ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா அவமானம் உண்டாக்குகிற விதத்தில் வெளியேறிச் செல்வது, ஆப்கன் தேசிய ராணுவம் நிலைகுலைந்திருப்பது, ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டைவிட்டு ஓடிவிட்டது, தலிபான் மிகவும் வேகமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருப்பது அனைத்தும் அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சிப்போக்குகளாகும்.
அமெரிக்காவும், அதன் நேட்டோ படையினரும் ஆப்கானிஸ்தானத்திற்குள் நுழைந்து, அங்கே இருந்த தலிபான் ஆட்சியைக் கவிழ்த்து இருபதாண்டுகளுக்குப் பின்னர், தலிபான் மீண்டும் காபூலில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்கா 2 டிரில்லியன் டாலர்களுக்கும் மேலாக செலவு செய்திருக்கிறது. அது ஆக்கிரமித்திருந்த சமயத்தில் மிகவும் உச்சபட்சமாக 1 லட்சத்து 30 ஆயிரம் நேட்டோ படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். தேசிய ராணுவத்தை உருவாக்கிட 88 பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டது. இந்தக் கணக்கில் இங்கிலாந்தும், இதர நாட்டோ நாடுகளும் செலவு செய்த பல பில்லியன் டாலர்கள் கணக்கில் கொண்டுவரப்படவில்லை.
மேலும் கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவும் அதற்கு ஆதரவான மேற்கத்திய நாடுகளும் ஆப்கனில் உருவாக்கிய “ஜனநாயக” அரசானது அங்கே வான்வழியாக அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழிந்ததில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்தது இந்தக் கணக்கில் கொண்டு வரப்படவில்லை. வான்வழித் தாக்குதலில் ஆப்கன் மக்களில் 40 சதவீதத்தினர் இவ்வாறு கொல்லப்பட்டனர். அதன்காரணமாகத்தான் அஷ்ரப் கனி அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் நற்பெயர் கிடையாது. மேலும் லஞ்ச ஊழலில் திளைத்த ராணுவத்தினர் செய்த அட்டகாசங்களையும், அடாவடித்தனங்களையும் அனைத்து ஊடகங்களும் இதுநாள்வரையில் வேண்டுமென்றே மூடிமறைத்து வந்தன.
2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் ஜனாதிபதி புஷ், “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்” எனப் பிரகடனம் செய்வதற்கு முன், ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆப்கானிஸ்தானத்தில் தலிபான் ஆட்சி மீதும், ஒசாமா பின் லேடன் மீதும் அது ஏவிய தாக்குதல்கள் மற்றும் 1980களில் ஆப்கானிஸ்தானத்தில் நிலைகொண்டிருந்த சோவியத் துருப்புகளுக்கு எதிராக முஜாஹிதீனால் ஏவப்பட்ட “ஜிகாத்” தாக்குதல்கள் முதலானவை இவற்றின் விளைவுகள் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஒசாமா பின் லேடன் மற்றும் “ஜிகாத்” என்பதன் கீழ் திரட்டப்பட்ட பல்வேறு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுக்கும் அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சிஐஏ மூலமாக நிதி உதவிகள் அளிக்கப்பட்டன. அவை பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐஎஸ்ஐ மூலமாகக் கைமாறின. இவை பின்னர் அல்-கொய்தா இயக்கமாக பரிணமித்தது. தலிபானைப் பொறுத்தவரை, அவர்கள் ஆப்கன் முஜாஹிதீன் படையினரின் சந்ததியினராவார்கள். இவர்கள் பெரும்பகுதியினர் பாஷ்டுன் தேசிய இனத்தைச் (Pashtun nationality) சேர்ந்தவர்கள்.
ஜனாதிபதி புஷ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் தங்களுடைய மேலாதிக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கைகளை எடுத்தனர். ஆப்கனுக்கு அடுத்த இலக்கு, ஈராக்காக இருந்தது. இதனை அவர்கள் 2003 மார்ச்சில் மேற்கொண்டனர்.
இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் மிகவும் வஞ்சகமான நடவடிக்கை, அல்-கொய்தா இயக்கத்துடன் சதாம் உசேன் தொடர்பு வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டதாகும். உண்மையில் சதாம் உசேன், மதச்சார்பற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் ஒரு “நாத்திகர்” என்று ஒசாமா பின் லேடனால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் இவர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் லிபியா, சிரியா என விரிவடைந்து ஏராளமான அளவில் அழிவினை ஏற்படுத்தியது.
எங்கெல்லாம் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றனவோ அங்கெல்லாம் பயங்கரவாதமும், பயங்கரவாத நடவடிக்கைகளும் முளைத்திடும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதன்பின்னணியில்தான் ஈராக்கிலும், சிரியாவிலும் அல்-கொய்தா மற்றும் அதனைவிட மோசமான ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ என்னும் அமைப்புகளும் முளைத்தன. லிபியா நாசமாக்கப்பட்டபின்னர், பல்வேறு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் உருவாயின. பின்னர் அவற்றின் செல்வாக்கு வட மேற்கு ஆப்ரிக்காவிற்கும் பரவியது. இவ்வாறாக இப்பகுதிகளில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் பயங்கரவாத இயக்கங்களும் ஒன்றையொன்று காரணமாகக் கூறிக்கொண்டு வளர்ந்தன.
தலிபான் இயக்கத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான அடிப்படைவாத குணத்தின் காரணமாக அது ஆப்கானைக் கையகப்படுத்தி இருப்பது மிகவும் ஆழமானமுறையில் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிப்போக்காகும். ஆப்கானிஸ்தானத்தின் ஆட்சியில் தலிபான் இயக்கமும் இணைக்கப்பட்டிருப்பதானது, ஆப்கனின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற நிலையினை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு இனத்தினருக்கிடையேயுள்ள வேற்றுமைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களை அது எப்படி நடத்தப் போகிறது என்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் புதிய தலிபான் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்திடும் ஆப்கன் அரசு எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. முன்பிருந்த தலிபான் ஆட்சி இம்மூன்று பிரச்சனைகளிலும் மிகவும் மிருகத்தனமாகவும், பிற்போக்குத்தனமாகவும் நடந்துகொண்டது.
ஆப்கன் நிலைமைகள் குறித்து ஆராய்ந்திட, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்றது. அதில் ஆப்கன் மண்ணில் அல்-கொய்தா மற்றும் ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது என்ற ஒரு பொதுவான புரிதலுடன் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, இந்தியாவும் மிகவும் கவலைப்படக் கூடிய ஓர் அம்சமாகும். தலிபான், ஆப்கானிஸ்தானத்தில் உள்ள இந்தியத் திட்டங்களை குறிவைத்துள்ள சிராஜுதின் ஹக்கானி (Sirajuddin Haqqani faction) அமைப்புடனும் இணைந்துள்ளது.
ஆப்கனில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, இந்தியாவுக்கும் பல படிப்பினைகளை அளித்திருக்கிறது. 2001இலிருந்தே அப்போது இந்தியாவில் ஆட்சியிலிருந்த வாஜ்பாயி அரசாங்கம் ஆப்கானிஸ்தானத்தில் நுழைந்த அமெரிக்காவின் ராணுவத்திற்கு தன்னுடைய முழுமையான ஆதரவை அளித்துப் பிரகடனம் செய்தது. உண்மையில், இந்தியா அளித்திட்ட கடல்வழி மற்றும் விமானவழி வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளவில்லை. இது, இந்தியாவுக்கு ஏமாற்றமேயாகும். மாறாக இவற்றுக்கு அமெரிக்கா, பாகிஸ்தானைத்தான் சார்ந்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, அமெரிக்காவுடன் உறவினை வலுப்படுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது இந்தியா அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக மாறி இருக்கிறது. மோடி அரசாங்கம், அமெரிக்காவுடன் கையெழுத்திட்டுள்ள பல ஒப்பந்தங்கள் இந்தியா-அமெரிக்காக் கூட்டணிக்கு ஒரு ராணுவ குணத்தை அளித்திருக்கிறது. இதில் நான்கு நாடுகள் (Quad என்கிற Quadrilateral Allianbce)கூட்டணி குறித்த ஒப்பந்தம் இறுதி நடவடிக்கையாகும். இவ்வாறு இந்தியா, அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்தியிருப்பதன் மூலம் இந்தியாவின் ராணுவத்தை இந்தியா சுதந்திரமாகச் செயல்படுத்துவதற்கான உரிமைகளை விட்டுக்கொடுத்திருக்கிறது. மேலும் இந்தியாவின் சுயேச்சையான அயல்உறவுக் கொள்கையும் அரித்துவீழ்த்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, தன்னுடைய மேலாதிக்கக் கொள்கையை மேற்கு ஆசியாவில் வலுப்படுத்திடுவதற்காக, “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை” ஏவுகிறது என்றால், இதன் பொருள், நான்கு நாடுகள் ராணுவக் கூட்டணி மூலம், அது சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் தனிமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையிலானதேயாகும்.
சென்ற வாரம், இந்தியாவின் அயல்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்காவுடன் கிழக்கில் ஒருங்கிணைப்பு உள்ள அதே சமயத்தில், மேற்கில் குறிப்பாக ஆப்கானிஸ்தானத்தில் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறினார். இதன் பொருள், இந்திய அரசாங்கம், அமெரிக்க ராணுவம் முன்கூட்டியே ஆப்கனிலிருந்து வெளியேறியிருப்பதற்குத் தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள அதே சமயத்தில், அமெரிக்கா இந்தியாவுடன் சமீபத்தில் கையெழுத்திட்ட நான்கு நாடுகள் ராணுவக் கூட்டணியைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பியது என்பதேயாகும்.
மோடி அரசாங்கம் என்னதான் அமெரிக்காவுடன் ஒட்டி உறவாட முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், ஆப்கன் கொள்கையில் அமெரிக்கா இந்தியாவைத் தனிமைப்படுத்தி விட்டது என்பதைப் பார்க்க முடிகிறது.
1996க்கும் 2001க்கும் இடையே தலிபான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த சமயத்தில் அதற்கு எதிராக வடக்கத்திய கூட்டணி (Northern Alliance)யில், ரஷ்யாவும், ஈரானும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால் இப்போது இவ்விரு நாடுகளும் தலிபானுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவர்கள் சீனாவுடன் சேர்ந்து, தலிபான் ஆப்கனைக் கைப்பற்றுவதற்கு முன் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றன. மோடி அரசாங்கத்தின் குறுகிய பார்வையுடன்கூடிய பாகிஸ்தான் எதிர்ப்பு, சீன எதிர்ப்புக் கொள்கையானது இந்தியாவை அதன் அண்டை நாடுகள் அனைத்திடமிருந்தும் தனிமைப்படுத்தி இருக்கிறது. அது தன்னுடைய அயல்துறைக் கொள்கையையும், அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டணியையும் மறுபரிசீலனை செய்யாவிட்டால் மோடி அரசாங்கமானது வரவிருக்கும் காலங்களில் அண்டை நாடுகளுடன் ஒரு விரோதமான சூழலையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆப்கன் நிகழ்ச்சிப் போக்குகளின் விளைவாக தெற்கு ஆசியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்வதற்கான ஆபத்தும் இருக்கிறது. பாஜக அரசாங்கம் பின்பற்றிவரும் இந்துத்துவாக் கொள்கைகளும், இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லீம் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுதலும், இத்தகைய இஸ்லாமிய தீவிரவாத செல்வாக்குகள் வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்தியா, உறுதியான முறையில் மதச்சார்பற்றக் கொள்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே இத்தகைய போக்குகளைத் தடுத்து நிறுத்த முடியும்.
ஆப்கன் மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே காலங்காலமாக மிகவும் நெருக்கமான முறையில் வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் உறவுகள் இருந்து வந்திருக்கின்றன. எனவே ஆப்கன் மக்களின் உடனடிக் கவலைகளைப் போக்கும் விதத்தில் இந்திய அரசாங்கம் சில நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும். இந்தியாவிற்கு அகதிகளாக வரவிரும்பும் ஆப்கன் மக்களுக்கு அடைக்கலம் அளித்திட வசதிகள் செய்து தர வேண்டும். நம் நாட்டில் பல இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆப்கன் மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் விசாக்கள் புதுப்பிக்கப்பட வேண்டியிருக்கும் அல்லது கால அளவு நீட்டிக்கப்பட வேண்டியிருக்கும். அவர்களின் தேவைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான கல்வி உதவிப்பணம் மற்றும் மான்யங்கள் மூலமாக அவர்களுக்கான நிதி உதவியும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
ஆப்கன் தொடர்பான புதிய கொள்கையின் இதயம், ஆப்கன் மக்களின் நலன்களைச் சார்ந்திருக்க வேண்டுமேயொழிய, அங்கே நிலவும் புவியியல்-அரசியல் அதிகார விளையாட்டின் அடிப்படையில் இருந்திடக்கூடாது.
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
தமிழில்:ச. வீரமணி
ஓகஸ்ட் 18, 2021