Site icon சக்கரம்

வரலாற்றை மாற்றி எழுதுவது சரியல்ல!

-மணியகாரன்

லங்கையில் ‘கம்பன் கழகம்’ என்றொரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பு சில கம்பன் விழாக்களையும் யாழ்ப்பாணத்தில் நடத்தி வந்தது. அதன் ஆயுட்கால தலைவராக ‘கம்பவாரிதி’ என்று முடிசூட்டப்பட்ட இ.ஜெயராஜ் என்ற ஒருவர் இருக்கிறார். (இங்கு ‘கம்பன் ஒரு வம்பன்’ என்ற திராவிடக் கழகத்தினரின் பிரச்சாரத்தை எடுப்பது சரியல்ல)

இந்த கம்பன் கழக ஜெயராஜ் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்வில் பேசுகையில், ‘விடுதலைப் புலிகளின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழ் கோலோச்சியது என்றும், அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் அழிந்து விட்டது’ என்றும் கூறியிருக்கிறார்.

இது உண்மையல்ல. ஜெயராஜ் ஒருமுறை நல்லூர் கந்தசாமி கோயில் வீதியில் மூன்று நாட்கள் கம்பன் விழா நடத்துவதற்கு கூடாரம் எல்லாம் போட்ட பின்னர், புலிகளின் கலை பண்பாட்டு பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ‘கம்பவாரிதி’ ஜெயராஜை அழைத்து இந்த விழாவை நடத்தக்கூடாது என எச்சரிக்கை செய்த பின்னர், ஜெயராஜ் யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்பு சென்று வாசம் செய்யத் தொடங்கி விட்டார். அதன் பின்னர் தனது கம்பன் கழக விழாக்களை கொழும்பில் மட்டும் நடத்தத் தொடங்கினார். அந்த விழாக்களில் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த கம்பன் விழாவை புலிகள் தடை செய்தது சம்பந்தமாக நல்லூரில் அமைந்துள்ள ‘நல்லூர் ஆதீனத்தில்’ ஒரு விளக்கக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு கம்பன் பக்தர்கள் பலர் அங்கு கூட்ட நேரத்துக்குச் சென்றனர். ஆனால் கூட்டம் நடைபெறவில்லை. மாறாக, ‘தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டம் பின் போடப்பட்டுள்ளது’ என்ற அறிவித்தல் பலகை மண்டபத்தின் முன் வாசலில் வைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி பலரும் விசனமடைந்த நிலையில் அங்கு தோன்றிய யாழ்.இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், இலக்கியவாதியும், இடதுசாரி ஆதரவாளருமான க.சிவராமலிங்கம் ஆசிரியர் அவர்கள், ‘இது பொடியன்களுடைய தடை. நாங்கள் கதைக்கேலாது’ என சொல்லிச் சென்றார்.

இந்த நிலைமையில் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் கலைக்கப்பட்ட ‘கம்பவாரிதி’ ஜெயராஜ் யுத்தம் முடிந்த சூழலில் பல வருடங்கள் கழித்து யாழ்ப்பாணம் சென்று புலிகளைப் புகழ வேண்டிய பின்னணிக் காரணம் என்ன? ‘பெரியண்ணன்’ காரணம் என்றால், கதை எங்கேயோ போகிறது. இந்த வகையறாக்கள் மூலம் இலங்கைக்கு பல விதங்களில் பூச்சாண்டி காட்டி மிரட்டுகிறார்களா அல்லது அதுதான் உண்மையா?

Exit mobile version