[2021ஆம் ஆண்டு முழுவதும் துன்பங்களே நிறைந்திருந்தாலும், இந்தியாவில் வெற்றிக் களிப்பைக் கொண்டாடும் விதத்தில் முடிவுற்றுள்ளது.]
விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2021ஆம் ஆண்டு முழுவதும் துன்பங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தபோதிலும், இந்தியாவின் மக்களுக்கு வெற்றிக்களிப்பை அளிக்கும் விதத்தில் முடிவுக்கு வந்தது.
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மார்ச் – மே மாதங்களுக்கிடையே மக்களை நாசப்படுத்தியது. மோடியும் அவருடைய அரசாங்கமும் கொரோனா வைரஸ் தொற்றை வென்று விட்டோம் என்று தம்பட்டம் அடித்தபோதிலும், இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மக்களைத் தாக்கியபோது அதனை எதிர்கொள்ள நாடு தயாராக இல்லை. இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர். இவற்றில் பல பதிவு செய்யப்படவேயில்லை. ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் மூச்சுத்திணறி இறந்த கொடுமையையும், ஏராளமான சடலங்கள் கங்கையில் மிதந்து சென்றதையும் உலகம் முழுதும் ஊடகங்களால் எடுத்துச்செல்லப்பட்டு நம் நாட்டின் அவலநிலையை உலகுக்குப் பறைசாற்றின. இவ்வளவு மோசமாக நாட்டு மக்களை நாசப்படுத்தியிருந்தபோதிலும்கூட இதற்காகப் பிரதமர் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இதேபோன்றுதான் தடுப்பூசிகள் சம்பந்தமாக, அவற்றைப் போதுமான அளவிற்குக் காலத்தில் கொள்முதல் செய்ததிலோ, நாட்டிற்குள்ளேயே உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவோ மற்றும் விரைவாக அவற்றை மக்களுக்கு விநியோகிப்பதிலோ ஏராளமான அளவில் குளறுபடிகள் செய்ததையும் பார்த்தோம். நாட்டில் முதன்முதலாக அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதற்குப் பதிலாக, அதற்கும் விலை வைத்து விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஒன்றிய அரசாங்கம், உச்சநீதிமன்றத்தில், டிசம்பர் 31க்குள் (18 வயதுக்கு மேற்பட்ட) வயது வந்த அனைவருக்கும் இரு முறை தடுப்பூசிகள் (two doses of vaccines) முழுமையாகச் செலுத்தப்படும் என்று கூறியது. இது சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிவோம். டிசம்பர் இறுதிக்குள், நாட்டிலுள்ள வயது வந்தவர்களில் 65 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கே முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் 35 சதவீதத்தினர் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்படாது விடப்பட்டுள்ளனர். நாட்டை விழுங்கப் போவதாக ஓமிக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் இத்தகைய அவலநிலை நீடிக்கிறது.
மோடி அரசாங்கம், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான அளவிற்குத் தடுப்பூசிகளைத் தயாரித்து, மக்களுக்குச் செலுத்துவதற்கான, திட்டமிடுதலிலும், தயாரிப்பு வேலைகளிலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்விதத்தில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துவதிலும் மோசமான முறையில் படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல, இவ்வாறு நாட்டில் நிலைமைகள் மோசமாக இருக்கும் காலத்தை, தன்னுடைய பிளவுவாத மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளவும் பயன்படுத்திக்கொண்டது.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தனியாருக்குத் தாரை வார்க்க இலக்கு அறிவிக்கப்பட்டதையும் பார்த்தோம். இதனைத்தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பணமாக்கும் திட்டமும் (monetization of the public sector assets) அறிவிக்கப்பட்டதைப் பார்த்தோம். இவ்வாறு சொத்துக்களை விற்று சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்டப்போகிறார்கள். இது, நாட்டின் துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில்வே பாதைகள், நிலம் மற்றும் சொத்துக்களை குத்தகைக்கு விடுகிறோம் என்ற பெயரில் தனியாருக்குத் தாரைவார்க்கும் செயலே தவிர வேறல்ல.
பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்கிறது. நிதித்துறையில் பொதுத்துறை வங்கிகளில் இரண்டு தனியாரிடம் தாரை வார்க்கப்பட இருக்கிறது. ஆயுள் இன்சூரன்ஸ் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
மோடி அரசாங்கம் அம்பானிக்கும், அதானிக்கும் அப்பட்டமான முறையில் சலுகைகள் அளித்ததன் மூலம், அவர்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில்கூட மக்களிடம் மிகவும் அசிங்கமானமுறையில் கொள்ளை லாபம் அடித்ததைக் காட்டின. அம்பானியின் நிகர சொத்தின் மதிப்பு 2021இல் 92.7 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்தது. அதானியின் சொத்து மதிப்பு 78.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது.
மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மீது மேலும் மேலும் சுமைகள் ஏற்றப்பட்டன. மிகவும் அதிகமான அளவில் நாசத்தை ஏற்படுத்திய கோவிட் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில், அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் மக்களுக்குச் சொல்லொண்ணா துன்பங்களை ஏற்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலைத் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருந்ததன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து மக்கள் வாங்கிவந்த சொற்ப வருமானங்களும் சரிந்து, பல லட்சக்கணக்கான மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளியது. மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளிய மற்றொரு காரணி, வேலைவாய்ப்பு சுருங்கியதால் வருமானங்கள் இழப்பு ஏற்பட்டதுமாகும். 2020-21 கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் கூடுதலாக வறுமைக் குழிக்குள் தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 7 முதல் 8 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு, ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை வெறித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்தபின், அதன் அடையாளத்தையே சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அந்தஸ்தைக் குறைக்கும் விதத்தில் அதன் சட்டமன்ற இடங்களும் சட்டமன்ற இடங்களுக்கான மறுசீரமைப்பில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற இடங்கள் இவ்வாறு மறுசீரமைக்கப்பட்டு குறைக்கப்படுவது, அதன் பின்னர் தேர்தல்கள் நடத்துவது, அதன்பின்புதான் மாநில அந்தஸ்து என்னும் வரிசைக்கிரமம் அமித் ஷாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், அங்கே மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கைவிடுவதற்கான எண்ணமோ, அவர்களின் குடிமை உரிமைகளைப் பறித்திருப்பதை மீளவும் அளிப்பதற்கான எண்ணமோ இருப்பதாகத் தெரியவில்லை.
பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் ஆட்சி செய்வதைப்போலவே, இப்போது வட கிழக்கு மாநிலங்களிலும் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றனர். நாகாலாந்து மாநிலத்தில் ராணுவத்தினரால் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது, அங்கே ராணுவத்தின் ஆட்சி தொடர்வதற்காகவே வந்திருக்கிறது என்பதற்கான கடுமையான நினைவூட்டலாகும்.
இந்துத்துவா ஆட்சியாளர்களுக்கு, ஒரு வலுவான ராணுவ அரசை நிறுவுவது அவசியமாகும். அப்போதுதான் அவர்களால் அந்நிய மற்றும் உள்நாட்டு எதிரிகளுடன் (external and internal enemies) போராட முடியும். உள்நாட்டில் அவர்கள் எதிரிகள் என்று கருதுவது முஸ்லீம்களைத்தான் என்பது தெளிவு. முஸ்லீம்களுக்கு எதிராக, வெறுப்பை உமிழ்ந்திடும் உரைகள், சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள், சிறுபான்மையினரைக் குறி வைத்து பாஜக தலைவர்கள் குரைத்தல் திட்டமிட்டு படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின்காரணமாக பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்த பல சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் சமீபத்தில் கர்நாடகாவிலும் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் ‘புனித ஜிகாத்’ (‘love jihad’)எனக் குற்றஞ்சாட்டி, மதக் கலப்புத் திருமணங்கள் செய்துகொள்ளும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில், கிறிஸ்தவர்கள் மீது கவனம் திருப்பப்பட்டிருக்கிறது.
மதவெறியர்களால் முஸ்லீம்கள் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரங்கள்மீது தொடர்ந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது இந்த ஆண்டில் கிறித்தவர்கள் மீதும் அவர்களுடைய தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் கூர்மையானமுறையில் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிந்தது. இத்தகைய தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் அன்றும் நடந்திருக்கிறது. வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் அனுமதி வாங்கி நிதி வசூல் செய்துவந்த அன்னை தெரசா கருணை இல்லங்களுக்குக்கூட அவ்வாறு அளிக்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டது.
மொத்தத்தில், இந்த ஆண்டு, ஒன்றிய அரசாங்கத்தால் கோவிட் பெருந்தொற்று மிக மோசமானமுறையில் கையாளப்பட்டதையும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள்மீதான சுமைகள் ஏற்றப்பட்டிருப்பதையும், சிறுபான்மையினர் மீது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதையும் பார்த்தது.
இவ்வாறு அடிமேல் அடிவாங்கிய மக்கள் இப்போது அவற்றை எதிர்த்துநின்று, திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பாஜக, ஏப்ரலில் நடைபெற்ற ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் கடும் பின்னடைவுகளை எதிர்கொண்டது. அஸ்ஸாமில் மட்டும்தான் அது மிகவும் குறைவான பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் நிர்வகிக்கப்படும் சண்டிகார் மாநகராட்சிக்கு, இந்த ஆண்டு நடந்த சமீபத்திய தேர்தலில், பாஜக தன்னுடைய பணபலத்தையும் அதிகாரபலத்தையும் இறக்கிவிட்டிருந்தபோதிலும், இந்துத்துவா அடிப்படையிலான மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டபோதிலும், படுதோல்வி அடைந்தது. அங்கே, தனிப்பெரும் கட்சியாக மேலெழுந்துவந்துள்ள ஆம் ஆத்மி கட்சியிடம் மாநகராட்சியை இழந்தது.
மக்கள் மத்தியில் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் அதிகரித்துவரும் பின்னணியில் பாஜக இத்தகைய தேர்தல் தோல்விகளைச் சந்தித்தள்ளது. 2021ஆம் ஆண்டு முழுவதுமே விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் ஆதிக்கம் செலுத்தியது. விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் வெகுஜனப் போராட்டங்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி இருக்கிறது. தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓராண்டு காலத்திற்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் எவ்விதத்தொய்வுமின்றிக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்தி வந்த பின்னர், மோடி அரசாங்கம் இறங்கிவந்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திருக்கிறது. விவசாயிகளின் உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தின்முன்னே ஒன்றிய அரசாங்கத்தை சரணாகதி அடைய வைத்துள்ளது. இந்த வெற்றியானது உழைக்கும் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியிருக்கிறது. அது என்னவென்றால், நீங்கள் ஒன்றுபட்டுப் போராடினால், வெற்றி பெறுவது திண்ணம் என்பதேயாகும்.
விவசாய இயக்கம், கூட்டு நடவடிக்கைகளின்போது, தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒற்றுமை வளர்ந்துகொண்டிருப்பதையும் பார்த்தது. இது எதிர்காலப் போராட்டங்களுக்கும், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்க்களத்திற்கும் அடிப்படையாக அமைந்திடும். புத்தாண்டு இத்தகைய நல்லதொரு அறிகுறியுடன் துவங்குகிறது.
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
தமிழில்: ச.வீரமணி
டிசம்பர் 29, 2021