Site icon சக்கரம்

வ.உ.சி 150-வது பிறந்தநாள் தொடக்கம்:`கப்பலோட்டியத் தமிழன், கப்பல் வாங்கிய வீரம்செறிந்த கதை!’

ரா.அரவிந்தராஜ்

நம்மைத் தளைப்படுத்த எதிரி என்ன ஆயுதம் கொண்டுவந்தானோ, அதே ஆயுதத்தைக்கொண்டு தான் அவனை வீழ்த்தவும், நம்மை விடுதலைப்படுத்திக்கொள்ளவும் முடியும் என தீர்க்கமான எண்ணினார், அந்த மனிதன். வணிகம் என்ற அந்த ஆயுதத்தைக் கையிலெடுத்தார் வ.உ.சி.

இன்றைய நவீனமய உலகம் `படைபலத்தைக்காட்டிலும் வணிகபலத்தில் நிறைந்த நாடுகளையே’ வல்லமை பொருந்திய நாடு என்கிறது. ஒருவருக்கொருவர் தங்களை எதிரியாக கருதிக்கொண்டிருக்கும் அமெரிக்கா சீனா போன்ற பெருநாடுகளும் `வணிகம்’ எனும் பேராயுதத்தை எடுத்துக்கொண்டுதான் களம் காண்கின்றன. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஒரு தமிழன் ‘வணிகம்’ தான் ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு வேட்டுவைக்கும் வெடிமருந்து என்பதைக் கண்டுணர்ந்தான். நம்மைத் தளைப்படுத்த எதிரி என்ன ஆயுதம் கொண்டுவந்தானோ, அதே ஆயுதத்தைக்கொண்டுதான் அவனை வீழ்த்தவும், நம்மை விடுதலைப்படுத்திக் கொள்ளவும் முடியும் என தீர்க்கமான எண்ணினார், அந்த மனிதன்.

வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம்! வ.உ.சி-க்கு இன்று 150-வது பிறந்தநாள். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோரும் பெருமையாகப் பேசும் வ.உ.சிதம்பரனார், ஆங்கிலேயனுக்கு எதிராகக் கப்பல் வாங்கிய கதையைப் பற்றிப் பார்ப்போம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். `பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் (British India Steam Navigation Company (BISNC))’ எனும் ஆங்கிலேய கப்பல் கம்பெனியின் ஆதிக்கமே இந்தியப் பெருங்கடலில் கொடிகட்டிப் பறந்தது. குறிப்பாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பயணிகள் போக்குவரத்தில் அந்த நிறுவனமே முதலிடத்தில் இருந்து, லாபம் கொழுத்துக்கொண்டிருந்தது. அந்தசமயத்தில்தான், சுயராஜ்ய சிந்தனையிலும் சுதேசப் பணிகளிலும் ஊறிக்கிடந்த வ.உ.சிக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. அது, வணிகத்துக்காக வந்திறங்கிய ஆங்கிலேயனை விரட்ட, அதே வணிகத்தை இந்தியர்களாகிய நாம் கையிலெடுக்கவேண்டும். ஆங்கிலேயர் நஷ்டப்பட்டு, நாட்டைவிட்டே ஓடவேண்டும் எனக் கருதினார்.

ஏழைகளுக்கு இலவசமாக வாதாடும் வழக்கறிஞராக இருந்த வ.உ.சி., சொந்தக் கப்பல் ஒன்றை வாங்கி அதை ஆங்கிலேயனுக்கு எதிராக சிம்மசொப்பனமாக்க நினைத்தார். விளைவு, உருவானது சுதேசி நாவாய் சங்கம்! 1906 அக்டோபர் 16-ம் நாள் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு போட்டியாக, `சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் (Swadeshi Steam Navigation Company(SSNC))’ எனும் முதல் இந்திய கப்பல் கம்பெனியை உருவாக்கினார், தமிழன் வ.உ.சி. அவருக்கு உறுதுணையாக, வள்ளல் பாண்டித்துரை, சேலம் விஜயராகவாச்சாரி, ஹாஜி.பக்கீர் முகம்மது என பலரும் பொருளுதவி தந்து உதவினர். அவர்களையெல்லாம் பங்குதாரர்களாக, நிறுவனத்தின் பொறுப்பாளர்களாக நியமித்துக்கொண்டார் வ.உ.சி. அப்போதே சுமார் 10 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், 40 ஆயிரம் பங்குகளைக்கொண்டிருந்தது சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி.

வ.உ.சியின் இந்த முயற்சி ஆங்கிலேய கப்பல் கம்பெனியின் வயிற்றில் புளியைக்கரைத்தது.

வெற்றிகரமாக கப்பல் கம்பெனியைத் தொடங்கிவிட்டார். ஆனால் சொந்தமாகக் கப்பல் வாங்கும் அளவுக்கு பொருள் வந்துசேரவில்லை. அதற்கு புதிய பங்குதாரர்களை சேர்க்கவேண்டும். முதல்கட்டமாக, “ஷாவ்லைன் ஸ்டீமர்ஸ் (Shawline Steamers Company)’ எனும் கப்பல் கம்பெனியிலிருந்து வாடகைக்குக் கப்பல் எடுத்தார். தூத்துக்குடிக்கும் இலங்கையின் கொழும்புக்கும் இடையே போக்குவரத்தைத் தொடங்கினார். வ.உ.சியின் வளர்ச்சியைப் பிடிக்காத ஆங்கிலேயர்கள், கப்பலை வாடகைக்கு கொடுத்த ஷாவ்லைன் ஸ்டீமர்ஸ் கம்பெனியை மிரட்டத் தொடங்கினர். இதனால் அச்சமுற்ற அந்தக் கம்பெனி, வ.உ.சிக்கு கப்பல் தர மறுத்தது. வாடகை ஒப்பந்தத்தை முற்றிலுமாக ரத்து செய்தது. இதனால், சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், எதற்கும் அஞ்சாத வ.உ.சி. அடுத்தகணமே, கொழும்பிலிருந்து ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து, போக்குவரத்தைத் தொடர்ந்து நடத்தினார். இது தற்காலிக முயற்சி என்றாலும், வ.உ.சியின் ஆழ்மனதுக்குள் `ஒரு சொந்தக் கப்பல்’ எனும் கனவே உறங்காமல் தகித்துக்கொண்டிருந்தது.

அதற்கான காலத்தையும் உருவாக்கினார். சொந்த கப்பல் வாங்கியே ஆகவேண்டும் என்ற முடிவில், தூத்துக்குடியில் இருக்கும் வணிகர்களையெல்லாம் சந்தித்தார். அவர்களும் உதவி செய்தனர். ஆனால் அந்தத் தொகை போதவில்லை. தமிழகம் தாண்டி வட இந்தியா புறப்பட ஆயத்தமானார். “திரும்பினால் கப்பலுடன்தான் திரும்புவேன், இல்லையேல் கடலில் விழுந்து சாகுவேன்” என சூளுரைத்து, வைராக்கியத்துடன் வடக்குநோக்கி புறப்பட்டார். பாலகங்காதரத் திலகர், அரவிந்தகோஷ் போன்ற சுதந்திரப் போராளிகளும் வ.உ.சிக்கு துணைநின்றனர். மும்பை, கொல்கத்தா என எல்லா பகுதிகளுக்கும் சென்று, வணிகர்களை சந்தித்து கப்பல் வாங்குவதற்கான உயர்ந்த நோக்கத்தை அனலாகக் கக்கினார். அவரின் பேச்சாற்றலில் மெய்மறந்த வணிகர்கள் அனைவரும் சுதேசி கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்களாகினார்.

“எஸ்.எஸ். காளியோ (SS Galia)” எனும் பிரெஞ்சுக் கப்பலை சொந்தமாக்கிய சந்தோஷத்தில் தமிழகம் திரும்பினார். `ஒரு இந்தியன், ஆங்கிலேயனுக்குப் போட்டியாக, எதிராகச் சொந்தக்கப்பல் விடப்போகிறான்’ என்ற பெருமிதத்தில் நாட்டு மக்களெல்லாம் கொண்டாட்டம் அடைந்தனர். கிட்டதட்ட 1,500 இருக்கைகள், 4,000 சரக்கு மூட்டைகளை ஏற்றிச்செல்லும் அளவுக்கு பரந்து விரிந்திருந்தது வ.உ.சியின் பெருங்கப்பல். அதுமட்டுமில்லாமல், கம்பெனிக்கு வலுசேர்க்கும் விதமாக எஸ் வேதமூர்த்தி என்பவரும் பிரான்ஸ் நாட்டிலிருந்து “எஸ். எஸ். லாவோ (SS Lavo)” எனும் கப்பலை வாங்கிவந்து சேர்த்தார்.

இந்திய செய்தித்தாள்கள்கள் முழுவதும், வ.உ.சி. கப்பல் வாங்கிய கதையே சாதனையாக பரவிக்கிடந்தன. `இந்தியா’ பத்திரிக்கையில் இருந்த பாரதியார், தனது நண்பன் வ.உ.சியின் சாதனையை உச்சிமுகர்ந்தார். கப்பல் நிறுவனம் இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விடுதலை வேட்கையில் இருந்த மக்கள் சுதேசி கப்பலில் பயணம் செய்வதையே பெருமையாகவும், கடமையாகவும் கருதினர். வணிகச் சரக்குகளெல்லாம் சுதேசி கப்பல்நோக்கியே வந்தவண்ணம் இருந்தன.

ஆங்கிலேயன் மிரட்டி அடிபணிய வைக்க இது வாடகைக் கப்பல் அல்ல. இந்தியர்களின் சொந்தக் கப்பல்! என்னசெய்வதென்று புரியாமல் வெந்துகொண்டிருந்து ஆங்கிலேய கப்பல் கம்பெனி. தென்னிந்திய கடற்பரப்பில் கொடிகட்டிப்பறந்த கப்பல் வருமானம் சரிந்துகொண்டிருந்தது. எதிரணியில், ‘வந்தே மாதரம்’ எனும் வாசகம் பொறித்த வ.உ.சி. கப்பல் வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்தது. இந்தியப் பயணிகளுக்கெல்லாம் சுதந்திரப் பாடங்களும் எடுக்கப்பட்டது.

சும்மா விடுவானா ஆங்கிலேயன்? தன் போட்டியாளனை சமாளிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பெருமளவில் நிதிபெற்றுக்கொண்ட பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி, கட்டணத்தை பாதியாகக் குறைத்தது. “சுதேசி கப்பலை நஷ்டத்தில் தள்ளிவிட்டு, நம்மை முழுவதுமாக போட்டியிலிருந்து ஒழித்தபின் அவன் விருப்பம்போல தன் கட்டணத்தை ஏற்றிக்கொள்வான்” என ஆங்கிலேயனின் வஞ்சக அரசியலை வ.உ.சி. பொறுமையாகப் பாடமெடுத்தார். கேட்டுக்கொண்ட இந்திய மக்கள் சுதேசி கப்பலுடனே இருந்தனர்.

ஆங்கிலேய கப்பல் கம்பெனி, அடுத்த அஸ்திரமாக “இலவச பயணம்” என்று அறிவித்தது. மேலும், தங்கள் கப்பலில் பயணிப்பவர்களுக்கு இலவச பொருட்களையும் பரிசாக அளித்தது. அதுமட்டுமல்லாமல், பிரிட்டிஷ் அரசில் பணியாற்றும் இந்தியர்கள் அனைவரும் ஆங்கிலேயக் கப்பலில்தான் பயணிக்கவேண்டும் எனவும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாமல், ஆங்கிலேய அதிகாரிகளில் மூலம் பல்வேறு இடைஞ்சல்களையும் அழுத்தத்தையும் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு கொடுத்தது. இருப்பினும் எல்லாவற்றையும் சமாளித்தபடியே தொடர்ந்து கப்பலை இயக்கினார்.

அடுத்தகட்டமாக, “1 லட்சம் பணம் தருகிறோம், நிறுவனத்தை விட்டு விலகிச்செல்!” என வ.உ.சியிடமே வந்து பேரம்பேசியது ஆங்கிலேய கப்பல் கம்பெனி. அடிபணிவாரா? ஆசை வார்த்தைகளில் அணைந்திடுவாரா வ.உ.சி., “அவர் விடுதலைக்காக எதையும் விலையாகக் கொடுப்பவர். ஆனால், எதற்காகவும் விடுதலையை விட்டுக்கொடுக்கமாட்டார், கப்பல் விட்டது வணிகத்துக்காக அல்ல, விடுதலைக்காக” என்பதை அப்போது புரிந்துகொண்டனர் ஆங்கிலேய கப்பல் கம்பெனியினர்.

முன்பைவிட வேகமாக, வேறுவிதமாக அடுத்தடுத்த சதிவேலைகளை, சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு எதிராக திருப்பிக்கொண்டே இருந்தனர். சுதேசி கப்பல் எங்கள் கப்பல்மீது மோத வந்தது என்று சொல்லி நீதிமன்றதில் வழக்குதொடர்ந்தனர். வழக்கறிஞரான வ.உ.சி. அவையெல்லாம் பொய்க்குற்றச்சாட்டு என்பதை வாதாடி நிரூபித்தார், வென்றார்.

பல இழப்புகளுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில், மீண்டும் சுதேசிக் கப்பலை கடலில் சீறச்செய்தார். என்னதான் நெஞ்சுரத்தோடு, அடிபணியாமல் வ.உ.சி போட்டிப்போட்டாலும் ஆங்கிலேயனின் தொடர்ச்சியான சதிவேலைகளின் விளைவாக, மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரை இழப்பை சந்தித்தது சுதேசி கப்பல் கம்பெனி. தேசப்பற்றுள்ள சிலரைத் தவிர, வணிகநோக்குள்ள பல பங்குதாரர்களும் வ.உ.சிக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கினர். இறுதியாக, பணம் இழந்து, பயணிகள் இழந்து, பங்குதாரர்களை இழந்து `சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ நங்கூரமிட்டு நின்றது.

ஆனால், எதைக்கண்டும் கலங்கிப்போய் நின்றிடாத வ.உ.சி. எனும் சுதேச மனிதக்கப்பல், விடுதலைப்போராட்டம், சுதந்திரப்போராட்டம் என அடுத்தடுத்து விடுதலை நோக்கியே நகர்ந்துகொண்டிருந்தது. சிறை புகுந்தது! செக்கிழுத்தது! இரத்தத்தால் இந்திய விடுதலைக்கான தனது வீரத்தையும் தியாகத்தையும் வரலாற்றில் எழுதியது!

Exit mobile version