி மாநிலங்கள், குஜராத் போன்றவற்றில் எடுபடலாம். அது ஏனைய பகுதிகளை ஈர்க்காது.’ அதேசமயம், சேகர் குப்தாவின் தமிழ்நாட்டைப் பற்றிய தலையங்கம் இப்படிச் சொல்கிறது, ‘தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றி ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் சுரத்தே இல்லாத, சீரற்ற ஆட்சிக்குப் பிறகு ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவுக்குத் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி சாத்தியமற்றதாகவே இருந்தது!’ அதே ஊடகத்தின் இன்னொரு ஆசிரியர் ராம லக்ஷ்மி – ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் முன்னாள் செய்தியாளரும்கூட – இவர் ட்விட்டரில் இப்படி ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்திருந்தார்: ‘தமிழ்நாட்டின் பப்புவை வாக்கு இயந்திரமாக பிரஷாந்த் கிஷோர் எப்படி மாற்றினர் என்பதை வாசியுங்கள்… முரட்டுத்தனமான மாணவர் தலைவர் என்பதிலிருந்து முதல்வராகும் சாத்தியமுள்ளவராக – திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இயல்பான உருமாற்றம்.’

இது வாடிக்கைதான். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக் கட்சிகள் ஆட்சியின் ஐம்பதாண்டு, அதன் தளகர்த்தர்களில் ஒருவரான கருணாநிதியினுடைய சட்டமன்றப் பணியின் அறுபதாண்டு முத்தருணங்களை ஒட்டி ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலை உருவாக்குகையில் கட்டுரைக்காக அணுகியபோது, நவீன இந்தியாவின் வரலாற்றாய்வாளர் என்று தன்னை வரையறுத்துக்கொள்ளும் ராமசந்திர குஹா மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘எனக்குத் தமிழ்நாட்டைப் பற்றித் தெரியாது!’ அது சரி, பேசவோ எழுதவோ விருப்பமற்ற ஒன்றை ஒருவர் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்!

என்னைப் பொறுத்த அளவில், வங்கத்தில் மம்தாவின் வெற்றிக்கு இணையானதாகவே தமிழ்நாட்டில் ஸ்டாலினின் வெற்றியையும் காண்கிறேன்.

வங்கத்தைத் தன் கைவசம் கொண்டுவருவதற்கு நேரடியாக யுத்தத்தை நடத்திய பாஜக, தமிழ்நாட்டைத் தன் கைவசம் கொண்டுவருவதற்காக ஒரு நிழல் யுத்தத்தை நடத்தியது. வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸிலிருந்து முக்கியமான ஆட்களைத் தூக்குவதன் வாயிலாக அந்தக் கட்சியைப் பலவீனப்படுத்துவதோடு, புதிய தலைவர்களின் வழியே தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும் வியூகமானது பாஜக பல மாநிலங்களிலும் கையாளும் வழக்கமான நடைமுறை. தமிழ்நாட்டில்தான் விசேஷமான ஒரு முயற்சியை பாஜக கையாண்டது. ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஒரு பேரியக்கத்தின் தலைவருடைய மறைவைப் பயன்படுத்திக்கொண்டு, அதன் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தைத் தனதாக்கிக்கொண்டது.

வங்கத்தில் ஒருவேளை திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும்கூட ஆட்சி மட்டும்தான் பாஜகவின் கைகளுக்குச் சென்றிருக்கும்; தமிழ்நாட்டில் திமுக தோற்கடிக்கப்பட்டிருந்தால் இரு திராவிடக் கட்சிகளில் ஒன்று உண்டு செரிக்கப்பட்டிருக்கும், மற்றொன்று பெரும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கும். இதை உணர்ந்திருந்ததால்தான் இரு கட்சிகளுமே அதிகபட்ச இடங்களில் போட்டியிட்டன.

ஆக, தேர்தல் வெற்றியின் வழி திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகளையும் சேர்த்தே காப்பாற்றியிருக்கிறார் ஸ்டாலின். கூடவே மம்தாவைப் போல பாஜகவின் மூர்க்கப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு ஜனநாயகத்தையும் காப்பாற்றியிருக்கிறார்.

இன்னொரு சிறப்பும் ஸ்டாலினின் வெற்றியில் உண்டு. வங்கத்திலாவது மாநில அரசு மம்தாவின் கைகளில் இருந்தது; தமிழகத்தில் மாநிலத்திலும் ஒன்றியத்திலுமாக சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருந்த ஒரு கூட்டணியை எதிர்கொண்டு இந்த வெற்றியை ஸ்டாலின் சாதித்திருக்கிறார். தமிழக வரலாற்றையே எடுத்துக்கொண்டால், சுதந்திரத்துக்குப் பிந்தைய 15 சட்டமன்றத் தேர்தல்களில் 1967, 1996, 2001 மூன்று தேர்தல்கள் மட்டுமே இதற்கு முன்னோடி. அந்த வகையில், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் இரட்டைச் சவாலை எதிர்கொண்டு வென்றிருக்கிறார் ஸ்டாலின்.

திமுகவின் வெற்றி வேறு மூன்று காரணங்களாலும் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் முக்கியமானதாகிறது.

தமிழ்நாட்டின் இன்றைய முன்னேற்றத்துக்கு முக்கியமான காரணம், பரவலாக்கப்பட்ட அனைவருக்குமான வளர்ச்சிக்கான முனைப்பு. இந்த லட்சியத்தில் பயணிக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் என்றாலும், வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவுக்கும், அதற்கு அடுத்த பெரிய நகரங்களான அசன்சால், சிலிகுரி, துர்காபூருக்கும் இடையில் கட்டமைப்பு வசதிகளில் உள்ள பாரிய வேறுபாடுகளை நேரில் கண்டால்தான் ஒரு தமிழர் சென்னைக்கு அடுத்து பெரிய நகரங்களான கோவை, மதுரையில் தொடங்கி நெல்லை, நாகர்கோவில் வரை தமிழ்நாட்டில் வளர்ச்சி எவ்வளவு பரவலாக முன்னெடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர முடியும்.

சமூகநீதி என்ற சொல் ஏதோ இடஒதுக்கீட்டை மட்டும் குறிப்பதானது அல்ல; எல்லா நிலைகளிலும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் சமமாகக் கொண்டுசெல்வதையும் ஓர் ஆட்சியாளர் எல்லாச் சமூகங்களுக்கும் எல்லா பிராந்தியங்களுக்கும் சமமானவராக நடந்துகொள்வதையும் அது உள்ளடக்குகிறது. எல்லோரையும் அரவணைப்பதை சமூகநீதியாகப் பேசும் தமிழ்நாட்டு அரசியலையும், அதிமுக போன்ற ஒரு பேரியக்கத்தையும் சாதிய மற்றும் பிராந்தியயிய அடிப்படையிலான குறுகிய பாதை நோக்கி பழனிசாமி இழுத்துச்சென்றார். முதல்வர் என்பதையும் மறந்து ஓட்டுகளுக்காக ஒருகட்டத்தில் சாதி மாநாடுகளில் எல்லாம் அவர் பங்கேற்றது தமிழக அரசியலுடைய வீழ்ச்சியின் உச்சம். இந்தத் தேர்தல் முடிவானது இந்த அபாயகரமான அரசியல் போக்கைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கூட்டாட்சிக்கான உரத்த குரல் தமிழ்நாடு. பாஜகவால் வங்கமும் மம்தாவும் எப்படியான அழுத்தத்தை எதிர்கொண்டார்களோ அதற்குச் சற்றும் குறைவில்லாத அழுத்தத்தையே வேறு ரூபத்தில் தமிழகமும் பழனிசாமியும் எதிர்கொண்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் பழனிசாமியிடம் மம்தாவிடமிருந்து வெளிப்பட்ட அணுகுமுறையையே எதிர்பார்த்தார்கள். முன்னதாக ஜெயலலிதா காலத்தில் அதிமுக இந்த எதிரடிக் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. பழனிசாமி தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தன்னுடைய பதவியின் மாண்பையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் பறிகொடுத்தார்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவி வெறும் நிர்வாகப் பதவியாக பழனிசாமி காலத்தில் சுருங்கியது. இயல்பாகவே பலவீனமான கூட்டாட்சி அமைப்பைக் கொண்டதான இந்தியாவில் மாநிலங்களின் அதிகாரங்கள் சில்லுசில்லாகப் பெயர்க்கப்படும் காலகட்டத்தில் அவர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவராக இருந்தார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று நீடித்த ஒரு மரபு நசிந்துகொண்டிருந்தது. இந்தத் தேர்தல் முடிவானது இந்தச் சிதைவைத் தடுத்து நிறுத்தி அந்த மரபு மீட்டெடுக்கப்படும் நம்பிக்கையை அளிக்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளைச் சரியாகவே உணர்ந்திருந்ததால்தான் ‘இந்தத் தேர்தல் தமிழ்நாட்டின் சுயமரியாதையைக் காப்பதற்கான யுத்தம்’ என்று குறிப்பிட்டார் ஸ்டாலின். தம்மைத் தேர்ந்தெடுத்த மக்கள் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்திருக்கும் அவர் ‘தமிழகம் வெல்லும்’ என்று சொல்லியிருக்கிறார்; அது இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகத்தோடும் பிணைக்கப்பட்டதுதான்!

இந்து தமிழ்
2021.05.04

Exit mobile version