Site icon சக்கரம்

கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைந்தார்!

-யூமா வாசுகி

மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் ஒரு மேன்ஷனில் அஜயன்பாலா தங்கியிருந்தார். அப்போது எனக்கு வசிப்பிடம் பழவந்தாங்கல். நகரத்துக்குப் போகும்போதும் வரும்போதும் பல நேரங்களில் தியாகராய நகரில் இறங்கி பாலாவைச் சந்திப்பதுண்டு. அங்குதான் பிரான்சிஸ் கிருபாவையும் முதன்முதலில் சந்தித்தேன். அப்போது கிருபா அழகான கையெழுத்தில் சில கவிதைகள் எழுதி வைத்திருந்தார். அதே மேன்ஷனிலேயே வேறொரு அறையில் இருந்த அவர், மிகுதியான உற்சாகத்துடன் கவிதைகளைக் கொண்டுவந்து காட்டினார். அவற்றில் ஒன்று, இன்றும் நினைவில் இருக்கும் ‘கல் மத்தளம்’ எனும் கவிதை. அந்தக் கவிதைகளைப் படித்ததும் எனக்கு ஆனந்தம்.

நான் தினமும் இரவுகளில் அங்கே செல்லத் தொடங்கினேன். கிருபாவுக்கும் எனக்குமான நெருக்கம் வலுவடையத் தொடங்கியது. நான் அவர் கவிதைகளின் தீவிர ரசிகன் ஆனேன். அங்கே செல்லும்போதெல்லாம் அவர் எனக்கென்று புதுப்புது கவிதைகள் வைத்திருப்பார். வயிற்றில் கொடும் பசி தகித்தாலும் அவர் பேரூக்கத்துடன் படைத்துக்கொண்டிருந்த காலம் அது. எனக்கும் அங்கொன்றும் இங்கொன்றும் சில பத்திரிகைகளுக்குப் படம் வரைந்து, அதில் கிடைக்கும் சொற்பம்தான் சம்பாத்தியம். நகரத்தில் எங்கெங்கோ சுற்றியலைந்து, இறுதியில் பழவந்தாங்கல் செல்லும் வழியில் தியாகராய நகரில் இறங்கினால், அங்கே கிருபா எனக்காகக் காத்திருப்பார். நாங்கள் எங்களிடமிருக்கும் சில்லறைகளையெல்லாம் தட்டிக்கொட்டிச் சேர்த்து, ஆக மொத்தம் தேறுவதைக் கணக்கிடுவோம். சில இட்லிகள் சாப்பிடும் அளவு காசு இருந்தால் அது மகத்துவப் பொழுதுதான், கொண்டாட்டம்தான்! மூச்சுமுட்டுமளவு கவிதைகளில் முக்குளிக்கும் அதுபோன்ற நாட்களில் 12 மணி கடைசி ரயிலுக்குத்தான் அறை திரும்புவேன். அடுத்த நாளும் செல்வேன். இல்லையென்றால் அவர் என்னைத் தேடி வருவார். ஒருநாள் அவரை என் அறைக்கு அழைத்து நான் வரைந்த அவரது கோட்டோவியம் ஒன்றைப் பரிசளித்தேன். அதைப் பார்த்து குழந்தைக் களிப்பு அவருக்கு. அவரைப் பற்றி எழுதிய ‘கசங்கல் பிரதி’ என்ற கவிதை ஒன்றையும் அப்போது பரிசளித்தேன். இந்தக் கவிதை பிறகு அவரது கவிதை நூல் ஒன்றின் முன்னுரையாக இடம்பெற்றது.

தமிழினி பதிப்பகம் வசந்தகுமார் அண்ணாச்சியிடம் நான் கிருபாவைப் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் பல சந்தர்ப்பங்களில் பேசி, தமிழினியில் அவரது கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அவர், ‘சரி, கொண்டுவாருங்கள், படித்துப்பார்ப்போம்’ என்றார். கிருபா கவிதைகள் அவரை ஆட்கொள்ளும் என்பதில் எனக்குத் தீவிர நம்பிக்கை.

பிறகு கிருபாவின் கவிதைகளை நான் அண்ணாச்சியிடம் சேர்ப்பித்தேன். என் நம்பிக்கை கோலாகலமாக வென்றது. அப்போது கவிதைகள் அவரை வசப்படுத்தியதானது, கிருபாவின் படைப்பு வாழ்க்கையின் அதிபிரகாசத் தொடக்கமானது. இந்தத் தொகுப்புக்கு நீங்களே ஒரு பெயர் வைத்துவிடுங்கள் என்றார் அண்ணாச்சி. நான், ‘மெசியாவின் காயங்கள்’ என்பதைத் தேர்ந்தேன். அண்ணாச்சி கிருபாவை தீரா வாஞ்சையுடன் மனதிலேந்திக்கொண்டார். அடுத்தடுத்து தமிழினியில் கிருபாவின் தொகுப்புகள் வெளிவந்தன. அவருக்கு வாசகர்களும் ஆதரவாளர்களும் பெருகினார்கள். நவீனத் தமிழ்ப் படைப்புலகில் பேராளுமையாக அவர் உருவானார். கவிதையிலும், தன் ‘கன்னி’ நாவலின் மூலம் உரைநடையிலும் அவர் மிகக் காத்திரமான பங்களிப்பைச் சேர்த்திருக்கிறார். சிறு வயதிலேயே அரிய சாதனையை நிறுவியிருக்கிறார். அறிந்தே பலர் இதைப் புறக்கணிப்பது வெளிப்படை. இதற்குக் காரணம் அவரது எளிமைதான். ஒருபோதும் கிருபா அங்கீகாரங்களை எதிர்பார்த்தது இல்லை. இலக்கிய ஷோக்குப் பேர்வழிகள் பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றின் மூலமாக விருதுகளைக் கொள்ளைகொள்ள சகல தந்திரோபாயங்களையும் அலுக்காது, சலிக்காது மேற்கொள்ளும் காலத்தில், கிருபா அவை குறித்து எண்ணமேதுமற்றிருந்தார். எந்த நிலையிலும் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். சந்திக்கும்போதெல்லாம், பாக்கெட்டிலிருந்து கவிதைத் தாள்களை எடுத்துப் படிக்கக் கொடுப்பவராக, நேரம் பாராது எப்போது வேண்டுமானாலும் அலைபேசியில் அழைத்துக் கவிதைகளைப் படித்துக்காட்டி கருத்துக் கேட்பவராக, அவர் முற்றுமுழுக்கவும் கவிதைகளுடன் இருந்தார். வாழ்வின் பல நிலைகளில் அவரது கவிதைகள் என்னை மனம் உருகி அழவைத்திருக்கின்றன. மௌனம் பூத்த ஆன்மச் சிலிர்ப்புக்கான, மகிழ்வுக்கான படிகளை சமைத்துக்கொடுத்திருக்கின்றன. கேரளத்தின் ஏதோ ஒரு வயல் ஓரத்திலிருந்து அவரது ‘கன்னி’ நாவலைப் படித்துவிட்டு, சில நாட்கள் உன்மத்தம் பிடித்ததுபோல அந்த நாவலின் வரிகளைப் புலம்பிக்கொண்டிருந்தேன். எனக்கு மட்டும் அல்ல, மிகப் பலரையும் இப்படித்தான் அது பல்வேறு வகைகளில் மன ஆக்கிரமிப்புச் செய்தது. தமிழ் நாவல்களில் அமரத்துவம் பெற்ற படைப்புகளில் ஒன்று அது. தமிழ்க் கவித்துவத்தின் தேவதையாக அதில் அவர் ஒளிர்கிறார்.

இன்னும் இருந்திருக்கலாம் கிருபா, இன்னும் இன்னும் எழுதியிருக்கலாம். தன் உடலை இப்படித் துச்சமாகக் கையாண்டிருக்க வேண்டியதில்லை. குடியின் கொடூரத்துக்கு முற்றிலுமாகத் தன்னை தின்னக்கொடுத்திருக்க வேண்டியதில்லை. சில மாதங்களுக்கு முன்பு கிருபா மிகவும் மோசமாக உடல்நிலை பாதிப்படைந்திருந்த சமயத்தில் அவரைக் காப்பாற்ற கவின்மலரும் நண்பர்களும் பட்டபாடு சொல்லற்கரிது. ஆயினும் மீண்டு வந்தார். அவரை ஏந்திக்கொள்ளப் பல கரங்கள் மனமுவந்து நீண்டன. அவர் பிடிகொடுக்கவில்லை. ‘சற்றே கவனம்கொள் நண்பனே’ எனும் பணிந்த மன்றாடலுக்கும் அவர் செவிசாய்க்கவில்லை.

கிருபாவின் மதுப் பழக்கம் குறித்த சஞ்சலப் பேச்சினிடையில் எப்போதோ வசந்தகுமார் அண்ணாச்சி சொன்னார்: “இவங்கெல்லாம் இப்படித்தான், தம்பி. நம்மால திருத்த முடியாது. காத்தைப் போல, மழையைப் போல, வெயிலைப் போல வருவாங்க, இந்த உலகத்துக்குக் கொடையளித்துவிட்டுப் போயிடுவாங்க!”

போய்வா என்று சொல்ல முடியவில்லை, மனம் வலிக்கிறது. தமிழுக்கு நீயளித்த கொடை பெரிது நண்பனே, என்றும் அது வாழ்ந்திருக்கும்.

பிரான்சிஸ் ஏன் உங்களைக் கைவிட்டீர்?

– ஆசை

றைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் (1974 – 2021) மொத்தக் கவிதைகள் திரட்டை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் 2018-ல் வெளியிட்டது. அந்தப் பதிப்பின் அட்டையில் ஒரு பசுமையான பூவரச இலையொன்று எந்த வாடலும் இல்லாமல் மணற்பரப்பில் செங்குத்தாகச் செருகியபடி இருக்கும். அது காற்றில் உதிர்ந்த இலைபோலவோ யாரும் பறித்து மணலில் செருகிய இலைபோலவோ இருக்காது. அந்த இலையே தன்னைத் தானே மரத்திடமிருந்து விடுவித்துக்கொண்டு மணலில் செருகிக்கொண்டதுபோல்தான் இருக்கும். பிரான்சிஸ் கிருபாவும் அப்படித் தன்னைத் தானே கொண்டுபோய் காலத்தில் செருகிக்கொண்டுவிட்டார். அகாலத்தில் பிரான்ஸிஸை மரணம் கொத்திக்கொண்டுபோய்விடக் கூடாது என்று அவருடைய நண்பர்களும் வாசகர்களும் துடித்துக்கொண்டிருந்தாலும் அவர் கவிதைகளிலும் நாவலிலும் வரும் கடற்கரையைப் போலத் தன்னை, பெருங்கடலென அலை வீசும் மரணத்திடம் முழுமையாகத் திறந்துகாட்டிக்கொண்டு அவர் நின்றிருந்தார்.

பிரான்சிஸின் மறைவுக்கு இன்று ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியச் சூழலும் துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் சிறிய படைப்புலகம் அவருடையது. ‘மெசியாவின் காயங்கள்’, ‘வலியோடு முறியும் மின்னல்கள்’, ‘நிழலின்றி ஏதுமற்றவன்’, ‘மல்லிகைக் கிழமைகள்’, ‘ஏழுவால் நட்சத்திரம்’, ‘சம்மனசுக்காடு’, ‘பிரான்சிஸ் கிருபா கவிதைகள்’, ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ ஆகிய எட்டுக் கவிதைத் தொகுப்புகளும் ‘கன்னி’ என்ற ஒரு நாவலும் வெளியாகியிருக்கின்றன. இன்னும் சில படைப்புகளுக்கான கனவுகளுடன் பிரான்சிஸ் இருந்ததாக அவருடைய நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

பிரான்சிஸ் உயிரோடு இருந்தபோது வாசகர்கள் கொண்டாடிய அளவுக்குத் தீவிர இலக்கியவாதிகள் கொண்டாடவில்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம், பிரான்சிஸின் படைப்புகளில் காணப்பட்ட ரொமாண்டிசிசம் (கற்பனாவாதம்). ‘பஞ்சுப் பாறைகளின் பரஸ்பர முத்தத்தால்/ பேரொளி நிறைந்து/ ஆகாயம் நெஞ்சு ததும்ப நேரிட/ வீடுகளின் உட்சுவரில்/ நிழல் ஜன்னல்களை/ தற்காலிகமாகப் பொறிக்கிறது/ மின்னல்’ என்ற வரிகளில் காணப்படும் அழகு, பெரும்பாலான நவீன இலக்கிய விமர்சகர்களுக்கும் நவீனக் கவிகளுக்கும் ஒவ்வாதது. இதுபோன்ற கற்பனாவாதக் கூறுகளை பிரமிள், தேவதேவன் ஆகியோரின் கவிதைகளிலும் காணலாம். கற்பனைத் திறனின் உச்சபட்ச சாத்தியங்களை நோக்கிக் கவிஞர்களை அழைத்துச்செல்கிறது என்ற வகையில் கற்பனாவாதத்துக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது.

ஒரே நேரத்தில் அழகையும் வலியையும் பாடிய கவிஞர் பிரான்சிஸ். அவரது கவிதைகளில் வலியானது அழகையும் அழகானது வலியையும் பரஸ்பரம் உண்டுபண்ணுகின்றன. இதற்கான திறவுகோல் அவரது ‘கன்னி’ நாவலில் இருக்கிறது. பிரான்சிஸின் தொகுப்பில் முதலாவதாக இடம்பெற்ற கவிதையில் ‘சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு/ மத்தியில் மல்லாத்தியிட்டு/ தன் வயிற்றில் இறங்கி முழு/ வட்டமடித்த கத்தியைத்/ தலை தூக்கி எட்டிப் பார்த்தது/ ஆமை’ என்று எழுதியிருப்பார். அந்த ஆமையின் கண்களில் ‘உயிர் பிரியும் கணத்தில்/ தம் காயங்களை/ கடைசியாய் பார்வையிட்ட/ மெசியாவின் கண்களை/ பல நூற்றாண்டுகள் கழித்து’ சந்தித்ததாக பிரான்சிஸ் கூறுவார். ஆமையின் கண்களில் மெசியாவை மட்டுமல்ல, தனது மரணத்தையும் முன்கூட்டியே கண்டுணர்ந்து எழுதியிருப்பது போன்ற கவிதை அது.

உடலுக்குள் உயிர் எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறது. காற்றடித்தும் அணையாத சுடர் போன்றது அது. அந்தச் சுடரைப் பற்றியும் சூரியன், ஒளி பற்றியும் பாரதி தீராமல் எழுதியிருக்கிறார், பிரான்சிஸ் கிருபாவும் எழுதியிருக்கிறார். உயிரை, ஆன்மாவை ‘இம்மெழுகுவர்த்தியின்/ உச்சியிலேறி வெளிச்சத்தை/ திரியில் கட்டும் சுடர்’ என்கிறார். ஒளியைச் சூரியன், நிலா, விண்மீன், மின்னல், ஏசுவுக்கு ஏற்றிய மெழுகுவர்த்திச் சுடர் என்று பல வடிவங்களில் போற்றிப்பரவுகிறார் பிரான்சிஸ். ‘புல்லின் தளிர் விரல் நுனியில்/ பனிக்காலம்/ கட்டி முடித்த கண்ணாடித் தீவுக்கு/ விளக்கேற்றுகிறது ஒரு/ விடிவெள்ளியின் முகம்’ என்பதெல்லாம் தூய அழகியல்.

இன்னொரு பக்கம் வலியில் அழகு காண்கிறார் பிரான்சிஸ். ‘தூண்டில்காரனிடம்/ சிக்கிவிட்ட மீன்/ நாசியில் ஊசி நுழைந்த வேதனையோடும்/ புதிய நம்பிக்கையோடும்/ மீதி வாழ்வின் முன்வாசலில்/ மெல்ல நீந்திப் பார்க்கிறது/ பாதியளவு நீர் நிரப்பிய தோள்பையுள்’ என்றொரு கவிதை. இந்தக் காட்சியில் ஒரே நேரத்தில் எவ்வளவு வலியும் நம்பிக்கையும் அழகும் நிரம்பியிருக்கிறது. இந்த மூன்றின் சமனும் வாழ்தலுக்கு மிகவும் முக்கியம். ஆனால், நம்பிக்கையை விடுத்து வலியையும் அழகையும் மட்டும் பிரான்சிஸ் தேர்ந்தெடுத்துக்கொண்டதுதான் அவரை நம்மைவிட்டு இவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்றுவிட்டதோ என்று தோன்றுகிறது.

‘காணி நிலம் வேண்டும்’ என்று பாரதி கேட்டதுபோல் ‘ஒரு துண்டு பூமி/ இரண்டு துண்டு வானம்/…குட்டியாய் ஒரு சாத்தான்/ உடல் நிறைய உயிர்/ மனம் புதைய காதல்/ குருதி நனைய உள்ளொளி/ இறவாத முத்தம்/ என் உலகளவு எனக்கன்பு’ என்று வாழ்தலுக்கான கனவை பிரான்சிஸ் அரிதாக வெளிப்படுத்தியிருந்தாலும் அதை அவர் தன் வாழ்க்கை முழுவதும் தக்கவைத்துக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் தன்னைத் தானே அவர் தண்டித்துக்கொண்டுதானே இருந்தார். இந்த உலகில் எத்தனையோ பேர் நம்மைத் தண்டிக்கட்டும், ஆனால் நம்மை மன்னிப்பதற்கு நாம் மட்டுமாவது இருக்க வேண்டும் அல்லவா. ஆனால், ‘கணங்கள்தோறும்/ என்னை நானே தண்டித்துக்கொண்டிருக்கும்/ போது/ ஏன்/ நீயேனும் கொஞ்சம்/ என்னை மன்னிக்கக்கூடாது!’ என்று யாரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்தார்?

பிரான்சிஸ் மறைந்ததும் ஓவியர் சுபராமன் வரைந்த ஓவியம் பலரையும் உருக்கியிருக்கிறது. ஏசுவைப் போன்று அங்கியணிந்த தோற்றம் கொண்ட ஒருவர், உயிர் பிரிந்த ஏசுவைப் போல இடுப்பில் மட்டும் துணியைக் கொண்டிருக்கும் இறந்த மனிதர் ஒருவரின் சடலத்தை மடியில் தாங்கியிருப்பது போன்ற ஓவியம் அது. இரண்டு பேருமே பிரான்சிஸ்தான். அவரின் கவிதைகள், ‘கன்னி’ நாவல் என அனைத்தையும் வாசித்திருப்பவர்களுக்குத் தெரியும், ஏசு அவரது படைப்புகளில் மிக முக்கியமான ஒரு பாத்திரம், குறியீடு என்று. ‘கன்னி’ நாவலின் தொடக்கத்தில் 90 வயசுக்கும் மேற்பட்ட கிழவராக ஏசு (பெயர் குறிப்பிடப்படாமல்) வருவார். அப்படியென்றால் சிலுவையில் ஏறியது யார்? அது அந்த நாவலின் நாயகனான பாண்டியன்தான் (பிரான்சிஸ் கிருபா). வழிதவறிச் சென்ற ஆட்டுக்குட்டியான தன்னை அணைத்துக்கொள்ள ஒரு அன்னை மரியாளையும், கால்களுக்குப் பரிமளத் தைலம் தடவிவிடும் பெண்ணையும், சிலுவையையும் ஒரே நேரத்தில் வேண்டும் ஒருவராக பிரான்சிஸ் கிருபா தன் படைப்புகளில் தெரிகிறார். ஆனால், நமக்கோ ‘பிரான்சிஸ் பிரான்சிஸ் ஏன் உங்களைக் கைவிட்டீர்?’ என்று கேட்கத் தோன்றுகிறது.

இந்து தமிழ்
2021.09.18

ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்

-ஜெயமோகன்

பிரான்ஸிஸ் கிருபா மறைந்த செய்தி செப்டம்பர் 16 மாலை வந்துசேர்ந்தது. உண்மையில் அது எதிர்பாராத ஒன்று அல்ல. அவருடைய உடல்நிலை சீர்கெட்ட நிலையிலேயே சில ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்தது. வலிப்பு அவ்வப்போது வந்துசென்று கொண்டிருந்தது. அவருடைய உடல் விடியற்காலையில் அவருடைய சொந்த ஊரான பத்தினிப்பாறைக்கு கொண்டுவரப்படும் என்று கவிஞர் நரன் சொன்னார்.

நேரில் செல்லவேண்டும் என முடிவுசெய்தேன். எப்போதும் அந்த முடிவையே உடனே எடுப்பேன். ஏனென்றால் இலக்கியவாதி மறைந்தால் சொல்லஞ்சலிகள் நிறைய வரும். நேரில் மிகக்குறைவான கூட்டமே வரும். ’ஊரில் இருந்தீர்களே, ஏன் செல்லவில்லை?’ என்று கேட்டால் பெரும்பாலானவர்களுக்கு அந்த எண்ணமே வந்திருக்காது என்பதை காணமுடியும். சிலர் சில்லறை காரணங்களால் கடைசியில் தயங்கிவிடுவார்கள். “அங்க நான் போய் எதுக்கு?” என்று சொல்பவர்கள் உண்டு. இதனால்தான் எழுத்தாளர்களின் இறுதிநிகழ்வுகள் பெரும்பாலும் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டதுபோலத் தோன்றுகின்றன.

இலக்கியவாதிகளின் இறுதிநாளை கௌரவிக்க ஆள்திரட்டிவர அமைப்புகள் இருப்பதில்லை. குழுவாக எவரும் கிளம்பி வருவதுமில்லை. பிறதுறைகளின் ஆளுமைகள் மேல் அவர்களின் ரசிகர்களுக்கு இருப்பதுபோன்ற பற்று பெரும்பாலும் இலக்கிய வாசகர்களிடம் இருப்பதில்லை. இசை, கலைத்துறை ஆளுமைகள் மேல் பற்று கொண்டவர்கள் தங்கள் ஆணவத்தை முன்வைக்காதவர்கள். அர்ப்பணிப்பு கொண்டவர்கள். இலக்கியவாசகர்களுக்கு உண்மையில் தாங்கள்தான் முக்கியம், இலக்கியவாதி இரண்டாம்பட்சம்தான். இலக்கியமே கூட அவர்களுக்கு அவ்வளவு முக்கியமல்ல. அரிதான விதிவிலக்குகள் சிலரே.

பெரும்பற்று கொண்டவர்களே இலக்கியத்திலும் உண்மையில் சாதனையாளர்களாகிறார்கள். வாசகர்கள் என்னும் நிலையில் இலக்கியத்தை ஆழமாக பெற்றுக்கொள்பவர்கள் பற்று கொண்டவர்களே. பிரான்ஸிஸ் கூட அத்தகையவர்தான். அவரை நான் எங்கெல்லாம் பார்த்திருக்கிறேன் என எண்ணும்போது பல இறுதிநாட்களும் அஞ்சலிகளும் நினைவுக்கு வருகின்றன. பாலகுமாரன் மறைந்தபோது எங்கிருந்தோ நெடுந்தூரம் நடந்து வந்தவர் போல வியர்த்து களைத்து ஓரமாக நின்றிருந்தார். நான் அவர் தோளை மட்டும் தட்டிவிட்டு வெளியே நடந்தேன்.

ஜெயகாந்தன் பொதுவான சமூக ஆளுமை. ஓர் இலக்கிய ஆளுமைக்கு தானாகவே இறுதிநாள் அஞ்சலிக்கு இலக்கியவாசகர்கள் பெருமளவுக்குத் திரண்டது என்றால் கடைசியாக சுந்தர ராமசாமிக்குத்தான். எவ்வகையிலோ இலக்கிய வாசகனின் ஆணவத்தை கடந்து எழுந்து நிற்பதாக அவருடைய ஆளுமை இருந்தது. வேறெந்த எழுத்தாளருக்கும் பெருமளவில் வாசகர்கள் இறுதிநாள் செலவுக்கு திரண்டதில்லை. எனக்கு எப்போதும் உருவாகும் அச்சம் என்பது படைப்பாளியின் இறுதிநாள் நிகழ்வுக்கு இலக்கிய வாசகர்கள் என ஒருவர்கூட வரவில்லை என்னும் நிலை அமைந்துவிடக் கூடாது என்பதுதான். ஆகவே தொலைபேசியில் அழைத்து அருகிலிருப்பவர்களிடமெல்லாம் செல்லும்படி மன்றாடுவதுண்டு. கூடுமானவரை நான் சென்றுவிடுவேன்.

வாசகர்களிடம் சொல்ல விரும்புவது இதுதான், ஒரு படைப்பாளியின் இறுதிநாளுக்குச் செல்வதென்பது வாசகனின் கடமைகளில் ஒன்று. ஒருவேளை அவன் அவருக்குத் திருப்பிச் செய்யக்கூடுவதும் அது ஒன்றுதான். படைப்பாளியை ஊராரும் வீட்டாரும் கொண்டாடாமல் போகக்கூடும். வாசகனும் அவனை புறக்கணித்தான் என்றால் அது அப்பண்பாட்டுக்குப் பெரும்பழி. அது ஒருபோதும் நிகழலாகாது. சென்னையில் ஞானக்கூத்தன் மறைந்தபோது நான் ஒவ்வொருவராகக் கூப்பிட்டுச் சொல்லியும்கூட என் சென்னை நண்பர்களில் பலர் செல்லவில்லை. அவர்கள்மேல் அந்த மனத்தாங்கல் இன்றும்கூட எனக்கு தீரவே இல்லை.

பிரான்ஸிஸ் கிருபாவின் இறுதிநாள் அஞ்சலிக்கு நல்லவேளையாக சென்னையில் இருந்து சாம்ராஜ் போன்று பிரான்ஸிஸின் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். நெல்லையிலும் நாகர்கோயிலிலும் பிரான்ஸிஸை அறிந்த இலக்கிய நண்பர்கள்  பத்துப்பதினைந்துபேர் இருந்தனர். மற்றபடி அரசியல்சார்ந்த இலக்கிய அமைப்புகளோ, அவற்றின் உறுப்பினர்களோ கண்ணில் படவில்லை. வாசகர்கள் என்றும் எவருமில்லை. ஆனால் இந்தச் சிறுதிரளே நிறைவளித்தது.

நான் காலையில் தொலைபேசியில் அழைத்து நான் இறுதிநாள் நிகழ்வுக்குச் செல்வதாகவும், வரவிரும்புவோரைச் சேர்த்துகொள்வதாகவும் நண்பர்களிடம் சொன்னேன். நட்புக் குழுமங்களிலும் தெரிவித்திருந்தேன். ஆனந்த்குமார் திருவனந்தபுரத்தில் இருந்தார். சுஷீல்குமாருக்கு காய்ச்சல். லக்ஷ்மி மணிவண்ணனின் மாமியார் ஆஸ்பத்திரியில் இருந்தார். போகன் மட்டும் வருவதாகச் சொன்னார்

கிளம்பும்போது மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு லக்ஷ்மி மணிவண்ணன் வந்துவிட்டார். லக்ஷ்மி மணிவண்ணன் பிரான்ஸிஸ் கிருபாவின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்தவர். அவர்களுக்கிடையே இருந்த நட்பு இனிமையும் சித்திரவதைகளும் நிறைந்த ஒன்று. லக்ஷ்மி மணிவண்ணன் பிரான்ஸிஸ் கிருபாவை கூடுமானவரை தாங்கிக் கொண்டவர்களில் ஒருவர்.

மதியம் கிளம்பி வள்ளியூர் சென்றபோது சிறில் அலெக்ஸ் அழைத்தார். அவர் வடக்கன்குளத்தில் அவருடைய அன்னையைப் பார்க்க வந்திருந்தார். அவரும் வருவதாகவும், பேருந்தில் வரும் ஜெயராம், அருள் இருவரையும் சேர்த்துக்கொள்ள காத்திருப்பதாகவும் சொன்னார். வள்ளியூரில் அவர்களை இணைத்துக்கொண்டு பத்தினிப்பாறைக்குச் சென்றோம்.

பிரான்ஸிஸ் கொண்டு வரப்பட்டிருந்தார். வாங்கிக்கொண்டு சென்ற மலர்வளையத்தையும் மலர்மாலையையும் அவருக்கு வைத்து அஞ்சலி செலுத்தினோம். அவருடைய நண்பர்களான கவிஞர்கள் ஒவ்வொருவராக வந்து அவர் அருகே நின்று அவர் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் உடல் மாதாகோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பத்தினிப்பாறை சின்னஞ்சிறு ஊர். எழுபது வீடுகள்தான். ஏரிப்பாசனம் இருந்தாலும் ஒரு பாலைவனத்தன்மை தோன்றிய நிலம். 1930ல் கோஸ்தா குடும்பம் என்னும் நிலவுடைமையாளர்களால் கட்டப்பட்ட சிறிய மாதாகோயில் பழைய பாணியில் அமைந்தது. சுதையாலான வளைவுகளுக்குமேல் ஓட்டுக்கூரை. வட்டமான ஓளிச்சாளரங்கள்.

ஐம்பதுபேர் அமரக்கூடிய அளவுள்ளது அக்கோயில்.புனித ஜார்ஜியார் ஆலயம் என நினைக்கிறேன். பெஞ்சுகள் இல்லை, தரையில் அமரவேண்டும். அழகிய ஆல்டர். பிரான்ஸிஸின் உடல் அங்கே வைக்கப்பட்டது. அங்கே அரங்கு நிறைய அமர்ந்து கொண்டோம். அங்கும் கவிஞர்கள் பிரான்ஸிஸின் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். ஒருவேளை பிரான்ஸிஸின் கவிதைகள் அவர் மண்ணில் ஒலிப்பது அதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.

நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் ஓரிரு சொற்கள் சொல்லவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டோம். நான் “பிரான்ஸிஸ் துன்பப்பட்ட ஆத்மா. துன்பப்படுபவர்கள் கிறிஸ்துவுக்கு அணுக்கமானவர்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. பிரான்ஸிஸ் இன்னும் கிறிஸ்துவுக்கு அணுக்கமாகிவிட்டிருக்கிறார். அவருக்கு அஞ்சலி” என்று நான்கு சொற்றொடர்கள் சொன்னேன். லக்ஷ்மி மணிவண்ணனும் சில சொற்கள் சொன்னார். சிறில் அலெக்ஸ் பைபிளில் இருந்து சில வசனங்களை வாசித்தார்.

பாதிரியார் பிரார்த்தனையையும் ஜெபத்தையும் நிகழ்த்தினார். தரையில் அமர்ந்து அந்த சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். வழக்கமாக அனல்கொளுத்தும் நிலம். அன்று மழைத்துளிகளுடன் குளிர்காற்று எல்லா ஜன்னல்கள் வழியாகவும் பீரிட்டுக்கொண்டிருந்தது. வானம் இருண்டு முகில்படர்ந்திருந்தது. அந்தவேளையில் அச்சொற்கள் ஒரு நிறைவை அளித்தன. நிறைவுதான், வழக்கமாக இறப்புகளில் மெல்ல மெல்ல துயர் விலகும்போது அந்நிறைவு வரும். பிரான்ஸிஸ் ஏற்கனவே எல்லா துயரையும் பிறருக்கு அளித்துவிட்டவர்.

எல்லா மதங்களிலும் சாவுச்சடங்குகளின் சொற்றொடர்கள் ஏறத்தாழ ஒன்றே. சாவு என்பது அழிவு அல்ல, அது அழிவற்ற ஒன்றுடன் இணைதல். அழிவின்மை கொள்ளுதல். சாவு என்பது முறிந்துபோதல் அல்ல, அது ஒரு முழுமை. திரும்பத் திரும்ப மானுடம் இதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. சாவு என்பது என்ன என அறியவே முடியாது. இந்த சொற்கள் அந்த அறியமுடியாமைமேல் நாம் அமைத்துக்கொள்பவை. அவற்றின் அர்த்தம் நாம் இங்கு வாழ்ந்து திரட்டிக்கொள்வது.

கிறிஸ்தவ இடுகாடு சற்று தொலைவில் இருந்தது. அறுவடை முடிந்த வயல்கள் வழியாக நடக்கவேண்டும். மழை பெய்யுமென தோன்றியதென்றாலும் அந்நிலத்தில் மழை அவ்வாறு எளிதில் பெய்துவிடுவதில்லை. முள்மண்டிய இடுகாட்டில் இந்த ஓராண்டுக்குள் புதைக்கப்பட்டு, இன்னும் கல்லறை எழுப்பப்படாத பல புதைமேடுகள் தென்பட்டன.

பிரான்ஸிஸுக்காக தோண்டப்பட்ட குழி அவ்வளவு ஆழமில்லை. செம்மண் பாறைபோல இறுகிய தரை. குழியெடுப்பது எளிதல்ல என்று தோன்றுகிறது. பாதிரியார் ஜெபித்தபின் பிரான்ஸிஸின் பெட்டி கயிறுகளில் பெட்டி கட்டப்பட்டு மண்ணுக்குள் இறக்கப்பட்டது. மூன்றுமுறை மண் அள்ளிப்போட்டு விடைகொடுத்தேன்.

இந்த நிகழ்வின் நிறைவுக்குக் காரணம் பாதிரியார் ஜோ. இலக்கியம் அறிந்தவர். தன் உரையிலேயே புதுமைப்பித்தனைக் குறிப்பிட்டார். நெல்லையில் வழக்கறிஞர் வேலைபார்ப்பவர் இங்கே பாதிரியார் இல்லாததனால் பகுதிநேரப்பணியாக வந்திருந்தார். ஆழ்ந்த குரலில் பாடி பிரார்த்தனை செய்தார். அவருக்கு எங்கள் வணக்கங்களையும் மரியாதையையும் தெரிவித்துவிட்டு திரும்பி நடந்தோம்.

கிறிஸ்டியேன் என்னும் நண்பர் கூட நடந்தபடி பேசிக்கொண்டு வந்தார். பிரான்சிஸ் ஒரு கவிஞர் என அந்தச் சிற்றூரில் அறிந்தவர் அவரே. பிரான்ஸிஸ் விருதுபெற்ற போது அந்த விழாநிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறார். அந்த ஊரே மணப்பாடு ஊரைச்சேர்ந்த மீனவர் குடியினரான நிலச்சுவான்தார்களான கோஸ்தா குடும்பத்துக்கு சொந்தமானது. ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர். ஊரில அனைவரும் அவர்களின் வேலைக்காரர்கள் என்றார்.

சுதந்திரத்துக்குப்பின்  நிலச்சீர்திருத்தத்தின்போது அக்குடும்பத்தின் நிலம் கைப்பற்றப்பட்டு உழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் கோஸ்தா குடும்பம் நீதிமன்றம் சென்றது. வழக்கு நடக்கும்போதே நிலத்தை விற்றுவிட்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டது. இன்று நிலத்தின் பட்டா நிலத்தை வாங்கியவரிடமும் நிலஉரிமை ஊராரிடமும் உள்ளது. ஆகவே இடுகாட்டுக்கு வழியை அடைய முடியவில்லை. பிரான்ஸிஸ் கூட சில சாவுகளின்போது அதைப்பற்றி பேசியிருக்கிறார் என்றார்.

ஊர் நடுவே கோஸ்தா குடும்பத்தின் நூறாண்டுப் பழமையான மாளிகை உள்ளது. அது கைமாறி இன்று ஒரு பண்ணை விடுதியாக இருக்கிறது. பெரிய சுற்றுவேலியுடன், காவலுடன் வேறொரு உலகமாக ஊர் நடுவே நின்றிருக்கிறது. அதற்குள் சென்று பார்த்ததே இல்லை என்றார் கிறிஸ்தியோன். பிரான்ஸிஸும் அதைப் பார்த்ததில்லை. அவர்கள் அணுகமுடியாத ஒரு மிதக்கும் கலம் போல அது.

அந்தி சாயத் தொடங்கியபோது விடைபெற்று திரும்பி வந்தோம். ஒரு கவிஞனின் இறுதிநாள். அவனுடைய எளிய ஊர். அவன் உறவினர்கள் முன் ஒலித்த அவர்கள் அறிந்தே இராத அவனுடைய கவிதையின் சொற்கள். அந்த மாதாகோயிலில் அவனுக்காக ஒலித்த புனித வேதாகமத்தின் அழிவற்ற சொற்கள்.

Exit mobile version