Site icon சக்கரம்

ஜுன் 18: மக்கள் எழுத்தாளர் மாக்ஸிம் கோர்க்கி நினைவு நாள்

-தமிழ்மகன்

‘தாய்’ நாவல் உலக உழைக்கும் மக்களை சுரண்டலுக்கு எதிராக உசுப்பிவிட்ட விடுதலை புதினம் என்றால் மிகையாகாது. அந்த நாவலை படைத்து, பல நாடுகளில் புரட்சிகர அரசியலின்பால் இளைஞர்களை, ஜனநாயக சக்திகளை திரட்டிய மாக்ஸிம் கோர்க்கியின் நினைவுதினம் இன்று ஜூன் 18, 1936 ஆகும்.

தாய்தான் அனைவரையும் படைப்பாள். மாக்ஸிம் கோர்க்கி (Maxim Gorky) தாயைப் படைத்தவர். ஓம். தாய் நாவலைப் படைத்த மாக்ஸிம் கோர்க்கி, எதார்த்த எழுத்துக்குச் சொந்தக்காரர். பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை படைப்பிலக்கியத்தில் கொண்டுவர முடியுமா? முடியும் என நிகழ்த்திக் காட்டியவர் கோர்க்கி.

மாக்ஸிம் கோர்க்கி எழுதிய ‘தாய்’ நாவலைக் கடந்து வராத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. உலக வாசகர்கள் பலருக்கும் அறிமுகமான நாவல் அது. உலகின் தலைசிறந்த 100 நாவல்கள் என்றால் அதில் தாய்க்கு நிச்சயம் இடம் உண்டு. எதார்த்தவாத இலக்கியம் என்றால் அந்த 100 நாவல்களில் முதல் இடம் தாய்க்கு உண்டு.

அழகியல் உணர்வும், மேட்டுக்குடி மக்களின் மனப் போராட்டங்களுமே செவ்விலக்கியங்கள் எனப் போற்றப்பட்டு வந்தன. அரசர்கள், படித்தவர்கள் காதலில் மருகும் கதைகள் அன்றைய சிறந்த இலக்கியங்களாக இருந்தன. இன்னொரு பக்கத்தில் வறுமையில் வாடும் ஏழைகளின் விதிகளை நொந்தபடி செல்லும் கண்ணீர் காவியங்கள் இருந்தன. இந்த நேரத்தில் தொழிலாளர்களின் பிரச்னைகளையும், அதற்கான போராட்ட ஆயத்தங்களையும் சொன்ன முதல் நாவல் இதுதான். ‘இழப்பதற்கு அடிமைத்தனத்தைத் தவிர வேறு ஏதும் அற்றவர்கள் நாம்’ என்கின்றன அதில் வரும் பாத்திரங்கள். ஆலைத் தொழிலாளியின் மகனான பாவெல், புரட்சிகரமான போராட்டத்தை வழிநடத்தும் கதைதான் தாய் நாவலின் மையம்.

கோர்க்கி என்றால் கசப்பு!

இதிலே தாய் எங்கே வந்தாள்? தொழிற்சாலையில் அநீதி நடக்கிறது. தொழிலாளர்கள் மிகக் குறைந்த கூலிக்குக் கசக்கி எறியப்படுகிறார்கள். ஆனால், அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்காத ஒரு தாய் எப்படி அந்தப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செலுத்துகிறாள் என்பதுதான் நாவலின் முழு ஆதாரமாக இருக்கிறது. தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தன் மகன், தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடுவதையும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்காகப் போராடுவதையும் அறிந்து, அவர்களுக்குத் தேநீர் பரிமாறுவதில் ஆரம்பிக்கிறது அவளுடைய பங்களிப்பு. தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்து உபசரிக்கிறாள். ஒரு கட்டத்தில் தொழிலாளத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களின் போராட்டத்தை ஏற்று நடத்தும் வேலைகளை அவரே செய்கிறார். ‘நான் சிறையில் இருந்தாலும் என் கரங்கள் வெளியே இருக்கின்றன’ எனத் தன் தாயைப் பற்றிச் சொல்கிறான் சிறையில் இருக்கும் பாவெல்.

உலகத் தொழிற்சங்கங்களின் பைபிளாக ‘தாய்’ நாவல் இன்றும் பேசப்படுகிறது.

மனிதன் பிறந்தான், கிழவி இஸெர்கில், ஜிப்ஸி, வழித்துணைவன் போன்ற இவருடைய கதைகள் காலகட்டத்தைப் பிரதிபலித்தவை மட்டுமல்ல; காலம் கடந்தும் நிற்பவை.

ரயில்வே ஊழியர், செருப்பு தைப்பவர், விவசாயி என கார்க்கிக்கு பல முகங்கள் உண்டு. எழுத்தில் அந்த முகங்கள் ரத்தமும் சதையுமாகப் பிரதிபலித்தன.

கோர்க்கி என்றால் கசப்பு!

இவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ் (Alexei Maximovich Peshkov). மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத்தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கோர்க்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு ‘கசப்பு’ என்று அர்த்தம்.

அன்றைய ரஷ்ய மன்னர் ஜார். மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அதில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கோர்க்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கோர்க்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கோர்க்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

பிறகு ரஷ்யப் புரட்சியை வழி நடத்திய லெனினைச் சந்தித்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கோர்க்கியால் எழுதப்பட்டதுதான் தாய் நாவல். உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான்.

இன்று உலகின் பல பல்கலைக்கழகங்களால் பரிந்துரைக்கப்படும் தாய் நாவலை எழுதிய கோர்க்கி, பள்ளிக்கூடமே சென்றதில்லை.

அவரின் நினைவு நாளில் ‘எழுத்தாளர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? அவர் படைப்பு எந்தவகையில் இருக்க வேண்டும்? என்பது குறித்து ‘நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்?’ என்ற நூலில் அவர் எழுதியதில் முக்கியமானவற்றை இங்கே பகிர்கிறோம்.

‘ஒரு எழுத்தாளனுக்கு எல்லா நாட்டு இலக்கியத்திலும் ஞானம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால் சாராம்சத்தில் பார்த்தால், எல்லா நாடுகளிலும் எல்லா மக்கள் சமூகங்களிடையிலும், இலக்கிய படைப்புத் தன்மை என்பது ஒன்றாகத்தான் இருக்கிறது. மனித நினைவுக்கெட்டாத நாளிலிருந்து மனிதனின் ஆன்மாவைச் சிக்கவைத்துப் பிடிக்க எங்குப் பார்த்தாலும் ஒரு வலை பின்னப்பட்டு வந்திருக்கிறது, இன்னொரு புறத்தில் மனிதர்களிடயேயிருந்து மூட நம்பிக்கைகளையும், விருப்பு வெறுப்புகளையும் சார்புக் கருத்துக்களையும் நீக்குவதையே தமது பணியின் குறிக்கோளாகக் கொண்ட மனிதர்கள், எங்கும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். எனவே, மனிதர்களுக்குப் பிடித்தமான அற்ப விஷயங்களில் ஈடுபடுத்துவதற்கு உற்சாகப்படுத்துபவர்கள் என்றைக்கும் இருந்துவருவது போலவே, தம்மைச் சூழ்ந்துள்ள வாழ்வின் மோசமான அம்சங்களை, இழிந்த அம்சங்களை, எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த கலகக்காரர்களும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது எழுத்தாளனின் முக்கியக் கடமையாகும். இலக்கியத்தின் படைப்புத் தன்மை என்பது குணச்சித்திரங்களையும் “மாதிரிகளையும்” (Types) உருவாக்கும் விசயம் சம்பந்தப்பட்டதாகும். அதற்குக் கற்பனையும் புனைத்திறனும் தேவைப்படுகின்றன. ஒரு எழுத்தாளன் தனக்குத் தெரிந்த ஒரு கடைக்காரனையோ, அரசு ஊழியரையோ, தொழிலாளியையோ பாத்திரமாக வடிக்கும்போது, அவன் ஒரு குறிப்பிட்ட தனி நபரை ஏறத்தாழ அப்படியே படம் பிடித்த மாதிரி படைத்தால், அது வெறும் புகைப்படமாகுமே தவிர அதற்கு மேல் ஒன்றுமில்லை. அதற்கு ஒரு சமுதாய முக்கியத்துவமோ, அறிவூட்டவல்ல பொருட் குறிப்போ, கொஞ்சம் கூட கிடையாது. இவ்வாறு படைக்கும் படைப்பு மனிதனைப் பற்றியோ, வாழ்கையைப் பற்றியோ நாம் பெற்றிருக்கும் அறிவை விரிவாக்க அறவே உதவாது. ஆனால், ஓர் இருபது, ஐம்பது அல்லது ஒரு நூறு கடைக்காரர்களுக்கோ, அரசு ஊழியர்களுக்கோ,தொழிலாளிகளுக்கோ அலாதியாயமைந்த மிகவும் குறிப்பான வர்க்க குணாம்சங்களையும், பழக்கவழக்கங்களையும்,பேச்சுத் தோரணையையும் பொதுவாக்கி சுருக்கித்தர ஓர் எழுத்தாளனாலோ கலைஞனாலோ முடியுமானால்,அவற்றையெல்லாம் தனி ஒரு கடைக்காரனாக, ஒரு அரசு ஊழியராக, ஒரு தொழிலாளியாக சுருக்கிதர முடியுமானால், அதன் வழியாக அந்த எழுத்தாளன் ஒரு மாதிரியை படைக்க முடியும். அதுவே கலையாகும். “ என்கிறார். சுரண்டல் சங்கிலியில், இருந்து எளிய மனிதர்களை விடுதலை செய்யும் வேட்கையோடு எழுதவரும் படைப்பாளிகளுக்கு மாக்ஸிம் கோர்க்கி ஓர் வழிகாட்டி.

Exit mobile version