–கு.கணேசன்
கொரோனா ஏற்படுத்திய ஊரடங்கு உலகெங்கிலும் நடைமுறையில் இருந்தபோது, வளாக வணிகங்கள் பெரும்பாலும் சரியத் தொடங்கிய சூழலில், அமைதியாக முன்னேறியிருக்கிறது ‘வளர்ப்பு மாமிசம்’ (Cultured meat) எனும் செயற்கை மாமிச வணிகம்.
உலகில் கிட்டத்தட்ட 780 கோடிப் பேர் வாழ்கிறோம். நம் உணவுத் தேவைக்காக ஆண்டுதோறும் 5,000 கோடி கோழிகளும் 60 கோடி ஆடுகளும் 140 கோடிப் பன்றிகளும் 25 கோடி மாடுகளும் 15 கோடி தொன் கடல் விலங்குகளும் இரையாகின்றன.
சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் இறைச்சிப் பயன்பாடு மிக அதிகம். அதனால்தான் அங்கு விலங்கு மாமிசம் சார்ந்த வணிகம் உச்சத்தில் இருக்கிறது. ஒன்றரை லட்சம் கோடி டொலர்களுக்கும் அதிகமாக ஆண்டுதோறும் பணம் புழங்கும் இந்த வணிகமே உலகில் பெரியது. அடுத்த 40 ஆண்டுகளில் மாமிசத்தின் தேவை 3 மடங்கு அதிகரிக்க இருக்கிறது என்பதால், மாற்று உணவுக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. சென்ற ஆண்டில் ‘பியாண்ட் மீட்’ (Beyond meat) நிறுவனம், சோயா பீன்ஸிலிருந்து பேர்கரைத் (Burger) தயாரித்துச் சந்தையில் விற்றது. அதில் சேர்க்கப்படும் சோடியம் நம் உடலுக்கு உகந்ததில்லை என்பதால் அதற்கு வரவேற்பில்லை.
விலங்கு மாமிசம் நம் புரதத் தேவையைப் பூர்த்திசெய்கிறது. ஆனாலும், அது புவி வெப்பமாதலுக்குத் துணைபோகிறது. இயல்பாகவே விலங்குகளுக்குச் சமிபாடாகும்போது மீத்தேன் வாயு (CH₄) வெளியேறும். காபனீர் ஒக்சைட் (Carbon di-oxide), மீத்தேன் (Methane), நைதரசன் ஒக்சைட் (Nitrous Oxide), ஓசோன் (Ozone) மற்றும் நீராவி (Water vapour) ஆகியவை பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse gases)என்று அழைக்கப்டுகின்றன.
சூழலைக் கெடுக்கும் பசுங்குடில் வாயுக்களில் மீத்தேன் முக்கியமானது; கார்பனைவிட 20 மடங்கு அதிகமாக வெப்பத்தைத் தனக்குள்ளே அடக்கிக்கொள்ளும் வாயு அது. உலகின் மொத்த பசுங்குடில் வாயுக்களில் 25%, உணவுக்காக நாம் வளர்க்கும் விலங்குகளிலிருந்து வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள வாகனங்கள் உமிழும் கார்பனைவிட இது அதிகம்.
விலங்கு வளர்ப்புக்குத் தண்ணீரும் அதிகம் தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு கிலோ ஆட்டிறைச்சிக்கு 10,000 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கு 15,000 லிட்டர் தண்ணீரும் செலவாகிறது. மூன்று கிலோ தாவர உணவைக் கொடுத்துத்தான் ஒரு கிலோ மாமிசத்தைப் பெற முடிகிறது. இப்படிப் புவிப்பந்துக்கும் சுற்றுப்புறத்துக்கும் சிக்கலை உண்டாக்கும் விலங்கு மாமிசத்துக்கு மாற்றாக வந்திருக்கிறது, வளர்ப்பு மாமிசம்.
எப்படி வளர்க்கப்படுகிறது?
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் அதனதன் செல்களின் வளர்ச்சிப் பொட்டலம்தான். மனித செல்களிலும் விலங்கு செல்களிலும் ‘ஸ்டெம் செல்கள்’ (stem sells) எனும் சிறப்பு செல்கள் இருக்கின்றன. இவைதான் உடல் வளர்ச்சிக்கு விதையாகும் ஆரம்ப செல்கள். பூமியில் விழுந்த விதை எப்படி வேராக, தண்டாக, இலையாக, காயாக, கனியாக வளர்கிறதோ அதேபோல் நாம் விரும்பும் உடலுறுப்பு செல் வகையை ‘ஸ்டெம் செல்கள்’ மூலம் வளர்த்துக்கொள்ளலாம்; தொடைக்கறியாகவும் வளர்க்கலாம்; ஈரல் கறியாகவும் தயாரிக்கலாம். கறியின் ருசியும் ஊட்டச்சத்தும் கிட்டத்தட்ட அந்த விலங்கின் மாமிசத்தைப் போலவே இருக்கும். நவீன மருத்துவத்தின் செல் வேளாண் துறையில் (Cellular agriculture) திசுப் பொறியியல் (Tissue engineering) தொழில்நுட்பத்தில் புகுந்துள்ள புதுமை இது. எந்த விலங்கையும் கொல்லாமல், விலங்குகளின் செல்களிலிருந்து மாமிசத்தை வளர்த்தெடுக்கும் அறிவியல் பிரிவு இது.
இந்த மாமிசத்தை எப்படித் தயாரிக்கிறார்கள்? ஆடு, கோழி அல்லது மாட்டின் ஸ்டெம் செல்களில் சிலவற்றைத் தொகுத்தெடுத்து, 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ‘உயிரிக்கலன்’ (Bioreactor) எனும் வளர்கருவிக்குள் பதியமிடுகின்றனர். கன்றுக்குட்டிகளிடமிருந்து பெறப்படும் ‘வளர்கரு வடிநீர்’ (Fetal serum) உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை உணவாகக் கொடுக்கின்றனர். அந்த செல்கள் பல கோடி செல்களாகப் பல்கிப் பெருகி வளர்கின்றன. அவை குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததும் வளர்ச்சிக்கு உண்டான காரணிகளை நிறுத்திவிடுகின்றனர். அப்போது அவை தசை வடிவில் திரண்டுவிடுகின்றன. அவற்றைத் தண்ணீர் சார்ந்த ஜெல் ஒன்றில் ஊறவைத்தால், அவை மாமிசம்போலவே மாறிவிடுகின்றன. இப்படி, சில ஸ்டெம் செல்களிலிருந்து பல நூறு கிலோ மாமிசத்தைத் தயாரிக்க முடிகிறது.
ஆய்வுக் கட்டத்தின்போது தன்னார்வலர்களும், பத்திரிகையாளர்களும், சமையல் கலைஞர்களும் ருசி பார்த்த வளர்ப்பு மாமிசத்தை உலகில் முதல் முதலாக இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே சந்தைக்குக் கொண்டுவர அனுமதித்துவிட்டது சிங்கப்பூர் அரசு. ‘ஈட் ஜஸ்ட்’ (Eat Just) எனும் சான்பிரான்சிஸ்கோ நிறுவனம், கோழியின் ஸ்டெம் செல்களிலிருந்து தயாரித்திருக்கும் வளர்ப்பு மாமிசத்தைச் சிறு சிறு துண்டங்களாக சிங்கப்பூரில் குறிப்பிட்ட இடங்களில் விற்கின்றனர். தற்போது சிங்கப்பூரின் 90% உணவுத் தேவையை 160-க்கும் மேற்பட்ட அந்நிய நாடுகளிலிருந்துதான் பெறுகின்றனர். கொரோனா காலத்தில் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாமல் அந்த நாடு திணறியதைத் தொடர்ந்து, சொந்த நாட்டிலேயே உணவுத் தயாரிப்பை ஊக்கப்படுத்த முடிவெடுத்துள்ளனர். அந்த முனைப்பின் முதல் படியாக வளர்ப்பு மாமிசத்துக்கு வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேலும் இந்த வணிகத்துக்கு ‘சூப்பர் மீட்’ நிறுவனம் மூலம் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.
என்னென்ன பலன்கள்?
இந்த வளர்ப்பு மாமிசத்தின் சாதகபாதகங்கள் பற்றி இனிவரும் நாட்களில் கூடுதலாக அலசப்படும். எனினும், சூழல் சிக்கலுக்கும் பொருளாதாரச் சீரமைப்புக்கும் வளர்ப்பு மாமிசம் தீர்வு தருகிறது. எப்படியெனில், மாமிசத்துக்காக விலங்குகள் வளர்க்கப்பட வேண்டிய அவசியம் இனி இல்லை. விலங்குகளை வளர்ப்பதற்காக நிலம் தேவையில்லை. தண்ணீர் மிச்சம். மீத்தேன் மீதான அச்சம் இருக்காது. இலை, தழை, மரங்கள் தப்பித்துவிடும். இறைச்சிக்காக வணிக நோக்கத்தில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் ஆடு, மாடு, பன்றிகள் போன்ற விலங்குகளுக்கும் தேவையில்லாமல் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் (Antibiotics) வழங்கப்படுவதும், ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுவதும் கைவிடப்படும். விலங்குக் கழிவுகளிலிருந்து மனித இனத்துக்குத் தொற்றுநோய்கள் பரவுவது குறைந்துவிடும். அந்த நோய்களுக்காகச் செலவாகும் பணம் மிச்சமாகும். இப்படி, சுற்றுச்சூழல் கெடாமல் பார்த்துக்கொள்வதோடு, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மனிதக் கேடுகளை எதிர்கொள்ளவும் புதிய வழியைக் காட்டியிருக்கிறது, வளர்ப்பு மாமிசம்.
-இந்து தமிழ்
2021.09.06