-நித்திலா கனகசபை
வரலாறு என்பது என்ன?
அது எதிர்காலத்தில் கேட்கும் கடந்த காலத்தின் எதிரொலி;
கடந்த காலத்தின் மீது எதிர்காலத்தின் பிரதிபலிப்பு
– விக்டர் ஹ்யூகோ
தங்களுடைய தலைவர் இம்மானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்துவதற்காக திரண்டிருந்த தலித்துகள் மீது 2011 செப்டம்பர் 11 அன்று பரமக்குடி, மதுரை ஆகிய இடங்களில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் ஏழு பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் தலித்துகள் மீது நடத்தப்படும் அட்டூழியங்களின் நீண்ட பட்டியலில் அந்த நிகழ்வும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது. உண்மையறியும் குழுக்கள், நீதி விசாரணைகள் அந்த சம்பவத்தில் இருந்த உண்மைகளை உறுதி செய்து வெளிக்கொணர்ந்தன. அரசாங்கத்திடம் இருந்த தயக்கம், காவல்துறையின் சித்திரவதை, பிரச்சனையைத் தவறுதலாகக் கையாண்டது போன்றவையே அந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக இருந்தன என்று மனித உரிமை மற்றும் தலித் செயற்பாட்டாளர்களால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் புறக்கணிக்கப்பட முடியாதவையாகவே இருந்தன. மாநில அரசு தலித் விரோத மனப்பான்மை கொண்டிருக்கிறது என்ற எண்ணம் சந்தேகத்திற்கிடமின்றி இருந்ததால், 1990களின் மத்தியில் மாநிலத்தில் ஏற்பட்ட சாதிக் கலவரங்கள் மீண்டும் எழக்கூடும் என்ற அச்சம் அப்போது நிலவியதை மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் முதுகுளத்தூர் (1957) கீழ்வெண்மணி (1968), மேலவளவு (1997), பரலிபுதூர் (2011) ஆகிய இடங்களில் தலித்துகளுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களோடு, பரமக்குடி கலவரமும் அப்போது இணைந்து விட்டது. முடிவில்லாமல் தொடர்வதாகவே அந்தப் பட்டியல் நீள்கிறது.
தலித்துகள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்துப் பேசும் போதெல்லாம், அடிக்கடி கீழ்வெண்மணி என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகக்கொடூரமான வன்முறைக் குற்றங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கீழ்வெண்மணிப் படுகொலைகள் இருப்பதாக டெல்டும்ப்டே கூறுகிறார். ஆயினும் முறையாக ஆவணப்படுத்தப்படாமல், அந்தச் சம்பவம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறியதன் விளைவாக காலப்போக்கில் அந்த நிகழ்வு மர்மம், நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் சூழப்பட்டதாக மாறிவிட்டது. தமிழன் என்ற அடையாளம் கொண்டவளாக, அந்தச் சம்பவம் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் சிறு நகரத்தில் என்னுடைய வேர்களைக் கொண்டவளாக, பிராமணர் என்றில்லாதவளாக, பாரம்பரியமாக பண்ணைத் தொழிலாளர்களிடம் தீண்டாமையைக் கடைப்பிடித்து வருகின்ற நிலஉடைமைச் சாதியின் அடையாளத்தைக் கொண்டிருப்பதால் மன உளைச்சலுக்கு உள்ளானவளாக இருந்ததால், அந்தச் சம்பவம் குறித்து எனக்குள் ஆர்வம் எழுந்தது.
கீழ்வெண்மணியிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிலே உள்ள சிதம்பரத்தில் என்னுடைய குடும்பம் இருந்த போதிலும், அந்த நிகழ்வு பற்றிய விவரங்களை என்னுடைய குடும்பத்தினர் எவராலும் நினைவு கூர்ந்து முழுமையாகச் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவ்வாறிருப்பது நமது நினைவாற்றலின் தெளிவின்மை குறித்து ஏராளமாகக் கூறுவதாகவே இருந்தது. அந்த நிகழ்வை மட்டும் தனியாகப் பார்க்காமல், அப்போது நிலவி வந்த சமூக – அரசியல் சூழலின் பின்னணியில், நடந்த அந்தச் சம்பவம், அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் ஆகியவை பற்றி சொல்லப்பட்டிருக்கும் பல்வேறு கதைகள், அந்த நிகழ்வு மக்களிடம் எழுப்பிய உணர்வுகள், கட்டமைக்கப்பட்ட இயக்கங்கள் ஆகியவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து அந்தச் சம்பவம் குறித்த நினைவுகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டன, இறுதியாக அவை இன்னும் எவ்வாறு நினைவில் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று அந்த நிகழ்வு பற்றிய உண்மையான வரலாற்றைத் தருகின்ற வகையில் அதனை மீளுருவாக்கம் செய்து பார்ப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
முன்னுரை
மனிதர்களின் அதிகாரத்திற்கு எதிரான போராட்டம்,
மறதிக்கெதிரான நினைவுகளின் போராட்டமாகவே இருக்கிறது
– மிலன் குந்தேரா
1968ஆம் ஆண்டில் நாற்பத்தி நான்கு தலித்துகள் குடிசைக்குள் பூட்டி வைக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட பிறகு அந்த நாளைய தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் தாலுகாவில் இருந்த மிகச் சிறிய கிராமமான கீழ்வெண்மணி அனைவரின் கவனத்தையும் பெற்று முக்கியத்துவம் பெற்றது. அங்கே ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளர்கள் மீது கொடூரமான வன்முறை நிகழ்த்தப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவின் துவக்க காலத்திலேயே தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளில் அந்த கீழ்வெண்மணிச் சம்பவம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் ஆகியவை பற்றி விரிவாக விவரிக்கின்ற வரலாற்று நூல்கள்கூட பெரும்பாலும் கீழ்வெண்மணி சம்பவம் குறித்து மெளனம் சாதிப்பவையாகவே இருக்கின்றன. இடதுசாரி அரசியல், உழவர்களின் விடுதலைக்கு நிலம் (லாஃப்டி – LAFTI) போன்ற நிலச்சீர்திருத்த இயக்கங்களைப் பொறுத்த வரை அந்தச் சம்பவம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. ஆயினும் அது தலித்துகளுக்கு அப்பால், கல்வி சார்ந்து தன்னுடைய முக்கியத்துவத்தை முழுமையாக இழந்தே இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் என்று தலித் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த நாற்பத்தி நான்கு பேர் கீழ்வெண்மணியில் 1968 டிசம்பர் 25 இரவில் நிலச்சுவான்தார்கள் மற்றும் அவர்களுடைய அடியாட்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அங்கே நடந்த அந்த வன்முறை வெறும் வர்க்க மோதலாக இல்லாமல், அதற்கும் அப்பாற்பட்டதாகவே இருந்தது. அரசியல், சாதி, வர்க்கப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் எங்கே தொடங்குகின்றன, எங்கே முடிகின்றன என்பதை அறிய முடியாத வகையில் அவை ஒன்றோடொன்று முரணாகப் பிணைக்கப்பட்டுள்ளன. கீழ்வெண்மணி தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக ஒடுக்கப்பட்டவர்கள் போராட ஆரம்பித்த வேளையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நினைவூட்டுவதாக இருந்தாலும், அந்த சம்பவத்தில் இறந்தவர்களை அதிக ஊதியம் கேட்டுப் போராடிய அன்றாட ஊதியம் பெறுகின்ற தொழிலாளர்களாக மட்டுமே காண்பது தவறான, நியாயமற்ற செயலாகவே இருக்கும்.
சூழல்
பொருட்செல்வத்தின் தந்தை உழைப்பு, அதன் தாய் நிலம்
– சர் வில்லியம் பெட்டி
கீழ்வெண்மணியில் நடத்தப்பட்ட சாதி மற்றும் வர்க்கப் போராட்டங்கள் முற்றிலும் நிலம் மற்றும் உழைப்பு சார்ந்தவையாகவே இருந்தன. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக 1960களில் தஞ்சாவூர் மாவட்டம் மாநில நெல் உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டதாக இருந்தது. அப்போது பெருமளவிலான நிலப்பகுதிகள் கோவிலுக்குச் சொந்தமானவையாகவே இருந்தன. சமுதாயப் பெரும்புள்ளிகளிடம் குத்தகைக்கு விடப்படும் அந்த நிலங்களில் விவசாயம் செய்யும் அவர்கள் அவற்றை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள். அவ்வாறு பயிரிடப்பட்டு வந்த நிலத்தில் கிட்டத்தட்ட 26 சதவிகித நிலங்களை வெறும் நான்கு சதவிகித குடும்பங்களே தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. அதற்கு மாறாக தஞ்சாவூரில் மாநிலத்திலேயே மிக அதிகமாக 41 சதவிகித நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இருந்தனர். அந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தலித்துகளாக, தீண்டத்தகாதவர்களாக இருந்தனர். மிகவும் மோசமான வறுமை, மாசுபாடு போன்றவையே வர்க்க, சாதி அடிப்படையில் அந்த மக்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருந்தன. அந்தப் பிராந்தியத்தில் விவசாயத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு அந்தக் காரணிகளே நீண்டதொரு வரலாற்றை உருவாக்கிக் கொடுத்தன. வயல்களில் உழுது வேலை செய்து வந்த தலித் தொழிலாளர்கள் பொதுவாக கொத்தடிமைகளாகவே இருந்து வந்தனர்.
கம்யூனிஸ்ட் இயக்கம் அந்தப் பகுதியில் தன்னுடைய பணியை ஆரம்பித்ததன் விளைவாக தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளைக் கோரத் தொடங்கினர். அதன் விளைவாக ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது. மேலும் 1952ஆம் ஆண்டு தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் (பின்னர் ரத்து செய்யப்பட்டது), 1955இல் தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் போன்றவையும் நிறைவேற்றப்பட்டன. ஆனாலும் அங்கே வேலை செய்தவர்கள் கொத்தடிமை முறையில் இருந்து மாறி சுரண்டப்படுகின்ற தினக் கூலிகளாக மாறியதால் அந்தச் சட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. 1966ஆம் ஆண்டில் வேளாண் விளைபொருட்கள் விளைச்சலில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வேறு சில பொருளாதாரக் காரணங்களால் நெல் விலை அதிகரித்தது. கூலியாக அரை லிட்டர் நெல் கூடுதலாகத் தங்களுக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கையை தலித் தொழிலாளர்கள் முன்வைத்தனர். பாரம்பரியமாக ஒடுக்கப்பட்டு வந்தவர்களிடம் இருந்து எழுந்த அந்தப் புதிய குரல் மிராசுதார்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் (PPA) என்ற தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள்.
இடதுசாரி கம்யூனிஸ்டு விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்போராட்டங்களை நடத்தினர். அவர்கள் வழக்கமாகத் தரப்பட்டு வந்த ஊதியத்திற்கு அதிகமான ஊதியத்தை கேட்க ஆரம்பித்தனர். நிலமற்ற அந்தத் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து விலகி, தங்களுடைய தொழிற்சங்கத்தில் சேருமாறு ஜமீன்தார்கள் மிரட்டினர். தொழிலாளர்கள் அதற்கு மறுத்த போது, அறுவடை செய்வதற்குத் தேவையான தொழிலாளர்களை ஜமீன்தார்கள் ஊருக்கு வெளியிலிருந்து கொண்டு வந்தனர். வெளியில் இருந்து வந்தவர்கள் வேலை செய்வதை உள்ளூர்த் தொழிலாளர்கள் தடுக்க முயன்றனர். அந்த மோதல்களின் போது வெளியிலிருந்து அந்தக் கிராமத்திற்கு வேலைக்கு வந்த தொழிலாளியான பக்கிரிசாமி பிள்ளை என்பவர் கொல்லப்பட்டார். விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்ட அந்த மாதத்தில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கி வந்த விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருந்த மூன்று விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தனர்.
1968 நவம்பரில் பிரச்சனைகள் தீவிரம் அடைந்தன. விவசாயிகள் இணங்கவில்லை என்றால் கீழ்வெண்மணியில் கலவரம் வெடிக்கும் என்று 1968 நவம்பர் 15 அன்று நடைபெற்ற நெல் உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் மிராசுதார்கள் பகிரங்கமாக அச்சுறுத்தினர் என்று கிராமத்தில் உள்ள விவசாயிகள் கூறினர். அதைத் தொடர்ந்து விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரைக்கு கடிதம் ஒன்றை எழுதினார். படுகொலை நடந்து முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகே, அதாவது ஜனவரி மாதத்தில்தான், அந்தக் கடிதத்திற்கான ஒப்புகை சீட்டு வந்து சேர்ந்தது. கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றி மிகவிரிவாக எழுதிய ஒரே பத்திரிகையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் பத்திரிகையில் முதலமைச்சருக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம் வெளியானது.
சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சிகள் 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று இரவு பத்து மணிக்கு மிராசுதார்கள் மற்றும் அவருடைய கூலிப்படை ஆட்கள் காவல்துறை வாகனங்களில் வந்ததாகக் கூறுகின்றனர். வாகனங்களில் வந்தவர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கிய போது, தொழிலாளர்கள் கற்களை எறிந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவோ அல்லது அந்த இடத்திலிருந்து தப்பி ஓடவோ முயற்சித்தனர். வாகனங்களில் வந்தவர்கள் அருகிலிருந்த குடிசைகளை எரிக்கத் துவங்கினர். பெண்கள், குழந்தைகள், சில முதியவர்கள் 8அடி x 9அடி அளவில் இருந்த ஒரு குடிசைக்குள் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றனர். உள்ளிருந்தவர்களோடு சேர்த்து அந்தக் குடிசையும் எரிக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்று இரண்டு நீதிமன்றங்களும் அந்த குறிப்பிட்ட குடிசைக்குள் மக்கள் இருந்ததை குடிசையை எரித்தவர்கள் அறிந்திருக்கவில்லை என்றே கூறின. ஆயினும் அப்போது அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தவர்கள் நேரடியாகக் கண்ட காட்சிகள் முற்றிலும் வேறுபட்ட உண்மையைச் சுட்டிக்காட்டுவதாகவே இருந்தன.
எரிந்து கொண்டிருந்த அந்தக் குடிசையை கொலைகார ஆயுதங்களை கைகளில் ஏந்திக் கொண்டு ரத்தவெறி பிடித்த கொலைகாரர்கள் சூழ்ந்து நின்று கொண்டிருந்ததையும், பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின்புறமிருந்து கேட்ட இதயத்தைப் பிளக்கும் அழுகுரலையும், உயிரைக் காப்பாற்றுவதற்காக எரிந்து கொண்டிருந்த குடிசைக்குள்ளிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட இரண்டு குழந்தைகளை கலவரக்காரர்கள் மீண்டும் தூக்கி தீக்குள் எறிந்ததையும், எரிந்து கொண்டிருந்த குடிசைக்குள் இருந்து தப்பித்து வெளியே வந்த ஆறு பேர்களில் இரண்டு பேரைப் பிடித்துக் கொலை செய்து மீண்டும் தீக்குள்ளே எறிந்ததையும், எரிந்து கொண்டிருந்த தீ அணைந்து விடாமல் இருக்க வைக்கோல், விறகு போன்றவை பயன்படுத்தப்பட்டதையும், நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முன்னின்று அந்தக் கலவரத்தை நடத்தியதையும், கலவரம் செய்தவர்கள் தாங்கள் பழி வாங்கப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பைக் கோரி நேரடியாகக் காவல் நிலையம் சென்று காவல்துறையின் பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டதையும் நேரில் கண்ட சாட்சிகள் கூறினார்கள். மிகவும் கால தாமதமாக, உள்ளூர் காவல்துறையினரின் கைகளை மீறி விஷயம் பெரிதான பிறகே கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இவ்வாறான விளக்கங்கள் அனைத்தும் மிகவும் தாமதமாகவே வெளிவந்தன. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகு எகானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி பத்திரிகையில் எழுதப்பட்ட ‘த ஜென்டில்மென் கில்லர்ஸ்’ ஆஃப் கீழ்வெண்மணி’ என்ற கட்டுரையில்தான் இந்தத் தகவல்கள் அனைத்தும் வெளியாகி இருந்தன. அந்தச் சம்பவம் நடந்த உடனேயே வெளியாகியிருந்த பத்திரிகைச் செய்திகள் எதுவும் அவ்வாறாக இருக்கவில்லை.
பத்திரிக்கை தர்மம்
பத்திரிகைகள் எதுவும் தீண்டத்தகாதவர்களுக்கு இல்லை
– பி.ஆர்.அம்பேத்கர்
அந்த வன்முறையின் சாதி, வர்க்கப் பரிமாணங்களைத் தவிர்த்து விட்டு விவசாயிகளுக்கிடையே இருந்த இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலாகவே அந்த நிகழ்வு குறித்து எழுதிய தமிழ், ஆங்கிலம் என்று பெரும்பாலான நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. ‘விவசாயிகள் மோதல்களுக்குப் பின் தஞ்சாவூர் கிராமத்தில் நாற்பத்தியிரண்டு பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர்’ என்ற தலைப்புடன் டிசம்பர் 27 அன்றைய தி ஹிந்து பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. உயிருடன் எரிக்கப்பட்ட அனைவரும் ‘ஹரிஜன்கள்’ (அந்த காலத்தில் தலித்துகளுக்காக பயன்படுத்தப்பட்ட சொல்) என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்தச் சம்பவம் சாதி அடிப்படையில் நடந்ததாக குறிப்பிடப்படப்பட்டிருக்கவில்லை. இரண்டு விவசாயிகள் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலாகவே அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும், விவாசயிகளுக்கிடையே நடந்த சண்டை வன்முறையாக மாறியது, தஞ்சாவூரில் நாற்பத்தியிரண்டு பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர் என்றே கூறியிருந்தது. தமிழ் செய்தித்தாளான தினமணியும், ‘கிஸான்களிடையே மோதல்: 42 பேர் வெந்து மரணம்’ என்றே எழுதியிருந்தது.
சாதி அடையாளங்களை மறைத்து மிக மேலோட்டமாக செய்திகளை வெளியிட்டதன் மூலம் தலித் மக்கள் மீது ஊடகங்கள் கொண்டிருந்த அக்கறையின்மை வெளிப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த பிறகு மாநில அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வியெதையும் எழுப்பாமல், அந்தச் சம்பவம் தொடர்பாக அப்போதிருந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதாக எகானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி பத்திரிகை 1973ஆம் ஆண்டில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
அந்தக் கட்டுரையை எழுதியிருந்த மைதிலி சிவராமன் ‘ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடிய போது, தாங்கள் விரும்பிய இடத்திலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வருவதற்காக அரசியல் உரிமைச் சட்டம் தங்களுக்குத் தந்திருக்கும் உரிமையை நில உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்றே அந்தச் சம்பவம் நடந்த காலகட்டத்தில் பத்திரிகைகள் நமக்குத் தகவல்களை அளித்தன. வெளியிலிருந்து ஆட்கள் கொண்டு வரப்பட்டனர். வெளியிலிருந்து வேலைக்கு வந்தவர்களை உள்ளூர்த் தொழிலாளர்கள் தாக்கினர். ஏழைகள் ஏழைகளையே எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டனர். கல்வியறிவற்ற அந்த தொழிலாளர்களிடம் இருந்து அதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?’ என்று கேல்வி எழுப்பியிருந்தார்.
அங்கே இருந்த சாதிப் பிரச்சனைகள் குறித்து ஊடகங்களிடமிருந்த அலட்சியம் பற்றி கூறிய ஆனந்த் டெல்டும்ப்டே, சாதி வன்முறைகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது அது உண்மைகளைச் சிக்கலுக்குள்ளாக்கி விடுவதாகத் தெரிவித்தார். ஊடகங்களில் அப்போது வெளிவந்த செய்திகள் தலித்துகளைத் தாக்கிய தலித் அல்லாதவர்களின் உரையாடலையே மையமாகக் கொண்டிருந்தன. செய்தியை உருவாக்குபவர், அதனை நுகர்பவர் என்று இருவருமே வன்முறையை ஏற்படுத்தியிருந்த அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்ததால், அதுபோன்ற கதைகளிலிருந்து தங்களைத் தூர விலக்கி வைத்துக் கொள்வது அவர்களுக்கு கடினமாகவே இருந்தது. தாராளவாத சீர்திருத்தங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே ஊடகங்கள் தலித்துகள் பற்றிய செய்திகளை வெளியிடுவதை இருட்டடிப்பு செய்யும் வகையிலேயே இருந்திருக்கின்றன என்பதை டெல்டும்ப்டே தெளிவுபடுத்துகிறார். அவர் மேலும் இந்திய மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்கும் தலித்துகள், ஆதிவாசிகள் ‘தேசியவாத’ ஊடகங்களுக்கானவர்களாக இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
நீதித்துறையின் எதிர்வினை
தாய், சகோதரி, அண்டை வீட்டார் என்று தொடர்புடைய தனிநபர்களிடம் பதிவு செய்யப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட வாக்குமூலங்களை சட்டபூர்வ ஆதாரங்களாகத் தொகுப்பது, அழுகை, முணுமுணுப்புகளுக்கிடையே வெளிவருகின்ற விவசாயிகளின் அடக்கமான குரலை அரசின் உரத்த குரல் உள்வாங்கிக் கொள்வதற்கு அனுமதிக்கின்ற சிறப்பு சலுகையாகவே இருக்கிறது.
– ராணாஜித் குஹா
கீழ்வெண்மணிப் படுகொலை என்பது மறுக்க முடியாத அசிங்கமான உண்மை என்றாலும், நடந்த உண்மை குறித்து பல்வேறு வகையான செய்திகள் அப்போது வெளிவந்ததன் காரணமாக அது முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. வெண்மணியில் இருந்து மூன்று மைல் தொலைவிலேயே காவல் நிலையம் இருந்த போதும், இரவில் நடந்த சம்பவம் தங்களுக்கு காலையிலேயே தெரிய வந்தது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் காவல்துறையிடம் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்ற அந்த வழக்கின் அடிப்படை உண்மைகள் குறித்தே பல முரண்பாடுகள் இருந்தன. காவல்துறையினரும், உடற்கூராய்வு அறிக்கைகளும் நாற்பத்தியிரண்டு பேர் இறந்தனர் என்று தெரிவித்த போது, அடுத்த நாள் தப்பிப் பிழைத்திருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கிராமத்தினரும், தொழிற்சங்கமும் ஐந்து ஆண்கள், இருபது பெண்கள், பத்தொன்பது குழந்தைகள் என்று மொத்தம் நாற்பத்தி நான்கு பேர் இறந்து போயிருப்பதாகத் தெரிவித்தனர்.
பக்கிரிசாமி கொலை வழக்கு, நாற்பத்தியிரண்டு தலித்துகள் கொலைவழக்கு என்று ஒரே நேரத்தில் இரண்டு நீதிமன்ற வழக்குகள் நாகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றன. முன்னரே திட்டமிடப்பட்ட தாக்குதலாக அது இருக்கவில்லை என்று முதல் வழக்கிலும், நன்கு திட்டமிடப்பட்ட, வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலாக இருப்பதாக இரண்டாவது வழக்கிலும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற ஏழு பேருக்கும் பல ஆண்டுகளுக்கு கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. இரண்டாவது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவருக்கும் பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இரண்டு வழக்குகளிலும் மேல்முறையீடு செய்யப்பட்டு அவை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே முதல் வழக்கில் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்றாலும் இரண்டாவது வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 1973ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தனர். ‘…வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இருபத்தி மூன்று பேரும் மிராசுதார்களாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் பணக்காரர்களாகவும், ஏராளமான நிலங்களை வைத்திருப்பவர்களாகவும் உள்ளனர். கோபாலகிருஷ்ண நாயுடு கார் வைத்திருக்கிறார். அவர்களிடம் விவசாயிகளைப் பழிவாங்குவதற்கான ஆர்வம் உண்மையிலேயே இருந்ததாகக் கொண்டாலும், தங்களுடைய வேலையாட்களின் உதவியின்றி அவர்களே நேரடியாகச் சென்று வீடுகளுக்குத் தீ வைத்ததாகக் கூறுவதை நம்புவது கடினமாக இருக்கிறது. பசியால் வாடுகின்ற மூர்க்கமான தொழிலாளர்களைப் போல இல்லாமல் மிகவும் பாதுகாப்பாக நடந்து கொள்வதையே இவர்கள் தெரிவு செய்வார்கள். எவரொருவரும் குற்றச்சாட்டில் இருப்பது போல் மிராசுதார்கள் நேரடியாகக் குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பதாக இல்லாமல், பின்னணியில் தாங்கள் இருந்து கொண்டு தங்களிடம் வேலை செய்பவர்களை வைத்தே மிராசுதார்கள் பல்வேறு குற்றங்களைச் செய்வார்கள் என்றே எதிர்பார்ப்பார்கள். இருக்கின்ற ஆதாரங்கள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குப் போதுமானவையாக இல்லை என்பதால் எங்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க முடியவில்லை’ என்று அந்தத் தீர்ப்பு இருந்ததாக மைதிலி சிவராமன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தாலும் அந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. கோபாலகிருஷ்ண நாயுடுவை 1980ஆம் ஆண்டு கும்பல் ஒன்று வழிமறித்து வெட்டிக் கொன்றது. நாயுடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அப்போது தன்னுடைய இருபது வயதுகளில் இருந்த இளைஞர் நந்தன் என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருந்த அந்தப் படுகொலைகளை நேரில் கண்ட சாட்சியாக இருந்தவர் என்று கிராமவாசிகள் கூறுகின்றனர் என்று ராமய்யாவின் குடிசை (2005) என்ற தன்னுடைய ஆவணப்படத்தில் கிருஷ்ணகுமார் தெரிவித்திருக்கிறார்.
அனைத்தும் குறித்த அரசியல்
அமைதி காப்பதால் மட்டுமே ஒடுக்குமுறை உயிர் வாழ்கிறது
– கார்மென் டி மோண்ட்ஃப்ளோர்ஸ்
உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டபோது எந்தவொரு வெகுஜன எதிர்ப்போ அல்லது எழுச்சிகளோ ஏற்படவில்லை. அந்த அநீதிக்கு எதிராக இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தைச் (CITU) சார்ந்த சில நூறு தொழிலாளர்கள் மட்டுமே உயர்நீதிமன்றத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அந்தப் படுகொலைகள் நடப்பதற்கு முன்னரும்கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக இருக்கும் தீக்கதிர் பத்திரிகையே அந்த பிராந்தியத்தில் உருவாகியிருந்த பதட்டங்களை ஆவணப்படுத்திய ஒரே செய்தித்தாளாக இருந்தது. அந்தப் படுகொலைகள் நடந்த பிறகு உடனடியாக தங்களுடைய எதிர்ப்பை கம்யூனிஸ்டுகள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். அந்த விவசாயிகள் கம்யூனிஸ்டுகள் தலைமையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
1968ஆம் ஆண்டு அந்தச் சம்பவம் நடந்தபோது திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்தது. அதற்கு ஒரு வருடம் முன்புதான், அவர்கள் இந்திய தேசிய காங்கிரசுக்கு கிடைத்ததைப் போல மிகத் தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற முதல் கட்சியாக மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தனர். அந்தப் படுகொலைகள் நடந்த பின்னர் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பொதுப்பணித்துறை அமைச்சர் மு..கருணாநிதி, சட்ட அமைச்சர் மாதவன் ஆகியோரை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். இறந்தவர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்திருந்த முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு எதுவும் நடக்கவில்லை. அண்ணாவின் அரசாங்கம் இந்த சம்பவத்தைக் குறைத்தே மதிப்பிட்டது என்ற குற்றச்சாட்டு பின்னர் எழுப்பப்பட்டது.
கீழ்வெண்மணிச் சம்பவம் குறித்து விவாதிப்பது மிகவும் அவசரமானது, பொதுமக்கள் சார்ந்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பாலசுப்ரமணியம் மாநில சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அவர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தங்கள் கட்சி நீதி விசாரணையைக் கோரவில்லை என்றார். ஆனால் அந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை துணை சபாநாயகர் அனுமதிக்கவில்லை. நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக அறியப்பட்டவர். மத்தியில் ஆளும் கட்சியாக மட்டுமல்லாமல், பிரதான இந்திய அரசியல் கட்சியாக காங்கிரஸ் இருக்கின்ற நாட்டில் முதன்முதலாக திமுக ஆட்சிக்கு வந்து அப்போதுதான் ஓராண்டை நிறைவு செய்திருந்தது. மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் முரண்பட திமுக விரும்பவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.
ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்குவது திமுகவின் 1967 தேர்தல் அறிக்கையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருந்தது. சென்னை நகரம், அதன் புறநகர்ப் பகுதி, கோயம்புத்தூர் என்று சில இடங்களில் மட்டும் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்று விற்றதன் மூலம் அந்த வாக்குறுதிக்கான நியாயத்தை ஓரளவிற்கே புதிய அரசாங்கத்தால் வழங்க முடிந்தது. அரசாங்கம் புதிதாக அறிவித்த கொள்கையின்படி நாற்பது ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்களிடம் இருந்த உபரி உற்பத்தியை கொள்முதல் செய்து அரசாங்கம் விநியோகிக்க வேண்டும். ஆனால் அந்தக் கொள்கை முடிவு கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் தஞ்சாவூர் தவிர அனைத்து மாவட்டங்களுக்கு இடையே அரிசி கொண்டு செல்வதற்கு இருந்து வந்த தடையும் நீக்கப்பட்டது. இலவச அரிசிக் கடைகளுக்கு கட்டாய ரேஷன் பகுதிகளிலும் கூட உரிமம் வழங்கப்பட்டது. தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பலம் வாய்ந்த நிலக்கிழார்களை திமுக சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.
சாதி, மதம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக குரல் எழுப்பிய சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியாக இருந்த நீதிக்கட்சி என்று பிரபலமாக அறியப்பட்டு பின்னர் பெரியார் தலைமையில் இருந்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்திருந்த கட்சியாக திமுக இருந்தது என்பது முரணாகவே இருந்தது. சாதி அடையாளங்களை எதிர்ப்பதை ஊக்குவித்த அதே வேளையில் நிலங்களை வைத்திருக்கும் பிராமணரல்லாத சாதிகளை ஒருங்கிணைப்பதற்கான உதவிகளையும் திமுக செய்தது. அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாக காங்கிரஸ் மீது திமுக வைத்து வந்த குற்றச்சாட்டே இந்த சாதி-வர்க்க ஆதிக்கம் குறித்ததாகத்தான் இருந்தது. ஊதிய உயர்வு கேட்டுப் போராடி காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான திமுக தொழிலாளி ஒருவரின் விதவை மனைவி எழுப்புகின்ற குரலாக, திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ‘கூலி உயர்வு கேட்ட அத்தான் குண்டடிபட்டுச் செத்தான்’ என்பது போன்ற முழக்கங்களை மைதிலி சிவராமன் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது போன்ற சம்பவம் திமுக ஆட்சியில் நடைபெற்றது முரண்பாடுடன் இருந்தது என்று மைதிலி சிவராமன் குறிப்பிட்டிருக்கிறார். 1960களுக்குப் பிறகு தலித்துகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளுக்கெல்லாம் பிராமணரல்லாத சாதியினரே காரணமாக இருந்ததாக டெல்டும்ப்டே குறிப்பிடுகிறார். இந்த சாதிகள் விவசாய நிலப்பிரபுத்துவ சாதிகளாக மாறி தங்களுக்கென்று மேலாதிக்க நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டு, நிலமற்ற தலித் தொழிலாளர்களை அடக்கி ஆண்டு வந்தன. அவ்வாறு முன்னேறிய பிற்படுத்தப்பட்ட சாதிகளே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சிக்கான பிரதான வாக்கு வங்கியை உருவாக்கியிருந்தன. தமிழ் மக்கள் மீது திமுகவின் தாக்கம் நுட்பமானதாக, சில சமயங்களில் கொந்தளிப்பு மிக்கதாக இருந்தது. திமுக அரசாங்கம் மௌனப் பார்வையாளராக இருப்பதையே அப்போது தேர்வு செய்து கொண்டது.
படுகொலைகளைத் தொடர்ந்து திமுக அரசாங்கம் தொழிலாளர்கள், நிலச்சுவான்தார்கள் ஆகியோருக்கிடையே இருக்கும் உறவுகளை ஆராய்ந்து, பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பரிந்துரைக்குமாறு கணபதியாபிள்ளை விசாரணை ஆணையத்தை நியமித்தது. நிலச்சுவான்தார்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பை அரசாங்கம் அளிக்காவிட்டால், எட்டு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை தரிசாக போட்டு விடப் போவதாக அச்சுறுத்தினர். பாதுகாப்பு தருகிறோம் என்ற போலிக் காரணத்தை முன்வைத்து அரசாங்கம் ஏராளமான காவல்துறையினரை அவர்களுடைய நிலங்களுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் உண்மையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடுவதைத் தடுப்பதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது என்ற தகவல்களும் இருக்கின்றன.
பத்து சதவிகித ஊதிய உயர்வு பரிந்துரைக்கப்படுவதாக அந்த ஆணையம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த உயர்வு மிகக் குறைவானதாக இருப்பதாகவும், அந்த உயர்வு குறைந்தபட்ச வாழ்வாதார ஊதியத்திற்கு அருகில் கூட வரவில்லை என்று அந்த ஆணையமே தெரிவித்ததாகக் கூறிய மைதிலி சிவராமன் ‘கீழ்வெண்மணிப் படுகொலைகள் மீது வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள், தமிழ்நாட்டில் நில உச்சவரம்புச் சட்டங்கள் தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டது போன்ற பின்னடைவுகள் இருந்த போதிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலித்துகள் நடத்திய போராட்டங்கள், தொடர் அரசியல் அணிதிரட்டல்கள் ஆகியவை நாட்டில் நடைபெற்ற சுரண்டல், சாதியம் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தின் வெற்றிக்கதையில் தனித்து நின்றன’ என்று எழுதியுள்ளார்.
கீழ்வெண்மணி – நாற்பது வருடங்களுக்குப் பிறகு
கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது. அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!
– கார்ல் மார்க்ஸ்
கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்து நாற்பது ஆண்டுகள் முடிந்த போது, ‘1968இல் நடந்த அந்தச் சம்பவம் ஊதிய உயர்விற்கான அரசியல் இயக்கத்திற்கான உந்துதலாக அமைந்தது. எழுபதுகளில் தொழிலாளர்கள் முன்பைவிட அதிக ஊதியம் பெறுபவர்களாக மாறி இருந்தனர். அரசியல் இயக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு இன்று வரையில் இடதுசாரிகளின் கோட்டையாகவே அது இருந்து வருகிறது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கீழ்வெண்மணியை உள்ளடக்கிய கீழ்வேளூர் தொகுதியில் 91 சதவீத வாக்குப்பதிவு நடந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலற்றில் சாதனை படைக்கப்பட்டது. நிலமற்ற தொழிலாளர்களாக முன்னர் இருந்த பல தலித்துகள் இப்போது நிலவுடைமை கொண்ட சிறு விவசாயிகளாக இருக்கும் வகையில் நிலவுடைமை குறித்த பார்வைகள் மாறியிருக்கின்றன. பொதுமக்கள், அரசு, அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு நன்றி’ என்று எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி பத்திரிகை தலையங்கம் தீட்டியிருந்தது.
மாறும் வாழ்க்கை
தனிப்பட்ட மாற்றங்கள் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தலாம். நாமாக இந்த உலகம் இருப்பதால், நாம் மாறுகின்ற போது உலகம் நம்மைப் பின்தொடர்கின்றது. உலகத்தைக் காப்பாற்றுகின்ற புரட்சி இறுதியில் தனிப்பட்ட ஒன்றாகவே இருக்கும்
– மரியானே வில்லியம்சன்
சில மாற்றுக் கருத்துகளையும் தொகுப்பதற்காக, நேரடி அனுபவம் கொண்ட ஒருவரின் பார்வையிலிருந்து அந்த நிகழ்வைப் புரிந்து கொள்ளும் முயற்சியுடன் கிருஷ்ணம்மாளுடன் பேசினேன். எண்பத்தைந்து வயதான கிருஷ்ணம்மாள் ஜெகநாதனைப் பொறுத்த வரையில், அவரது வாழ்க்கையில் கீழ்வெண்மணி திருப்புமுனையாக அமைந்தது. அந்த சம்பவம் நிகழ்ந்தபோது அவர் கீழ்வெண்மணிக்கு இருநூறு கி.மீ. தொலைவிலே இருந்தார். அடுத்த நாள் காலையில் அங்கே சென்ற போது தன்னை எதிர்கொண்ட வன்முறை குறித்த பதிவுகள் மிகவும் கோரமாக இருந்ததை நினைவு கூர்ந்த அவர் ‘மக்கள் தஞ்சம் அடைந்திருந்த ராமைய்யாவின் குடிசையை நான் பார்த்தேன். பெண்கள், குழந்தைகளின் கைகள், கால்கள் அங்கே குவியலாகக் கிடந்தன. குடிசை அருகே இருந்த தென்னை மரத்தில் அதிக அளவில் ரத்தக் கறை படிந்திருந்தது பற்றி விசாரித்த போது,எரிந்து கொண்டிருந்த குடிசைக்குள் இருந்த பெண்மணி ஒருவர் தனது குழந்தையைக் காப்பாற்றுவதற்காக தூக்கி வெளியே எறிந்ததாகவும், ஆனால் வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் அந்தக் குழந்தையை வெட்டிக் கொலை செய்து மீண்டும் அந்தத் தீக்குள்ளேயே எறிந்தாகவும் தெரிய வந்தது. அந்த நிகழ்வின் கொடூரத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்தச் சம்பவம் குறித்த நினைவுகளும், நிலமற்ற தொழிலாளர்களாக இருக்கும் வரை தலித்துகள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்டதன் மூலமாக கிராமப்புற ஏழைகளுக்கு நிலங்களைப் பகிர்ந்து கொடுக்கும் வரையில் எனது வாழ்க்கை முழுவதையும் அதற்காகச் செலவிட வேண்டும் என்ற உந்துதலும் இந்த எண்பத்தைந்து வயதிலும் என்னிடம் நீங்காத நினைவுகளாகத் தொடர்கின்றன’ என்று தெரிவித்தார்.
அந்தப் படுகொலைகளுக்குப் பிறகு கிருஷ்ணம்மாளும், அவரது கணவர் ஜெகநாதனும் தங்களுடைய இருப்பிடத்தை கீழ்வெண்மணிக்கு மாற்றிக் கொண்டனர். இப்போது நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அங்கேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கிருஷ்ணம்மாள் ஆரம்பத்தில் தலித் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். ஆனாலும் நிலமற்ற தலித் தொழிலாளர்களுக்கு நிலம் கொடுப்பதே அந்தக் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழியாக இருக்கும் என்பதையும் அவர் நன்கு அறிந்தவராகவே இருந்தார். ஆரம்ப காலங்களில் அரசியல் கட்சிகள், நில உரிமையாளர்கள் ஆகியோரிடம் இருந்து வந்த கடும் எதிர்ப்பை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உழவர்களின் விடுதலைக்கு நிலம் (LAFTI) என்ற அமைப்பின் மூலமாக, இன்று வரையிலும் பதினைந்தாயிரம் ஏக்கர் நிலம் பதினைந்தாயிரம் தலித் பெண்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். ‘நான் தொண்டு எதுவும் செய்யவில்லை. நாள் முடிவில் ஒரு பெண் தனக்கான உணவை உண்பது என்னுடைய தொண்டால் அல்ல. அது அந்தப் பெண் செய்த கடினமான வேலையால்தான். அந்தக் கடின உழைப்பிற்கு நான் உதவி மட்டுமே செய்தேன். குறைந்தபட்சம் என்னால் அதையாவது செய்ய முடிந்தது குறித்து கடவுளுக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன்’ என்றார் கிருஷ்ணம்மாள்.
கீழ்வெண்மணி பற்றிப் பேசும் போது ‘இப்போது கிட்டத்தட்ட எல்லா தலித் குடும்பங்களிடமும் இரண்டு முதல் மூன்று ஏக்கர் அளவிற்கு நிலம் இருக்கிறது. அந்தக் குடும்பங்களைச் சார்ந்த பெரும்பாலான குழந்தைகள் கல்வி பெற்று மும்பை, ஏன் அந்தமான் போன்ற நகரங்களிலும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். ஆனால் என்னை வருத்தப்பட வைக்கின்ற விஷயம் என்று ஒன்று இருந்தால், அது கடந்த காலத்தில் அநீதிகளுக்குள்ளான இந்த மக்கள் காட்டுகின்ற அக்கறையின்மைதான். பழைய நிலைமையில் இருந்து அவர்கள் முன்னேறி நகர்ந்திருந்தாலும், இன்னும் மோசமான நிலையில் உள்ளவர்களைக் கண்டு கொள்ளத் தவறியிருக்கிறார்கள். தங்களைக் கட்டுக்குள் வைத்திருந்த தளைகளை உடைத்து முன்னெடுத்துச் சென்றிருக்கும் பயணத்தில் தாங்கள் மட்டும் தனித்திருக்கவே நினைக்கிறார்கள். மோசமான நிலையில் உள்ள மற்றவர்களுக்கு தாங்கள் உதவவில்லை என்ற கவலை அவர்களிடம் சிறிதும் இல்லை. கடந்த காலத்தை மறந்தவர்களாகவே இருக்கிறார்கள்’ என்று அவர் குறிப்பிட்டார்.
மாற்றங்கள் தலித்துகளிடம் மட்டும் ஏற்படவில்லை என்று கூறிய கிருஷ்ணம்மாள் ‘படுகொலைகள் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆரம்பத்தில் தலித்துகளுக்கு கோவில் நிலத்தை விநியோகம் செய்ய விரும்பிய என்னுடைய முயற்சிகளை எதிர்த்து வந்த வேணுகோபால் நாயுடு என்ற மிராசுதாரிடம் இருந்து எனக்குத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. என்னைச் சந்திக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். தன்னிடம் இருந்த ஏராளமான நிலம், பங்களா ஆகியவற்றை நன்கொடையாகத் தர விரும்புவதாக அவர் கூறிய போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் மேற்கொண்டிருக்கும் பணிகளுக்காக அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த இடம் இப்போது ஜோதி இல்லம் என்று அழைக்கப்படுகிறது. இலவசமாகக் கல்வி பயின்று வரும் இளைஞர்களுக்கான தங்கும் விடுதி அங்கே செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
கிருஷ்ணம்மாளிடம் நேர்காணல் நடத்திய போது, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி கேட்டேன். அதை ஒதுக்கித் தள்ளிய அவர் ‘என்ன நடந்தது என்பது கடந்த காலமாகவே இருக்கட்டும். அந்தத் தவறுகளை ஒரு தீர்ப்பால் திருத்த முடியாது. ஆனால் நிலச் சீர்திருத்தங்களால் அவற்றைச் செய்து விட முடியும். வாழ்வாதாரங்களுக்கான வாய்ப்பை தலித்துகளுக்குக் கொடுப்பதன் மூலம் அவற்றைச் செய்ய முடியும். அதைத்தான் நான் செய்ய விரும்பினேன்’ என்றார்.
கீழ்வெண்மணிக்கு கிருஷ்ணம்மாள் சென்றிருந்த போது அங்கே அவர் மட்டும் தனியாளாக இருக்கவில்லை. அவருடன் மைதிலி சிவராமனும் இருந்தார். ஐக்கிய நாடுகளின் நிரந்தரக் குழுவில் இருந்த காலனிய நீக்க குழுவில் ஆய்வு உதவியாளராக அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் இருந்த பிறகு மைதிலி இந்தியாவிற்குத் திரும்பி இருந்தார். சர்வோதயா கொள்கைகளில் ஆர்வத்துடன் இருந்த அவர் வினோபா பாவேவின் தொண்டர்களான கிருஷ்ணம்மாள், ஜெகநாதன் ஆகியோரைச் சந்தித்தார். மைதிலியும், கிருஷ்ணம்மாளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவருடன் இணைந்து கீழ்வெண்மணிக்குச் சென்ற போது காவல்துறையினர் அவர்களைப் போராளிகள் என்றே சந்தேகப்பட்டனர். மைதிலியை நன்கு அறிந்திருந்த சில நண்பர்கள் தலையிட்ட பிறகே அவர்கள் இருவராலும் அந்தக் கிராமத்து மக்களைச் சந்திக்க முடிந்தது.
புகைந்து கொண்டிருந்த சாம்பல் வாடை, முந்தைய நாள் இரவு வரை தன்னுடன் அங்கே இருந்த குடும்பத்தினரைக் காணாது அங்கே அலைந்து திரிந்து கொண்டிருந்த நாய் எழுப்பிய ஊளை ஆகியவை வாழ்நாள் முழுவதும் மைதிலியைத் தொடர்ந்து வந்தன. அவர் எழுதிய ஆங்கில கட்டுரை அந்த நிகழ்வு பற்றிய மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. அவரின் அந்தக் கட்டுரை அந்த நிகழ்வு குறித்த ஆய்வுகளுக்கான மிகச் சிறந்த ஆதாரமாகவும் திகழ்கிறது.
‘நெருப்பால் நடத்தப்பட்ட வேட்டை’ (ஹாண்டட் பை பயர் 2013) என்ற புத்தகத்தின் அறிமுக உரையில் ‘அந்தச் சம்பவம் மூலம் தமிழ்நாட்டின் தானிய வளம் நிறைந்த அந்தப் பகுதியில் நிலவி வந்த வித்தியாசமான வாழ்க்கையை மைதிலி அறிந்து கொண்டார். கண்ணியத்துடன் வாழ்வதற்கோ, தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்வதற்கோ ஒருவர் கொடுக்க வேண்டிய விலை அந்தப் பகுதிகளில் மிக அதிகமாக இருந்ததை – உயிரையே சிலர் கொடுக்க வேண்டியிருந்ததை – அவர் உணர்ந்து கொண்டார். கீழ்வெண்மணியில் நடந்த அந்தக் கொடூரமான சம்பவம் வெறுமனே ஊதிய உயர்வு பிரச்சனையின் உச்சகட்டமாக நடந்தது என்பதை முற்றிலுமாக மறுத்து, உண்மையில் கிராமப்புறங்களில் நடைபெற்று வந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவாகவே அந்தச் சம்பவம் நடந்தேறியது என்று தனது கருத்துக்களை மைதிலி எடுத்து வைத்தார்’ என்று வ.கீதா, கல்பனா கருணாகரன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தச் சம்பவம், அது கற்றுக் கொடுத்த பாடங்களின் விளைவாகவே, விளிம்புநிலை மனிதர்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான மைதிலியின் வாழ்நாள் குறிக்கோளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.
கற்பனைப் புனைவாக்கப்படும் உண்மை
உண்மையைச் சொல்வது மிகவும் கடினமாக இருக்கிறது,
அதைச் சாத்தியமாக்க சில நேரங்களில் புனைகதையும் தேவைப்படுகிறது.
– பிரான்சிஸ் பேகன்
காலப்போக்கில் ஒரு சமூகத்தில் நடந்த கருத்தியல் வாதங்கள், அரசியல் சார்ந்த விவகாரங்களை அணுகுவதற்கு புத்தகங்கள், திரைப்படங்கள் போன்ற பிரபல கலாச்சார சாதனங்கள் உதவுகின்றன. கீழ்வெண்மணி படுகொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி இரண்டாண்டுகளுக்குப் பின்னர் 1975ஆம் ஆண்டு தமிழ் நாவலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி அந்த துயரச் சம்பவத்தை மையமாகக் கொண்டு கற்பனைக் கதையாக ‘குருதிப்புனல்’ என்ற நாவலை எழுதினார். அது முதன்முதலாக அப்போது தில்லியில் இருந்து வெளியான இலக்கிய இதழான கணையாழியில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் அது நாவலாக வெளியிடப்பட்டு, நாவலாசிரியருக்கு சாகித்திய அகாடமி விருதை 1977ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. உண்மையான வாழ்க்கையில் நடைபெற்ற சோக நிகழ்வுகளின் அடிப்படையில் கதை ஒன்றை எழுதுவது ஆசிரியர் என்ற முறையில் தனக்கு மிகவும் கடினமானதாக இருந்ததாக இந்திரா பார்த்தசாரதி கூறியிருந்தார். உண்மையான கதையை கதாசிரியரும், வாசகர்களும் அறிந்திருக்கிறார்கள் என்பதே அதற்கான காரணமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். குருதிப்புனல் நாவலில் வரும் அந்தக் கொலையாளி மிராசுதார் தன்னுடைய ஆண்மைக்குறைவை மறைப்பதற்காக பல்வேறு செயல்களைச் செய்பவராக இருந்தார். அது ‘பிராய்டியன் திருப்பம் கொண்ட மார்க்சிச நாவலாக’ இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.
அந்த நிகழ்வு நடைபெற்று நாற்பது ஆண்டுகளில் இரண்டு முக்கியமான திரைப்படங்களுக்கு மேல் அதைப் பற்றி வேறெந்தப் படங்களும் வெளியாகி இருக்கவில்லை. அவற்றில் பெரும்பாலானவர்கள் பார்த்த திரைப்படமாக 1983இல் வெளியான ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற திரைப்படம் இருந்தது. கிராமத்தில் நடைபெறும் அதிகார மோதல்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் நகரத்தைச் சார்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரின் பார்வையில் ஸ்ரீதர்ராஜன் இயக்கத்தில் வெளியான அந்தத் திரைப்படம் இருந்தது. அந்தத் திரைப்படத்தில் ஊதிய உயர்வு கோரும் விவசாயத் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது பற்றிப் பேசுவதற்காக கூத்து என்ற கலை பயன்படுத்தப்பட்டிருந்தது. கூலி உயர்வு கேட்கும் விவசாயத் தொழிலாளர்கள் அச்சுறுத்தப்படுவதோடு, அவர்களின் வீடுகளும் அந்தத் திரைப்படத்தில் தீக்கிரையாக்கப்படுகின்றன. முக்கிய கதாபாத்திரமாக, போராடும் விவசாயத் தொழிலாளியாக வருகின்ற காளை என்பவர் பண்ணையாரின் அடியாட்களை எதிர்த்துப் போராடும் போது கொலை செய்யப்படுகிறார். அவர் ஒரு நக்சலைட் என்றும், நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் போது அவர் இறந்து விட்டதாகவும், அவர்கள் பண்ணையாரைத் தாக்குவதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டி அது குறித்த செய்திகளை உள்ளூர் செய்தித்தாள் வெளியிடுகின்றது என்று கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் ஊடகங்கள் குறித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இடதுசாரி போராட்டக்காரர்களை நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்துவதன் மூலமாக, அவர்கள் மீது மேலாதிக்க சக்திகள் நடத்தும் வன்முறைகளை மாநில அரசு, ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை போன்றவை நியாயப்படுத்துகின்றன. ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை இவ்வாறு சித்தரிப்பது வழக்கமான நடைமுறையாகி விட்டது.
அரவிந்தன் (1997) என்ற திரைப்படம் கீழ்வெண்மணிச் சம்பவத்திலிருந்து எழுந்த தலித்துகள் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களை உயர்த்திப் பிடித்தாலும், அந்தப் படம் தனிமனிதன் ஒருவன் அமைப்பிற்கு எதிராகப் போராடுவதாக விரைவிலேயே தடம் மாறிச் சென்று விடுகிறது. அமைப்பை மாற்றுவதற்காக கல்லூரி இளைஞனான கதாநாயகன் வன்முறை, கொரில்லாப் போர் முறைகளைத் தழுவுவதாக அந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
அந்த இரண்டு திரைப்படங்களின் ஒப்பீட்டு ஆய்வு நம்மை மிகவும் சுவாரஸ்யமானமான ஆய்வுகளுக்கு இட்டுச் செல்கின்றது. அந்த இரண்டு திரைப்படங்களும் ஒடுக்குமுறைக்கு எதிராக வெவ்வேறு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கின்ற இரண்டு கதாபாத்திரங்களைச் சித்தரிக்கின்றன. அமைதியான வழிவகைகளால் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வெல்ல முடியும் என்று ஒரு படத்தில் இருக்கின்ற கதாபாத்திரம் உறுதியாக நம்புகின்ற அதே வேளையில், மற்றொரு படக் கதாபாத்திரமோ இப்போதைய சூழ்நிலைகளில் வன்முறை ஒன்றே ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஒரே வழிமுறை என்று நம்புகிறது. ஆச்சரியப்படும் வகையில் வன்முறையை நம்பியவர் இறந்து போகிறார், அமைதி வழியை விரும்பியவர் அதன் மீது நம்பிக்கையிழந்து வன்முறையைத் தேர்வு செய்து கொள்கிறார் என்று அந்த இரு திரைக்கதைகளும் சொல்லப்பட்டிருந்தன.
‘ராமைய்யாவின் குடிசை’ (2005) மட்டுமே அந்தச் சம்பவத்தை விளக்குகின்ற ஒரே ஆவணப்படமாக உள்ளது. படுகொலைகளில் உயிரை இழந்தவர்களின் உறவினர்கள், ஓய்வுபெற்ற உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், ஆரம்பத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மிராசுதார் ஒருவர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் ஊடாக அந்த ஆவணப்படம் பயணிக்கின்றது. தன்னுடைய குடும்ப உறுப்பினர்களில் பதினோரு பேரை இந்தக் கொடூரமான குற்றச் செயலால் இழந்ததை செல்வராஜ் என்பவர் விவரிக்கின்ற காட்சியில் மற்றவர்களைப் போல அவர் உடைந்து அழவில்லை என்பது நம்மை நெகிழ வைக்கிறது. நாற்பது ஆண்டுகள் கழிந்த பிறகும் நடந்த அந்த சம்பவத்தை அவர் எதிர்கொள்ள முடியாதிருப்பதை அவரது முகத்தில் எழுகின்ற சொல்லவொண்ணாத உணர்வுகள் பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்தி விடுகின்றன. அந்தச் சம்பவத்தின் அழியாத எச்சங்களாக துப்பாக்கிக் குண்டுகள் ஏற்படுத்திய வடுக்களைத் தங்களிடம் கொண்டவர்களாக உயிர் பிழைத்தவர்களில் சிலர் காணப்படுகிறார்கள். தங்களுடைய போராட்டங்களுக்கு முக்கியத்துவத்தை அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்தப் படுகொலைகளில் இருந்து எஞ்சியவர்களை அடையாளம் காட்டுகின்றனர். உயிர் பிழைத்தவர்கள் மற்றும் இறந்து போனவர்களின் உறவினர்களைப் பொறுத்த வரையில், அந்தப் பேரழிவின் சுமை அவர்களுடைய வாழ்வின் அழியாத ஒரு பகுதியாக மாறியதோடு, அவர்களுடைய மனங்களில் கூடுதல் சுமையையும் ஏற்றியிருக்கின்றது.
அந்த ஆவணப்படத்தை உருவாக்கிய பாரதி கிருஷ்ணகுமாருடன் பேசுகையில், இப்போது அந்தப் படுகொலை எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைப் பற்றி முற்றிலும் புதிய பார்வையை அவர் முன்வைத்தார். படுகொலை நடந்து முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆவணப்படத்தைத் தயாரிப்பதற்காக அங்கே சென்ற போது, அரசியல் கட்சிகள் அல்லது உள்ளூர் காவல் துறையினரிடம் இருந்து எந்தவொரு எதிர்ப்பையும் தான் சந்திக்காதது முற்றிலும் முரணாக இருந்தது என்றார். இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்தச் சம்பவத்தால் எந்தவொரு அச்சுறுத்தலும் இருக்கவில்லை. நினைவுகள் மிகவும் பலமிழந்து போயிருப்பதால், அதிகாரமற்ற மக்களிடம் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் நடந்தவற்றை நினைவுபடுத்தினாலும், அவை எந்தவிதமான போராட்டத்திற்கும் வழிவகுக்கப் போவதில்லை என்ற நம்பிக்கை ஆட்சியாளர்களிடம் உறுதியாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
முக்கிய திரைப்படங்களில் இதுகுறித்த உரையாடல் இல்லாதது பற்றி பேசிய கிருஷ்ணகுமார் ‘தீண்டாமை இன்னும் தொடர்கிறது. இறந்த பின்னரும் கூட படுகொலை செய்யப்பட்டவர்கள் தீண்டாமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சாதாரணமான மனிதர்களைப் பாதிக்கின்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், ஏனைய சமூகப் பிரச்சனைகள் குறித்தே பிரதான திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன…. விடுதலைப் புலிகளின் பிரச்சனையும்கூட. தீண்டத்தகாதவர்களைப் பற்றி யாரும் அக்கறை காட்டுவதிவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் அரை நூற்றாண்டான பிறகும் மாறாத நிலையிலேயே அது இருந்து வருகிறது. கலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மைதான்… சமூகத்தைப் போலவே, வெகுஜன ஊடகங்களும் தீண்டாமையை மிக உறுதியாக செயல்படுத்தி வருகின்றன’ என்றார்.
அந்தச் சம்பவம் அரசியல் அல்லது சமூக தர்க்கங்களை இல்லாமல் செய்திருப்பதாக கிருஷ்ணகுமார் நம்புகிறார். ‘கீழ்வெண்மணி பற்றிய வாழ்நாள் அனுபவம் கொண்ட சிலர், நாட்டுப்புற இசை, ஒப்பாரிப் பாடல்கள் மூலம் அதனை உயிர்ப்போடு வைத்திருக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அந்தப் படுகொலைக்குப் பின்னர் வந்துள்ள தலைமுறையினரிடம் அந்தச் சம்பவம் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினத்தன்று மிகப் பெரிய கூட்டம் அங்கே வந்து அந்த நிகழ்வை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அதுவே ஒரு வழக்கம் என்பதாக, அடையாளச் செயல் என்பதைத் தாண்டி அதில் எதுவுமில்லை என்பதாக மாறியிருக்கிறது. அந்தப் படுகொலைகளில் தங்களுடைய உயிர்களை இழந்தவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கூட எந்தவொரு அரசியல் காரணமுமின்றி தங்கள் வீட்டில் நடந்த ஒரு சம்பவமாகவே அந்த இறப்பைக் கருதுகிறார்கள். அந்தச் சம்பவம் குறித்த உரிய கவனத்தை பாடப் புத்தகங்கள், ஊடகங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தராததாலேயே இதுபோன்று நடந்திருக்கிறது’ என்று கிருஷ்ணகுமார் கூறுகிறார்.
முடிவுரை
பக்கத்துத் தெருவில் நடக்கும் ஒடுக்குமுறை, பாகுபாடுகளுக்கு எதிராகக் கோபம் கொள்வதைக் காட்டிலும் உலகின் மறுமுனையில் நடக்கின்ற அநீதிக்கு எதிராகக் கோபம் கொள்வது மிகவும் எளிதானது
– கார்ல் ரோவன்
இந்தக் கட்டுரைக்காக வேலை செய்த போது நினைவில் கொள்வது, அவற்றை மறப்பது போன்றவை நான் எதிர்கொண்ட மிக முக்கியமான சிக்கல்களில் ஒன்றாக இருந்தன. தேசிய குற்றவியல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு தலித் வீடுகள் எரிக்கப்படுகின்றன, மூன்று தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், இரண்டு தலித்துகள் படுகொலை செய்யப்படுகிறார்கள், பதினொரு தலித்துகள் தாக்கப்படுகிறார்கள் என்று தெரிய வருகிறது. ஆனால் அவையெல்லாம் உண்மையாக இருந்தாலும், தலித்துகளுக்கு எதிராக நடத்தப்படும் குற்றச் செயல்களில் ஒரு சதவிகிதம் என்று மிகக்குறைந்த அளவில் கூட பதிவு செய்யப்படுவது இல்லை என்பதுதான் அதனினும் மோசமாக இருக்கிறது.
இந்த அளவிற்கான துயரம் குறித்து மனிதர்களின் கூட்டு நினைவு எவ்வாறு செயல்படுகிறது? தலைமுறை தலைமுறையாக நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டு, என்றைக்கும் நினைவில் கொள்ளத் தக்கவாறு பதிவு செய்யப்பட்டு, நினைவுகூரப்படுவதாக, வாசிக்கப்படுவதாக, மறுபடியும் வாசிக்கப்படுவதாக எது அவர்களுடைய நினைவில் இருக்கிறது? எது மறந்து போகப்படுவதாக, நமது கடந்த காலங்களுக்குள் ஒளிந்து கொள்வதாக இருக்கிறது? ஒருவர் பரந்த, பல்வேறுபட்ட வகைகளிலான ஒடுக்குமுறைகளை எவ்வாறு அறிந்து உணர்ந்து கொள்வது?
அந்தச் சொல்லாடல்களுக்குள் பெண்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படாமல் இருப்பது நான் எதிர்கொண்ட மற்றுமொரு சிக்கலாக இருந்தது. அந்தக் கிராமத்தில் இருந்து கிடைத்த அறிக்கையின்படி, நாற்பத்தி நான்கு பேர் அன்றைய இரவில் கொல்லப்பட்டனர். அவர்களில் இருபது பேர் பெண்கள், பத்தொன்பது பேர் குழந்தைகள்; ஆனால் அந்த நிகழ்ச்சி குறித்த எந்தவொரு வர்ணனையிலும் பெண்களுக்கான இடம் இருக்கவில்லை. அவர்கள் வெறுமனே எண்ணிக்கையாக மட்டுமே அந்தப் பட்டியலுக்குள் இடம் பெற்றுள்ளனர். அரசியல், பொருளாதாரம், சமூகம், புனைவு என்று இந்த விவரிப்புகளில் ஒருமுறை கூட அவர்களுக்குரிய இடம் வழங்கப்படவில்லை. அந்தப் போராட்டத்தால் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள், உயிர்வாழ்வதற்காகவும், முன்னேறுவதற்காகவும் அவர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்த ஆய்வுகள் நமக்குத் தேவைப்படுகின்றன. அனைத்திற்கும் கீழானவர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் கீழ்நிலையின் விளிம்புகளுக்கும் பின்னால் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரையிலும் கேட்கப்படாத அவர்களின் குரல்களுக்கான மேடையை வழங்கி அந்தக் குரல்களுக்கான சட்டபூர்வமான நியாயத்தை வழங்குவதன் மூலம் அவற்றை போராட்டத்திற்கான ஒரு தளமாகவும், வரலாற்றை மீளப்பெறுகின்ற ஒரு முயற்சியாகவும் ஆக்குவதற்கு அந்தப் பெண்களின் அனுபவங்களைத் தொகுத்துக் காணுகின்ற வகையிலான விமர்சன வரலாற்றுக் குறிப்பு நிச்சயம் உதவக்கூடும்.
கீழ்வெண்மணியைப் பற்றி நினைவு கொள்வது உண்மையைச் சரிபார்ப்பதாகவே இருக்கிறது. அது குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற ஒடுக்குமுறையின் நெடிய வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஒருவரைத் தூண்டுவதாக உள்ளது. பெரிய அல்லது சிறிய, அசாதாரணமான அல்லது பொதுப்படையான, தொடர்ச்சியான அல்லது அவ்வப்போது வருகின்ற, தற்போதைய அல்லது கடந்த காலம் என்று எவ்வாறாக இருந்தாலும், கீழ்வெண்மணியின் நினைவுகள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இருந்து வருகின்ற அமைதி குறித்து ஒருவரைச் சிந்திக்க வைப்பதாகவே இருக்கின்றன.
மூலம்: The Din of Silence Reconstructing the Keezhvenmani Dalit Massacre of 1968
தமிழில்: தா.சந்திரகுரு