Site icon சக்கரம்

“என்னுடைய கோபம்… இளையராஜாவின் கண்ணீர்!” – கமல்ஹாசன்

-ம.கா.செந்தில்குமார்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ஆனந்த விகடன் இதழில் எழுதிய `என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் தனக்குமான நட்பு பற்றிப் பேசியிருந்தார். அந்தத் தொடரிலிருந்து…

`ஹேராம்’ படத்தை முடித்துவிட்டு ஃபைனல் மிக்ஸிங்குக்காக ஒரிஜினல் இசையைக் கேட்டால், `ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் கொடுப்பேன்’ என்றார் அறிமுக இசையமைப்பாளரான அந்த இசைமேதை. `வேறு வழியில்லை, ராஜாவிடம் போவோம்’ என்றேன். `வேறு ஒருவரிடம் போய்விட்டு வந்ததால் அவர் பண்ணுவாரா என்பது சந்தேகம்’ என்றார்கள். `பண்ணுவார், நான் போவேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றேன். `என்ன’ என்று கேட்டார் ராஜா. `தப்புப் பண்ணிட்டேன். இந்த மாதிரியெல்லாம் ஆகிப்போச்சு’ என்று என் குறைகளைச் சொன்னேன்.

வேறு நபராக இருந்திருந்தால், `செம மேட்டர் சிக்கிடுச்சு’ என்று  நினைத்துக்கொண்டு, `எனக்குத் தெரியும்…’ என்று எதிராளியைப் பற்றிக் குறை சொல்லத் தொடங்குவார்கள். இல்லையென்றால், `இல்லல்ல… எனக்கு வேறு வேலைகள் இருக்கு’ என்று சொல்லித் தவிர்ப்பார்கள். ஆனால் ராஜாவோ,  “சரி, அதை விடுங்க. இப்ப என்ன பண்ணப்போறீங்க?’’ என்று நேராகப் பிரச்னைக்குள் வந்தார். “பாட்டெல்லாம் ஷூட் பண்ணிட்டேன்’’ என்றேன்.  “அப்ப அந்தப் பாட்டையெல்லாம் திரும்ப எடுக்க எவ்வளவு செலவாகும்?’’ என்றார். ‘`அதைப்பற்றி இப்ப பேசவேணாம். நாம அந்தப் பாடல்களைப் புதுசா கம்போஸ் பண்ணி ரெக்கார்டு பண்ணுவோம். அதைவெச்சு நான் புதுசா ஷூட் பண்ணிக்கிறேன். எவ்வளவு குறைவான பட்ஜெட்டில் இதைப் பண்ண முடியும்னு நீங்க சொல்லுங்க’’ என்றேன்.

‘`எனக்கு என்ன கொடுப்பீங்க?’’ என்றார். “என்னங்க இந்த நேரத்துல இப்படிக் கேக்குறீங்க. தப்புப் பண்ணிட்டேன்னு சொல்லிட்டுதானே வந்திருக்கேன். தண்டனைக்கு இது நேரமில்லையே’’ என்றேன். “அதெல்லாம் பேசப்படாது. பாட்டைப்பூரா எடுத்தீங்கன்னா என்ன செலவாகுமோ அந்தச் செலவை எனக்குக் கொடுங்கன்னா கேக்குறேன்?’’ என்றார். “என்னங்க, இப்ப பண்ண மாட்டேங்குறீங்களா, என்ன சொல்றீங்க?’’ என்றேன். “மாட்டேன்னு எங்க சொன்னேன். உங்களுக்கு அந்தச் செலவே இல்லாமப் பண்றேன். எனக்கொரு ஐடியா வந்துடுச்சு’’ என்றார். 

“என்ன?’’ என்று கேட்டேன். “ஏற்கெனவே எழுதிய பாடல்கள், நீங்க எடுத்த வீடியோ காட்சிகள் எதையும் மாத்த வேணாம். அப்படியே இருக்கட்டும். அந்த வரிகளுக்கும் காட்சிகளுக்கும் பொருந்துறமாதிரியான இசையை நான் கம்போஸ் பண்ணித் தர்றேன். திரும்ப ஷூட் பண்ண வேணாம். எனக்கு என்ன கொடுக்குறீங்களோ கொடுங்க. அதைப்பற்றிக் கவலையில்லை. நான் செஞ்சுகாட்டுறேன்’’ என்றார் உறுதியுடன்.

“என்னடா இது, கிணறுவெட்ட வேறு பூதம் கிளம்புதே, தப்பாயிடுமோ’’ என்ற பயம் எனக்கு. ஒருமாதிரி தயக்கத்துடன், “அது பரவாயில்லைங்க. என்னைக் காப்பாத்துறேன்னு சொல்லிட்டு மியூசிக்கை நாம கம்மி பண்ணிடக்கூடாது. எல்லாம் ஹிட் சாங்கா வரணும். நீங்க போடுறபடி போடுங்க. செலவானா பரவாயில்லை. நான் ஷூட் பண்ணிக்கிறேன்’’ என்றேன். “அப்படின்னா என் மேல நம்பிக்கை இல்லைனு எடுத்துக்கலாமா’’ என்றார். “ஐயய்யோ… அப்படியில்லைங்க’’ என்று அவசர அவசரமாக மறுத்தேன். `என்னமோ நடந்துடுச்சு. இனிமேலாவது நண்பர் சொல்வதைக் கேட்போம்’ என்று நினைத்துக்கொண்டு, “நீங்க சொல்றதுமாதிரியே கம்போஸ் பண்ணுங்க’’ என்று சொல்லிவிட்டு வந்தேன். 

பிறகு, என்னை அழைத்துக் காட்டினார். `இது உண்மைதானா, மேஜிக்கா, இசையில் இப்படியெல்லாம் நிகழ்த்த முடியுமா?’ என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஆம், `ஹேராம்’ படத்தில் அத்தனை ஹிட் பாடல்களும் ஏற்கெனவே எழுதி, ஷூட் பண்ணின காட்சிகளுக்குப் புதிதாக இசையமைக்கப்பட்டவை. அதே வரி, அதே சொற்கட்டு. ஆனால், இசையும் ராகமும் வேறு. ராஜா வழி வந்தவை. 

அதில் ஒரு காட்சியில், இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்ய, பெண் பார்க்க ஹீரோ வந்திருப்பான். அவள், மிகவும் இளம் வயதுப் பெண். `வைஷ்ணவ ஜன தோ…’ என்று காந்தியாருக்கு மிகவும் பிடித்த பாடலை அந்தப் பெண் பாடுவாள். அதில் ஓரிடத்தில், “ஸ்ருதியை ரொம்ப மேல எடுத்துட்டா பிசிறி நாறப்போகுது’’ என்று ஒரு விதவை ஐயங்கார் பாட்டி சொல்வார். அதனால் அவள் சரியாகப் பாடவேண்டுமே என்கிற பதற்றத்துடன் அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர் மேல் ஸ்தாயியில் பாடும் இடம் வரும். எல்லோரும் பதறி, பிறகு, `நல்லா பாடிட்டா’ என்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள். பின், அந்தப் பெண் பாடியபடியே தன் குடும்பத்தினரை கர்வமாகத் திரும்பிப் பார்ப்பாள். இதுதான் காட்சி. அந்தக் காட்சியையும் ஏற்கெனவே படமாக்கிவிட்டோம். 

அந்தக் காட்சியைக் காட்டி, “இதுக்கு எப்படிப் பண்றது? சரியா உச்சஸ்தாயி போகவேண்டிய இடத்தில் உச்சஸ்தாயி போகணும். எப்படிப் பண்ணலாம்னு எனக்குப் புரியலை’’ என்றேன். “என்ன வேணும் சொல்லுங்க’’ என்றார் ராஜா. “மொத்தக் கதையும் நார்த் இண்டியாவுல நடக்குது. ஆனால், இதுமட்டும் சென்னையில் நடக்கும் காட்சி. அதனால இதுமட்டும் தென்னிந்தியத் தன்மையோட இருக்கணும்’’ என்றேன். “அவ்வளவுதானே’’ என்றவர் உச்சஸ்தாயி போவதுபோல் மூன்று டியூன்கள் போட்டார். அதற்கும் 30 நிமிடங்கள்தான். எனக்கு அந்த மூன்றுமே பிடித்திருந்தன. “நானே சூஸ் பண்றேன்’’ என்று மூன்றில் அவர் தேர்ந்தெடுத்த பாடல்தான் படத்தில் வந்தது. 

இப்படி வேலைகள் போய்க்கொண்டிருந்த சமயத்தில், “எல்லாம் சரி, உங்க வேலைகளை முடிச்சுக்கிட்டீங்க. எனக்கு ஒரு பாட்டுப் போட இடமில்லாமப் பண்ணிட்டீங்களே’’ என்றார். “இதுவே பெரிய சாதனை. அதென்ன பெரிய விஷயம்’’ என்றேன். “இல்ல, எனக்கு ஒரு இடம் இருக்கு’’ என்றார். “ஒரு இயக்குநரா பார்க்கும்போது, இதுல இன்னொரு பாட்டுக்கான இடம் இல்லையே. தவிர இன்னொரு பாட்டு ரொம்ப ஜாஸ்தியாயிடும், வேண்டாங்க’’ என்றேன். “ஐயா, இருக்கிற இடத்துல நான் போட்டுக்குறேன். நீங்க சும்மா இருங்களேன்’’ என்றார். “எங்க?’’ என்றேன். “அவர் பாங்கு குடிச்சிட்டு வர்ற அந்த இடம். இயக்குநரா நீங்க அதை ரீரெக்கார்டிங்கா நினைச்சிருந்தீங்க. நானும் அது ரீரெக்கார்டிங்தான்னு சொல்றேன். ஆனா, அதையே பாட்டா போட்டுக்கொடுக்குறேன்’’ என்றார். ‘`நல்லாருக்குமானு பாருங்க’’ என்றேன் அரைமனதாக. 

அப்படி அவரே முடிவு செய்து, கம்போஸ் பண்ணி அவரே எழுதியதுதான், “இசையில் தொடங்குதம்மா’’ என்ற பாடல். முன்பெல்லாம் பாட்டுப்போட்டிகளில் தன் திறமையைப் பார்வையாளர்களுக்குக் கடத்த, `சிந்தனை செய் மனமே’, ‘ஒருநாள் போதுமா’ போன்ற பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது, `ஒருநாள் போதுமா’ பாடலை அதைப் பாடிய பாலமுரளி சாருக்கும் பெரிய வீணை வித்வான்களுக்கும் பாடிக்காட்டியிருக்கிறேன். அப்படி இன்று தனக்குப் பாட வரும் என்பதை நிரூபிப்பதற்காக, பாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் பாடிக்காட்டும் ஒரு ஐக்கானிக் பாடலாக `இசையில் தொடங்குதம்மா’ பாடல் அமைந்திருக்கிறது. இதன்மூலம் பிரபல இந்துஸ்தானி பாடகர் அஜய் சக்கரவர்த்தி அவர்களின் நட்பையும் ராஜா எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.

“பணம், உழைப்பு, நாள்கள்… என்று இந்தளவுக்கு மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறாரே’’ என்று சந்தோஷம். அவரை பதிலுக்கு சந்தோஷப்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் `ஹேராம்’க்கான பின்னணி இசையை புதாபெஸ்ட் கொண்டுபோய் ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து ரீரெக்கார்டிங் செய்வது என்று முடிவு செய்தேன். புதாபெஸ்ட் அழைத்துச் செல்லும்போது அவருடன் வந்தவர்கள் அனைவருக்குமே அந்த வடிவம், தொழில்முறை அனைத்தும் புதிதாகவும் வேறாகவும் இருந்தன. ஆனால், அவர்களை ஒன்று சேர்த்தது இசை மட்டுமே. அங்கேயும் வேட்டிகட்டிக் கொண்டு, குளிருக்குக் குல்லாவெல்லாம் போட்டுக்கொண்டு வந்து நின்ற ராஜாவை, அங்குள்ளவர்கள் “இவரா கம்போஸர்?’’ என்பதுபோல் பார்த்தனர். 

அவர்களின் முகத்தில், “இந்தியாவுல இருந்து ஏதோ வந்திருக்காங்க. அவங்களுக்கும் பண்ணணுமே’’ என்ற சலிப்பு தெரிந்தது. “இது சரியில்லை, அது சரியில்லை’’ என்றார்கள். ராஜாவை வைத்துக்கொண்டு அவர்கள் அப்படிப் பேசியது எனக்குக் கோபத்தை வரவழைத்தது. “காசு கொடுத்து வந்திருக்கோம். எங்க ஆளுக்கு இது இது வேணும்னு கேட்கிறார். அதைச் செஞ்சுகொடுக்க வேண்டியது உங்க வேலை. ஏன் இவ்வளவு சலிப்பு’’ என்று அவர்களை அதட்டினேன். 

ஆனால், அவர்கள் திறமையான இசைக்கலைஞர்கள். தியேட்டரை நம்புபவர்கள். ஒருவருக்கொருவர் பேப்பர் கொடுப்பதில் ஏதோ ஒரு பிசகு நடந்திருக்கிறது என்பது தெரிந்தது. நான் அதட்டியதால் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சற்று இறுக்கமாகவே வேலையை ஆரம்பித்தனர். பிறகு இவர் கொடுத்த பேப்பரை அங்கிருக்கும் இசைக்கலைஞர்களின் முன் வைத்ததும் அதை அவர்கள் 10 நிமிடங்கள் கவனித்தனர். பின்,  ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். பிறகு அங்கிருக்கும் கண்டக்டர், பேட்டனைத் தட்டி, `ரிகர்சல் பார்க்கலாம்’ என்று உற்சாகத்துடன் அந்தக் குச்சியை ஆட்டியவுடன் இசைக்கலைஞர்கள் அனைவரும் அந்த இசையைப் புரிந்துகொண்டு ஒரே சமயத்தில் இசைத்தபோது எனக்குப் புல்லரித்துவிட்டது. `ராஜா என்ன பண்ணுகிறார்’ என்று திரும்பிப் பார்த்தால், அவரின் கண்களில் கண்ணீர். 

ஏனெனில், குழுவில் உள்ள எல்லோருக்கும் சொல்லிப் புரியவைத்து அந்த ஒலியை வரவழைக்க அவர் அவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அரைநாளாவது ஆகும். ஆனால் பத்தே நிமிடங்களில் புதாபெஸ்ட்டில் அவர்கள் அதை வாசித்ததும், `இது என்ன இசை’ என்று யாரோ போட்ட இசையைக் கேட்பதுபோல் நின்ற இளையராஜாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அதை யாரோ ஒருவர் போட்டோ எடுத்ததாகவும் நினைவு. ‘`யாரோ போட்டமாதிரி நீங்க என்னங்க இப்படி ரசிக்கிறீங்க. உங்க மியூசிக்தாங்க’’ என்றேன். அதன்பிறகு அங்கிருந்த இசைக்கலைஞர்கள் ராஜாவிடம் நடந்துகொண்ட முறையே வேறாக இருந்தது. சென்னையில் அவர் வரும்போது எப்படிச் சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்று வணக்கம் சொல்லி வழிவிடுவார்களோ அப்படி புதாபெஸ்டிலும் அடுத்தநாள் ரெக்கார்டிங்குக்காக வந்தவரை, `மேஸ்ட்ரோ, மேஸ்ட்ரோ… மேஸ்ட்ரோ’ என்று அழைத்து ஒதுங்கி வழிவிட ஆரம்பித்தனர். இப்படி `ஹேராம்’ படம் மூலம் ராஜா, இசையில் வேறொரு அனுபவத்தைத் தந்தார். அதனால்தான், இசையமைப்பாளர்களாக ஆசைப்படுபவர்களுக்கு `ஹேராம்’ பட இசை ஒரு மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் என்றேன்.

“ ‘ஹேராம்’ படத்தில் நடந்த இந்த விஷயத்தை ஊர் ஃபுல்லா தண்டோரா போட்டுச் சொல்லணும்ங்க’’ என்று நான் சொன்னபோது,  ‘`அதெல்லாம் பண்ணக் கூடாது. ரொம்பத் தற்பெருமையா இருக்கும்’’ என்றார் ராஜா. நானும் சில பேட்டிகளில் இதைச் சொல்ல முற்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் செய்த சாதனையை ஒவ்வொரு வரியாகப் போட்டுக் காட்டி, எது எதுவாக மாறியது என்று சொன்னால்தான் புரியும். அதாவது கிட்டத்தட்ட காளமேகம் புலவர் ஒரு பாட்டுக்கு இரண்டு அர்த்தம் வருவதுபோல் சிலேடைப் புலமையால் பாடுவார் என்பார்களே, அப்படி இசையில் பல்வேறு அர்த்தங்கள் கண்டறியும் இசைக் காளமேகம் இவர். 

இப்படி நிறைய சம்பவங்கள் உள்ளன. `விருமாண்டி’யில் நடந்த இரண்டு விஷயங்கள் சொல்கிறேன். பாடல்கள் தவிர, அந்தப் படக் காட்சிகள் அனைத்தையும் ஷூட் செய்துவிட்டு வந்து படத்தை அவருக்குப் போட்டுக்காட்டினேன். “என்ன கமல், இப்படி வெட்டுக் குத்தா இருக்கு. ஓலமே கேக்குதே’’ என்றார். ‘`வெட்டுக்குத்தைப் பற்றிச் சொல்லும்போது ஓலம் தன்னால வரத்தானே செய்யும்’’ என்றேன். `‘உங்க மூடு அப்படி இருக்கிறதால இப்படியான படங்கள் எடுக்குறீங்களா’’ என்றவர், ‘`காமெடிப் படங்கள் எடுங்க’’ என்றார். ‘`எடுக்கலாம். இது எனக்கு ஆசையா இருக்கு’’ என்றேன். ‘`சரி, முடிவு பண்ணிட்டா பண்ணிட வேண்டியதுதான். வாங்க’’ என்றபடி கம்போஸிங்குக்கு வந்தார். 

ஒரு ட்யூன் வந்தது. ‘`பிரமாதமா இருக்குங்க. இதுக்கு ஒரு நல்ல கவிஞரை வெச்சு எழுத வைக்கணும்’’ என்றேன். ‘`அதெல்லாம் நீங்க சொல்லப்படாது’’ என்றார். எனக்கு என்னவென்று புரியவில்லை. அமைதியாக இருந்தேன். ‘`சரி, இப்ப என்ன பண்றீங்க. இங்க உட்கார்ந்து இந்த ட்யூனுக்குப் பாட்டு எழுதிக்கொடுத்துட்டுப் போங்க’’ என்று ஒரு பேப்பரை என் கையில் திணித்துவிட்டு, தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். ‘`என்னங்க விளையாடுறீங்களா, நான் டைரக்ட் பண்ணிட்டிருக்கேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நான் போகணும்’’ என்றேன். `‘அதெல்லாம் தானா வரும். போங்க, எழுதுங்க’’ என்றார். “எனக்கிருக்குற டென்ஷன்ல முதல்வரியே வராது. முதல் வரியையாவது சொல்லுங்க. அதுல இருந்து புடிச்சிக்கிட்டு எழுதுறேன்’’ என்றேன். “சொல்லட்டுமா’’ என்றவர், “உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல… ஒண்ணுமில்ல…’ என்று பாடலாகவே பாடியவர், `போங்க, இப்ப எழுதிக்கொடுங்க’ என்றார். ஆமாம், அந்த முதல் வரி இளையராஜா அவர்களுடையது. 

பிறகு அந்தப் பாடல் ரெக்கார்டிங். ஸ்ரேயா கோஷல் தன் வசீகரிக்கும் குரலில் அழகாகப் பாடியிருந்தார். `உங்களுக்கு நீங்கதான் பாடுறீங்க’ என்றார் ராஜா. “ஏங்க அவங்க நல்லா பாடியிருக்காங்க. விட்டுடலாமே’’ என்றேன். “இல்ல, நீங்க பாடுங்க’’ என்றார். சமயத்தில் சிலர், அழகான பாட்டை பெரிய ஆர்க்கெஸ்ட்ரா போட்டு `ஜங்கர ஜங்கர’ என்று சத்தம் எழுப்பிக் கெடுத்துவிடுவார்கள். ஆனால் ராஜா, அந்தப் பாட்டுக்கு சத்தம் கூட்டாமல் வெறும் ஆறு இன்ஸ்ட்ருமென்ட்டுகள் மட்டுமே வைத்து ஒலி கோத்தார். அந்த ஆறுமே ஒன்றோடொன்று பிசிரில்லாமல் தனித்தனியாகக் கேட்கும். என் டீமில் உள்ளவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று என்னைப்போலவே ராஜாவுக்குத் தெரியும். எங்களுக்குப் பிடித்ததை, விருப்பமானதை அதில் கொண்டுவந்து சேர்த்துவிடுவார். 

அப்போது சந்தானபாரதியின் தம்பி சிவாஜி சின்னமுத்து என்னுடன் இருந்தார். “ `காட்டு வழி காளைகள்…’னு வர்ற இடத்துல காளைகளோட கழுத்துமணிச் சத்தம் சேர்த்தா நல்லா இருக்கும். அந்த பெல் சத்தங்கள் பதிவு பண்ணின வீடியோ ரெக்கார்டிங் என்கிட்ட இருக்கு. அதைக்கேக்குறீங்களா’’ என்றார் ராஜாவிடம். `சேர்த்தா கண்டிப்பா நல்லா இருக்கும். வாங்குய்யா அதை’ என்றார். வீடியோ கேமராவிலிருந்து வந்த சவுண்டை ட்ரீட் பண்ணி, அதைப் பாட்டுக்கு நடுவில் எடுத்துப் போட்டுக்கொண்டார். அது, அவ்வளவு பொருத்தமாக இருந்தது. 

சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தோஷப்பட்டுக் கண்கலங்கக்கூடிய அந்த இளகிய மனதுதான் அவரின் இசையையே பெரிதாக்குவதாக எனக்குத் தோன்றும். ‘விருமாண்டி’யில் மற்ற பாடல்களை முத்துலிங்கம் சார் எழுதினார். அதில் ஒன்று, அப்பத்தாவைப் பற்றிப் பாடும் ஒப்பாரிப் பாடல். `மாடவிளக்கை யார் கொண்டுபோய் தெருவோரம் ஏற்றினா? மல்லிகைப்பூவை யார்கொண்டு முள்வேலியில் சூட்டினா?’ என்ற பாடல். அதில், `ஆறாக நீ ஓட, உதவாக்கரை நான்’ என்று ஒரு வரி எழுதியிருந்தார்.  அதைப் படித்துவிட்டு ராஜாவும் நானும் நேருக்குநேர் பார்த்து, `உதவாக்கரைனு வையிறதுக்கான அர்த்தத்தை இதுநாள்வரையிலும் நாம சரியா புரிஞ்சுக்கலையே’ என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது ராஜாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. முத்துலிங்கத்தின் கைகளைப்பிடித்தபடி பாராட்டினார். அந்த நெகிழ்வு எனக்கு ராஜாவிடம் மிகவும் பிடிக்கும். அந்த நெகிழ்வு இல்லாத எந்தக் கலைஞர்களும் பணி ஓய்வு பெற்றுவிடலாம். இந்தச் சின்னச் சின்ன விஷயங்களை ரசிக்க முடியாதபோது அவர்கள் எல்லோருமே ஒருமாதிரி வெறுத்து சக்கையாகிவிட்டார்கள் என்றே அர்த்தம். எங்களை எளிதாக அழவெச்சிடலாம். ‘உதவாக்கரை’னு ஒரு வார்த்தைக்காக இப்படியா கொண்டாடுவது’ என்றால், கொண்டாடத்தான் வேண்டும். அந்தமாதிரியான சின்னச் சின்ன கொண்டாட்டங்களில்தான் இளையராஜாபோன்ற ஒருவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடிந்தது. இதேபோல எத்தனை சின்னச் சின்ன கொண்டாட்டங்களுக்கு அவர் தன் இசையின் மூலம் காரணமாக இருந்திருப்பார்?

வாலி சாரின் கோபம் தமிழ்க்கோபம் என்றால், ராஜாவினுடையது இசைக்கோபம். அவரின் ரெக்கார்டிங் தியேட்டர் போகும்போது, `பட்டர் என்ன பண்றார்?’ என்று கேட்டுவிட்டுதான் உள்ளே போவேன். ஆமாம், ராஜா, அபிராமிபட்டர் மாதிரி. டக்கென `போடா’ என்று சொல்லிவிடுவார்.  அதைக்கேட்பதற்கே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். காதலியாக இருந்தால் இன்னொரு முறை சொல்லக் கேட்டு ரசிக்கலாம். இவர் ராஜாவாயிற்றே, கேட்டுவிட்டு அப்படியே ஓடிவந்துவிட வேண்டும்.

ஆனால், அது செல்லக்கோபம்தான். வாலி சாருக்கெல்லாம் இவ்வளவு மரியாதை தருபவர் இல்லை என்பேன். நான்கூட சமயங்களில் வாலி சாரை எதிர்த்துப் பேசுவேன். வாதாடுவேன். ஆனால் இவர், `ஏங்க சும்மாயிருங்க. அவர்ட்ட அப்படியெல்லாம் பேசக்கூடாது. பெரிய மனுஷன் சொல்றார். கேட்டுட்டுப் போறதைவிட்டுட்டு, அவர்ட்டபோய் வாக்குவாதம் பண்றீங்க. நாமதான் பொறுமையா இருந்து வாங்கணும். இருங்க, நான் வாங்கித்தர்றேன்’ என்று என்னை சீனிலிருந்து ஓரங்கட்டிவிட்டு, எனக்காக அவர் வேலை செய்வார். ஒருமுறை பிரகாஷ்ராஜ், `உங்கப் பேச்சை எடுத்தால் அவருக்குக் கண் பளபளக்குதுங்க’ என்றார். உண்மைதான், இது இருவருக்குமான மியூச்சுவல் புரிந்துணர்வு. 

எனக்கு அவரைத் தெரியும் என்பதையும் தாண்டி அவர் எனக்கு உறவாகவே மாறிவிட்டார் என்பதே எனக்குப்பெருமை. இளையராஜா என்கிற கலைஞனை நண்பராக்கி, பிறகு என் சகோதரராகவே ஏற்றுக்கொண்டவன். சந்திரஹாசன் அவர்களின் இழப்புக்குப் பிறகு, `அவரின் இடத்தை நாங்கள் நிரப்புகிறோம்’ என்று என்னுடன் நிற்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இளையராஜா. ஆம், சந்திரஹாசன் அவர்களின் இடத்தை நான் அவருக்குத் தந்திருக்கிறேன். 

இத்தனை ஆண்டுக்காலப் பயணத்தில்… எத்தனையோ பிசகுகள் நேர வாய்ப்புள்ள துறை. இருவருமே கோபக்காரர்கள். காசு, கருத்துவேறுபாடு… என்னென்னமோ இருக்கின்றன. நான் பகுத்தறிவு பேசுகிறவன். அவர் மிகத் தீவிர ஆன்மிகவாதி. ஆனாலும் அவரிடம் பேசும்போது என் கருத்தை அடக்கிவாசித்ததே கிடையாது. ஆனால், அதற்கு இருவருமே இடம்கொடுக்காத அளவுக்கான அன்பு எங்கோ அனைத்தையும் பூசிமெழுகிவிட்டது.

எப்படி பாலசந்தர் சார், சிவாஜி சார், கண்ணதாசன், வாலி, நாகேஷ், ஜெயகாந்தன்…  பற்றிப் பேசும்போதெல்லாம் சந்தோஷத்தில் நெஞ்சு விம்முமோ, அப்படி இவரைப்பற்றி அழாமல் பேசுவது சிரமம். இவர்தான் இளையராஜா என்று தெரியாமல் ஆரம்பித்ததிலிருந்து, சின்ன கேசட் கடைகளில் இவரின் படத்தைப் போட்டு தமிழகமே கொண்டாடிக்கொண்டு இருப்பது கடந்து, அவருடனான என் 100 படங்கள், மொத்தமாக அவரின் ஆயிரம் படங்கள்… என்று அவரின் பயணத்தைப் பார்க்கையில் ஏதோ இவரை நானே கண்டறிந்ததுபோலவும் இசை கற்றுக்கொடுத்துக் கூட்டிவந்ததுபோலவும் எனக்கு அவ்வளவு பெருமை. 

ஒரு விஷயம் சொல்லட்டுமா, 30 வருடம் முன்பு கேட்டு இருந்தாலும் இதையேதான் பேசியிருப்பேன். அன்று அப்படிப் பேசியிருந்தால், `இன்னும் படம் பண்ண வேண்டியிருக்கு. அதனால் காக்கா பிடிக்கிறான்யா’ என்றெல்லாம் நினைத்திருப்பார்கள். அதனால் 30 வருடங்கள் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்கிறேன். ஆம், எங்கள் ராஜா நடந்து வந்தாலும், தவழ்ந்து வந்தாலும் இவரின் இசை யானை மீதுதான் வரும் என்பது எனக்கு அப்போதே புரிந்திருந்தது. அதைத்தான் எனக்கான பெருமையாக நினைக்கிறேன்.

Exit mobile version