Site icon சக்கரம்

பெண்களுக்கு எதிரான தலிபான்களின் போர்

ஸர்மிளா ஸெய்யித்

ர் இளம் ஆப்கானிஸ்தான் தாய்க்குக் காய்ச்சல் நீடித்த தன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். இது தலிபான்கள் கட்டுப்பாட்டில் அவ்வளவு எளிய பணியல்ல. ஏனெனில், அவருக்குத் துணையாகச் செல்வதற்கு ஆண் உறவினர் இல்லை. அந்நிய ஆண் ஒருவரிடம் அவ்வாறு கேட்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றம். தனியாகச் செல்வது கசையடிகளை வாங்கித் தரும் அபாயம் கொண்டது என்று அறிந்தும் அவள் தயாராகிறாள். தலிபான்களின் சட்டத்தின்படி, கூடாரம் போன்ற பர்தாவில் முழு உடலையும் மூடிக்கொண்டு குழந்தையுடன் புறப்படுகிறாள். அவள் அப்படிச் செய்யக் கூடாது. ஆனால், குழந்தையை நேசிக்கும் ஒரு தாய்க்கு வேறு தெரிவுகள் இல்லை.

வீட்டிலிருந்து தெருவில் இறங்கிச் சிறிது தூரம் நடந்து சந்தையை நெருங்கியபோது, ஒரு தலிபான் காவலன் அவளைத் தடுக்கிறான். குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே தாயிடம் மேலோங்கியிருக்கிறது. ஆனால், அவன் தனது ஆயுதத்தை உயர்த்தி அவளைச் சுட்டான். மீண்டும் மீண்டும் சுட்டான். தாயும் குழந்தையும் தரையில் வீழ்ந்தனர். சந்தையில் கூடியிருந்தவர்கள் அவளைக் காப்பாற்ற முற்பட்டனர். தலிபான் காவலன் மனம் மாறவில்லை. அவனைப் பொறுத்தவரை அந்தப் பெண் தனியாக வெளியே வந்திருக்கக் கூடாது. தலிபான்கள் ஆட்சியில் இவ்வாறு தண்டிக்கப்பட்ட ஒரேயொரு தாய் அல்ல இவர். 1996-ல் காபூலின் கட்டுப்பாட்டை தலிபான்கள் கைப்பற்றியபோது, இவ்வாறு பல பெண்கள் தண்டிக்கப்பட்டார்கள். அடித்துத் துன்புறுத்திக் கொல்லப்பட்டார்கள்.

இது ஆப்கானிஸ்தானின் பொதுவான வரலாறு இல்லை. தலிபான்களின் எழுச்சிக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் சட்டத்தினால் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். 1920-களில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. 1960-களில் ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு பெண்களுக்குச் சமத்துவத்தை வழங்கி, ஜனநாயகம், சகிப்புத்தன்மையை நோக்கி நாடு நகரத் தொடங்கியது. 1977-களில் 15% பெண்கள் ஆப்கானிஸ்தான் சட்டமன்றத்தில் இருந்தனர். 1990-களின் முற்பகுதியில் 70% பள்ளி ஆசிரியர்கள், 50% அரசு ஊழியர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் பெண்களாக இருந்தனர். காபூலில் 40% பெண் மருத்துவர்கள் இருந்தனர். 1996 செப்டம்பரில் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு முன்பு காபூல் பல்கலைக்கழகத்தில் 4,000 மாணவிகள் இருந்தனர். தலிபான்கள் பெண்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் வரை மனிதாபிமான நிவாரண அமைப்புகளில் மிகப் பெரியளவில் பெண்கள் இயங்கினர்.

திருமணம், விவாகரத்து, சொத்து உரிமைகள் போன்ற பகுதிகளில் பெண்களின் உரிமைகளை வரையறுக்கும் குறிப்பிட்ட ஏற்பாடுகளை இஸ்லாம் கொண்டுள்ளது. உலக முஸ்லிம்கள் நம்பும் இஸ்லாத்தின் பதிப்பை தலிபான்கள் ஆதரிக்கவில்லை. தலிபான் ஆட்சி கொடூரமாகப் பெண்கள், சிறுமிகளை வறுமையில் தள்ளியது. அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக்கியது. மேலும், இவற்றிலிருந்து பெண்களை விடுவிக்கக்கூடிய கல்விக்கான உரிமையைப் பறித்தது.

தலிபான்கள் ஆட்சி மக்களின் அனைத்துத் துறைகளையும் முறையாக ஒடுக்கியது மட்டுமல்ல, மிக அடிப்படையான தனிநபர் உரிமைகளைக்கூட மறுத்தது. பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பிடங்களுக்கான தடை முதல் சீருடையில் இருந்த பள்ளி மாணவிகள் மீதே அமிலத் தாக்குதல்கள் வரை கொடூரமாகப் பாய்ந்தன. பெண்கள் நகப்பூச்சு பயன்படுத்துவது, அலங்காரம் செய்வது கூடாது. சத்தமாகப் பேசுதல், சிரித்தல்கூட தண்டனைக்குரிய குற்றங்கள். பெண்களின் உரிமைகளுக்கு எதிரான வன்முறைகள், சுரண்டல்களுக்கு நீதியைப் பெறுவது முடியாத காரியம். விவாகரத்துக் கோரி வழக்குப் பதிவுசெய்த பெண்கள் பலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அமிலத் தாக்குதல்கள், பொதுவில் நிறுத்திக் கசையடித்தல், தண்டித்தல் போன்றன மிகச் சாதாரணமான தண்டனை முறைகள்.

குழந்தைகள் உட்பட அனைவருக்கும் காற்றாடி விடவோ, பாடல்கள் பாடவோ தடை. வெள்ளைக் காலணி அணிந்ததற்காக ஏழு வயதுச் சிறுமியின் கால் அடித்து நொறுக்கப்பட்டது. இசை இல்லை. இசைக்கருவிகள் இல்லை. தொலைக்காட்சி இல்லை. மட்டுப்படுத்தப்பட்ட இணைய வசதிகள். நடைபாதைகளில் உரையாடல் இல்லை. எந்தவித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இல்லை. பூங்காக்கள் இல்லை. விளையாட்டு மைதானங்கள் இல்லை. விளையாட்டுக்கள் இல்லை. தூசி நிறைந்த தெருக்களும் உள்ளேயும் வெளியேயும் அஞ்சும் மக்களுமே எஞ்சியுள்ளனர்.

பளபளப்பான பழுப்பு நிற கேசட் நாடாக்கள் மரங்களிலும் கம்பிகளிலும் தொங்கி அசைவது தலிபான்களின் கடந்த கால ஆட்சியில் தவிர்க்க முடியாத குறியீடாக இருந்தது. காபூலின் காஜி ஸ்டேடியம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரார்த்தனைக்குப் பிறகு பொது மரணதண்டனைகளுக்கான களமாக மாற்றப்பட்டது. தலிபான் அதிகாரிகள் புல்டோசர் அல்லது டாங்கிகளைப் பயன்படுத்தி, தன்பாலின உறவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட ஆண்கள் மீது சுவர்களை இடித்தனர். திருடியவர்கள் கையை வெட்டினார்கள். குற்றம்சாட்டப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

தலிபான்கள் முதன்முதலில் 1994-களிலேயே முக்கியத்துவம் பெற்றனர். பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற மதவாத நாடுகளின் பலமான ஆதரவுடன் மிக விரைவாக முன்னேறி 1996-ல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றினார்கள். ஆரம்பத்தில், தலிபான்கள் நாட்டுக்கு ஸ்திரத்தன்மையை வழங்குவார்கள் என்று சிலர் நம்பினார்கள். ஆனால், விரைவில் இஸ்லாமிய சட்டம் என்ற பதாகையுடன் கடுமையான அடக்குமுறை உத்தரவுகளை விதித்தனர்.

பாலியல் பலாத்காரம், கடத்தல், கட்டாயத் திருமணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான கொடூரமான செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டனர் அல்லது அவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். ஆப்கானிஸ்தானின் நீண்ட உள்நாட்டுப் போரின்போது கணவர்களையும் மற்ற ஆண் உறவினர்களையும் இழந்த சுமார் 50,000 பெண்களுக்கு எந்த வருமான ஆதாரமும் இல்லாதபோதும் அவர்களைப் பிச்சையெடுக்கவும் முடியாதவர்களாக்கினார்கள். 1996 செப்டம்பரில் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியபோது காபூல் பல்கலைக்கழகத்தில் 4,000 பெண்களே இருந்தனர், ஆனால், 2021-ல் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியபோது அங்கு பயின்ற 22 ஆயிரம் மாணவர்களில் 43% பேர் பெண்கள்.

2001-ல் தலிபான்கள் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின்பு, அதிலிருந்து 2021 வரையான 20 வருட காலங்களில் ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நகரங்களில் லட்சக்கணக்கான பெண்கள் பள்ளிக்குச் சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் வரலாற்றில் முன்னெப்போதையும்விட அதிக அளவில் அரசியல் பதவிகளை வகிப்பது உட்படப் பொது வாழ்விலும் பல்வேறு அரசியல் தனியார் துறைகளிலும் பெண்கள் கால்பதித்திருந்தனர்.

தலிபான்கள் பொறுப்பேற்றபோது வங்கிகள், அலுவலகங்கள், பல்கலைக்கழகங்களில் பணியில் இருந்த ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், எழுத்தர் போன்ற பெண் பணியாளர்களை துப்பாக்கி முனையில் வீடுகளுக்கு அனுப்பிவைத்ததுதான், கைப்பற்றிய நகரங்களில் முதலில் நடந்த காரியங்கள். தலிபான்கள் அரசாங்கத்தில் பெண்கள் இல்லை. அவர்களின் நிர்வாகத் துறை, பொதுத் துறை, நீதித் துறை எதனிலும் பெண்கள் இல்லை.

கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுவந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வெறும் சில வாரங்களில் யாரும் எண்ணிப் பார்க்க முடியாத வேகத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில்கூட ஆப்கானிஸ்தானில் பெண்களின் வாழ்க்கை எளிதாக இருந்ததில்லை. அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்தாலும் தலிபான்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள பெண்கள் வழக்கமான தடை நடவடிக்கைகளால் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர். இப்போது அவர்களின் வாழ்க்கை உட்பட ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் பெண்களின் வாழ்க்கையின் மிகவும் துயரமான நிலையை எட்டியுள்ளது.

Exit mobile version