–கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்
- அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்யாமல் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதன் மூலம் ஓய்வூதியத்திற்காகச் செலவிடும் பணத்தை மீதப்படுத்தலாம். அத்துடன் ஏற்கனவே ஊதிப்போயுள்ளஅரசாங்கத்துறையின் அளவைக்குறைத்து வெறும் 21மில்லியன் மக்களுக்கு சேவை வழங்க போதுமான அளவுக்கு அதனை குறைப்பதும் அவசியமானது.
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. தமது மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்காக அவற்றை முறையாகப்பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்படும் நிதி போதியதாக இல்லை என்று தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வந்தனர். இப்போது அது அதிகரிப்பட்டுள்ளது.
- கொவிட் காலப்பகுதியில் மிகை இலாபம் உழைத்த வங்கி, நிதி காப்புறுதி நிறுவனங்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.அத்துடன் 2000மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் உழைக்கும் சுமார் 61 நிறுவனங்கள் மீது ஒருமுறை மாத்திரம் அறவிடத்தக்க 25.5 சதவீத விசேட வரியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’
2022ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாக சார்பானதும் எதிரானதுமான கருத்துக்கள் பல்வேறு மட்டங்களிலும் தளங்களிலும் வெளியாகி வருவதைக் காணமுடிகிறது. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிழைகள் ஏதுமற்ற ஒரு விமர்சனங்களை எதிர்கொள்ளாத ஒரு பட்ஜெட்டை எவராலும் சமர்ப்பிக்க முடியாது என்ற யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு ஒரு பட்ஜெட்டின் சாதக பாதகங்களை ஆராய வேண்டியது அவசியம்.
அது மட்டுமன்றி கடந்தாண்டில் முன்மொழியப்பட்ட யோசனைகளுக்கு என்ன நடந்தது அவை முறையாகப்பூர்த்தி செய்யப்பட்டனவா? அவற்றில் அடையப்பட்ட முன்னேற்றம் என்ன? அதற்கும் மேலே சுபீட்சத்தின் இலக்கு என்று ஜனாதிபதித் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் அடையப்பட்ட முன்னேற்றங்கள் என்ன? போன்ற முழுமையான ஒரு கழுகுப்பார்வையின் அடிப்படையிலேயே இந்த பட்ஜெட்டை நாம் பார்க்க வேண்டியிருக்கும். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் போதும் ஏதோ புதிதாக அப்போதிருந்து தான் ஆரம்பிக்கப்படப்போவது போன்ற ஒரு உணர்வை பொது சனத்தின் மத்தியில் ஏற்படுத்த விரும்புவதைக்காண முடிகிறது.
உண்மையில் பட்ஜெட் என்பது தனித்தனி நிதியாண்டுகளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டாலும் அவை முன்னைய ஆண்டுகளின் தொடர்ச்சியாகவே (rolling plan) பார்க்கப்படவேண்டும். அதனடிப்படையில் பார்க்கும்போது கொவிட் பெருந்தொற்றின் பின்னர் ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையிலான முன்மொழிவுகள் இதில் உள்ளனவா என்பதை நோக்குவது அவசியம்.
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முடக்கம் அந்நியச்செலாவணி உள்வருகை குறைவடைந்ததனால் இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தேய்வு பண அச்சடிப்பு காரணமாகவும் கடன் மீளச்செலுத்தல்கள் காரணமாகவும் வெளிநாட்டுக் நாணயக் கையிருப்பகள் தொடர்ச்சியாகத் தேய்வடைந்து சென்றமை போன்ற காரணங்களாலும் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டமை காரணமாகவும் இறக்குமதிகள் தடை செய்யப்பட்டமை காரணமாகவும் பல்வேறு பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துச் சென்றமையும் அதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வாழ்க்கைத்தரம் குறைவடைந்து செல்கின்றமையையும் காணமுடிகிறது.
எனவே தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த நேரடியான நிவாரணங்களை மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆயினும் அது தொடர்பான முன்மொழிவுகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. ஆனால் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நுண்ணிய மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி, பாடசாலைப் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து போன்றவற்றின் உரிமையாளருக்கும் உதவு தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்கள் கேட்ட சம்பள அதிகரிப்புக்குப் பதில் ஓய்வுபெறும் வயதெல்லையை 65வயதுவரை நீடித்து உச்சி குளிரவைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வீதியில் இறங்கிப்போராடிய அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம் பற்றிய முரண்பாடுகளைத் தீர்க்க 30000மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளமை அவர்களைத் திருப்பதி செய்யக்கூடும். பட்டதாரிகளை அரச சேவைகளில் நிரந்தரமாக இணைத்துக்கொள்ள நிதி ஒதுக்கபட்டுள்ளமை அவர்களையும் திருப்பதிப்படுத்தக் கூடும்.
இளைஞர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட ஊக்குவிப்பதானது நாட்டுக்கு இருவகையில் நன்மை தருமென அரசாங்கம் எதிர்பார்ப்பது போலத் தெரிகிறது. ஒரு புறம் அவர்கள் திரட்டியனுப்பும் டொலர்கள் நாட்டுக்கு வரப்பிரசாதம், மறுபுறம் உள்நாட்டில் வேலையின்மை குறையும். அதுமட்டுமன்றி புதிதாக அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்யாமல் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதன் மூலம் ஓய்வூதியத்திற்காகச் செலவிடும் பணத்தை மீதப்படுத்தலாம். அத்துடன் ஏற்கனவே ஊதிப்போயுள்ள அரசாங்கத்துறையின் அளவைக்குறைத்து வெறும் 21மில்லியன் மக்களுக்கு சேவை வழங்கப்போதுமான அளவுக்கு அதனை குறைப்பதும் அவசியமானது. வெறுமனே கதிரையைச் சூடாக்கிக் கொண்டிருக்கும் ஒரு சேவையாக அல்லாமல் அரச சேவையை செயலாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகளை (key formance indicators – KPI) மேற்கொண்டு வினைத்திறனான சேவை வழங்கும் ஒன்றாக மாற்றுவதற்கான முன்மொழிவுகள் பட்ஜெட்டில் உள்ளமை சிறப்பு. அது முறையாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் பெறும் தகுதிக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. அவர்களது எரிபொருள் கோட்டா 5லீற்றர்களால் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட முன்மொழிவுகள் செலவினங்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும் சரியான திசையில் வைக்கப்பட்ட ஒரு காலடியாகப் பார்க்கலாம். ஆனால் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலைதூர பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தமது மக்களை அடிக்கடி சந்திப்பவர்கள். எனவே தூரத்தை அடிப்படையாகக் கொண்டு இதைத் தீர்மானித்திருக்கலாம். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. தமது மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்காக அவற்றை முறையாகப் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்படும் நிதி போதியதாக இல்லை என்று தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வந்தனர். இப்போது அது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுக்கும் என்று தனித்தனியே நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் வடக்கு கிழக்கு உட்பட கிராம சேவையாளர் மட்டத்திலிருந்து மேல்நோக்கிய ரீதியில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட உரிய காலத்தில் உரிய செலவீட்டு அலகுகளைச் சென்றடையுமா? அத்தகைய நிதிகள் முறையாகப் பயன்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் உள்ள ஜெகஜாலக் கில்லாடிகள் வரும் இந்த நிதிகளில் கணிசமான பகுதியைத் தமது தனிப்பட்ட கஜானாக்களுக்கு மாற்றும் நடவடிக்கையை எவ்வாறு தடுப்பது என்றும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். செலவுக்கட்டுப்பாட்டின் இன்னொரு முயற்சியாக அரச காரியாலங்களுக்காகக் கட்டுமானப்பணிகளை மேற்கொள்வது அடுத்துவரும் இரண்டரை வருடங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. கட்டடங்கள் கட்டுவது மட்டுமன்றி அரச காரியாலங்களுக்காக பெருந்தொகைப்பணத்தைச் செலவிட்டு கட்டடங்கள் வாடகைக்குப் பெறப்படுகின்றன. இவற்றிலும் கட்டுப்பாடுகள் அவசியம். உல்லாசத் துறையே நாட்டுக்கு டொலர் வருவாய் ஈட்டித்தரும் வித்தையை மேற்கோள்ளும் துறையாக கருதப்பட்டது. அப்போது தான் கைத்தொழில்துறையின் முக்கியத்துவம் குறித்த விழிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வெளிநாட்டு நேரடி மூலதனத்தை ஈர்க்கப்போவதாக வழமையான பல்லவி பாடப்பட்டுள்ளது. உள்நாட்டில் வெளிநாட்டு நேரடி மூலதன உள்வருகையை ஈர்ப்பதற்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலமே அது சாத்தியப்படும். அதற்கான கொள்கை முன்மொழிவுகளைக் காண முடியவில்லை. குறிப்பாக தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஒரு நாட்டின் உள்நாட்டுச் சந்தையை நம்பி நேரடி முதலீடுகள் வருமென எதிர்பார்க்க முடியாது. வெற்றிகரமாகப் பயணிக்கும் ஏனைய நாடுகளின் அனுபவங்களைக் கற்று இது தொடர்பில் இலங்கை நடவடிக்கையெடுக்க வேண்டும். தற்போது வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய நிர்வாகக் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படப் போவதாக பட்ஜெட் முன்மொழிவு கூறுகிறது.
வரவு முன்மொழிவுகளைப் பொறுத்தமட்டில் வரிக்கட்டமைப்பில் பிரதான மாற்றங்கள் ஏதுமில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தபடி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வரிமுறையில் மாற்றம் ஏற்படாது என்ற உறுதிமொழியை இவ்வருட பட்ஜெட்டில் அரசாங்கம் மீறவில்லை என்பது கொள்கை நிச்சயத்தன்மை பற்றிய நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவலாம். ஆனால் கொவிட் காலப்பகுதியில் மிகை இலாபம் உழைத்த வங்கி, நிதி காப்புறுதி நிறுவனங்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 2000மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் உழைக்கும் சுமார் 61நிறுவனங்கள் மீது ஒருமுறை மாத்திரம் அறவிடத்தக்க 25.5சதவீத விசேட வரியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி கடந்த காலத்தில் பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் முறையற்ற ரீதியில் திரட்டியதாகக் கூறப்படும் 8.5பில்லியன் ரூபா நிதியினை திறைசேரிக்கு மாற்றவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நிதியமைச்சு வெளியிட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின்படி 2022ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் மொத்தச் செலவினங்கள் 3912பில்லியன் ரூபாவாகவும் மொத்த வருவாய்கள் 2284பில்லியன் ரூபாவாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக செலவுகள் 21.1வீதமாகவும் வரவுகள் 12.3வீதமாகவும் இருக்குமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2022நிதியாண்டுக்கான துண்டுவிழும் தொகை 1628பில்லியனாக இருக்குமெனவும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8.8சதவீதமாக இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் துண்டுவிழும் தொகையை பெரும்பாலும் உள்நாட்டு மூலாதாரங்களைக் கொண்டு நிதிப்படுத்தி விடலாமென்று அரசாங்கம் நம்புகிறது. மேலே குறிப்பிட்டப்பட்ட இந்த நிதி முன்மொழிவுகள் மாற்றமடைவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
-தினகரன் வாரமஞ்சரி
2021.11.14