–நா. வருண்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, டெல்லியில் 200 நாட்களுக்கு மேலாக நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். 2020-ம் ஆண்டு, கொரோனா முதல் அலை உச்சம் பெற்றிருந்தபோது தொடங்கிய விவசாயிகள் போராட்டம், இரண்டாம் அலை உச்சம் பெற்றிருக்கும் இந்தச் சமயத்தில் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை!
கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களிலேயே புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. விவசாயிகளின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு செப்டம்பர் மாத இறுதிக்குள் மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்பதில் குறியாக இருந்தது. மத்திய அரசு திட்டமிட்டதைப்போலவே செப்டம்பர் மாத இறுதியில் வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தன.
இதைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அந்தந்த மாநிலங்களில் போராடிவந்த விவசாயிகளை மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்பதால், டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்து, `டெல்லி சலோ’ போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். நவம்பர் 25-ம் தேதி டிராக்டரில் டெல்லி நோக்கிப் பயணம் செய்தவர்களை போலீஸார் தண்ணீர், கண்ணீர்ப் புகைக்குண்டு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்த முயன்றனர்.
பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தத் தொடங்கினர். கூடாரங்கள் அமைத்து அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் தலைநகரில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய பின்னர், உலக அளவில் கவனம் பெற்றது `டெல்லி சலோ’ போராட்டம். அரசுக்கும், விவசாய சங்கங்களுக்குமிடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
தொடர்ந்து 65 நாள்களுக்கு மேலாக இந்தியத் தலைநகரின் எல்லையில் போராடிவந்த விவசாயிகள், ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். விவசாயிகளில் ஒரு பகுதியினர் அனுமதிக்கப்பட்ட பாதைகளிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கிப் பயணம் செய்ய, வன்முறை வெடித்தது. போலீஸாருக்கும் பாதை விலகிச் சென்ற விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த வன்முறைக்கு பஞ்சாபி நடிகர் தீப் சித்து தலைமையிலான ஆட்கள்தான் காரணம் என்றும், அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்தன. சில விவசாய சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகிக்கொண்டன. அதேநேரத்தில், மீதமுள்ள விவசாய சங்கங்கள், `வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தைத் திரும்பப் பெறுவோம்’ என்று உறுதியாக இருந்தன.
இதையடுத்து டெல்லி எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடைபெறும் பகுதியில் குடிநீர், இன்டர்நெட், மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டன. அதன் பிறகும் டெல்லி எல்லையில் போராட்டங்கள் தொடர்ந்தன. அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எனப் பலரும் நேரில் சென்று விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு போராட்டத்திலிருந்து வாபஸ் பெற்ற விவசாய சங்கங்கள் சில மீண்டும் போராட்டத்தில் இணைந்தன. மார்ச் மாதத்துக்குப் பிறகு, போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. விவசாயிகள் அறுவடைக்குச் சென்றிருப்பதாகவும், அறுவடை முடிந்ததும் மீண்டும் போராட்டக் களத்தில் இணைவார்கள் என்றும் விவசாய சங்கங்கள் தகவல் தெரிவித்தன.
தற்போதைய நிலை என்ன?
இந்தநிலையில், கடந்த மே 10-ம் தேதியன்று 40 விவசாயங்களை தன்னகத்தே கொண்ட `சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ அமைப்பு, “அறுவடைக் காலம் முடிந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிங்கு, திக்ரி எல்லைகளுக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். இன்னும் ஏராளமானவர்கள் வரவிருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது” என்று அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து சிங்கு, திக்ரி எல்லையில் போராடும் விவசாயிகள், போராட்டக் களத்தில் மருத்துவர்கள் சிலரைத் தற்காலிகமாக நியமித்திருக்கின்றனர். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்து, மாத்திரைகள், படுக்கைகள் என மருத்துவ வசதிகள் செய்து வைத்திருக்கின்றனர். போராடும் விவசாயிகளில் எவருக்கேனும் உடல்நிலை சரியில்லாமல் போனால், உடனே அவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை வழங்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் நிலவேம்பு உள்ளிட்ட நாட்டு மருந்து கஷாயங்களையும் எடுத்துக்கொள்கிறார்கள் விவசாயிகள். காலை, மாலை என இரண்டு வேளையும் போராடும் இடங்களில் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன.
இது குறித்து `பாரதிய கிசான் யூனியன்’ (உக்ரஹான்) அமைப்பின் துணைத் தலைவர் வசந்த் சிங்,“ஐந்து மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்துகிறோம். ஆனால், எங்களின் கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்காமல் இருப்பது வெட்கக்கேடானது. கொரோனா பரவலைக் கண்டு அஞ்சிப் பின்வாங்க மாட்டோம். உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிப்பது அவசியம் என்பதால், மருத்துவக் குழுக்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். கோரிக்கை நிறைவேறும் வரை டெல்லியிலிருந்து நாங்கள் வெளியேற மாட்டோம்” என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், மே 14-ம் தேதியன்று பா.ஜ.க ஆளும் மாநிலங்களுள் ஒன்றான ஹரியானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டார், “கடந்த மாதமே விவசாயிகள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தேன். நிலைமை சரியான பிறகு மீண்டும் உங்கள் போராட்டத்தைத் தொடரலாம் என வலியுறுத்தினேன். இப்போது விவசாயிகள் போராட்டத்தால் சில கிராமங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆகியிருக்கின்றன. இந்த நெருக்கடியான சூழலில் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமை. மனித உயிருக்கு மிஞ்சியது எதுவும் கிடையாது” எனக் கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் `பாரதிய கிசான் யூனியன்’ தலைவர் ராகேஷ் டிக்கைட், “ஹரியானா முதல்வரைப் பொறுத்தவரையில் கொரோனா பரவுவதற்கு விவசாயிகள் போராட்டம் மட்டும்தான் காரணம். மேற்கு வங்கத்திலும், உ.பி-யிலும் நடந்த தேர்தல்கள் காரணமில்லை. அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டதால், எங்கள்மீது பழி போடுகிறது. நாங்கள் பாதுகாப்பான முறையில்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்று பேசியிருக்கிறார்.
டிரெண்டாகும் ஹேஷ்டேக்…
இந்தநிலையில், நேற்று நள்ளிரவிலிருந்து இன்று காலை வரை #RealFarmersVsActorModi என்கிற ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் முதலிடம் வகித்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக, சமூக ஆர்வலர்களும், பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் இந்த ஹேஷ்டேக் கொண்டு பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். அதில் சில கருத்துகளை இங்கே பார்க்கலாம்…
“ஆறு மாதங்களுக்கு மேலாகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஒரு தீர்வு வழங்கப்படவில்லை. பெருந்தொற்று பெருகிவரும் இவ்வேளையில்கூட மத்திய அரசு விவசாயிகளிடம் ஒருவார்த்தைகூட பேசவில்லை. மாறாக அவர்கள்தான் கொரோனா பரவக் காரணம் என்று கூறுகிறார்கள். உ.பி உள்ளாட்சித் தேர்தலால் அங்குள்ள கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. அதைப் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால், ஹரியானா கிராமங்களில் கொரோனா பரவுவதற்கு விவசாயிகள் போராட்டம் காரணம் என்கிறார்கள்.
மேலும், `மக்களின் உயிரைக் காப்பது நம் அனைவரின் கடமை’ என்று கூறியிருக்கிறார் ஹரியானா முதல்வர். விவசாயிகள் போராட்டத்தில் கடும்குளிர், உடல்நலக் கோளாறு, போலீஸார் தாக்கியது என இதுவரை சுமார் 450 விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் வாய் திறக்காதவர்கள், இப்போது மனித உயிர் பற்றிப் பேசுகிறார்கள்” என்று காட்டமாகப் பதிவிட்டுவருகின்றனர்.
மேலும், “கொரோனாவைக் காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தைக் கலைக்க நினைக்கிறார்கள். தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிடச் சொல்வதே போராட்டத்தை முடக்கத்தான். ஒருவேளை விவசாயிகள் இப்போது போராட்டத்தைக் கைவிட்டால், மீண்டும் கூட்டம் சேர விடாமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ளும். எனவே, இதே ஒற்றுமையோடு விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும்” என்றும் ட்விட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டுவருகிறார்கள்.
#RealFarmersVsActorModi என்கிற ஹேஷ்டேக்குக்கு பதிலடி கொடுக்கும் வகையில், #ModiWithRealFarmers என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகிறார்கள் பா.ஜ.க-வினர். “போராட்டத்தில் ஈட்டுப்பட்டிருப்பவர்கள் அனைவரும் போலியான விவசாயிகள். பிரதமர் மோடி உண்மையான விவசாயிகளுக்கு எப்போதும் தோள் கொடுப்பவர். உண்மையான விவசாயிகள் அனைவரும் பிரதமரின் பக்கமே நிற்கிறார்கள்” என்று பா.ஜ.க-வினர் கருத்து பதிவிட்டுவருகிறார்கள்.
–விகடன்