–லாரன்ஸ் விஜயன்
பாட்டு… உறங்கிக் கொண்டிருக்கும் பல உணர்வுகளை எழுப்பிவிடுகிறது. பாதி இரவில் கண்விழிப்பதும், பாட்டுக் கேட்டுக்கொண்டே விடியும் வரை உறங்காதிருப்பதும் ஒரு சுகமான அனுபவம். பாட்டில்லாமல் இங்கு எதுவுமில்லை… பாட்டுதான் எல்லா உணர்வுகளுக்கும் எல்லை…
“உலவும் தென்றல் காற்றினிலே”…
இதுபோல இன்னும் எத்தனையோ இனிக்கும் தமிழ்ப் பாடல்களுக்குச் சொந்தக்காரர்தான் மண்ணின் கவிஞர் மருதகாசி. கும்பகோணம் அருகிலுள்ள மேலக்குடிக்காடு எனும் சிற்றூர். இங்குதான் மருதகாசி பிறந்தார். வசதியான விவசாயக் குடும்பம். கிராமத்தில் ஆரம்பப் பள்ளியும், கும்பகோணத்தில் இன்டர் மீடியட் வரையும் படித்த மருதகாசிக்கு, அமிழ்தினும் இனிய தமிழ் மீது ஆர்வம் வரக் காரணம், பாபநாசம் சிவனின் தமையனார் பி.ஆர். ராஜகோபால ஐயர்.
தமிழின் நதிமூலம் பற்றிப் பலவித கருத்துகள் உள்ளன. தமிழ் என்னும் சொல்லுக்கு திரவிட என்பதே மூலம் என்றார், அறிஞர் கால்டுவெல். த்ரவிட, திரமிட, த்ரமிள, தமிள எனத் தொடர்ந்து தமிழ் என்றானது. இதுதான் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பு. ஆனால், தமிழ் என்ற சொல்தான் – தமிள – த்ரமிள – த்ரவிட – திராவிட என்றானதாகும் எனக் கூறுபவர்கள் உண்டு. பல கருத்துகள் உலா வரலாம். ஆனால், கோடி நட்சத்திரங்கள் கொட்டிக் கிடந்தாலும் வானத்தை வசீகரப்படுத்துவது வட்ட நிலாதானே? தமிழ் தேயாத நிலா. உலகம் முழுவதும் உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கிறது, அதன் உலா. தமிழைப் பெண்ணாக உருவகித்துப் பாடிய கவிஞர்கள் பலர். மருதகாசியும் அதற்கு விதிவிலக்காக முடியுமா?.
“வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி
கண்ணசைவில் கோடி கோடி
கற்பனைகள் தந்தாள்”
எனப் பாடினார் மருதகாசி. எந்தக் கலை வடிவமும் மக்களைச் சென்றடைய வேண்டுமானால் அது மக்களின் மொழியில் இருக்க வேண்டும். துணியில் பொத்தி வைத்திருந்தாலும், துளிர்விடும் மல்லிகையின் மணத்தைப் போல கலை எந்த வடிவில் இருந்தாலும் தன்னை கம்பீரமாய் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல், இசை, கூத்து என்ற முத்தமிழில், முதலிடத்தில் இயல் இருந்தாலும், மொழி தோன்றுவதற்கு முன் சைகையால் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் முறை இருந்ததால், இந்த உலகில் முதன் முதலாக நாடகக் கலைதான் தோன்றியிருக்க வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது.
சினிமா என்ற நவீனத்தை, தாமஸ் ஆல்வா எடிசன் தன் சிந்தனையில் கருக்கொள்வதற்கு முன்னதாகவே, நாடகங்கள் முழு உருவம் கொண்டு உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை நாடகக் கலை சங்ககாலம் தொட்டே தனது முகத்தில் அரிதாரம் பூசிக்கொள்ளத் தொடங்கிவிட்டது. அரிதாரம் பூசியதைத் தொடர்ந்து, ஆடை கட்டி, அழகு பூட்டி தன்னை அலங்கரித்துக் கொண்ட நாடகக் கலை, சில பல ஆண்டுகள் வரை மக்களிடம் செல்வாக்கு பெற்று வந்தது.
நாடகக் கலை, தமிழ் மக்களை ஆக்கிரமித்திருந்ததாலோ என்னவோ, ஆரம்பக் காலத்தில் நாடக ரசிகராகத் திகழ்ந்த மருதகாசி, நடிகராகவும், வசனங்களை நடிகர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் வாத்தியராகவும் மாறினார். கலைஞர் கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி நாடகம் கும்பகோணத்தில் 1947-ல் மேடை ஏறியபோது, அவரைச் சந்தித்த மருதகாசி, கருணாநிதியின் ‘ஒரே முத்தம்’ நாடகத்திற்குப் பாடல் எழுதினார். நாத்திகக் கருத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட அந்தப் பாடலைப் படித்துவிட்டு, கருணாநிதி உரக்கச் சிரித்தாராம். நெற்றியில் விபூதி பட்டை தரித்து, கதர் ஆடை அணிந்த மருதகாசி, எழுதிய பாடலை யாராவது கேட்டால், அடித்துவிடப்போகிறார்கள் என்று ஆதங்கத்தோடுதான் அந்தச் சிரிப்பு.
கிராமத்தில் 13 ரூபாய் சம்பளத்தில் முன்சீப்பாக இருந்துகொண்டே பல ஊர்களுக்குச் சென்று நாடகங்களுக்குப் பாடல் எழுதிக்கொண்டிருந்தார் மருதகாசி… பிரபல பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் அமைத்த மெட்டுகளுக்கெல்லாம் பாட்டெழுதினார். அந்தப் பாடல்களை எல்லாம் லோகநாதன், மாடர்ன் தியேட்டர்ஸில் பாடிக் காண்பித்தார். மெட்டுக்கு இவ்வளவு தெளிவாக பாட்டெழுதியவர் யார்? என்று விசாரிக்க, திறமையானவர்களை ஊக்குவிப்பதில் தீவிரவாதியாக விளங்கிய மாடர்ன் தியேட்டர் அதிபர் சுந்தரம், உடனே சேலத்திற்கு வரும்படி மருதகாசியை அழைத்தார்.
1949-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ‘மாயாவதி’ என்ற படத்தைத் தயாரித்தது. டி.ஆர். மகாலிங்கம், அஞ்சலி தேவி இணைந்து நடித்த இந்தப் படத்தை டி.ஆர். சுந்தரம் இயக்கினார். இந்தப் படத்திற்குத்தான் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார்.
”பெண் எனும் மாயப்பேயாம்
பொய் மாதரை என் மனம் நாடுமோ”
என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்திருந்தார். இதுவே மருதகாசியின் முதல் பாடலானது. முதல் தரப் பாடலாகவும் ஆனது. பின்னர், 1950-ம் ஆண்டு வெளியான ‘பொன்முடி’ படத்தில் மருதகாசிதான் எல்லா பாடல்களையும் எழுதினார். புகழின் நிழல் மருதகாசி மீது படரத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்திடம் மந்திரிகுமாரி நாடகத்தைப் படமாக்கலாம் என்றார் மருதகாசி. படம் உருவானது. படத்தின் உச்சக்கட்ட காட்சி, காதலியைத் தீர்த்துக்கட்டும் எண்ணத்துடன் காதலன் அவளை மலைச்சிகரத்திற்கு அழைத்துச் செல்கிறான். இந்தக் கட்டத்திற்கு காதல் இன்பத்தையும் மரணத்தையும் குறிப்பதுபோல் மருதகாசி அமைத்திருக்கும் சிலேடைகள் அழகுத் தமிழின் அங்க அடையாளங்கள்.
“வாராய் நீ வாராய்
போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்”
திரை இசை மேதை ஜி.ராமநாதன், பீம்பிளாஸ் ராகத்தில் அமைத்த மெட்டு ஒரு மெல்லிசை ஜாலம். ‘மந்திரிகுமாரி’யின் உச்சக்கட்ட காட்சியின் உச்சக்கட்ட சுவை இந்தப் பாடல்.
50-களில் மிகவும் புகழ்பெற்ற பாடலாசிரியராகத் திகழ்ந்தார் மருதகாசி. 60-ம் ஆண்டு தொடக்கம் வரை அதிக வாய்ப்புகள் பெற்று, திரை இசை மேதைகள் கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன் ஆகிய இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களைத் திரையில் வழங்கி, ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தின் வீடுகளின் அறைகளில் ஒலிக்கச் செய்தார்.
கவிஞர் சுரதாவின் கதை வசனத்திலும், எஃப் நாகூர் இயக்கத்திலும் உருவான பாகவதரின் ‘அமரகவி’ படத்திற்கு மருதகாசிதான் பாடல்கள் எழுதினார். தொடர்ந்து அவர் எழுதிய தூக்கு தூக்கி படப் பாடல்கள் மருதகாசியின் புகழை வானுயர்ந்த சோலையாக்கி வசந்த தென்றலை அவரின் வாழ்க்கையில் வீசி மணக்கச் செய்தது.
“சுந்தரி செளந்தரி நிரந்தரியே” என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது.
உடுமலை நாராயணகவி, காமாட்சி சுந்தரம் ஆகிய இருவர்தான், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் ஆஸ்தான பாடல் ஆசிரியர்கள். ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனையே தனது தமிழால் கவர்ந்த மருதகாசி, அவரது படத்திற்கும் பாடல் எழுதிப் புகழ் பெற்றிருக்கிறார்… பாடல் எழுதி வாருங்கள், பிடித்தால் வைத்துக்கொள்வேன், இல்லையென்றால் உடுமலையாரையே அழைத்து எழுதச்சொல்வேன் என்ற வாய்மொழி ஒப்பந்தத்துடன் மருதகாசியைத் தன் படத்திற்குப் பாடல் எழுதப் பணித்தார் என்.எஸ். கிருஷ்ணன்.
பாடலின் சூழ்நிலையைக் கலைவாணர் விளக்க, கவி நயத்தோடு பாடலை எழுதி முடித்துக்காட்டினார் மருதகாசி. பாடலை ரசித்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், உடுமலை இருந்த இதயத்தில் பாதியை உங்களுக்குக் கொடுத்துவிட்டேன் எனக்கூறி, மருதகாசியை அள்ளி அரவணைத்துக் கொண்டார். அந்த அரவணைப்புதான் ‘ராஜா ராணி’ படத்தின் சிரிப்புப் பாடலாக சிறகசைத்தது.
“சிரிப்பு இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு”
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., பானுமதி இணைந்து நடித்து வெளியான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படம் பணியாற்றிய அனைவருக்கும் பெரும் புகழைத் தேடித்தந்தது. தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக அமைந்த இந்தப் படத்தில் மருதகாசிதான் எல்லாப் பாடல்களையும் எழுதியிருந்தார்.
“சலாம்பாபு சலாம்பாபு என்னப் பாருங்க
தங்கக் கையினாலே காச அள்ளி வீசுங்க”
என்ற பாடலில்,
மாசில்லா அழகாலே
ஆனந்தம் மூட்டியே
வானவில்லில் காணாத
வர்ண ஜாலம் காட்டியே
ஜொலிக்கும் உடை தளுக்கும் நடை
ஜொலிக்கும் உடை தளுக்கும் நடை
மயக்கும் முகம் பாருக்க
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க
என்ற சரணத்தில் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும் அற்பர்களைப் பற்றியும், அவர்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்தி, பணம் பறிக்கும் ஆள் மயக்கிகளையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பார் மருதகாசி.
‘மங்கையர் திலகம்’, ‘ரம்பையின் காதல்’, ‘சதாரம்’, ‘அமரதீபம்’, ‘நீலமலை திருடன்’, ‘மல்லிகா’, ‘சாரங்கதாரா’ உள்ளிட்ட படங்களில் மருதகாசியின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தன.
மண்மீது மானம்
ஒன்றே பிரதானம்
”வருவேன் நான்
உனது மாளிகையின் வாசலுக்கே”
போன்ற மனது மறக்காத பல்லவிகள், மருதகாசி என்ற மண்ணின் கவிஞன், தமிழ்த் திரையிசைக்குத் தந்த பலாச்சுளைகள்.
மந்தரையின் போதனையால் மனம் மாறிக் கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்
வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
பஞ்ச பாண்டவரைப் பகைத்து அழிந்தார்
சிந்தனையில் இதையெல்லாம்
சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம்
மந்த மதியால் அறிவு மயங்கி
மனம் போனபடி நடக்கலாமோ?
ஒற்றுமைதான் மிகப்பெரிய பலம். பிரிந்து போவதால், பிளந்து போவதால் குடும்பங்கள் படும் அவதியை இந்தப் பாடலில் மருதகாசி சொல்லியிருக்கும் விதம் ஒற்றுமைக்கான ஓங்கி ஒலிக்கவேண்டிய வலிமையான குரல். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கருத்தை வலியுறுத்தும் மருதகாசியின் இந்தப் பாடல், குடும்பங்களில் ஒலிக்கவேண்டிய வேதம்.
“ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்ல”
பூமி. இயற்கையின் இளமையான விளையாட்டு மைதானம். ஆறறிவு மனிதன், ஐந்தறிவு விலங்கு, செடி, கொடி என எல்லா உயிரினத்திற்கும் முதல் தொட்டில். நாமெல்லாம் குழந்தைகள் எனத் தெரியாமல், பூமி சில சமயம் வேகமாக தொட்டிலை ஆட்டி விடுகிறது பூகம்பம் என்ற பெயரில். ஆனால், மற்ற நேரங்களிலெல்லாம் சாந்த சொரூபி. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, பூமி ஒரு சாமி. நம்பிக்கையற்றவர்களுக்கோ புதையல். புரட்சியாளர்களுக்கோ என்றும் புதிய பூமி.
பூமி எனும் புதையலுக்குள் இயற்கை இமயம்போல் உயர்ந்து நின்ற காலம் ஒன்று உண்டு… ஆனால், பச்சை ஆடை உடுத்திக்கொண்ட வயல்களில் இப்போது, கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்துள்ளன… தோட்டங்கள் விளைந்த இடத்தில் அடுக்குமாடிக் கூட்டங்கள் இன்று அமைந்துள்ளன… நகரங்களில் மக்கள் பெருக்கம், நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றைப் போல் பெருத்திருக்க, வயல் வெளிகள் வாசம் செய்யும் இடங்களாய் மாறின… தோட்டங்களோ காற்றினால் துரத்தப்பட்ட மேகக்கூட்டங்களாய் ஆயின… சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றான் அய்யன் திருவள்ளுவர்… அடிப்படையில் நம்நாடு விவசாய நாடு… மண்ணின் கவிஞர் மருதகாசி, விவசாயத்தைப் பாடாமல் இருப்பாரா?…
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி
என்று பாடினார் மருதகாசி.
விவசாய நாடு என்ற பெயர் எப்போது நம்மை விட்டு விலகுமோ என்ற படபடப்பில் நமது நாடு பயணம் செய்துகொண்டிருக்கும் நிலையில், தோட்டம், துரவு, வயல், வாய்க்கால், வரப்பு என்ற பெயர்களெல்லாம் எங்கேயோ கேட்ட குரல் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் உலா வந்துகொண்டிருக்கின்றன.
கோவை விவசாயியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தத்ரூபமாக நடித்திருந்த படம் ‘மக்களைப் பெற்ற மகராசி’. 1957-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் வரும் மறக்கமுடியாத பாடல்தான்
மணப்பாறை மாடுகட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுதுபோடு
செல்லக்கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு
சின்னகண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சு
எறைச்சி போடு செல்லக்கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா, இந்தத் தலைமுறைக்கு நெல்லின் பெயரெல்லாம் தெரியுமா?
தன்மானம் இல்லாதவர்கள் கவிஞர்களாக இருக்கமுடியாது. தமிழைப் படித்தவர்கள் வறுமையைத் தாங்கிப் பிடிக்கலாம். ஆனால், வசவை? ‘விடிவெள்ளி’ படம். இளமை இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான படம். சிவாஜி, சரோஜாதேவி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு ஏ.எம்.ராஜாதான் இசை. படத்தில் ஒரு பாடல் மெட்டுக்குக் கட்டுப்படாமல் போக பல மெட்டுகள் மாறிக்கொண்டே இருந்தன. ஏ.எம்.ராஜாவுக்கு ஒரு கட்டத்தில் கோபம் வந்துவிட்டது. கவிஞரும் கோபப்பட்டார். வாக்குவாதம் முற்றியது. இனி நீங்கள் இசை அமைக்கும் படங்களுக்கு நான் பாடல் எழுதமாட்டேன் என அங்கிருந்து கிளம்பினார் மருதகாசி. அந்தப் பாட்டு, ”கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை” என்பதுதான். ஆனால், இந்தப் பாடல் மருதகாசிக்கும், ஏ.எம்.ராஜாவுக்கும் இருந்த அன்பைக் கெடுத்துப் பார்த்துவிட்டது.
தமிழ் கற்ற கவிஞன் ஒருவனுக்கு, தான் பெற்ற அனுபவங்களும் பாட்டெழுதும்போது வந்தே தீரும். மருதகாசி, கே.வி. மகாதேவன், வி.கே.ராமசாமியின் தம்பி முத்துராமலிங்கம், வயலின் மகாதேவன் ஆகிய 4 பேரையும் பங்கு தாரர்களாகக் கொண்டு எம்.எம். புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சார்பில் ”அல்லி பெற்ற பிள்ளை” என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ”டாங்கா வாலா” என்ற படத்தின் கதையைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டது. இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என். ராஜம், எஸ்.வி.சகஸ்ரநாமம் உள்ளிட்டோர் நடித்தனர். திரைக்கதை வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுத, சோமு இயக்கிய இப்படத்தில், எல்லாப் பாடல்களையும் மருதகாசியே எழுத, கே.வி. மகாதேவன் இசையமைத்தார். இந்தப் படத்தில் குதிரை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. இதற்காக மங்களூர் சென்ற மருதகாசி, ஒரு வெள்ளைக் குதிரையை வாங்கி வந்தார். குதிரையைப் பார்த்த சின்னப்பா தேவர், ”குதிரைக்கு சுழி சரியில்லாததால் விற்றுவிடுங்கள்” என மருதகாசிக்கு அறிவுரை வழங்கினார். ஆனால், அறிவுரையை ஏற்காத மருதகாசி, குதிரையைப் படத்தில் நடிக்க வைத்தார்.
ஒரு குழந்தை தொட்டிலில் படுத்திருக்க, தொட்டில் கயிற்றைக் குதிரை தன் வாயால் இழுத்து குழந்தையைத் தூங்கவைக்கும். அப்போது குதிரையின் மனநிலையை விளக்கும்விதமாக ”எஜமான் பெற்ற செல்வமே” என்ற பாடலை மருதகாசி எழுதினார். கே.வி. மகாதேவன் விரும்பிக் கேட்டுக்கொண்டதால் இந்தப் பாடலை ஜி.ராமநாதன் பாடினார்.
ஒப்பந்தப்படி 6 மாத காலத்தில் படம் முடியாததால், விநியோகஸ்தர்களோடு பிரச்சினை. படப்பிடிப்பு முடியாததால், கடனும், வட்டியும் ஏறியது. 1959-ம் ஆண்டில் வெளிவந்த ‘அல்லி பெற்ற’ பிள்ளை ஓரளவு நன்றாக இருந்தும் தோல்வியைத் தழுவியது. அல்லி பெற்ற பிள்ளை, மருதகாசிக்கு அல்லி பெற்ற தொல்லையானது.
தயாரிப்பில் மருதகாசி பெற்ற அடியை ஒருவர் நையாண்டி செய்தபோது, ”ஆனாக்க அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம்” என பதிலடி தந்தார் மருதகாசி. அதுவே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உருவாக்கிய ‘ஆயிரம் ரூபாய்’ படத்தில் ஒரு பாடலுக்குப் பல்லவியானது. ‘ஆயிரம் ரூபாய்’ பட விளம்பரத்தில் ”மச்சுல குடியிருந்தாத்தான் மவுசு என்று எண்ணாதே” என்று தொடங்கும் மருதகாசியின் வரிகள் இடம்பெற்றிருந்தன.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான ”அலிபாபாவும் 40 திருடர்களும்”, ”வண்ணக்கிளி”, ”எங்கள் குலதேவி”, ”கைதி கண்ணாயிரம்” என்று பல படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் மருதகாசி.
தயாரிப்பாளர் சின்னப்பா தேவருக்கும், மருதகாசிக்கும் புரிதலுடன் கூடிய உறவு பூத்திருந்தது. ‘துணைவன்’ என்ற படத்தில் மருதகாசி எழுதிய மருதமலையானே என்ற பாடல் தமிழக அரசின் விருதை அவருக்குப் பெற்றுத் தந்தது.
1970-களில் மருதகாசி ஒருசில படங்களில் தனது பாட்டு முத்திரையைப் பதித்திருந்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் தொடங்கிய நட்பு, 70-களுக்குப் பின்னாலும் தொடர்ந்தது… எந்தக் கவிஞருடனும் திருப்தி அடையாத நிலையில், மருதகாசியை அழைப்பது எம்.ஜி.ஆரின் பழக்கம்… ‘நினைத்ததை முடிப்பவன்’ என்ற படத்தில் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்றொரு பாடல்… அதில், ” பொன் பொருளைக் கண்டவுடன் வந்தவழி மறந்துவிட்டு தன் வழி போகிறவர் போகட்டுமே என்று எழுதியிருந்தார் மருதகாசி…. தன் வழி நல்ல வழியாகவும் வந்த வழியைவிட சிறந்த வழியாகவும் இருந்தால் தன் வழியே செல்வதில் என்ற தவறு என்று கேட்டார் எம்.ஜி.ஆர். அதை வந்தவழி மறந்துவிட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டும் என்று மாற்றினார் மருதகாசி. நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்துகொண்டே இருக்கும் மாமனிதர் எம்.ஜி.ஆர். என்று வியந்தார் மருதகாசி.
1980-களில் ஒரு நிகழ்ச்சி. தான் எடுக்கும் படத்திற்கு பாட்டெழுதும்படி தயாரிப்பாளர் கோவைத்தம்பி, மருதகாசியைக் கேட்டுக் கொண்டார். எதற்கும் இளையராஜாவைக் கேட்டுவிடுங்கள். ஒப்புக்கொள்ளமாட்டார் என்றார் மருதகாசி. பிறகு, நீங்கள் மனிதர்களைச் சரியாக எடைபோட்டு வைத்திருக்கிறீர்கள் என்று கோவைத்தம்பி சொன்னார்… திரை இசை தகவல்களை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் வாமனன் எழுதியுள்ள பதிவு இது…
தாலாட்டுக்கும், ஒப்பாரிக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கை… இதற்குள்ளாகத்தான் எத்தனை போராட்டங்கள்?… எத்தனை வலிகள்?… எத்தனை வருத்தங்கள்?… எத்தனை வஞ்சகங்கள்?… எத்தனை சூழ்ச்சிகள்?… எத்தனை சூறாவளிகள்?… எது வந்தால் என்ன?… வாழ்க்கையைப் போலவே மரணமும் நிஜமானது… வாழும்போது வர்க்கபேதம்… ஆண்டான் அடிமை பேதம்… சாதி, மதம் என பிரித்தாளும் சூழ்ச்சிகள்… ஆனால், மரணத்திற்குப் பிறகு மயானம் எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறது…
‘ஆண்டி எங்கே அரசனும் எங்கே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே’
வாழும்போது பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து, மேற்காணும் பாடலை எழுதிய மண்ணின் கவிஞர் மருதகாசிக்கும் இது நிச்சயம் பொருந்தும்தானே?…
- இயற்பெயர் – அய்யம்பெருமாள் மருதகாசி
- சினிமா பெயர் – அ.மருதகாசி
- பிறப்பு – 13 – பிப்ரவரி – 1920
- இறப்பு– 29 – நவம்பர் – 1989
- பிறந்த இடம் – மேலக்குடிகாடு – தமிழ்நாடு
- சினிமா அனுபவம் 1949 – 1989
- பணி – பாடலாசிரியர்
- துணைவி – தனக்கோடி அம்மாள்
- குழந்தைகள் – 6 மகன்கள் – 3 மகள்கள்
- பெற்றோர் அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
- உடன் பிறந்தவர்கள் அ முத்தையன் (சகோதரர்)
- புனைப்பெயர் திரைக்கவித்திலகம்