Site icon சக்கரம்

எதேச்சாதிகாரத்திற்கெதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம்

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
தமிழில்:ச.வீரமணி

நாட்டில், மாநிலங்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்காமலோ, கூட்டாட்சி அமைப்பின் வரம்புகளை மீறாமலோ ஒருநாள் கூட கடந்து செல்லவில்லை. ஒரு நாளைக்கு ஒன்றிய அரசு ஒருதலைப்பட்சமாக தடுப்பூசிக் கொள்கையை அறிவிக்கிறது. அதன்படி, மாநில அரசாங்கங்கள் அவர்களாகவே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்திட வேண்டும் என்றும் அவற்றுக்கான விலையை அவர்களே கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கிறது. அடுத்த ஒருசில நாட்களில் மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர் அவருடைய ஓய்வுபெறும் நாளன்று, தில்லிக்கு வந்து வேலையில் சேர்வதற்காக ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை அனுப்பப்படுகிறது. மற்றொரு நாளன்று, ஒன்றிய அரசு தில்லி அரசாங்கம் ஒவ்வொரு வீடாகச் சென்று ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்ததற்குத் தடை விதிக்கிறது. மற்றொரு சமயத்தில், ஒன்றிய அரசு தங்களுக்கு அனுப்ப வேண்டிய கிராம வளர்ச்சி நிதியின்கீழ் அளிக்கவேண்டிய தொகையை நிறுத்திவிட்டதாக பஞ்சாப் அரசாங்கம் கூறுகிறது. இவ்வாறு அனுப்பப்படாது நிறுத்தி வைத்திருக்கும் தொகை பல நூறு கோடி ரூபாய்களாகும். பஞ்சாப் அரசாங்கம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக இருப்பதனால் அதனைத் தண்டிக்கும் விதத்தில் ஒன்றிய அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

பிரதமர் கொரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்து பரிசீலனை செய்வதற்காக மாநில அரசாங்கங்களை ஓரங்கட்டிவிட்டு, மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தை இரு முறை கூட்டியிருக்கிறார். அதேபோன்று புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக, மாநிலக் கல்வி அமைச்சர்கள் பங்கேற்பு இல்லாமலேயே, ஒன்றிய கல்வி அமைச்சர், மாநிலக் கல்வித்துறை செயலாளர்களின் கூட்டத்தைக் கூட்டுகிறார்.

ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக அரசமைப்புச்சட்ட விதிகளை மீறுவதாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கங்களின் நிதிகளையும், நிதி ஆதாரங்களையும் அவர்களுக்கு அளித்திடாமல் பறித்துக்கொள்வதாக இருந்தாலும் சரி, அல்லது ஆளுநர்களின் “அரசியல்” தலையீடுகளாக இருந்தாலும் சரி, மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களின்மீது துணை ஆளுநர்கள் அத்துமீறி அதிகாரம் செலுத்துவதாக இருந்தாலும் சரி, இவ்வாறு பட்டியலுக்கு முடிவே இல்லாமல் தொடர்கிறது.

இவை எதுவுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவைகளோ அல்லது தனிப்பட்டமுறையிலான தாக்குதல்களோ அல்ல. நடந்திருக்கும் விஷயங்கள் அனைத்துமே நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான படிப்படியான திட்டமிட்ட தாக்குதல்களேயாகும். இவற்றின்மூலமாக மாநில அரசாங்கங்களின் உரிமைகளைப் பறித்துக்கொள்வதற்கான ஒன்றிய அரசாங்கத்தின் எதேச்சாதிகார நடவடிக்கைகளேயாகும். தங்களுடைய எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப்பின்னர், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் முக்கியமான ஷரத்துக்கள் மற்றும் தொற்று நோய்கள் சட்டத்தை அமல்படுத்தமுடியும் என்ற காரணத்தால், ஒன்றிய அரசாங்கத்தின் இத்தகு நடைமுறைகள் வேகம் எடுத்திருக்கின்றன.

அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்தை ஒழித்துக்கட்டியதைத் தொடங்கியபோதே மோடி-2 அரசாங்கம் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகள் மீதான மாபெரும் தாக்குதல்களும் தொடங்கிவிட்டன. இவ்வாறு அப்போது ஜம்மு-காஷ்மீர் மீது ஏவப்பட்ட தாக்குதல் இப்போது நாடு முழுதும் ஒன்றிய-மாநில உறவுகளின் அனைத்து அம்சங்களையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதிக்கும் அளவிற்குப் பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ஒன்றிய அரசின் தாக்குதல்கள் பிரதானமாக மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று, கூட்டாட்சித் தத்துவத்திற்கான அரசமைப்புச்சட்டத்தின் விதிகளின் மீதான தாக்குதல்கள். இரண்டு, நிதி அம்சங்கள் மீதான தாக்குதல்கள். மூன்று, ஒன்றிய-மாநில உறவுகளின் அரசியல் அடிப்படை மீதான தாக்குதல்கள்.

அரசமைப்புச்சட்டமானது மாநில அரசாங்கங்களின்கீழ் சில பிரிவுகளை வரையறுத்திருக்கிறது. வேளாண்மை மற்றும் வேளாண் சந்தை ஆகியவை மாநில அரசாங்கங்களின்கீழான பிரிவுகளாகும். ஒன்றிய அரசு புதிய மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதன்மூலம் மாநிலங்களின் இப்பிரிவுகளின் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருக்கிறது. அடுத்து, தில்லி மாநில யூனியன் பிரதேசத்தின் அதிகாரங்களைப் பறித்திடும் விதத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தில்லி தேசியத் தலைநகர் யூனியன்பிரதேசம் திருத்தச் சட்டம் (National Capital Territory of Delhi Amendment Act) கொண்டுவந்து தில்லி அரசாங்கம் என்றால் அது துணை ஆளுநர்தான் என்கிற விதத்தில் மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களை அப்பட்டமாகத் தமதாக்கிக்கொண்டுள்ளது. இதன்மூலம் தில்லி மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களும், அதிகார வரம்பெல்லைக்கும் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்றே மாநில அரசாங்கங்களின் துறைகளான கல்வி, சுகாதாரம் மற்றும் கிராம வளர்ச்சி ஆகியவற்றிலும்கூட ஒன்றிய அரசின் திட்டங்கள் மூலமாக மிகவும் தீவிரமானமுறையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு அளித்திடும் நிதித் தொகுப்புகள் மிகவும் குறைந்திருக்கின்றன. ஜிஎஸ்டி சட்டம் நிறைவேற்றப்பட்டபின், மாநில அரசாங்கங்களுக்கு வரி வசூல் செய்வதற்கிருந்த கொஞ்சநஞ்ச அதிகாரங்களும் பறிக்கப்பட்டுவிட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒன்றிய அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஜிஎஸ்டி வரிவசூலில் மாநில அரசாங்கங்களுக்குத் தரவேண்டிய உரிய இழப்பீட்டுத் தொகைகளைக்கூட தர மறுத்து வருகிறது. இதற்கு, ஜிஎஸ்டி மூலமாக வருவாய்கள் வீழ்ச்சியடைந்திருப்பதாகக் காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

கடைசியாக அமைக்கப்பட்ட இரண்டு நிதி ஆணையங்களும், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையே நிதிப்பகிர்வுகள் தொடர்பாக அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்திருந்த பல்வேறு நிபந்தனைகளையும் சட்டவிரோதமாக மீறி, ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அதீதமான விதிமுறைகளின் (extraneous terms of reference) கீழ் செயல்பட்டிருக்கின்றன.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மாநில அரசாங்கங்கள் தங்களுக்குப் போதிய நிதி இல்லாது கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய அரசு மாநில அரசாங்கங்கள் கடன் வாங்குவதற்காக உள்ள வரம்பைத் தளர்த்திட மறுத்துவிட்டது. அதே சமயத்தில் மாநில அரசாங்கங்களுக்கு அளிக்க வேண்டிய சுகாதாரம், ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத்தொகைகள் மற்றும் இதர நிதிகளையும் அளிக்கவும் மறுத்து வருகிறது. இவற்றின் காரணமாக கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளையும், சுகாதாரம் மற்றும் அவசிய சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாநில அரசாங்கங்களே முற்றிலுமாக சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

ஒன்றிய அரசாங்கம், அரசியல்ரீதியாக, எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநில அரசாங்கங்கள் மீது தொடர்ந்து விரோதமனப்பான்மையுடனேயே நடந்துகொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள ஆளுநர் ஜகதீப் தங்கார், ஒன்றிய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் கையாளாகவே செயல்பட்டு வருகிறார். ஆளுநர்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பேர்வழிகள், அரசமைப்புச்சட்டம் ஆளுநர்களின் பங்கு குறித்துக் கூறியுள்ள எதையுமே படிக்காத நபர்களாகவே இருந்துவருகிறார்கள். மேலும் அவர்கள், இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளுவதிலேயே மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

யூனியன் பிரதேசங்களின் நிலைமைகளோ மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. புதுச்சேரியில் பணியாற்றிவந்த துணை ஆளுநர் கிரண் பேடி, ஒரு வைஸ்ராய் போன்றே செயல்பட்டு வந்தார். அங்கேயிருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்துடன் எப்போதும் மோதல் போக்கையே கடைப்பிடித்தார். முன்பிருந்த சட்டமன்றத்திலும் சரி, இப்போது புதிதாக உருவாகியுள்ள சட்டமன்றத்திலும் சரி, துணை ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களும் பாஜக பேர்வழிகள். எப்படி பாஜக மேலேயிருந்து கட்டப்படுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஒன்றிய ஆட்சியாளர்களின் எதேச்சாதிகார வெறித்தனம் எந்த அளவிற்கு சென்றிருக்கிறது என்பதற்கு லட்சத்தீவில் தற்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகளும் சரியான உதாரணங்களாகும். அங்கேயுள்ள பாஜக பேர்வழியான நிர்வாக அலுவலர், எண்ணற்ற விதிமுறைகளை அறிவித்திருக்கிறார். இவை அமல்படுத்தப்பட்டால், அவை லட்சத்தீவு மக்களின் சமூக மற்றும் கலாச்சாரப் பண்புகளையே அழித்து ஒழித்துவிடும். அங்கே பெரும்பான்மையாக வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லீம் மக்களை ஒன்றிய அரசின் பெரும்பான்மை ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு ஆளாகிறவர்களாக இட்டுச் செல்லும்.

கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும், வேற்றுமைப் பண்புகளுடன் ஒன்றுபட்டு வாழ்ந்து வந்த நம் ஒற்றுமையின் மீதும் இவர்கள் மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதல் நம் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை மீதான ஒட்டுமொத்த தாக்குதலின் ஒரு பகுதியேயாகும். எனவே இதனை எதிர்த்து, முறியடிப்பது அவசியமாகும். இந்தப் போராட்டத்தில் முன்னணியில் எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநில அரசாங்கங்கள் இருக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஒன்றிய அரசின் பேரழிவுதரும் தடுப்பூசிக் கொள்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெரும்பாலானவை குரல் கொடுக்கத் துவங்கிவிட்டன. ஒன்றிய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக அளித்திட வேண்டும் எனக் கோருவதில் ஒருங்கிணைந்து நின்றிருக்கின்றன. இவ்வாறு மாநில அரசாங்கங்கள் ஒன்றுபட்டு நின்று குரல்கொடுத்தன் விளைவாகத் தற்போது மோடி அரசாங்கம் தன் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீடு பிரச்சனையிலும்கூட, இதேபோன்று எதிர்க்கட்சி மாநில அரசாங்கங்கள் ஒருங்கிணைந்து நிலைப்பாட்டினை எடுத்திட வேண்டும்.

ஆனாலும், கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி மாநில அரசாங்கங்களுக்கிடையே ஒரு நெருங்கிய ஒருங்கிணைப்புத் தேவையாகும். இப்போதும்கூட, ஒடிசா, தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய பாஜக அல்லாத மூன்று மாநில அரசாங்கங்களும் ஓர் உறுதியான நிலைப்பாட்டிற்கு வருவதற்கு அரை மனதுடனேயே இருக்கின்றன. கூட்டாட்சித் தத்துவம் ஒழித்துக்கட்டப்படுவதும், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும் எதிர்காலத்தில் தம் கட்சிகளின் நலன்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்திடும் என்பதை இம்மூன்று மாநிலக் கட்சிகளும் உணர்ந்திட வேண்டும்.

கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் பகுக்கமுடியாது. முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை ஆதரித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கேஜரிவால், இப்போது தன்னுடைய மாநிலத்தை ஒரு நகராட்சியின் நிலைக்குத் தாழ்த்தும் விதத்தில் சட்டம் திருத்தப்பட்டபின், தான் முன்பு செய்த தவறை உணர்ந்திருக்கிறார். இதேபோன்று, முன்பு அதிகாரமமதையுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவைப்பயன்படுத்திக் கலைத்த காங்கிரஸ் கட்சியும் தன் தவறுகளை உணர்ந்துகொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசாங்கங்கள் மட்டுமல்லாமல், அனைத்து எதிர்க்கட்சிகளும், கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்திடவும், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஒன்றிய-மாநில உறவுகளை மாற்றியமைத்திடவும் ஒன்றுபட்ட கூட்டுமேடை ஒன்றை உருவாக்கிட முன்வர வேண்டும். இது தற்சமயம் ஸ்ரீநகரில் அமைந்திருப்பதுபோன்று தற்கால நிலைமைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். கூட்டாட்சித் தத்துவத்திற்கான போராட்டமும், மாநிலங்களின் உரிமைகளுக்கான போராட்டமும் எதேச்சாதிகாரத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

(ஜூன் 09, 2021)

Exit mobile version