
‘தீக்கதிர்’ தன்னுடைய முன்னாள் ஆசிரியரும், மூத்த, முதன்மை வாசகரும், வழிகாட்டியுமான தோழர் என்.சங்கரய்யா அவர்களின் நூறாவது பிறந்தநாளில் வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஒருவரது ஆயுள் காலம் என்பது ஆண்டுக்கணக்கே ஆயினும், மகத்தான மனிதர்களின் ஆயுள் என்பது அவர்களது தொண்டறத்தைக் கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் பார்க்கிற போது தோழர் சங்கரய்யாவின் வயது என்பது ஆயிரத்தைத் தாண்டியே அளக்கப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டைத் தொடர்ந்து தோழர் சங்கரய்யாவின் நூற்றாண்டும் வந்திருப்பது இயல்பான ஒன்றே ஆயினும், தன்னுடைய நூறாண்டின் வாழ்வின் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் முகங்களில் ஒன்றாக பயணித்தவர் என்ற வகையில் இந்த நூற்றாண்டுகள் மிகவும் பொருத்தப்பாடுடையதாக அமைந்துள்ளது.
தன்னுடைய 19 ஆவது வயதில் கல்விச்சாலையிலிருந்து சிறைச்சாலையில் அடியெடுத்து வைத்த தலைவர் அவர். தண்டிக்க வேண்டும், அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே அவரொத்த கம்யூனிஸ்ட்டுகள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் சிறைச் சட்டங்களையும் சீர்திருத்தி, அனைத்து அரசியல் கைதிகளையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும் என்று போராடி சிறையிலும் சமத்துவத்தை கொண்டு வந்தவர்கள் சங்கரய்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டுகள்.
எட்டாண்டு கால சிறை வாழ்வின் போதும், மூன்றாண்டு கால தலைமறைவு இயக்கப் பணிக் காலத்திலும் அவரது உயிர் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருந்தன. ஆனால் அவர் எப்போதும் இயக்கத்தையும், லட்சியத்தையுமே தன்னுடைய உயிர் மூச்சாக கொண்டிருந்தார்.