–சுபத்திரா தேசப்பிரிய
தமிழ் புலம்பெயர் சமூகத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பு குறித்து கேட்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு அரசியல் முக்கியஸ்தர்கள் மூவர் பதில் அளித்துள்ளனர். மேற்படி முக்கியஸ்தர்கள் மூவரிடமும் கேட்கப்பட்டஐந்து கேள்விகளும் வருமாறு:
1. தமிழ் புலம்பெயர் சமூகத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தமை தொடர்பாக உங்களது கருத்து என்ன?
2. அரசு தலைமையின் நெகிழ்வுப் போக்கு குறித்து சர்வதேச சமூகம் கொண்டுள்ள நிலைப்பாடு என்ன?
3. நாட்டின் உள்விவகார அரச பொறிமுறையில் வெளிநாடுகள் அநாவசியமாக தலையிடக் கூடாது என்பது புத்திஜீவிகளின் கருத்தாகும்? உங்களது கருத்து யாது?
4. சுயாதீன உரிமைகளுக்கு மதிப்பளித்து சர்வதேச உறவுகள் எவ்விதத்தில் அமைய வேண்டும்?
5.ஜெனீவா மாநாட்டில் இதற்கு முன்னர் ஆதரவளிக்காத நாடுகள் இம்முறை ஆதரவு வழங்கியதற்கான காரணம் என்ன?
தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா:
1. இந்த அழைப்பானது காலத்துக்குப் பொருத்தமானதும் முக்கியமானதும் என்பதே எனது கருத்தாகும். இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்து முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் விசேடமாக சர்வதேசமும் பல அமைப்புகளும் இந்நாட்டு மக்களின் நல்லிணக்கத்தை வலுப்படுத்த அந்நியோன்ய புரிந்துணர்வு தேவை எனக் கூறி வருகின்றார்கள். அதனால் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக கலந்துரையாடுவது மிக முக்கியமாகும். தமிழ் புலம்பெயர் சமூகம் இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக சர்வதேசத்திடம் கூறுகின்றது. இந்தத் தவறான கருத்தை பரப்புவது தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி தவறான புரிந்துணர்வு காணப்பட்டால் அதனை களைவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்த விருப்பத்தை தெரிவித்து விடுத்த இந்த அழைப்பு சர்வதேச ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் எமது அரசு நல்லிணக்கம் என்னும் கருத்தை ஏற்றுக் கொண்டு ஏதேனும் ஒரு பிரிவினருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனைத் தீர்ப்பதற்கு விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதியால் தூரநோக்குடன் ஆராயப்பட்டு இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் புலம்பெயர் சமூகம் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டை பிரிக்க வேண்டும் என்ற தவறான கருத்தை தோல்வியடையச் செய்து, இலங்கையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஏதேனும் தவறான புரிந்துணர்வு காணப்பட்டால் அரசியல் அமைப்புக்குள் அதனைத் தீர்ப்பதற்கு இச்சந்தர்ப்பத்தில் செயல்பட வேண்டும்.
2. உண்மையில் உள்நாட்டு விவகாரங்களை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவரும் இந்நாட்டு மக்கள் என்பதால் எமது நாட்டுப் பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். இனங்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அவற்றைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இப்பிரச்சினையை சர்வதேசத்திடம் கொண்டு சென்று குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. தமிழ் டயஸ்போரா உலகெங்கும் பல கருத்துகளை கூறுவது எல் ரீ ரீ ஈ அமைப்பை மீண்டும் உருவாக்க உதவிகளைப் பெறுவதற்காக எனவும் எண்ணலாம். ஜனாதிபதியாக புத்திசாலித்தனத்துடன் நெகிழ்வுப் போக்குடன் அழைப்பை விடுத்தது சர்வதேசத்தின் பாராட்டுக்கு காரணமாக அமைந்தது. அவர்களின் பிரச்சினைக்கு சரியான முறையில் தீர்வினை வழங்க அரசு தயார் என்பதே இதன் மூலம் தெரியவருகின்றது. இவ்வாறான முக்கிய நடவடிக்கைகள் மூலம் எமது நாட்டில் மூன்றாம் தரப்பினர் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது தடுக்கப்படுகின்றது.
3. நாம் நேர்மையாக தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். மூன்றாவது தரப்பினர் அதனை நம்பிக்கையுடன் நோக்குகிறார்களா இல்லையா என்பது இங்கு விடயமல்ல. நாம் எமது கடமையை முழு உலகும் அறியும் வகையில் நிறைவேற்ற வேண்டும். அது நாம் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கும் அரசு அல்ல என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டும். அதன் மூலம் அவர்களின் கருத்தையும் உலகுக்கு அறியச் செய்யலாம். சர்வதேச ரீதியாக எம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இது நல்ல தீர்வாகும்.
4. நிச்சயமாக எமது நெகிழ்வுத் தன்மையான கொள்கையை ஏற்றுக் கொண்ட அரசுகள் எமக்கு ஒத்துழைப்பு பெற்றுக் கொடுக்கும். ஒவ்வொருவருடைய அரசியல் தேவைகள் பயன்பாடே ஜெனிவா நகரில் இடம்பெறுகிறது . அநேகமான நாடுகள் அவ்வாறானவை. ஐரோப்பிய யூனியன் நாடுகளை எடுத்துக் கொண்டால் அந்நாடுகள் எப்போதும் இணைந்தே யோசனைகள் குறித்த முடிவுகளை எடுக்கின்றன. ஒரு சில விடயங்களில் ஒப்புதல் இல்லாவிட்டாலும் ஒரு அணியாக வாக்குகளை பயன்படுத்துவது ஒன்றாக முடிவெடுப்பதனாலாகும். தமிழ் புலம்பெயர் சமூகம் கனடா, இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசுகளுக்கு அழுத்தத்தை அளிக்கின்றது. ஜெனிவா போன்ற நாடுகளிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் இந்த கருத்துக்களின் பிரதிபலிப்பே தெரிகின்றது. அதனால் ஜனாதிபதி நேரடியாகவே புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் நல்லது என நம்புகிறேன். அதற்காக நேர்மையாக விருப்பத்தை தெரிவித்தால், இந்தப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என எண்ணினால் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று கலந்துரையாடலுக்கு வர வேண்டும்.
5. சர்வதேச உறவை பேணுவது என்பது எமது இறையாண்மையை இன்னொரு நாட்டுக்கு அடகு வைப்பது அல்ல. ஐக்கிய நாடுகள் அமைப்பில் மனித உரிமைகள் தொடர்பாக எமது நாட்டைப் பற்றி சர்வதேச ரீதியில் சிலர் கூறுவது அனைத்தும் உண்மை அல்ல. அவற்றின் தவறான நிலைமையை சுட்டிக்காட்டி நாம் அவர்களுடன் நட்புறவுடன் செயல்பட வேண்டும். அதனால்தான் ஜனாதிபதியே ஜெனிவா நகருக்குச் சென்று எமது அரசு சார்பில் விடயங்களை முன்வைத்தார். நல்லிணக்க நடவடிக்கைகள் எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் உள்ளகப் பொறிமுறை மூலம் தெளிவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளித்தரப்பாரின் தேவைகளை விட நாம் நிறைவேற்ற வேண்டியது நம் நாட்டின் தேவைகளையாகும்.
மக்கள் விடுதலை முன்னணி அரசியல் குழு அங்கத்தவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த:
1. அரசியல் தலைமை, ஜனாதிபதியொருவர், அரசியல் கட்சியொன்று போன்று பொதுவாக எடுத்துக் கொண்டால் எந்த ஒரு அந்நியம் இல்லாத அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தவறு இல்லை. நவீன அரசியலில் முக்கிய விடயமாக அமைவது அரசியல் முகாமைத்துவராக செயல்படுவதாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித தவறையும் நான் காணவில்லை.
2. நாட்டின் சுதந்திரம் உலகில் ஏற்றுக் கொண்ட ஒன்றாகும். அதேபோன்று நாம் உலகளவில் நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் உள்ளன. இவை இரண்டுமே அவசியமானதாகும். சர்வதேச ரீதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அல்லது வேறு யாராக இருந்தாலும் நாம் உலக அளவில் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் பேரில் தலையீடு உண்டு. ஆனால் நாம் அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத தனியான சுதந்திரமும் எமக்கு உண்டு .
3. எவ்வாறான சூழ்நிலையின் கீழ் ஜனாதிபதி இந்தக் கருத்தை கூறி உள்ளார் என்பதை அரசியல் சமூகம் கணிப்பிடும். அங்கு சர்வதேச ரீதியாக நாம் வாக்களித்ததை நிறைவேற்றாத நிர்வாகம் இந்நாட்டில் காணப்படுகிறது. மனித உரிமைகள் தொடர்பாக மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நீதி நியாயத்திற்காக பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். ஜனாதிபதியின் அழைப்பு சிங்கள, தமிழ், முஸ்லிம் இனவாத அணிகள் உள்ளிட்ட அனைத்து சமூகத்துக்கும் முக்கியமானது. அதனால் இதனை பாராட்டுவதோடு சில சக்திகள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக அந்த அழைப்பை செயல்படுத்த முடியுமா என்ற விடயம் முக்கியமாகும். ஆரம்ப காலம் தொட்டு அரசியல்வாதிகள் கூறிய விடயங்களை பார்த்தால் இந்நாடு சொர்க்கமாக இருந்திருக்க வேண்டும். கடந்த தேர்தல் பிரகடனங்களின்படி அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருந்தால் நாடு சுபிட்சமாக இருந்திருக்க வேண்டும். இந்நாட்டில் ஆட்சிக்கு வரும் அனைவரும் நாட்டை சுபீட்சத்துக்கு இட்டுச் செல்வதாகக் கூறி ஆட்சிக்கு வருகிறார்கள். அனைவரும் நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறுகிறார்கள். அந்த அபிவிருத்தியின் அளவு எவ்வளவு என்று எமக்குத் தெரிகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. டொலர் இல்லாததால் பணம் செலுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது. அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. தனி மனித சுதந்திரம் உண்டு. ஆனால் சர்வதேச ரீதியில் சில ஒப்புதல்களை வழங்கியுள்ளோம். சர்வதேசரீதியாக ஒப்புதல் அளித்த விடயங்கள் தொடர்பில் அழுத்தங்களை ஏற்படுத்தும் உரிமையுண்டு. ஒப்புதல் அளிக்காதவை பற்றி அழுத்தம் அளிப்பது தவறாகும். அக்காரணிகள் இரண்டு பக்கமும் பிரிந்து செல்கின்றன. உலகில் நாம் தனித்து வாழ முடியும். தனியாக வாழ வேண்டிய இடங்களும் உள்ளன. இந்த சுதந்திரத்தை பாதுகாப்பது பற்றி பேசும் போது எமது பொருளாதாரத்திலும் மற்றும் அரசியலிலும் நாம் சுயாதீனமாக இல்லை. மக்களுக்கு தெரிவதற்கு அப்பால் கொடுக்கல்-வாங்கல் தொடர்புகள் நாட்டில் உள்ளன . அரசாங்கங்கள் ஆட்சிக்கு வரும் போது ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த தூதரக காரியாலயங்கள் ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புபடுகின்றன . அவர்கள் மீள உதவிகளை எதிர்பார்க்கின்றார்கள்.அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். நாம் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு செல்ல வேண்டும்; இல்லாவிட்டால் அவற்றுடன் இல்லாமல் இருக்க வேண்டும்.
5. யாராவது ஒரு நாடு எமக்காக கையைத் தூக்கினால் நாம் அதனை பெரிதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அது மாறி நடக்கும் பொழுது நாம் எதிர்மறையாக எண்ணுகிறோம். எமது நாடு ஒரு நாடாகஇணைந்த அணுகுமுறைக்கு உட்பட்ட நாடல்ல. தலைமைப் பார்வையிலிருந்து ஒரு அணியை திருப்திப்படுத்தும் அரசியலே செய்கின்றார்கள். சிலவேளைகளில் எமது அறிக்கைகள் மற்றும் ஒப்புதல்கள் மீது இந்த நாடுகள் இணையும் என முடிவு செய்கிறார்கள். அவர்கள் எமக்கு ஆதரவு அளிப்பது அவர்களுக்கு நாம் ஆதரவளிப்போம் என்ற எதிர்பார்ப்பிலாகும். அதனால் எந்த நாடு எமக்கு ஆதரவு அளிக்கிறது, எந்த நாடு எமக்கு ஆதரவு அளிக்கவில்லை என எண்ண வேண்டியதில்லை. நாம் உலகில் எம்மை நம்பும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எமது வேலையை செய்வோம் என்ற நம்பிக்கையுடன் கூடிய திட்டமொன்றை நாட்டில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்:
1. ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக் கொண்டால் நல்லது. இணக்கம் நல்ல செயல். நாம் இது தொடர்பாக எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளோம். ஆனால் நாம் அந்தத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ளோம். எம்மோடு பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி நாள் குறித்து அதனை தள்ளிப் போட்டார்கள். அதனை நிறைவேற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஓரு நாட்டில் பல இன மக்கள் வாழ்ந்தாலும் நாம் எதனையும் ஒரே நாடாக தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம். ஒரே நாடாக முன்னோக்கிச் செல்லத் தயார். அனைத்து மக்களினதும் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். நாட்டிற்குள்ளேயே தீர்வைக் காண விரும்புகிறோம். அதைத் தவிர்த்து நாட்டை இரண்டாக மூன்றாக பிரிக்க வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கின்றார்கள். நாம் அவ்வாறு கூறவில்லை. ஆனால் ஜனாதிபதி ஜெனீவா சென்று அவர்களுடன் பேசுவதற்கு விருப்பம் என்று கூறியதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நாம் அதை எதிர்க்க மாட்டோம்.
ஆனால் ஒரு நாடு என்ற ரீதியில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, முதலில் எங்களுடன் கலந்துரையாடி இருக்க வேண்டும். நாம்தான் எமது மக்களின் பிரதிநிதிகள். புலம்பெயர் சமூகம் என்பது எமது நாட்டில் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டு நாட்டை விட்டு வெளியேறியவர்கள். குறிப்பாக1983 இல் அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட போது அரசாங்கத்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத நிலைமை காணப்பட்டதால் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றார்கள்.
இந்நாட்டில் அவர்களுக்கு எதிராக வன்முறை இடம்பெற்று இருக்காவிட்டால் இன்று அவர்கள் இங்கு வசிப்பார்கள். அவர்களை அடித்து விரட்டி விட்ட பின்னர் அவர்கள் மனித உரிமைகள் விடயங்கள் குறித்து பேசாமல் இருக்க முடியாது. அவர்களை சமமாக ஏற்றுக் கொண்டு எமது நாட்டில் வாழும் உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை விரட்டி அடித்து விட்டு பின்னர் சர்வதேசத்திடம் கூறுவதால் எதுவித பயனும் இல்லை. அவர்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
2. ஒரு நாடாக எமக்கு ஒரு உறுதி இருக்க வேண்டும் என்றாலும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைய செயல்படுவோம் என ஒப்புதல் அளித்துள்ளோம். எமது நாடும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவ நாடாகும். அவர்களின் நிலைப்பாட்டிலிருந்து செயல்பட நாம் ஒப்புதல் வழங்கி உள்ளோம். எமது நாடும் சர்வதேச முறைகளுக்கு இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக பொதுவாகவே நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதில் நாட்டின் உள்ளே வெளியே என கருத முடியாது. நாமும் அதன் சாசனங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். அதனால் மனித உரிமைகள் விடயத்தில் முழு உலகமுமே ஒன்றாகும்.
அதனால் எம்மால் நாட்டின் சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூற முடியாது. நாம் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளோம். நாமும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மனித உரிமைகள் தொடர்பாக கண்காணிப்புக்கு உள்ளாகுவோம். மனித உரிமை இந்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல . ஏனைய நாடுகளும் எமது நாட்டைப் பற்றி ஆராயும். நாட்டின் சுதந்திரம் மனித உரிமை மீறல் தொடர்பில் வெளியிலிருந்து மேற்கொள்ளப்படும் அழுத்தம் என தற்போது கூற முடியாது. நாமும்ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்தவர்கள். நாம் அவர்களுடன் இணைந்து செயல்படுவதால் நாட்டில் தலையிட வேண்டாம் எனக் கூற முடியாது.
3. சர்வதேச புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எமக்கு எதுவித எதிர்ப்போ பிரச்சினையோ இல்லை. பிரச்சினையை ஏற்படுத்த மாட்டோம். யாரோடு கதைத்தும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எம்முடன் கதைக்க வேண்டும். நாம் இந்நாட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள். எமக்கு யாருடன் பேசினாலும் பிரச்சினை இல்லை. ஜனாதிபதிக்கு இறுதியில் தெளிவாகும். யாருடன் பேசினாலும் இறுதியில் எம்முடன் பேச வேண்டும் என்பது புரியும். நாட்டில் உள்ள தமிழ் மக்களுடன் பேசாது வெளிநாட்டுக்குச் சென்று பேசுவதால் சர்வதேச சமூகம் மகிழ்ச்சி அடையும், தெளிவுக்கு வரும் அல்லது கருத்தில் எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்பவில்லை. எம்மிடம் இன்னும் கலந்துரையாடாது சர்வதேசத்துடன் கலந்துரையாடுவதால் எதுவித பலனும் இல்லை.
ஜனாதிபதி அவ்வாறு கூறியதால் சர்வதேசம் மகிழ்ச்சி அடையும் எனக் கூற முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான எம்முடன் பேசுவதே சாலச் சிறந்தது.
4. நாம் நாடு என்ற ரீதியில் கூறினால் சர்வதேசத்தில் யாரும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாம் இதனை ஒரே குரலாக சொல்ல வேண்டும். மற்றைய விடயம் மனித உரிமைகள் எனப்படுவது உலகம் பூராவும் உள்ள ஒன்றாகும். இறைமை, சுதந்திரம் என்று கூறி அவற்றை மீற முடியாது. தற்போது அதுதான் நடந்துள்ளது. அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதனால் குற்றச்சாட்டுகளுக்கு சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள நாம் இணங்க வேண்டும். எமக்கு பயம் இல்லாவிட்டால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று எம்மால் கூற முடியும் என்றால், நாம் ஏன் அதற்கு முடியாது என்று கூற வேண்டும்? யாரும் வந்து விசாரணை செய்யலாம் என்று கூற நாம் முன்வர வேண்டும். எமக்கு மறைக்க ஒன்றுமில்லை என்றால் முகங்கொடுக்க நாம் பயப்படத் தேவையில்லை.
5. அந்த மாநாட்டில் இலங்கை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனைகள் அங்கீகரிக்கப்பட்டன. அதற்கு ஆதரவாகத்தான் நாடுகள் நடவடிக்கையில் ஈடுபட்டன. அது நாம் விசேடமாக மகிழ்ச்சி அடையக் கூடிய காரணமல்ல. 2009 மே 26 ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வருகை தந்திருந்த வேளையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது, மனித உரிமைகள் மீறப்பட்டு இருந்தால் அது அதுபற்றி சுயாதீன விசாரணை நடத்துவதாக கையெழுத்திட்டார். ஆனால் கையெழுத்திட்டாலும் எதுவுமே செய்யவில்லை. 2011 ஆம் ஆண்டு மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமித்தார். அதன் பின்னரே இது பற்றி ஆராயப்பட்டது.
இந்த அனைத்து நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது 12 வருடங்களுக்கு பின்னரே எனக் கூறினார். கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்து உறுதி அளித்துள்ளதாகக் கூறினார்.
மனித உரிமைகள் மீறல் நடைபெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கூறியுள்ளார். மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயல்பட புதிய ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை (12 வருடங்களுக்கு பின்னர்) இணங்கியுள்ளார். ஆனால் இன்னும் எமக்கு பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்கவில்லை. அதனையே முதலில் செய்ய வேண்டும்.
–தமிழில்: வீ.ஆர்.வயலட்