Site icon சக்கரம்

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றி பாடகி சித்ரா

ச. ஆனந்தப்பிரியா

சித்ரா – பாலசுப்ரமணியம்

தான் எவ்வளவு பெரிய பாடகராக இருந்தாலும் அணியில் இருந்த இசைக்கலைஞர்களின் நலனில் அக்கறை உள்ளவராக இருந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று கூறி ஒரு நிகழ்வை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார் பின்னணிப் பாடகி சித்ரா.

திரையுலகில் 25,000 பாடல்கள் பாடி, ஆறு தேசிய விருதுகள் வென்றவர் சித்ரா. கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான பிரபல மொழிகளிலும் தன்னுடைய குரலால் ரசிகர்களை ஈர்த்தவர். அயல்நாட்டு மொழிகளிலும் கூட இவர் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாடகியாக கோலோச்சி வரும் சித்ரா, பத்ம பூஷன் விருது பெற்றவர்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் முதல் நினைவு நாளை ஒட்டியும், தனது இசைப் பயணம் தொடர்பாகவும் பிபிசி தமிழுக்கு அவர் அளித்த நேர்காணல்:

பின்னணி பாடகியாக திரைத்துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் ஆகிறது. கடினமான இந்த இசைத்துறையில் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியும் என நினைத்தது உண்டா? அப்போது உங்கள் லட்சியம் என்னவாக இருந்தது?

“திரைத்துறையில் பின்னணி பாடகியாக வரவேண்டும் என நிச்சயம் நான் எதிர்ப்பார்க்கவில்லை. இசையை நான் முக்கிய பாடமாக எடுத்து நான் கற்றதற்கு காரணம் எதாவது ஒரு கல்லூரியிலோ அல்லது பள்ளியிலோ இசை ஆசிரியையாக பணி புரிய வேண்டும் என்பதுதான். என்னுடைய நண்பர்கள் பலர் இன்று இசை ஆசிரியர்களாக இருக்கின்றனர். என்னுடைய அம்மா, அப்பா இருவருமே இசை ஆசிரியர்கள்தான்.

என்னுடைய குரு டாக்டர். ஓமணக்குட்டி அவர்களுடைய சகோதரர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் அகில இந்திய வானொலியில் இசை இயக்குநராக இருந்தார். அவர் எங்களுடைய குடும்ப நண்பரும் கூட. அவர்கள் திருவனந்தபுரத்தில் ஒரு இசை ஸ்டுடியோ ஆரம்பித்தார்கள். அங்கு பாடல் பதிவு ஆரம்பித்தபோது அங்கே உள்ளவர்களுக்கு முதல் வாய்ப்பு கொடுக்கலாம் என்று யோசித்ததன் விளைவாக எங்கள் நண்பர்கள் குழுவுக்கு அந்த வாய்ப்பு வந்தது.

நீதிக்கதைகளை எல்லாம் நாங்கள் நண்பர்களாக இணைந்து பாடல்களாக மாற்றி பாடிக்கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் பாடகர் ஜேசுதாஸ் அவர்களோடு இணைந்து பாடும் வாய்ப்பு வந்தது.

அப்பொழுதும் நான் பின்னணி பாடகி ஆவேன் என நினைக்கவே இல்லை. தாஸ் அவர்களுடைய குழுவில் இணைந்து தேவைப்படும் போது அவருடைய கச்சேரிகளில் பாடி வந்தேன். அதன் பிறகுதான் புதிதாக ஒரு குரல் தாஸ் குழுவில் இருக்கிறது என திருவனந்தபுரத்தில் நிறைய பாடல்கள் பாடுவதற்கு வாய்ப்பு வந்தது. அதுபோல, அங்கு ரவீந்திரன் மாஸ்டர் அவர்களுக்கு ஒரு பாடல் பதிவு செய்து கொடுத்தேன். அவர்தான் என்னை முதன் முதலாக சென்னைக்கு அழைத்து வந்தது”.

தமிழில் பாடிய முதல் பாடல் நினைவிருக்கிறதா?

“தமிழில் என்னுடைய முதல் பாடலை இளையராஜா இசையில்தான் பாடினேன். அந்த வாய்ப்பு வந்தது சுவாரஸ்யமான கதை. பாசில் இயக்கத்தில் ஒரு மலையாள படத்தில் பாடியிருந்தேன். அந்த படத்தில் நடித்திருந்த நாயகிக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். இருவருமே புதியவர்கள். அதனால், நாயகிக்கு என்னுடைய குரல் ஒத்து போயிருந்தது. இந்த குரலையே தமிழிலும் முயற்சி செய்து பார்க்கலாம் என இளையராஜா சொன்னதால், சென்னையில் பாடல் பதிவுக்கு செல்லும்போது இளையராஜாவை சென்று சந்திக்க சொன்னார்.

பாசில் சார் எதோ விளையாட்டாக என்னிடம் சொல்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகுதான் அது உண்மை என புரிந்தது. அடுத்து ஒரு மலையாள பாடல் பதிவிற்காக சென்னை வந்தபோது இளையராஜாவை சந்தித்தேன். வாய்ஸ் டெஸ்ட் செய்தது என்னவோ ‘பூவே பூச்சூடவா’ படத்திற்குதான். ஆனால், முதலில் வாய்ப்பு வந்தது பாரதிராஜா படத்திற்குதான். அன்று அந்த படம் ‘பச்சைக்கொடி’ என்று சொன்னார்கள். ஆனால், அந்த பாட்டு அதில் வராமல் ‘நீதானா அந்த குயில்’ படத்தில் வெளி வந்தது”.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்கிறீர்கள். எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறோம் என்ற கணக்கு பார்த்தது உண்டா?

“முன்பு எல்லாம் பாடல் பாடும்போது இசைத்தட்டு கொடுத்தார்கள். இப்போது அவை இல்லை. அதனால், நான் பாடும் பாடல்கள் குறித்து எழுதி வைத்து கொள்வதுதான் என்னுடயை ரெக்கார்ட். அதை கணக்கெடுத்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் அது குறித்த சரியான விவரம் சொல்லுவேன். இத்தனை மொழிகளில் எப்படி பாடினேன் என கேட்டால், எனக்கு நன்றாக தெரிந்த மொழி மலையாளம். கேரளாவில் இந்தி கட்டாயம் கற்க வேண்டும். இந்தி எழுத, வாசிக்க நன்றாக தெரியும். ஆனால், பேசும் அளவுக்கு பயிற்சி இல்லை. தெலுங்கு, தமிழ் இரண்டும் ஓரளவு பரிச்சயம் என்றாலும் அந்த அளவுக்கு பயிற்சி இல்லை.

சென்னை வந்ததும் தமிழ் எனக்கு எழுத, படிக்க சொல்லி கொடுத்தது பாடகி லத்திகா. அதேபோல், தெலுங்கு பாலு சார் எழுதி கொடுப்பதுதான். அதில் இருந்துதான் பயிற்சி எடுத்து இரண்டையும் கற்று கொண்டேன்”.

25,000 பாடல்கள் கடந்தும் இப்போது வரை தொடர்ந்து பணியாற்றி கொண்டே இருக்கிறீர்கள். இசைத்துறையில் உங்களுடைய இடத்தை தக்க வைப்பதற்கு என்ன மாதிரியான போராட்டங்கள் இருந்தது? இந்த காலக்கட்டத்தில் உங்கள் குடும்பத்துடைய ஆதரவு எப்படி இருந்தது?

“முதலில் என் குடும்பத்திற்குதான் நன்றி சொல்ல வேண்டும். மனைவியாக, தாயாக எனக்கு சில கடமைகள் இருந்தன. ஆனாலும், என் சூழல் புரிந்து என் கணவரும், மகளும் நடந்திருக்கிறார்கள். அவர்களது ஒத்துழைப்பு இருந்ததால்தான் இத்தனை பாடல்களை பாட முடிந்தது. என்னுடைய அப்பாவுக்கும் இதில் மிகப்பெரிய பங்கு உண்டு. அவருக்கு வாய் புற்றுநோய் இருந்த காலத்தில் கூட வலியை எனக்காக சகித்து கொண்டு என்னுடன் பாடல் பதிவிற்காக கூட வருவார். பிறகு அவருக்கு முடியாமல் இருந்த காலத்தில்தான் எனக்கு திருமணம் நடந்தது.

அப்பா எப்படியோ அதேபோல என் கணவரும் என்னை நன்றாக பார்த்து கொள்வார். இதுவரை என் வேலையில் இருந்து விடுமுறை என எடுத்தது இல்லை. அப்படியே சென்றாலும் கூட என் இசைப்பெட்டி இல்லாமல் சென்றது இல்லை. நான் உண்டு என் வேலை உண்டு என்றுதான் இருப்பேன்”.

சிறுமியாக, மகளாக, மனைவியாக, தாயாக, பாடகியாக பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை சுமந்து வந்திருக்கிறீர்கள். ஒரு பெண்ணாக சவால்களை எதிர்கொள்வதும், இழப்புகளை தாண்டி மீண்டு வருவது என்பதும் மிகக் கடினம். இதை எல்லாம் நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீகள்?

“வீட்டில் செல்ல பிள்ளையாகதான் வளர்ந்தேன். பெரிதாக எனக்கு சமைக்க தெரியாது. தாய் என்ற முறையில் என் குழந்தைக்கு எல்லாம் தெரிய வேண்டும் என நினைத்துதான் வளர்த்தேன். பண்டிகைகள், அவளது பிறந்தநாள் என அத்தனையும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கொண்டாடுவோம். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கடவுள் எது நினைத்திருக்கிறாரோ அதுதானே நடக்கும்?

அந்த கடினமான சமயத்தில் நிறைய பேருடைய வேண்டுதல்கள் எனக்கு இருந்தது. என்னை விட கடினமான சூழலை கையாண்டவர்கள் அவர்களுடைய அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். இவர்கள் யாரையும் எனக்கு முன் பின் தெரியாது. ஆனால், அத்தனை பேரும் எனக்கு ஆறுதல் சொல்ல இருந்தார்கள். இவர்கள் எல்லாம் கொடுத்த தைரியம்தான் என்னை மீட்டெடுத்தது. அதுதான் வாழ்க்கையில் நான் செய்த புண்ணியம் என நினைக்கிறேன். இவர்கள் எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நான் அப்படியே போயிருப்பேன்.

யார் என்ன சொன்னாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை நம் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை கடவுள் எனக்கு கொடுத்திருந்தார். நான் மீண்டு வரவேண்டும் என நினைக்கும் இத்தனை பேர் இருக்கும் போது இவர்களுக்காக திரும்ப வந்தால்தான் என்ன என்ற எண்ணம்தான் இப்போது இருக்கும் நான்”.

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ரஹ்மான் அவர்களுடைய இசையில் 100-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறீர்கள். அவருடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் அவர் இசையில் நீங்கள் பாடிய பாடல்களில் அடிக்கடி முணுமுணுக்கும் ஒன்று?

“ரஹ்மான் இசையில் நிறைய, மறக்க முடியாத நல்ல பாடல்களை பாடியிருக்கிறேன். அவருடைய இசையில் முதன் முறையாக பாடிய போது பாடல் பதிவு அனுபவம் அதுவரை நான் பணியாற்றியதில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. பாட்டு பாடிய பிறகுதான் அவர் பின்னணி இசை எல்லாம் செய்வார். அதனால், அந்த பாடல் எப்படி முழுமையாக வந்துள்ளது என்பது வெளியேவந்த பிறகுதான் எனக்கு தெரிய வரும்.

மறக்க முடியாத அனுபவம் ஒன்று இருக்கிறது. ‘மலர்களே மலர்களே’ பாடல் பதிவின் போது நான் பாடியது அவருக்கு திருப்தி அளிக்கவில்லையோ, அவர் என்னிடம் இருந்து வேறு எதிர்ப்பார்க்கிறாரோ என தோன்றியது. ஆனால், அந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு ‘ஓகே கண்மணி’ படத்தில் பாட வைப்பதற்காக என்னிடம் ரஹ்மான் கேட்டிருந்தார். அப்போது நான் ஊரில் இல்லை என்பதால் பாட முடியவில்லை. வேறு யாராவது பாடியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். அப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஹ்மானை சந்தித்தேன். ‘ஓகே கண்மனி’ படத்தில் நான் பாட வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் காத்திருப்பதாக சொன்னார். அதுவே எனக்கு விருது கிடைத்தது போலதான். அதன் பிறகு பாடிய பாடல்தான் ‘மலர்கள் கேட்டேன்’.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக தொடர்ந்து பணியாற்றி வருகிறீர்கள். நீங்கள் எப்போதுமே யாரையாவது போட்டியில் இருந்து விலக்க வேண்டும் என்றால் மிக மென்மையான கருத்துகளை முன் வைப்பீர்கள். இந்த பயணத்தில் நீங்கள் சந்திக்கும் சவால் என்றால் எதை சொல்வீர்கள்?

“போட்டியாளர்களிடம் ஒரு விஷயம் சொல்லும் போது, அந்த இடத்தில் என்னை பொருத்தி பார்ப்பேன். நான் சொல்லும் கருத்தால் அவர்கள் கஷ்டப்படக்கூடாது என நினைப்பேன். அதனால், எனக்கு தெரிந்தவரை அவர்கள் பாடலில் திருத்தங்களை சொல்லி கொடுப்பேன். என் அப்பா என்னிடம் ‘உன்னை புகழ்ந்து பேசுபவர்களை விட, உன் குறைகளை சுட்டுபவர்கள்தான் நீ நன்றாக வர வேண்டும் என நினைப்பவர்கள்’ என்பார். அதை நான் முழுதாக நம்புகிறவள்.

இளையராஜா இசையில் பாடும்போது கூட, பாடி முடித்ததும் பாடலை என்னை முழுதாக கேட்க சொல்லி குறைகள் என்ன என்று கேட்பார். சுயபரிசோதனை அது. இவை எல்லாம் பெரிய படிப்பினைகள். சிற்பம் வேண்டும் என்றால் செதுக்கிதான் ஆக வேண்டும். குறைகள் சுட்டிக்காட்டுவதை நல்ல விதமாக எடுத்து கொள்ளும்போதுதான் வளர்ச்சி இருக்கும்”.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடன் இணைந்து நிறைய பாடல்களை பாடியிருக்கிறீர்கள். அவர் இல்லாத இந்த ஓர் ஆண்டு எப்படி இருக்கிறது?

“கடந்த சில ஆண்டுகளாக பாலு சாருடன் இணைந்து அதிகம் பாடவில்லை. முன்பு எல்லாம் ஒரு நாளில் ஐந்து பாடல்கள் கூட அவருடன் இணைந்து பாடியிருக்கிறேன். பின்பு கால மாற்றத்திற்கேற்ப நான் ஒரு இடத்திலும் அவர் ஒரு இடத்திலும் இருந்து பாடல்களை பதிவு செய்தது எல்லாம் நடந்திருக்கிறது. சந்திப்பு என்பது எப்போதாவதுதான் இருந்தது. இந்த கொரோனா காலத்தில் கூட சமூக வலைதளங்களில் இயங்குவது, இசைக்கலைஞர்களுக்கு நிதி திரட்டி தருவது, மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நன்றி கூறுவதற்குப் பாடல் என சுறுசுறுப்பாக இருந்தவர்.

பொதுமுடக்க காலத்தில் அதுவரை நானும் வேலை இல்லாமல் மன உளைச்சலில்தான் இருந்தேன். பாலு சாரை பார்த்துதான் கொரோனா விழிப்புணர்வு குறித்து நானும் பாடல் இயற்றினேன். இப்போதும் அவர் நலமாக எங்கேயோ இருக்கிறார் என்றுதான் நம்புகிறேன்”

எஸ்.பி.பி. உங்களிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் ஒரு விஷயம்?

“கூட வேலை செய்பவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பார். வெளிநாடுகளில் சில நாட்கள் இசை நிகழ்ச்சிகள் இருக்கும்போது ஓய்வுக்கான நேரம் குறைவாகவே இருக்கும். எங்களை விட கூட வரும் இசைக் கலைஞர்களது வேலை இன்னும் அதிகமாக இருக்கும். நிகழ்ச்சி அரங்கில் முதலில் நுழைபவர்களும் கடைசியாக வெளியேறுபவர்களும் அவர்கள்தான்.

ஒருமுறை, ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறைக்கு செல்லும் போது, பாடகர்களை முதலில் அறைக்கு செல்ல சொன்னார்கள். இசைக் கலைஞர்களுக்கான அறை அப்போது தயாராகவில்லை. நள்ளிரவு 12 மணி அது. பாலு சாரை அறைக்கு போக சொன்னார்கள். ஆனால், அவர் இசைக் கலைஞர்களுக்கான அறை தயாரான பிறகுதான் என்னுடைய அறைக்கு செல்வேன் என அங்கேயே அவர்கள் அறைக்கு செல்லும் வரை காத்திருந்தார். அதுபோல, எந்த ஒரு பெரிய பாடகரும் இருப்பாரா என தெரியவில்லை. அது எல்லாம் அவரிடம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள்”.

எஸ்.பி.பி. உடன் பாடல் பதிவின்போது அமைதியான சித்ராவை பார்த்திருப்பார். ஆனால், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள், பாடகர்கள் மனோ, சுபா இவர்களை கேலி செய்வது, குழந்தைகளுடன் அரட்டை என குறும்புத்தனமான சித்ராவை எஸ்.பி.பி. பார்த்திருக்கிறார். அதை பற்றி ஏதேனும் உங்களிடம் பேசியிருக்கிறாரா?

“எஸ்.பி.பி. என்னை விட சீனியர். அவரிடம் எனக்கு நிறைய மரியாதை உண்டு. ஆனால், மனோ எனக்கு தம்பி. அதேபோலதான் சுபாவும். இரண்டு பேரிடமும் எந்த ஈகோவும் கிடையாது. நான் என்ன பேசினாலும் அதை புரிந்து கொள்வார்கள். இந்த குறும்பு எல்லாம் என்னை செய்ய வைத்தது மனோதான்.

இதை பார்த்து, ‘இப்படி ஒரு முகம் உனக்கு இருக்கிறதா?’ என எஸ்.பி.பி-யும் சிரித்து கொண்டே கேட்டார்”.

எஸ்.பி.பி.யுடன் கடைசியாக இணைந்து பாடிய பாடல் எது?

“கடைசியாக இருவரும் இணைந்து ஒரு இசைக்கச்சேரியில் பாடினோம். மற்றபடி சமீபத்தில் இணைந்து பாடல்கள் எதுவும் பதிவு செய்யவில்லை. கடைசியாக இணைந்து பாடியது என்றால் ‘பார்ட்டி’ படத்தில்தான்”.

பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பி. இதில் உங்களுக்கு பிடித்த முகம் எது?

“கண்டிப்பாக பாடகர்தான். அதிலும் குறிப்பாக மேடையில் நிகழ்ச்சியையும் தொகுத்து கொண்டே பாடலும் பாடுவார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் போது சத்தமாக பேச வேண்டும். அதனால், ‘பாடும்போது குரல் எதுவும் பாதிப்பு வந்துவிடாதா?’ என பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறேன். அவரை பொருத்த வரை, எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதில் முழுமையாக இறங்கிவிட வேண்டும் என நினைப்பார்”.

எஸ்.பி.பி-யும் நீங்களும் இணைந்து நிறைய பாடல்கள் பாடியிருக்கிறீர்கள். அதில் மறக்க முடியாத ஒரு பாடல் என்றால் எதை குறிப்பிடுவீர்கள்?

“பாலு சார் பாடி நான் ஆச்சரியப்பட்ட நிறைய பாடல்கள் உண்டு. தெலுங்கில் கீரவாணி இசையில் ஒரு பாடல் எஸ்.பி.பி. பாடியிருப்பார். குழந்தை பருவத்தில் இருந்து பாட்டி ஆகும் வரை ஒரு பெண்ணின் பல நிலைகளை விளக்கும் வகையில் அந்த பாடல் அமைந்திருக்கும். அதில் ஒவ்வொரு வரியிலும் சொல்லிலும் பொருள் இருக்கும். அதற்கு அத்தனை அழகாக உணர்ச்சியை பாடலில் வெளிப்படுத்தி இருப்பார் எஸ்.பி.பி.

அதே படத்தில் இன்னொரு பாடல் ஷைலஜாவுடன் இணைந்து பாடியிருப்பார். அதில் முழுவதும் சிரிப்புதான் இருக்கும். அந்த சிரிப்பில் கூட வித்தியாசம் காட்டியிருப்பார். அதேபோலதான் ஜானகி அம்மாவும். இவர்கள் எல்லாம் எப்படி இப்படி பாடல்களில் இத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள் என ஆச்சரியமாக இருக்கும்.

தமிழில் ‘சங்கராபரணம்’ படத்தில் ‘தகிட ததிமி’ பாடலில் பேசி கொண்டே பாடலின் உச்சத்தை தொட்டிருப்பார். அதெல்லாம் என்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியம்தான்”

பிபிசி தமிழ்

https://chakkaram.com/wp-content/uploads/2021/09/10000000_1179222422569525_7433144588812029269_n.mp4
Exit mobile version