Site icon சக்கரம்

புவியில் மனித இனத்தின் எதிர்கால இருப்புக்கு வேட்டு வைக்கும் விவேகமற்ற செயற்பாடுகள்!

மர்லின் மரிக்கார்

லகில் எண்ணற்ற உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 75-80 வீதமானவை பூச்சிகளும் வண்டுகளுமாகும். அவை மனிதனுக்கு அளப்பரிய சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மனித இனத்தின் உயிர்வாழ்வுக்கு ஏற்ப சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதிலும், உலக மக்களின் உணவு உற்பத்திகளுக்கும் அவை முக்கிய பங்காற்றுகின்றன.

இவை தொடர்பில் பெரும்பாலானவர்கள் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். அதன் விளைவாக அப்பிராணிகளின் பெறுமதியும் முக்கியத்துவமும் உணரப்படாதுள்ளன. அதனால் பூச்சி புழுக்களும், வண்டுகளும், பறவைகளும் அற்ப உயிரிகளாகப் பார்க்கப்படுகின்றன. அவற்றால் தமக்கு எவ்வித பயனுமில்லை என்றும் நோக்கப்படுகின்றன.

அதேநேரம் பூச்சிகளும் வண்டுகளும் கடிக்கக் கூடியவை, குத்தும் பண்பு கொண்டவை, அவை விஷத்தன்மை மிக்கவை என்றெல்லாம் அச்சமூட்டும் அபிப்பிராயமே சிறுபராயம் முதல் மக்களுக்கு ஊட்டப்படுகின்றது. அதனால் பூச்சி புழுக்களையும் வண்டுகளையும் நிறையப் பேர் வெறுக்கின்றனர். அவற்றைக் கண்டு அச்சமடையவும் செய்கின்றனர். அதன் காரணத்தினால் அவற்றை அழித்து விடுவதிலும் ஒழித்துக் கட்டுவதிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.

ஆனால் நிலத்தை வளப்படுத்துவதிலும், சுற்றுச் சூழலை சுத்தப்படுத்துவதிலும் உணவு உற்பத்திக்கும் குறிப்பாக மகரந்தச் சேர்க்கைக்கும் பறவைகளும் பூச்சிகளும் வண்டுகளும் அளிக்கும் பங்களிப்பு அளப்பரியது. அவற்றின் பங்களிப்பு இல்லாவிட்டால் உணவு உற்பத்தியே கேள்விக்குறியாகி விடும்.

இதற்கு தனது வீட்டில் மலர்ச்செடிச் சாடிகளில் மரக்கறிச் செய்கையில் ஈடுபடும் நபரொருவர் அண்மையில் தெரிவித்திருந்த கூற்று நல்ல உதாரணமாகும். அதாவது அந்நபர்  செய்கை பண்ணியுள்ள மரக்கறிச் செடிகள் நன்கு செழித்து வளர்ந்து பூத்து குலுங்கியுள்ள போதிலும், அவற்றில் காய்கள், பழங்கள் வெளியாகவில்லை. இதற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்த்துள்ளார். அப்போது, தாம் சாடியில் செய்கை பண்ணியுள்ள பயிர்களுக்கு பூச்சிகள், வண்டுகள், வண்ணாத்துப் பூச்சிகள், பறவைகள் வருகை தருவதில்லை. அதுவே  இப்பயிர்கள் விளைச்சலை அளிக்காமைக்கான காரணம் எனத் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார் அந்நபர். அது தான் உண்மையும் ஆகும்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில்  விவசாய நிலங்களை வளப்படுத்தவும் உணவு உற்பத்திப் பயிர்கள் மூலம் அதிக விளைச்சலைப் பெற்றுக் கொள்ளவும் பூச்சிகளையும் வண்டுகளையும் களைகளையும் கட்டுப்படுத்தவும் என்றெல்லாம் பீடைநாசினிகளும், பயிர்களின் வளர்ச்சிக்கென இரசாயனப் பசளைகளும் நிறையவே பயன்படுத்தப்படுகின்றன.

அவை நச்சு இரசாயனங்கள் என்றாலும் குறுகிய காலப் பகுதியில் நன்மை அளிப்பனவாகும்.  அவை நீண்ட காலத்தில் நிலத்தை வளமற்றதாக்கி விடும். அந்நிலத்தில் காணப்படும் பூச்சி புழுக்களும், வண்டுகளும் அழிக்கப்பட்டு அவை பொட்டல் நிலமாக மாற்றமடைந்து விடும். இதன் விளைவாக நிலம் வளமற்றுப் போவதோடு  உணவுச் சங்கிலிக்கு பங்களிக்கும் பெருமளவிலான பூச்சிகளும் வண்டுகளும் செத்து மடிகின்றன. ஏனையவை உயிர் தப்புவதற்காக குடிபெயரவும் செய்யும்.

ஆனால் பூச்சிகளும் வண்டுகளும் விளைநிலத்தில் இருந்தால்தான் சில வகைப் பறவைகள் ஒரு பிரதேசத்திற்கு வருகை தரும். அவை அப்பறவைகளின் உணவாக இருக்கும். அதன் ஊடாகப் பூச்சிகளதும் வண்டுகளதும் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணியை பறவைகள் இயல்பாகவே செய்கின்றன.

ஆனால் மனிதன் பூச்சிகளையும் வண்டுகளையும் கட்டுப்படுத்தவெனப் பயன்படுத்தும் நச்சுப் பதார்த்தங்களினால் செத்து மடியும் பூச்சிகளையும் வண்டுகளையும் பறவைகள் உணவாகக் கொள்ளும் போது, பறவைகளும் செத்து மடியும் அல்லது இரசாயனங்களின் ஒவ்வாமைத் தாக்கங்களுக்கு உள்ளாகி இனவிருத்தி மேற்கொள்ள முடியாத உபாதைகளுக்கு உள்ளாகும். தாம் உணவாகக் கொள்ளும் பூச்சிகளும் வண்டுகளும் நச்சு இரசாயனங்களால்தான் மடிந்துள்ளன என்பதை அறியாததன் விளைவே அது.

பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தும் நச்சு இரசாயனங்களால் பூச்சிகளும் வண்டுகளும் மாத்திரமல்லாமல், பறவைகளும் கூட செத்து மடிகின்றன என்றால் அந்த நச்சு இரசாயனங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காது என்பதை உறுதியாகக் கூற முடியாது.

அந்த வகையில்தான் சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் உணவுப் பயிர்ச் செய்கைகளுக்கு நச்சு இரசாயனப் பாவனை அதிகரித்த பின்னர்தான், தொற்றா நோய்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது என்கின்றனர். அவற்றில் உண்மையும்  இல்லாமலில்லை.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கு பூச்சிகளை கவனிப்பது அவசியம்

நாம் பூச்சிகளை கட்டுப்படுத்த விரும்பினால் முதலில் பூச்சிகளை கவனித்து அவற்றைக் கட்டுப்படுத்த திட்டமிடவேண்டும். பயிரைச் சாப்பிடும் சைவப்பூச்சி, பூச்சிகளைத் தின்னும் அசைவப் பூச்சி என இரண்டு வகை பூச்சிகள் உள்ளன என்பதை இயற்கை விவசாயிகள் அறிவார்கள். வயலில் இவ்விரண்டு வகைப் பூச்சிகளும் கலந்தே இருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள எந்த பண்ணையிலும் பயிர் சூழல் ஆய்வு செய்தால் 25 முதல் 40 சதவீதம் தீமை செய்யும் பூச்சி வகைகளும் (No of Species) மீதி உள்ள 60 சதவீதம் நன்மை செய்யும் பூச்சி வகைகளும் உள்ளது.

உணவுச் சங்கிலி தடைபடுதல்
உதாரணமாக நெல் வயலில் பயிரைச் சார்ந்து வாழும் புழுக்கள், ரெடுவிட் நாவாய்பூச்சி, புகையான், சிலந்தி, தவளை, பாம்பு, பாம்பு, ஆந்தை என படத்தில் உள்ளதுபோல் ஒரு உணவுச் சங்கிலி உள்ளது. புகையானுக்கும் புழுவுக்கும் அடிக்கும் பூச்சிக்கொல்லிகளினால் இவ்வுணவு சங்கிலி உடைந்து மற்ற அனைத்து உயிரினங்களையும் அழித்துவிடுகிறது. பூச்சி இருந்தால்தான் தவளை, தவளை இருந்தால்தான் பாம்பு, பாம்பு இருந்தால்தான் ஆந்தைகள். ஆந்தைகளும் பாம்புகளும் இருந்தால் பூச்சிகளும் எலிகளும் இயற்கையாகவே கட்டுப்படும், பூச்சிகொல்லிகள் இந்த அனைத்து உயிரினங்களையும் ஒன்றாக அழித்துவிடுகிறது.

நுண்ணுயிர்கள் அழிதல்
தாவரங்கள், விலங்குள் என எந்த உயிரினங்கள் மடிந்தாலும் அது மண்ணுக்குதான் வருகிறது. இறந்த உடலங்களை மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மட்க வைக்கிறது.
ஒரு கைபிடி மண்ணில் உள்ள இரண்டரை கோடி நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது இரண்டரை லட்சம் நுண்ணுயிர்கள் மட்டுமே உள்ளது, பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை அழித்துவிடுகிறது.

இயற்கை விவசாயம் செய்வதின் நோக்கமே மண்ணில் மீண்டும் இரண்டரை கோடி நுண்ணுயிர்களை பெருகச் செய்வதுதான், மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகிவிட்டால் மண்ணே விளைச்சலைப் பார்த்துக்கொள்ளும், வெளியிடுபொருட்கள் தேவையில்லை.

பூச்சிகளின் தகவமைப்புகள்
ஆறு கால்கள், இரண்டு ஜோடி இறகுகள், தலை மார்பு வயிறு என பிரிக்கப்பட்ட உடல், இரண்டு உணர் கொம்புகள் என்ற இந்த நான்கு பண்புகளையும் பெற்றிருக்கும். பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியில் முட்டை, புழு, கூட்டுப்புழு, பூச்சி என நான்கு நிலைகள் உள்ளது. பெரும்பாலான பூச்சிகள் இந்த வகையை சேர்ந்தவை.

நாவாய்ப் பூச்சிகள் முட்டையிலிருந்து நேரடியாக சிறிய பூச்சிகளாக வரக்கூடியாவை. நாவாய் பூச்சிகளில் புழு, கூட்டுப்புழு பருவங்கள் கிடையாது. கொசு மற்றும் தும்பிகளின் முட்டை, புழு, கூட்டுப்புழு தண்ணீரில் இருக்கும், பூச்சிகள் தரைக்கு வந்துவிடும். கொசுவின் முட்டைகளையும், புழுக்களையும் தும்பியின் புழுக்கள் சாப்பிட்டு கட்டுப்படுத்துகிறது, பூச்சிக் கொல்லிகளினால் தும்பி இனங்கள் அழிந்து கொசுக்கள் பெருகுகின்றன.

பெருமாள் பூச்சி:
தலையில் நாமம் போல் உள்ளதால் பெருமாள் பூச்சி என்றும், கால்கள் கும்பிடுவதுபோல் உள்ளதால் தொழு வெட்டுக்கிளி, கும்பிடு பூச்சி என்றும் அழைக்கின்றனர், இந்த பூச்சியை இரசாயன விவசாயம் செய்யும் நிலங்களில் பார்ப்பது அரிது, இயற்கை விவசாயம் செய்யும் நிலங்களில் மட்டுமே பார்க்க இயலும். குட்டிப்பாம்பைக்கூடி சாப்பிடக்கூடியது இந்த பூச்சி, காலில் இரம்பம் போன் அமைப்பு உள்ளதால் இதன் காலில் மாட்டிய எந்த பூச்சியும் உயிரினமும் தப்பமுடியாது.

சிலந்திகள்:
அங்ககப் பண்ணைகளில் சிலந்திகள் அதிகம் இருக்கும், வலையில் மாட்டும் தீமை செய்யும் பூச்சிகளை பிடித்து உண்கிறது, சில நேரங்களில் நன்மை செய்யும் பூச்சிகளும் சிலந்தி வலையில் மாட்டிக்கொள்ளும்.

பொறி வண்டு:
இலைப்பேன், தத்துப்பூச்சி, மாவுப்புச்சி, அசுவினி, செம்பேன் சிலந்தி போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.

சிரிபிட் ஈ:
இது மாவுப்பூச்சி, அசுவினியை உண்ணும்.

பச்சை கண்ணாடி பூச்சி:
சாறு உறிஞ்சும் பூச்சிகளை உண்ணும், உணவு இல்லாத நேரங்களில் புழுக்களையும் கட்டுப்படுத்தும்

நன்மை செய்யும் நாவாய் பூச்சிகள்:
பூச்சிகளை கொட்டி சாகடித்து உண்பதற்கேற்ப இதன் வாயில் கொடுக்கு இருக்கும்.

நன்மை செய்யும் வண்டுகள்:
பெரும்பாலான வண்டுகள் நன்மை செய்யக்கூடியவையே, பெதுவாக முதுகில் கோடு உடைய வண்டுகள் நன்மை செய்யக்கூடியவையாகும்.
ஈக்கள்: பலவகையான ஈக்கள் நன்மை செய்பவையாக உள்ளன. உதாரணம் சிர்பிட் ஈ.

தும்பிகள்:
பெரும்பாலான தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

எறும்புகள்:
இவை அனைத்தும் நன்மை செய்யக்கூடியவையே, தீமை செய்யும் பூச்சிகளை பிடித்து கூட்டுக்குள் வைத்துவிடும்.

நீர் பூச்சிகள்:

வயலில் தண்ணீரில் இருக்கக்கூடிய 100 சதவீத பூச்சிகள் நன்மை செய்யக்கூடிய பூச்சிகளாகும். ஆனால் பயிருக்கும் அடிக்கும் மருந்துகள் தண்ணீரில் பட்டு இவையும் இறந்துவிடுகிறது.

குளவிகள்:
செங்குளவி வயலில் உள்ள பச்சைக் புழுக்களை கண்டறிந்து அதில் கொடுக்கு மூலம் விஷத்தை பாய்ச்சுகிறது, புழு மயங்கியவுடன் அப்புழுவை அதன் கூட்டில் வைத்து புழுவைத் துளைத்து 5க்கு மேற்பட்ட முட்டைகளை இடுகின்றன. குளவி இறந்துவிடும், முட்டையில் இருந்து வெளிவரும் குளவிப் புழுக்கள், இந்த இறந்த பச்சைப்புழுவை உணவாக உண்டு வளர்கிறது.

சிறிய அளவில் உள்ள பல்வேறு ரக குளவிகள் பூச்சியின் உள்ளே முட்டையிடும், முட்டையில் முட்டையிடக்கூடிய குளவிகள், கூட்டுப்புழுவில் முட்டை வைக்கும் குளவிகள் என பல்வேறு வகையில் இனப்பெருக்கம் செய்யும் குளவிகள் உள்ளன. இவ்வாறு இனப்பெருக்கம் செய்வதற்கேற்ப வெவ்வேறு வகையான தகவமைப்புகளுடன் பல்வேறு ரகங்களில் குளவிகள் உள்ளன.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
இதை பூச்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறலாம், பூச்சிகளை அழிக்கவும் செய்யாமல், அவற்றைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் வாழ்க்கை முறைக்கேற்ப வயலை அமைத்துக் கொள்வதாகும்.

ஒரு வயலில் 40 சதவீதம் தீமை செய்யும் பூச்சிகளும், 60 சதவிதம் நன்மை செய்யும் பூச்சிகளும் இருப்பதை வயல் சூழ் ஆய்வின் மூலம் கண்டறியலாம். நன்மை செய்யும் பூச்சிகளை வயலுக்கு வரவழைத்து நன்மை செய்யும் பூச்சி வகைகளை 80 சதவீதத்திற்கு உயர்த்துவதன் மூலம் மீதம் உள்ள 20 சதவீதம் தீமை செய்யும் பூச்சி இனங்களை நன்மை செய்யும் பூச்சி இனங்களே கட்டுப்படுத்திவிடும். முக்கியப் பயிர்கள் எதுவாக இருந்தாலும் பின்வரும் பயிர்களை அவசியம் வைக்க வேண்டும்.

நன்மை செய்யும் பூச்சிகளை எப்படி அதிகரிப்பது?

தட்டைப்பயறு (காராமணி)
வயலைச் சுற்றி வரப்போரம் முழுவதும் தட்டைப் பயிரை நடவு செய்ய வேண்டும். இதனால் பொறிவண்டு, கண்ணாடி இறகுப் பூச்சி, சிர்பிட் ஈ போன்ற பல்வேறு நன்மை செய்யும் பூச்சிகள் வந்துவிடும். படிபடியாக தட்டைப்பயிரில் இருந்து இவை வயலில் இறங்கி அங்குள்ளப் தீமைசெய்யும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.

மக்காச்சோளம், சோளம், கம்பு தடுப்புச் சுவர்
தட்டைப்பயிருக்கு அடுத்ததாக கம்பு, சோளம், மக்காச்சோளம் ஏதாவது ஒன்றை நமது வயலுக்கும் பக்கத்து வயலுக்கும் தடுப்புச்சுவராக நடவு செய்ய வேண்டும். இது நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் உள்ளேவிடும். தீமை செய்யும் பூச்சிகள் வராது.

ஆமணக்கு
வெளி அடுக்காக ஆமணக்கு செடிகளை வளர்க்க வேண்டும், இது வரிசையாகவோ அல்லது மக்காச் சோளத்திற்கு இடையிலோ நடவு செய்ய வேண்டும். வெளியில் இருந்து பண்ணைக்கு வரும் பூச்சிகள் ஆமணக்கு இலையை சாப்பிட்டு அதிலேயே முட்டையிட்டும் என்பதால் வயலின் உள்ளே வருவதில்லை. இந்த ஆமணக்கு செடிகளை அவ்வப்போது கண்காணித்து பூச்சி முட்டைகளை அழித்துவிடுவது அவசியமாகும். முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆமணக்கு செடிகளை வேலியோரங்களில் மட்டுமே நடவு செய்ய வேண்டும். பயிரின் நடுவே நடவு செய்யக் கூடாது.

வண்ண மலர்கள் பயிர்கள்
பல்வேறு வண்ண மலர்களை வளர்ப்பதன் மூலம் குறிப்பாக மஞ்சள் வண்ண மலர்களை வளர்ப்பதால் குளவிகள் பண்ணைக்கு வந்துவிடும். முக்கியமாக துளுக்க சாமந்தியை வளர்க்க வேண்டும். இந்த செடிகளை வரப்போரங்கள், பயிரின் இடையில் என எங்கு வேண்டுமானாலும் நடலாம். இதனால் குளவிகள் பண்ணை முழுவதும் அதிகமாகப் பெருகி தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

வேப்பங்கொட்டை வெள்ளைப் பூண்டு சாறு
ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வேப்பங்கொட்டை, அரை கிலோ நாட்டு வெள்ளைப் பூண்டு, சேர்த்து ஆட்டுக்கல்லில் அரைத்து பருத்தித் துணியில் கட்டி, 10 லிட்டர் கோமியத்தில் ஊற வைக்க வேண்டும். ஒன்று முதல் மூன்று நாட்கள் ஊறவைக்கலாம். இதில் 100 கிராம் காதி சோப்பைக் கரைத்து சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த சோப் ஒட்டுவதற்கானது, சோப்பு சேர்க்கவில்லை என்றால் தெளிப்பு பயிரில் ஒட்டாது.

காலையில் அல்லது மதியான நேரத்தில் இக்கரைசலைத் தெளிக்கக் கூடாது. மாலையில் 4 மணிக்குமேல்தான் தெளிக்க வேண்டும். பகலில் தெளித்தால் வேப்பங்கொட்டையில் உள்ள ஆல்கலாய்டுகள் சிதைந்துவிடும். இதைத் தெளிப்பதினால் பூச்சிகள் பயிரை சாப்பிடாது, முட்டையிடாது, முட்டை இட்டாலும் புழுக்கடள் இறந்து விடும்.
ஒரே பூச்சி விரட்டி வேண்டாம்

வயலில் ஒரே வகையான பூச்சி விரட்டிகளை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. அக்னி அஸ்திரம், நீர் அஸ்திரம், இஞ்சிப்பூண்டு கரைசல், வேப்பங்கொட்டைக் கரைசல், பத்திலைக் கஷாயம் என பூச்சிவிரட்டிகளை மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் பூச்சிகளைக் குழப்ப முடியும்.

பூச்சிகளை பற்றி மேலும் பல விஷயங்கள் உள்ளன, விவசாயிகள் அவற்றை கற்கே வேண்டும், பண்ணையில் பூச்சிகளை தினமும் கவனித்து அவற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதன் மூலம் பயிரில் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளில் இந்து தப்பிக்கலாம், இதன் மூலம் பூச்சிகள் நமக்கு நண்பனாகும்.

தொகுப்பு: ஈஷா விவசாய இயக்கம்

Exit mobile version