Site icon சக்கரம்

சங்கரய்யாவின் உரை என்னை பக்குவப்படுத்தியது – தமிழறிஞர் சாலமன் பாப்பையா

சாலமன் பாப்பையா

நூற்றாண்டை நோக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவை எனது சிறுவயது முதலே நான் அறிவேன். மதுரையில் ஹார்வி மில்லை சுற்றியுள்ள அழகரடி, பொன்னகரம், கரிமேடு, மணிநகரம், பூந்தோட்டம், கிருஷ்ணாபாளையம், 14-தெரு பகுதிகள் உழைப்பாளி மக்கள் நிறைந்த பகுதி. இவர்கள் நில-புலன்கள் இல்லாத வர்களோ, விவசாயம் இல்லாதவர்களோ தான். இவர்கள் ஹார்வி மில்லில் பஞ்சாலைத் தொழிலா ளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த பஞ்சாலைத் தொழி லாளர் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. ஹார்வி மில்லில் ஒன்பது நேரம் வேலை. கூலியோ மிகக்குறைவு. ஒன்பது நேர வேலையை எட்டு மணி நேர மாக மாற்றியதில், பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத் தந்ததில் பொதுவுடைமை இயக்கங்க ளுக்கு முக்கியப் பங்குண்டு. மணிநகரத்தின் மேற்குப் பகுதி, சௌராஷ்டிரா மக்கள் வாழ்ந்த பகுதிகளில் பொது வுடைமை இயக்கம் வலுவாக இருந்தது.

ஹார்வி மில் தொழிலாளர்கள் வசித்த பகுதிகளில் யோகானந்தா சாமிமடத் தெருவும் ஒன்று. இந்தத் தெருவின் மேற்குக் கடைசியில் இருந்த வீட்டில் தொழிற்சங்க அலுவலகம் ஒன்று இருந்தது. இங்கு சங்கரய்யா வந்து செல்வார். எனது பெரியப்பா மகன் ஒரு பஞ்சாலைத் தொழி லாளி. ஜனசக்தி வாங்குவதை வழக்கமாகக் கொண்டி ருந்தார். ஆனால், அவருக்கு படிக்கத் தெரியாது. எனக்கு ஜனசக்தியை பற்றி எதுவும் தெரியாது. அதில் உள்ளதை அப்படியேபடிப்பேன். அதை போவோர், வருவோர் கேட்டுச் செல்வர். சிலர் நின்று முழுமையாக நான் படிப்ப தைக் கேட்டுச் செல்வர். ஒரு முறை சங்கரய்யா யார் இந்தப் பையன், நன்றாக வாசிக்கிறானே எனக் கேட்டு வியந்திருக்கிறார்.

எனது பெரியப்பா மகன் என்னை பொதுவுடைமை இயக்கக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். கூட்டங்கள் பரமேஸ்வரி தியேட்டர், வைகையாற்றின் மைய மண்டபம், திலகர் திடல் ஆகிய இடங்களில் நடை பெறும். அங்கு சங்கரய்யாவின் உணர்ச்சி மிகு பேச்சைக் கேட்டிருக்கிறேன். 1946-48-ஆம் ஆண்டுகளில் அவருக்கு 26 வயது இருக்கும். எனக்கு வயது பதினெட்டுக்கும் கீழ் தான். அப்போது தொலைக்காட்சி பெட்டியோ, ரேடியோ வோ கிடையாது. எங்காவது கிராம போன் இருக்கும். திரைப்படங்களுக்கு செல்வதற்கு கையில் காசிருக்காது. பொதுவுடைமை இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்வது தான் எனக்கு பொழுதுபோக்கு.

அன்றைக்கு இருந்த நெருக்கடியான கால கட்டத்தில் கல்லூரி கல்வியை என்.சங்கரய்யாவால் முடிக்க முடிய வில்லை. சங்கரய்யாவின் தந்தை ஹார்வி மில் பொறியியலாளர். மும்பையில் படித்தவர். அவர் நினைத்திருந்தால் மகனை கண்டிப்பாக படி எனக் கூறியிருக்க முடியும். ஆனால் சங்கரய்யாவின் முன் தேசத்தின் நிலை, உழைப் பாளி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம், அவர் கற்றறிந்த மார்க்சியம் ஆகியவை தான் நின்றது. சஙகரய்யா அடிவயிற்றிலிருந்து பேசுவார். அவரது குரலில் ஆவேசம் இருக்கும். உணர்வோட்டமாக பேசுவார். அவரது பேச்சைக் கேட்பவர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு கலைந்து செல்வார்கள்.

சங்கரய்யா உள்ளிட்ட பல தலைவர்கள் மீது சதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் சங்கரய்யா உள்ளிட்டவர்கள் வெற்றிபெற்றனர். சுதந்திரம் பெறுவ தற்கு முதல்நள் தான் அவர்கள் சிறையிலிருந்து விடு தலையானார்கள். அவர்களை வரவேற்க மதுரை ஜெயில் முன் ஏராளாமானோர் கொடிகளுடன் திரண்டிருந்தனர். எங்கள் குடும்பத்தினருடன் நானும் சென்றிருந்தேன். அவர்கள் வெளியே வந்தவுடன் திலகர் திடல் நோக்கி பேரணி நடைபெற்றது. மிகவும் கால தாமதமானதால் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

பொதுவுடைமை இயக்கம் நெருக்கடிகளைச் சந்தித்த போது இயக்கத்தை விட்டு வெளியே வராமல், மார்க்சிய கருத்தில் அவர் உறுதியாக இருந்தார், சமயம், சாதி உணர்வுகளை அறுத்தெறிந்துவிட்டு மானுட வாழ்க்கை தான் அனைத்திற்கும் தீர்வு என்றார். சங்கரய்யாவின் பேச்சைக் கேட்டால் உடல் சிலிர்க்கும், மயிர்க்கால்கள் எழுந்து நிற்கும். அவரது உரை அந்தளவிற்கு உணர்வுப் பூர்வமாக இருக்கும். அவரது உரை என்னைப் போன்றவர்களை பக்குவப்படுத்தியது. வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டுமென உணர்த்தியது.

எங்கள் வீடு இருந்த கிருஷ்ணாபாளையம் இரண்டா வது தெருவில் இரண்டு வீடுகள் தள்ளி சங்கரய்யா தங்கி யிருந்துள்ளார். நான் வாசலில் அமர்ந்து சத்தமாக ஜனசக்தியை வாசிப்பதை அவரும் கேட்டு என்னைப் பற்றி விசாரித்துள்ளார். மனிதர்களைக் கனிப்பதில் சங்கரய்யா வல்லவர். ஒரு முறை சௌராஷ்டிரா கல்லூரியில் தொழில்துறை சார்ந்தவர்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்தகொண்டி ருந்தனர். மற்றொரு சந்தர்ப்பத்தில் கிறித்தவர்களும்-தமிழ்புலவர்களும் என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தில் நான் பேசினேன். நான் பேசியதை சங்கரய்யா கேட்டறிந்துள் ளார். எங்கள் வீட்டிற்கு ஒரு முறை வந்திருந்த சங்க ய்யா என்னிடம், இயக்கத்தைப் பார்க்க வேண்டும், இயக் கத்திற்கு பலரும் வரவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரி வித்தார். நான் பணியாற்றிய இடத்தில் அது சாத்திய மில்லாமல் போனது.

சாதி, சமயம் கடந்து மார்க்சிய இயக்கத்தை வளர்க்க வேண்டுமென்பதிலேயே அவருடைய முழுக் கவனமும் இருந்தது.

என்.சங்கரய்யா கிருஷ்ணாபாளையம் இரண்டாவது தெருவில் தங்கியிருந்த வீட்டிலிருந்த குடும்பத்தினர்க ளில் ஒருவரது பெயர் நவமணி. அவரும் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. அவரது வீட்டு வாசலில் “கடிகாரத்திற்கு சாவி கொடுக்க வேண்டிய நாள்” என எழுதப்பட்டிருந்தது.. இது குறித்து நான் கேட்டதற்கு வீட்டிற்குள் வந்து யாரும் மணி பார்க்க வந்துவிடக்கூடாது. அப்படி வந்தால் தலை மறைவாக உள்ளவர் குறித்த விவரம் தெரிந்தும் விடும். யாரும் வீட்டிற்குள் வருவதைத் தடுக்கவே அவ்வாறு எழுதப்பட்டிருந்தது என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

மார்க்சிய இயக்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அவர் ஆற்றிய சேவைகளை எண்ணி பெருமை கொள்கிறேன். மகிழ்ச்சியடைகிறேன். அவரது பணி தொடர வேண்டும். எனது பாணியில் சொல்லவேண்டுமானால் அவரது திரு வடியை சோவித்துக்கொள்கிறேன்.”

Exit mobile version