Site icon சக்கரம்

இலங்கையில் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

லங்கையில் அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65வயதாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்திருக்கிறது. இந்த விடயம் தொடர்பிலே மேற்கொள்ளப்படும் சமூகக் கருத்தாடல்களில் இந்நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருவதைக் காணமுடிகிறது.

ஊழியப்பொருளியல் Labour Economics என்னும் பாடப்பரப்பினுள் இவ்விடயம் உள்வருவதனாலும் அரசியற் பரப்பில் ஊழியர்களும் தொழிற்சங்கங்களும் பிரிக்க முடியாத கூறுகளாக இருப்பதனாலும் இவ்விடயம் நமது கரிசனைக்குரிய விடயமாகவும் இருக்கிறது. தனியார்துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையையையும் உயர்த்துமாறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  

நாட்டு மக்களின் ஆயுள் எதிர்பார்க்கை கடந்த காலங்களில் அதிகரித்துள்ள நிலையில் முன்பு ஐம்பத்தைந்து வயதாக இருந்த ஓய்வுபெறும் வயதெல்லை உயர்த்தப்பட்டு 65வயது வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் தொழிலில் இணைந்து பணியாற்றும்போது தமது பணியை மேலும் விளைதிறனுடனும் வினைத்திறனுடனும் மேற்கொள்ள வயது ஒரு தடையாக அமைந்து அவரது பங்களிப்பைக் குறைத்துவிடும் என்ற நோக்கிலும் நாட்டின் தொழிற்படையில் புதிதாக இணையும் நபர்களுக்கு தொழில்வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் நோக்கிலும் தொழில்புரியும் காலத்தில் செய்த பங்களிப்புக்கு மாற்றீடாக பணியாளர் ஒருவர் ஓய்வாக இருந்து தமது அந்திம காலத்தை நிம்மதியுடன் கழிக்கவேண்டும் என்ற நோக்கிலும் ஓய்வு பெறும் வயதெல்லைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.  

நாட்டுக்கு நாடு இவ்வயதெல்லைகள் வேறுபடுவதையும் காணமுடிகிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் சில தொழில்களுக்கு ஓய்வுபெறும் வயதெல்லை வேறுபட்டிருந்தமையையும் நாம் காணலாம். உதாரணமாக, அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 55வருடங்களாக இருந்தபோது பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை பத்து வருடங்கள் உயர்வாக 65வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் பேராசியர் ஒருவரை உருவாக்குவதற்கான முதலீட்டுச் செலவுகள் உயர்வாக இருந்தமையும் தமது வாழ்நாளில் அவர் கணிசமான நேரத்தை கற்பதிலே செலவிட நேர்வதாலும் அனுபவமுதிர்ச்சி அறிவு சார் சமூகத்திற்கு அவரது பங்களிப்பை அதிகரிப்பதனாலும் உடலுழைப்பை வழங்குபவரைப் போலன்றி உடல் நலிவடைந்த போதிலும் தாம் பெற்ற அறிவை ஒருவரால் சமூகத்திற்கு பகிர்ந்தளிக்க முடியும்.  

சக்கரநாற்காலியில் அமர்ந்தவாறே கழுத்தைக் கூட அசைக்க முடியாத நிலையிலும் இயற்பியல் துறையில் சாதனைகள் பலபுரிந்த இயற்பியல் பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் Stephen Howking இதற்கு ஒரு நல்ல உதாரணம். பேராசிரியர் என்பதன் உள்ளார்ந்த அர்த்தமே நுண்மான் நுழைபுலம் மேவிய அறிவும் மனப்பாங்கும் நல்ல நடத்தையும் சமூகத்தின் மீதான அக்கறையும் கொண்ட ஒருவர் என்பதாகும். மாறாக வெறுமனே காகிதங்களால் நிரப்பப்படும் தகுதியினால் (paper qualifications) அது வந்துவிடாது. அத்தகைய ஒருவர் தாம் சுயநினைவின்றி வீழ்ந்து இறக்கும்வரை தமது அறிவைப் பயன்படுத்த முடியும். நம்நாட்டிலும் அத்தகைய பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இது போன்ற ஓய்வுபெறும் வயதெல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் அற்ற தொழிற் தகைமைகள் ஏதும் அவசியமற்ற ஒரு துறையும் இருக்கிறது. அதுதான் அரசியல் துறை! ஏனைய எல்லாத்துறைகளையும் கட்டுப்படுத்தி அடக்கியாளும் அரசியல் தொழிலுக்கு தொழிற் தகுதியோ ஓய்வு பெறும் வயதெல்லைக் கட்டுப்பாடுகளோ இல்லாமை வினோதமான விடயம் தான்.  

இந்த நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ​ெஜயவர்த்தன அப்பதவிக்கு வந்தபோது அவருக்கு வயது 78. தமக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரிய நான்கைந்து பேரை துணைக்கு வைத்துக்கொண்டு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பையே மாற்றியமைக்க அவரால் முடிந்தது. ஆனால் அவரது  பேரினவாத சிந்தனையும் மமதையும் சிறுபான்மையை மிதித்து வைக்க எடுத்த முடிவுகளும் நாட்டை அரசியல் ரீதியில் கொதிநிலைக்குத் தள்ளியமையையும் நாம் மறுப்பதற்கில்லை. இந்த முடிவுகள் வயசுபோன காரணத்தால் சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகளாக ஒரு போதும் கருத முடியாது. மறுபுறம் இன்றைய உலகில் இளைஞர்கள் அரசியல் தலைமை தாங்கும் நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் சிறப்பாகக் கையாளப்பட்டு வருவதையும் நாம் காணமுடிகிறது. கனடா நியூசிலாந்து நெதர்லாந்து மற்றும் சில நாகரிகமடைந்த மத்தியகிழக்கு நாடுகளில் இந்நிலைமையினை நாம் அவதானிக்கலாம்.  

ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதால் ஏற்படும் உடனடிப் பாதிப்புகள் என்ன? குறித்த ஊழியரின் பதவியைக் குறிவைத்துக் காத்திருக்கும் அவருக்கு அடுத்த பதவிநிலையில் உள்ளவரின் இரத்தக்கொதிப்பு முதலாவது பாதிப்பு. ஐயோ இவன் இந்த வருடத்தோடு போய்த்தொலைவான் என்று பார்த்தோமே இன்னுமொரு ஐந்து வருடம் இருந்து கழுத்தறுக்கப் போகிறானே என்ற மனக்கடுப்பு மற்றுமொரு பாதிப்பு. இதுகள் வெளியே போனால் தானே வெற்றிடம் ஏற்பட்டு எங்களுக்கு அரசாங்கத்தில் வேலை கிடைக்கும் என்ற வேலையற்ற இளைஞர்களின் அங்கலாய்ப்பு இன்னொரு பாதிப்பு. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் இதனால் ஏற்படும் நன்மையான விளைவு புதிதாக அரசாங்க வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டியதில்லை. தொழிலற்றிருப்போரை தனியார்துறைக்கு தள்ளிடலாம். அல்லது டொலர் பெருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நோக்கி நகர்த்தலாம் அத்துடன் ஓய்வூதியத்திற்காக செலவிடும் நிதியிலும் கணிசமான சேமிப்புகளை மேற்கொள்ளலாம்.  

கொள்கைரீதியில் ஓய்பெறும் வயதெல்லை நீடிக்கப்படுவதை எதிர்ப்பவர்கள் கூறும் தர்க்கங்களில் முக்கியமானது, சிரேஷ்டப் பிரஜைகள் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை இலகுவில் கற்றுக்கொள்ள முடியாது. அவர்களது மனோபாவங்களும் அதற்கு இலகுவில் இடந்தராது என்பதாகும்.  அதேவேளை இவ்விடயம் இளைஞர்களால் இலகுவில் சாத்தியப்படும். மாறிவரும் உலகில் அடுத்துவருகின்ற காலப்பகுதிகள் மீயுயர் தொழில் நுட்பப்பாய்ச்சலுடன் சவால்மிக்க போட்டித்தன்மை கொண்டதாக அமையும். எனவே ஏற்கெனவே விளைதிறனும் வினைத்திறனும் குன்றிப்போயுள்ள அரசாங்கத்துறையில் ஓய்வுூதிய வயதெல்லை நீடிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் காத்திரமான விளைவுகள் எதையும் ஈட்டித்தராது என்பதாகும். ஆனால் நாட்டில் ஓய்வு பெற்ற அரச நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் பாதுகாப்புப்படை உத்தியோகத்தர்கள் போன்ற சில தரப்பினர் ஓய்வின் பின்னரும் பல்வேறு பதவி நிலைகளில் அமர்த்தப்பட்டதையும் நாம் காணலாம். மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநா் கூட நாட்டின் பல்கலைக்கழகமொன்றின் உப வேந்தராக இருந்து ஓய்வுபெற்ற ஒரு தகைநிலைப் பேராசியராவார். ஆனால் அத்தகைய நிகழ்வுகளை எல்லாப் பணி நிலைகளுக்கும் பொருத்திப்பார்க்க முடியுமா என்றால் அது சந்தேகத்திற்கு இடமானதுதான்.  

இப்போது பேசுபொருளாக மாறியிருக்கும் இதனோடு தொடர்புடைய விடயம் பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் பணிபுரியும் கல்விசார் ஊழியர்களின் வயதெல்லையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையாகும். முன்னர் ஏனைய அரசு துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 55வயதாக இருந்தபோது 65வயதாக நிர்ணயிக்கப்பட்ட கல்வியாளர்களின் வயதெல்லை இப்போது ஏனைய தரப்பினரின் வயதெல்லைக்கு சமமாக மாறிவிட்டது. அதனால் கல்வியாளர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 70வயது வரை அதிகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இப்போது 65வயதில் ஓய்வு பெறும் கல்வியாளர்கள் தனியார் துறையிலோ அரசுசாராத துறையிலோ அடுத்த ஒரு ரவுண்ட் தொழில் புரிந்த கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது ஓய்வு பெறும் வயதை நீடித்தால் அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு பதவிகள் கிடைக்காது. சேவை நீடிப்பு ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வழங்கப்படக்கூடாது. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்றவாறு பல்வேறு தர்க்கங்கள் பல்கலைக்கழக மட்டத்திலே தற்போது உலாவி வருகின்றன. அரச சேவையிலே ஒரே தரத்தில் உள்ளவர்களில் சிலருக்கு ஓய்வுூதிய வயதெல்லையை நீடித்து வேறுசிலருக்கு அவ்வாறு செய்யப்படாமல் விடமுடியாது என்ற அடிப்படை விடயம் கூட விளங்காத நிலையில் பேராசிரியர்கள் உள்ளார்களா என்று புருவங்களை உயர்த்தாமல் இருக்க முடியவில்லை.  

கல்விசார் ஆளணியினரின் ஓய்வு பெறும் வயதெல்லை மேலும் நீடிக்கப்படுகிறதா இல்லையா என்பதைவிட அறிவுசார் சமூகத்தை உருவாக்க பங்காற்றிய ஒருவர் தமது அந்திம காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்து மறைந்து போகிறாரா அல்லது தமது கடைசிக்காலத்தில் பொருளாதார பலமின்றி கவனிப்பாரற்று வேதனையுடன் போய்சேர்கிறாரா என்பதே முக்கியமானது. பல்கலைக்கழக கல்விச் சமூகத்திலே ஓய்வூதியம் பெறாத ஒரு பிரிவினர் இன்னும் இருக்கின்றனர். ஓய்வின்போது அவர்கள் பெறும் சேமலாப நிதி வயோதிபத்தின்போது வரும் மருத்துவ செலவுகளின்போது ஒரேயடியாகத் தீர்ந்துபோய் வாழ்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கி மற்றவரிடம் கையேந்துவதை வேதனையடன் பலதடவைகள் பார்த்திருக்கிறோம். ஓய்வின் பின்னர் அவர்கள் பெரும்பாலும் சமூகத்தால் மறக்கப்பட்டவர்களாகவும் ஆகிவிடுகின்றனர். எனவே இவ்விடயமே முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும்.

-தினகரன் வாரமஞ்சரி
2022.01.23

Exit mobile version