வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று (19.11.2021) அறிவித்தார். ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு மோடி அரசு பணிந்துள்ளது. பிரதமர் மோடி வெள்ளியன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாகவும் இதற்கான நடவடிக்கைகளை இம்மாதம் நடைபெற உள்ள நாடாளு மன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் அரசியல் கட்சியினர், விவசாயிகள் அமைப்புகளின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மோடி அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. இதனால் கொதிப்படைந்த விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் முற்றுகையிட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை இன்றும் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் மற்றும் ஒன்றிய அரசு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.ஆனால் மோடி அரசு, விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்காமல், வேளாண் சட்டங்களை ரத்து செய்யாமல் பிடிவாதம் பிடித்து வந்தது. ஆனாலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. அடுத்து பெரிய மாநிலமான பாஜக ஆட்சியில் இருக்கும் உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 5 மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் பாஜகவுக்கு எதிர்ப்பு அதிகரித்தது. 5 மாநில தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என்று விவசாயிகள் சங்கங்கள் அறிவித்து, களத்தில் இறங்கின.
விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டம் மற்றும் பிரச்சாரத்தில் இறங்கியதால் அதிர்ந்துபோன பாஜக தலைமை, வேறு வழியின்றி பிரதமர் மோடி மூலம் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறி நாடு முழுவதும் விவசாயிகள் பட்டாசுகளை வெடித்தும் மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள், மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டிவிட்டரில், “விவசாயிகள் சத்தியாக்கிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மோடியின் விநோத விளக்கம்
பிரதமர் மோடி வெள்ளியன்று ஆற்றிய உரையில், “வேளாண் சட்டங்களின் நலனை விவசாயிகளுக்கு விளக்க முடியாதது எங்களுடைய தவறு என கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும். குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லூர்கள் இடம்பெறுவார்கள். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
சீத்தாராம் யெச்சூரி கருத்து
ஒன்றிய அரசும் அதன் சார்பு அமைப்புகளும் விவசாயிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளன. விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி வழங்க வேண்டும். தனது வணிகக் கூட்டாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட விவசாய சட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
வேளாண் விரோதச் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள மோடி, குறைந்த பட்ச (MSP) அடிப்படை ஆதார விலையில் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்.
போராட்டம் தொடரும்
ராகேஷ் திகாயத் செய்தியாளர்களிடம் கூறுகையில் “பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதை வரவேற்கி றோம். அதே சமயம், குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமின்றி வேறு சில விஷயங்க ளுக்காகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அது குறித்து ஒன்றிய அரசு எங்களுடன் பேச முன்வர வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும்வரை நாங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் போராட்ட களத்திலேயே காத்திருப்போம்,” என்று தெரிவித்தார்.