Site icon சக்கரம்

ஆப்கானிஸ்தான் நிலவரம் : கற்க வேண்டிய பாடம்….

ப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைநகர் காபூலும் அவர்கள் வசம் சென்றுவிட்டது. ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள் கடைசியில் தலைநகர் காபூலையும் பக்ரான்விமானத் தளத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

தலிபான்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜனாதிபதி அஸ்ரப் கனி ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். புதிய ஜனாதிபதியாக தலிபான் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தலிபான் அமைப்பின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் நடந்து வந்த அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சி முடிவுக்கு வந்தாலும் தலிபான்களின் கையில் முழுமையான அதிகாரம் சிக்கியுள்ளது உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. ஞாயிறன்று 129 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்ட நிலையில் மீதமுள்ள இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா விமானங்கள்தயாராக இருக்குமாறு பணிக்கப்பட்ட நிலையில்,காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் விமானங்களை இயக்கும் வாய்ப்பில்லை என ஏர்இந்தியா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவுடன் இயங்கி வந்த நஜிபுல்லா தலைமையிலான அரசைகவிழ்ப்பதற்காகவே தலிபான் தீவிரவாதிகளையும், ஒசாமா பின்லேடனையும் அமெரிக்கா வளர்த்துவிட்டது. அவர்களுக்கு தேவையான ஆயுத உதவி, பண உதவி அனைத்தும் செய்யப்பட்டது. நஜிபுல்லா அரசு கவிழ்க்கப்பட்டதோடு அவரும் கொல்லப்பட்டார். அவருடைய உடல் நடுவீதியில் தொங்க விடப்பட்டது.

அமெரிக்காவின் ஆதரவுடன் செழித்து வளர்ந்த தீவிரவாதிகள் ஒருநிலையில் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பினர். அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி 2001ல்ஆப்கனுக்கு தன்னுடைய படைகளை அனுப்பிவைத்தது அமெரிக்கா. இருதரப்புக்கும் நடந்தமோதலில் அந்த நாடே சின்னாபின்னமாக்கப்பட்டது. வறுமை, வேலையின்மை அதிகரித்தது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா 60 இலட்சம் கோடிக்கும் மேல் செலவழித்துள்ளதாகக்கூறப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தமோதலில் தலிபான்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. இது தெற்காசிய பிராந்தியம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கவலை கொள்ளவேண்டிய விசயமாகும்.

அமெரிக்கா தன்னுடைய பொம்மை அரசுகளை நிறுவிய அனைத்து இடங்களிலும் குழப்பமும், பேரழிவுமே ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது உறுதி செய்யப்பட வேண்டும். தன்னுடைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வெறிக்காக அமெரிக்காவினால் சீரழிக்கப்பட்ட நாடுகளின்வரிசையில் ஆப்கானிஸ்தானும் சேர்ந்துள்ளது. இதிலிருந்து உலகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது.

தீக்கதிர்
2021.08.17

Exit mobile version