Site icon சக்கரம்

மாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு, படிப்படியாகக் குறையத்தொடங்கியுள்ளபோதிலும், அது பல லட்சக்கணக்கான குடும்பங்களின்மீது ஏற்படுத்தியுள்ள பேரழிவு, ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் கவ்விப்பிடித்துக் கொண்டிருக்கிறது. கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்குத் தேவையான எவ்விதத் தயாரிப்புப்பணிகளிலும் ஈடுபடாது இருந்த மோடி அரசாங்கத்தின்மீது மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் திகைப்பும் கோபமும் மேலோங்கியிருக்கிறது. மோடி அரசாங்கம், இதனைக் கையாண்டவிதமும் அதன் அறிவியலற்ற அணுகுமுறையும் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவிட்-19 இரண்டாவது அலையின் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மற்றுமொரு மாபெரும் பேராபத்து உருவாகிக் கொண்டிருக்கிறது. அது பொருளாதாரரீதியானதாகும். பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள், வேலைகளை இழந்திருக்கிறார்கள். சிறிய வர்த்தகர்கள் மற்றும் கடை வைத்திருந்தவர்கள் வாழ்க்கை நிர்மூலமாகியிருக்கின்றன. பல குடும்பத்தினர் கடன் வலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். பசி-பட்டினிக் கொடுமை அதிகரித்திருக்கிறது.

தேசியப் புள்ளிவிவர ஸ்தாபனம் (National Statistical Organisation) 2021க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP-Gross Domestic Product) விவரங்களை அறிவித்திருக்கிறது. இது, கடந்த நாற்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான அளவில் 7.3 சதவீத அளவிற்குச் சுருங்கியிருப்பதாகக் காட்டுகிறது. வேளாண்மையைத் தவிர பொருளாதாரத்தின் இதர துறைகள் அனைத்துமே அவற்றின் உற்பத்தியில் வீழ்ச்சியையே காட்டுகின்றன. அரசாங்கம் (2021 ஜனவரி-மார்ச்) நான்காவது காலாண்டில் 1.6 சதவீதம் வளர்ச்சியடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இது நாம் பொருளாதாரத்தில் மீட்டெழுந்துகொண்டிருப்பதற்கான அடையாளம் என்று கூறுகிறது. ஆனால், உண்மையில் நிலைமைகள், ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கிடையே கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தின் விளைவாகவும், பல்வேறு மாநிலங்களில் சமூக முடக்கங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும், மேலும் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையின் சில அறிகுறிகள் ஏற்கனவே தெரியத் தொடங்கிவிட்டன.  இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் (CMIE) அறிக்கையின்படி, மே மாதத்தில் வேலையின்மை விகிதம் சுமார் 12 சதவீதமாகும். இதே மாதத்தில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் சுமார் 15 சதவீதமாகும்.  இந்தியாவில் இயங்கும் உள்நாட்டுத் தொழிற்சாலைகளில் மே மாதத்தில் அவை பெற்ற ஆர்டர்களும் அவற்றின் உற்பத்தியும் கடந்த பத்து மாதங்களில் மிகவும் குறைவாகும். குடும்பங்களின் நுகர்வு மேலும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. கிராக்கி இல்லாததால், முதலீடுகளும் இல்லை. 

இத்தகு நிலைமையில் அரசாங்கம் தன் செலவினங்களை அதிகரித்திட நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். மக்களுக்கு ரொக்க மான்யம் அளித்தல், வேலையில்லாதவர்களுக்கு அலவன்சுகள் அளித்தல், மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் செலவினங்களை அதிகரித்தல், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவினருக்கு கடன்கள் வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மூலமாக அரசாங்கத்தின் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மக்களின் கைகளில் வாங்கும் சக்தி (purchasing power) அதிகரித்து, அவர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும்.  உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்குப் பொது முதலீடுகளை அதிகரிப்பதும் நீண்டகால அளவில் உதவிடும்.

ஒருசில கடும் பிற்போக்காளர்கள் மற்றும் அடிப்படைவாதிகளைத் தவிர மற்ற அனைவருமே அரசாங்கம் அதிக செலவுகளைச் செய்திட வேண்டும் என்றே கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தொழில்களின் மகாசம்மேளனத்தின் (Confederation of Indian Industry), தலைவர் உதய் கோடக், மக்களுக்கு ரொக்க மான்யங்கள் அளிப்பது உட்பட பெரிய அளவில் பொருளாதார ஊக்குவிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். நவீன தாராளமயக் கொள்கைகளை உறுதியுடன் பின்பற்றிவந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூட, கடன் வாங்கியோ அல்லது ரூபாய் நோட்டுகள் அச்சடித்தோ அதிக அளவில் செலவுகள் செய்திட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அனைத்துவிதமான பொருளாதாரவாதிகளும், பொது நிதி வல்லுநர்களும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மோடி அரசாங்கமோ இவர்களின் கோரிக்கைகள் எதையும் காதில்போட்டுக்கொள்ளவே இல்லை. நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமன், ஒரு நேர்காணலில், மக்களுக்கு நிதி ஊக்குவிப்பு அளிக்க வேண்டும் என்பது தொடர்பான ஒருகேள்விக்குப் பதிலளிக்கையில், முதலில் பட்ஜெட் செலவினங்கள்  மக்களைச் சென்றடையட்டும் என்று கூறியிருக்கிறார். பட்ஜெட்டில் கோவிட் சம்பந்தப்பட்ட செலவினத் தொகுப்புக்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆனால் இது ஒரு வெற்றுக் கூற்று. உண்மையில் 2021-22 பட்ஜெட் அரசாங்க செலவினத்திற்கு என்று 34,83,236 கோடி ரூபாய் ஒதுக்கியது. 2020-21இல் 34,50,305 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் பொருள் 2021-22க்காக, கூடுதலாக 32,931 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். பட்ஜெட் செலவினங்களைக் கூர்ந்து நோக்கினோமானால், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழான ஒதுக்கீடுகளுக்கோ, உணவு மான்யத்திற்கோ பெரிய அளவில் ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை என்பது நன்கு தெரியவரும். இவை எல்லாவற்றையும்விட மிகவும் மோசமாகப் பளிச்செனத்தெரிவது, சுகாதார பட்ஜெட்டிற்கெனப் பெரிதாக ஒன்றும் ஒதுக்காதது ஆகும். சுகாதாரம் மற்றும் குடும்பநலத்திற்கான செலவினம் என்பது சென்ற ஆண்டைவிட 11 சதவீத அளவிற்குத்தான் உயர்வு இருந்திருக்கிறது. 

அரசாங்கம் ஏழை  மக்களுக்கும் தேவைப்படுவோருக்கும் ரொக்க மான்யங்கள் அளிக்கப் பிடிவாதமான முறையில் மறுத்துவருகிறது. சென்ற ஆண்டின் மத்தியிலிருந்தே எதிர்க்கட்சிகள் அனைத்தும் வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் அளித்திட வேண்டும் என்று கோரி வந்திருக்கின்றன. ஆனால் இதுதொடர்பாக அரசாங்கம் சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை.  

இரண்டாவது அலை வீசிய சமயத்தில் இந்த அரசாங்கம் செய்ததெல்லாம், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருந்த அனைவருக்கும் 5 கிலோகிராம் உணவு தான்யங்களை வழங்கும் திட்டத்தை மூன்று மாத காலத்திற்குப் புதுப்பித்தது மட்டுமேயாகும். எனினும், சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப்போன்று ஒரு கிலோ கிராம் பருப்பு வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக, நவீன தாராளமயக் கொள்கைகளுக்குச் சொந்தக்காரர்களான அமெரிக்காவும், கிரேட் பிரிட்டனும் பின்பற்றிய நடவடிக்கைகளைக்கூடப் பின்பற்றுவதற்கு மோடி அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லை. டிரம்ப் நிர்வாகமும், இப்போது பைடன் அரசாங்கமும் மக்களுக்கு 5 டிரில்லியன் டாலர்களுக்கு (5 லட்சம் கோடி ரூபாய்க்கும்) மேல் நிதி ஊக்குவிப்புத்தொகையாகவும், ரொக்க மாற்றுத் தொகையாகவும் அளித்திருக்கின்றன. இது அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 சதவீதமாகும். கிரேட் பிரிட்டன், அவர்களுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதத்திற்குச் சமமான தொகையை, நிதி ஊக்குவிப்புத்தொகையாகச் செலவு செய்திருக்கிறது. இதில் வேலைவாய்ப்புக்கு ஆதரவு மற்றும் ரொக்க மாற்றுகளும் அடங்கும்.  

ஆனால் இதற்காக இந்தியாவில் கூடுதலாகச் செலவு செய்திருப்பது என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2 சதவீதம் மட்டுமேயாகும். மோடி அரசாங்கம் இந்தக் காலத்தில் பெரும் கார்ப்பரேட்டுகளுக்காகவும், தனியார் நிதிநிறுவனங்களின் நலன்களுக்காகவுமே செயல்பட்டிருக்கிறது. இது, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரு பட்ஜெட்டுகளிலும் விதிக்கப்பட்டிருந்த கார்ப்பரேட் வரிகளைக் குறைத்திருக்கிறது.  மேலும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் 3.85 லட்சம் கோடி ரூபாய்கள் உயர்த்திடவும் முன்மொழிவுகளைச் செய்திருக்கிறது. இந்த இலக்கினை இதனால் எய்திட முடியாது என்பது வேறு விஷயம்.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மோடி அரசாங்கம் காட்டிய விசுவாசம் என்பது, அது பங்குச்சந்தைகளில்  ஊகவணிகத்தை மிகவும் அசிங்கமான முறையில் உயர்த்துவதற்கும், பெரும் வர்த்தகர்கள் மற்றும் நிதி ஊகவர்த்தகர்களை வளமாக்குவதற்கும் இட்டுச் சென்றிருக்கிறது. இதில் இந்திய மற்றும் அந்நிய வர்த்தகர்களும் அடங்குவர். இவற்றின் விளைவாக, இந்தியாவில் 2020இல் 55 பில்லியனர்கள் அதிகரித்திருக்கிறார்கள். 2020இல் உயர் 100 பில்லியனர்களின் செல்வாதாரங்களில் 35 சதவீத உயர்வு ஏற்பட்டிருக்கிறது. மறுபக்கத்தில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டுள்ள துன்பதுயரங்களால் புலம்பெயர் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் மிகவும் மோசமான அளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானவர்கள் இருந்த வேலைகளை இழந்து கடன்காரர்களாகி, பசி-பட்டினிக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

கூடுதல் செலவினங்களை ஈடுகட்டுவதற்காக கார்ப்பரேட் வரிகளை உயர்த்திடவோ, மூலதன ஆதாயங்கள் மீது வரிகள் விதிப்பதற்கோ அல்லது செல்வ வரி விதிப்பதற்கோ அரசாங்கம் மறுத்து வருகிறது. அதற்கு மாறாக, வீழ்ந்துள்ள வருவாயை ஈடுகட்டுவதற்காக பெட்ரோல் மற்றும் டீசல்களின் மீது அதீதமாக வரிகளை உயர்த்தி இருக்கிறது. கோவிட் அலை உச்சத்திற்கு வந்துள்ள நிலையிலும், மே 2 அன்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின்னர், பெட்ரோல் மற்றும் டீசல்களின் விலையை, அடுத்த ஒரு மாதத்தில் 17 தடவைகள் உயர்த்தி இருக்கிறது. டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 4.65-உம், பெட்ரோலுக்கு ரூ.4.09-உம் மே மாதத்தில் மட்டும் உயர்த்தப் பட்டிருக்கிறது.    

இவ்வாறு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கூர்மையாக உயர்த்தியிருப்பதன் காரணமாகத்தான், மொத்த விலைவாசிக் குறியீட்டெண் மற்றும் பணவீக்கத்திலும் உயர்வு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் இவ்வாறான பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி உயர்வுகள், அனைத்துப் பொருள்களின் மீதான விலைகளையும் உயர்த்தி இருக்கின்றன. இன்றைய நெருக்கடியான நிலையில் இவ்வாறு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்திருப்பதென்பது ஏற்கனவே வருமானமின்றி இருப்பவர்களுக்கும், மற்றும் வருமானம் ஈட்டிவந்தவர்களும் அவர்களின் வருமானங்கள் குறைந்துள்ள நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கக்கூடிய நிலையில் அவர்களுக்கும், இரட்டிப்புத் தாக்குதல்களாகும்.   

பொருளாதார நெருக்கடியின் இதர பரிமாணங்கள், ஒன்றிய அரசின் இழிந்த முயற்சிகள் தற்போது ஏற்பட்டிருக்கும் சுமைகளை மாநிலங்களின் மீது ஏற்றியிருப்பதாகும். தடிப்பான மற்றும் மக்கள் விரோத தடுப்பூசிக் கொள்கை, மாநிலங்களை அதிக விலைகள் கொடுத்து தடுப்பூசிகளை வாங்குவதற்குத் தள்ளி இருக்கிறது.  இவ்வாறு அதிக விலை கொடுத்து தடுப்பூசிகளை மாநில அரசுகள் வாங்கி தங்கள் மாநில மக்களுக்கு இலவசமாக அவற்றை வழங்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. அதே சமயத்தில் ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி-இன்கீழ் நியாயமாக வழங்க வேண்டிய இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கும் மறுத்து வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்தப் பிரச்சனையைப் பரிசீலிப்பதற்காக ஓர் அமைச்சர்கள் குழுவை நியமிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனை ஓரங்கட்டப்பட்டுவிட்டது.

மாநிலங்களுக்கு, தடுப்பூசிகள் வழங்குவதாக இருந்தாலும் சரி அல்லது ரொக்க மான்யங்களுக்காக மாநிலங்களுக்கு நிதி உதவி அளிப்பதாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசு தன் பொறுப்புக்களைக் கைகழுவிக் கொண்டுவிட்டது. இதுதான் இவர்களின் மாயமந்திர அறிவியல் மற்றும் மாயமந்திர பொருளாதாரத்தின் லட்சணமாகும்.

ஒன்றிய அரசால் தடுப்பூசிகள் ஒட்டுமொத்தமாக வாங்கப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்கப்படுவதற்கும், இதன்மூலம் அனைவருக்கும் தடுப்பூசிகளை இலவசமாகப் போடுவதனை உத்தரவாதப்படுத்துவதற்குமான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் அனைத்து மாநில அரசாங்கங்களும் முன்வர வேண்டும். இவற்றுடன் இதற்காகப் போராடும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். வரவிருக்கும் நாட்களில், மக்களுக்கு நிதி உதவி அளித்தல் (cash subsidies), மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்தல், இலவசமாக உணவு தான்யங்களை அளித்தல், வேலையில்லாதோருக்கு அலவன்சுகள் அளித்தல், பொது சுகாதார செலவினங்களை அதிகரித்தல் போன்ற மக்களுக்கான உடனடி நிவாரணத்திற்கான போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக, அரசியல் மற்றும் சமூக சக்திகளை அணிதிரட்டும் பணியே முக்கியமான பணியாக மாற வேண்டும். 

தமிழில்: ச.வீரமணி
ஜூன் 2, 2021

Exit mobile version