-அஹ்ஸன் அப்தர்
கொழும்பு பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் இளமாணி பட்டதாரியான ரதன தேரர் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் டிப்ளோமா பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார். இவர் இப்போது இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்கைகளில் முதுகலைமாணி பட்டம் பெற்றுக் கொள்வதற்கும் தயாராகி வருகின்றார்.
இந்நிலையில், களுத்துறையில் உள்ள தனது பிரிவெனாவில் கல்வி கற்கும் இளம் பௌத்த துறவிகளுக்கு தமிழ் மொழியைப் போதிக்கும் பணிகளையும் செய்து வருகின்றார். ரதன தேரரின் தாய்மொழி சிங்களம் ஆகும். ஆனால் இப்போது தமிழ்மொழியில் தேர்ச்சியடைந்து தமிழை கற்பிப்பதோடு மாத்திரம் நிறுத்தி விடாமல் அன்றாட வாழ்க்கையில் தனது தனிப்பட்ட கருமங்களையும் தமிழ்மொழியில் ஆற்றுவதற்கும் அவரால் முடிகின்றது.
இரத்தினபுரியை பிறப்பிடமாகக் கொண்ட எஸ். இந்தரதன தேரர் (S.Indarathana thero) 2001 ஆம் ஆண்டில் தனது பதினோராவது வயதில் பௌத்த துறவியாக மாறினார். தான் கல்வி கற்ற பௌத்த பிரவெனாவில் விஜேநாயக்க என்று பெயர் வழங்கப்படும் ஆசிரியர் ஒருவரிடம் இருந்து அடிப்படை தமிழறிவை ரதன தேரர் பெற்றுக் கொண்டார். அந்த ஆசிரியர் இலவசமாக தமிழ் வகுப்புகள் நடத்துவார். அதில் கலந்து கொண்ட தேரருக்கு அடிப்படைத் தமிழ் மொழியறிவு கிடைத்தது. விஜேநாயக்க ஆசிரியர் வேறொரு ஊருக்கு இடம்மாறிய பின்னர் சரளமாக தமிழ்மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் போனது.
பல்கலைக்கழக பட்டப்படிப்பை ரதன தேரர் நிறைவு செய்து விட்டு பாடசாலை ஒன்றில் பயிற்சி ஆசிரியராக கடமையாற்றும் போதுதான் வடக்கிலுள்ள நயினாதீவுக்கு சக ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்றார். தன்னுடன் படகில் வந்தவர்கள் பலர் தமிழ் ஶ்ரீமொழி பேசுவதை லயித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவர், அவர்களுடன் கதைப்பதற்கு எத்தனித்தார்.
ஆனாலும் அந்த நேரத்தில் அவருக்கு ‘வணக்கம்’ மற்றும் ‘எப்படி சுகம்’ என்ற இரு வார்த்தைகளுக்கு மேல் பேசத் தெரியவில்லை. அங்கிருந்த மக்களின் தமிழ் மொழிநடை மற்றும் அவர்களின் உபசரிப்பு என்பன ரதன தேரரை வெகுவாகக் கவர்ந்தன.
நயீனாதீவு உட்பட வடக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் பலரின் பழக்க வழக்கங்கள் மற்றும் வடக்குச் சூழல் என்பன பிடித்துப் போகவே, அந்த மக்களுடன் தொடர்பாடல்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மொழியை சரளமாகப் பேசி அவர்களுடன் அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்பினார். அதற்காக கொழும்பு பௌத்த பாளி பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் டிப்ளோமா கற்கையைத் தொடர்ந்தார்.
டிப்ளோமா கற்கையின் இறுதிப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ரதன தேரர் தமிழ்மொழியை எழுத, வாசிக்க மற்றும் பேச தெரிந்தவராக மாறினார். ‘சிங்களமும் தமிழும் எனக்கு இரண்டு கண்களாகும். என்னைப் பொறுத்த வரையில் எனக்கு இரண்டுமே தாய்மொழிகள்தான்’ என ரதன தேரர் தெரிவிக்கிறார்.
தமிழ் தனது தாய்மொழியாக இருந்தால் எப்படியிருக்குமோ, அப்படியான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று ரதன தேரர் விரும்பினார். இதற்காக தமிழ்மொழியை சமூக மட்டத்தில் பேசிப் பழகுவதற்கென்றே தமிழ் நண்பர்ளைத் தேடித் தெரிவு செய்து தமிழ் பேசும் சமூகங்களில் நட்புறவை வளர்த்துக் கொண்டார்.
இது பற்றி தெரிவிக்கும் ரதன தேரர் “சமஸ்கிருதம், பாளி போல தமிழ்மொழி கற்க புத்தகங்களில் மட்டும் நான் முடங்கியிருப்பதில்லை. தமிழை நிறையப் பேர் பேசுகிறார்கள். தமிழைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தமிழ் பேசும் நபர்களைத் தேடி அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன்” என்கிறார்.
தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே, தமிழுக்கு பதிலாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைப் பெருமையாக நினைக்கும் இந்தக் காலத்தில், சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்ட ரதன தேரர் தனது தனிப்பட்ட பேஸ்புக் கணக்கின் பெயரைக் கூட தமிழ்மொழியில் வைத்து அதில் தமிழ் பேசும் நண்பர்களை அதிகமாக இணைத்திருக்கிறார்.
இலங்கை, கனடா, மலேசியா, ஜேர்மன் போன்ற நாடுகளில் உள்ள தமிழ் நண்பர்களை இணைத்து அவர்களுடன் தமிழ் பேசி தனது தமிழறிவை சமூக மட்டத்தில் மேம்படுத்திக் கொண்டுள்ளார். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுடன் வானொலியில் தமிழ்ச் செய்திகளை கிரகிப்பதன் ஊடாக தனது தமிழறிவை செம்மைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ரதன தேரர் வசிக்கும் சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் தமிழ்ப் பத்திரிகைள் மற்றும் சஞ்சிகைள் இல்லாத நிலையில், தூரத்தில் உள்ள தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்குச் சென்று அவற்றை வாங்கி வருவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இது தவிர விண்ணப்பங்கள் நிரப்புதல், வங்கித் தேவைகள் என எல்லாவற்றையும் தமிழில் செய்து முடிப்பதில் அவர் ஆர்வம் காட்டுகிறார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் ரதன தேரர் “இலங்கை சட்டத்தின்படி தமிழும் அரசகரும மொழிதான். அதை பயன்படுத்தும் சுதந்திரம் அனைவருக்கும் உரித்தானது. எனக்கு இப்போது சிங்களத்தை விட தமிழை பயன்டுத்துவது இலகுவாக இருக்கிறது” எனக் குறிப்பிடுகின்றார்.
ரதன தேரர் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் அவரது தமிழ் பேசும் நண்பர் சிவானந்தன் டிலக் “துறவிகள் மத்தியில் இவர் ஒரு உன்னதமான மனிதர். இவர் நட்புறவு வைத்துள்ள பெரும்பாலானோர் தமிழர்களே. இவருடைய தமிழ்மொழித் திறமையைக் கண்டு வியப்புற்றேன்” எனக் குறிப்பிடுகின்றார்.
“ஓர் ஆன்மீகவாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என சிவானந்தன் டிலக் மேலும் தெரிவித்தார். இவர் போல எத்தனையோ தமிழ் நண்பர்கள் ரதன தேரரை ஆழமாக நேசிக்கிறார்கள்.
மொழியைக் கற்பதோடு மாத்திரம் நிறுத்தி விடாமல் தமிழ் பேசும் மக்களுடைய கலாசாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்புக் கொடுப்பதற்கு ரதன தேரர் தவறியதில்லை.
தன்னிடம் தமிழ் கற்கும் மாணவர்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் ரதன தேரர், உண்மையில் அவர்கள் தமிழ்மொழியில் திறமையானவர்கள் என்றும், இளம் பௌத்த துறவிகளாக இருக்கின்ற போதும் தமிழை விரும்பி கற்கிறார்கள் என்றும் கூறுகிறார். ரதன தேரரின் பிரிவெனாவில் பௌத்த துறவிகளாக இருக்கும் பத்து அல்லது பதினொரு வயதுடைய மாணவர்கள் கூட நல்ல முறையில் தமிழ் வாசிப்பதுடன் எழுதவும் செய்கிறார்கள். அவர்களுடைய தமிழ் கையெழுத்து அழகாக இருக்கிறது. இந்த மாணவர்கள் அனைவருக்கும் தனி ஆளாக ஆரம்பம் முதல் ரதன தேரர் தமிழ் கற்பிக்கிறார்.
தேரரிடம் கல்வி பயிலும் சில மாணவர்கள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள். தேரர்களுக்கான தமிழ் தினப்போட்டிகளின் பேச்சுப் போட்டியில் ரதன தேரரிடம் ஆரம்ப நிலையில் இருந்து தமிழ் மொழியினைக் கற்ற இளம் தேரர் ஒருவர் அகில இலங்கை மட்டம் வரை முன்னேறிச் சென்றார். இதே போல தமிழ் சார்ந்த பல்வேறு விடயங்களில் ரதன தேரரின் மாணவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் இளைஞர்கள் பலர் சிங்கள மொழியை கற்பதற்கு பின்னிற்பதால் அவர்களுக்கு சிங்கள மொழி தொடர்பான வழிகாட்டல்களை தொடர்வதற்கான செயற்பாடுகளை தேரர் செய்து வருகின்றார்.
வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மாணவர்களுக்கென தனியாக செயலமர்வுகளின் ஊடாக சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் விரும்புகிறார். இதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளை ரதன தேரர் பூர்த்தி செய்துள்ள போதிலும், கொரோனா தொற்று அச்சத்தினால் குறித்த வேலைகள் அனைத்தும் தடைப்பட்டு ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து குறித்த வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக ரதன தேரர் தெரிவிக்கிறார்.
தமிழ் மாணவர்கள் சிங்களம் கற்பது தொடர்பாக ரதன தேரரின் மற்றுமொரு நண்பரான ரகுலன் பாலா கருத்துத் தெரிவிக்கையில் “புத்தர் பெருமானின் போதனைகளை கண்ணியமாக நடைமுறையில் கடைப்பிடித்து வாழும் அன்புக்குரிய ரதன தேரர் அவர்கள் மொழிப் பிரச்சினையால்தான் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அந்நியப்படுகின்றார்கள் என்று சொல்வார். அதன் ஊடாகத்தான் இந்த நாட்டிலே யுத்தம் இடம்பெற்றது எனவும் கூறுவார். ரதன தேரர் அவர்கள் சிங்கள மக்கள் தமிழ்மொழியை கற்க வேண்டும் என்பதற்காகத் மகத்தான ஆசிரியர் சேவையை செய்து கொண்டிருக்கின்றார். இதேபோல தமிழ் மக்களும் சிங்கள மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்க்கதரிசனம் கொண்டவராக ரதன தேரர் இருக்கிறார்” என குறிப்பிட்டார்.
எங்களுடைய நாட்டில் சிங்களம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளுமே அரச கரும மொழிகளாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ் பெருமளவில் பயன்படுகின்றது. ரதன தேரர் போன்ற பல இலங்கையர்கள் தமிழ்மொழி மீது வைத்திருக்கும் பிரியத்தை அடுத்தவர்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும். மாற்று மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களும் தமிழ்மொழியை நேசிக்கும் ஒரு சூழலை இலங்கையில் உருவாக்க வேண்டும்.
எங்களுடைய நாட்டில் அரசகரும மொழிகளாக இருக்கின்ற இரண்டு மொழிகளையும் நாம் கற்பதற்கு முன்வர வேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற அரைவாசிப் பிரச்சினைகளுக்கு தொடர்பாடல் குறைபாடே காரணமாகும். அதனைத் தவிர்க்க நாம் எமது அரச கரும மொழிகளை கற்பதுடன் ஏனைய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை மதிக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அதற்கு ரதன தேரரை நாம் மிகச் சிறந்த முன்மாதிரியாகக் கொள்ள முடியும்.