Site icon சக்கரம்

இன்று உலக தண்ணீர் நாள்

முனைவர் இரா. இளங்கோவன்

  

லக தண்ணீர் நாள். உலகம் முழுவதும் அரசு சாரா அமைப்புகளும் பொதுமக்களும் மிகச்சிறப்பாக இந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். சமீபகாலமாக அரசு நிறுவனங்களும் தண்ணீர் தினத்தை விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடி வருகின்றன.

சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு 1992ஆம் ஆண்டு ரியோ ஜெனிரோவில் (Rio de Janeiro) நடைபெற்றது. தண்ணீருக்கான பிரச்னைகளைத் தீர்க்கவும், சரி செய்யவும் மார்ச் 22ஆம் நாளை ‘உலக தண்ணீர் தினம்’ என்று கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் ஐக்கிய நாடுகளி்ன் பொது சபை 1993ஆம் ஆண்டு மார்ச் 22 முதல் உலக தண்ணீர் தினத்தை கொண்டாட வடிவமைத்துக் கொடுத்தது.

இந்த உலக தண்ணீர் தினத்துக்காக ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையக் கருவைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

2020ஆம் ஆண்டின் மையக் கருவாக ‘காலநிலை மாற்றம் மற்றும் தண்ணீர்’ என அறிவித்திருந்தனர். பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் தண்ணீரில் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசப்படும். பருவநிலை மாற்றத்தினால் தண்ணீர் தேவைகள் எப்படி இணைந்துள்ளன என்பதை அனைத்துப் பயனீட்டாளர்களுக்கும் தெரியப்படுத்துவது, நடைமுறையில் எப்படி எதிர்கொள்வது என்பதை விளக்குவது என்பன போன்ற பணிகள் இத்தினத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உலக தண்ணீர் தினத்தில் நீரைப் பயன்படுத்தும் உழவர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஒவ்வொரு குடிமக்களும் தண்ணீர் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பேசுவது, தெரிந்து கொள்வது, மாற்றுத் திட்டங்களை வடிவமைப்பது எனச் செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இன்றைய நாளில் தண்ணீர் வழங்குவதில் – பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன? 

காலநிலை மாற்றம் என்னும் நிகழ்வினால் பருவமழைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை, பத்து நாட்களுக்குள் கொட்டித் தீர்த்துவிடுகிறது. அதனால் மழைநீர் வெள்ளமாக மாறி வெளியேறிவிடுகிறது. அதனால் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை. அதைத் தொடர்ந்து கோடைகாலங்களில் வறட்சி ஏற்படுகிறது. வெள்ளமும் வறட்சியும் ஒரே ஆண்டில் ஏற்படுகின்றன. 
உலக அளவில் அனைத்து அரசுகளுக்கும் உள்ள தலையாய கடமை மக்களுக்கான குடிநீர், உழவிற்கான நீர், தொழிற்சாலைகளுக்கான நீர் மற்றும் சூழல் தன்மையைக் காப்பாற்றுவதற்கான நீர் (வனவிலங்குகள், உயிரினங்கள், காடுகள் பாதுகாப்பு) என அனைத்துப் பிரிவினருக்கும் தேவையான நீரை வழங்குவதே ஆகும்.

மக்களுக்கான குடிநீர் மிகவும் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது. இந்திய அரசின் இன்றைய நீர்ச் சட்டத்தின்படி குடிநீருக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பல்வேறு காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேறி நகரங்களில் குடியேறுகிறார்கள். அதனால் நகரங்களின் வளர்ச்சி வெகுவேகமாக ஏற்படுகிறது. நகரங்களுக்குத் தேவையான நீரும் அதிகமாகிறது. இந்தக் கூடுதல் நீர் விவசாயத்துக்கு வழங்கப்பட்ட நீரிலிருந்து கையாள வேண்டியுள்ளது. நீர்ப் பற்றாக்குறையில் விவசாயமும் குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தியும் குறைகிறது.

மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சமுதாயத்துக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவும், தொழிற்சாலைகள் அதிகமாகி வருகின்றன. இதற்கான தண்ணீர்த் தேவையும் அதிகமாகி வருவதால் தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்குவதும் அவசியமாகிறது.

இப்படி நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கும் தண்ணீர் பயன்படுத்திய பிறகு கணிசமான அளவு கழிவுநீராக மாறுகிறது. இந்தக் கழிவுநீரை வேளாண்மைக்கோ வேறு பயன்பாட்டுக்கோ சுத்திகரிப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் இருந்தும் பெரும்பாலான வளரும் நாடுகளில் நல்ல நீரில் கழிவுநீர் கலப்பது சாதாரணமாக நடந்து வருகிறது. இதனால் தூய மழைநீர், தேங்கும் நீர் நிலைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களில் கழிவுநீர் கலந்து நன்னீரையும் மாசுபடுத்துகிறது. 

அரைகுறையாக சுத்திகரித்த அல்லது சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நல்ல நீரில் கலப்பதால் நன்னீரும் மாசுபட்டு தண்ணீர் பிரச்னையை அதிகரிக்கிறது.

நீரைப் பயன்படுத்தும் அனைத்துத் துறையினரும் ஏதோவொரு வகையில் அதிகமாகப் பயன்படுத்தி விரயமாக்கி வருகின்றனர். 

விவசாயத்துக்கும் மக்களின் வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்தும் நீர் 30 விழுக்காட்டுக்கு மேல் விரயமாகிறது.
பெரும்பாலான தாவரங்களுக்கு வேர்களில் ஈரம் இருந்தால் போதும். ஆனால், வாய்க்கால் வரப்புகளில் நீர் விடுவதால் விரயமாகிறது. அதேபோல, திருமணம் மற்றும் பல்வேறு விழாக்களில் 300 எம்எல், 500 எம்எல் குப்பிகளில் தண்ணீரை வழங்குகிறார்கள். ஆனால், பலரும் அந்த நீரை முழுமையாகக் குடிப்பதில்லை. பாதிக்கும் மேற்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நல்ல நீர் வீணாகிறது.

நல்ல நீர் மாசடைவதாலும் நகரங்களில் , வீடுகளில், தொழிற்சாலைகளுக்கும் வழங்கும் நீரில் கழிவுநீரும் கலந்து வரத் தொடங்கிய பிறகு, 65 விழுக்காடு மக்கள் இன்று பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்னும் எதிர்சவ்வூடு பரவல் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கும் நீருக்கு அடிமையாகிவிட்டோம். 

நிலத்திலிருந்து எடுக்கப்படும் இந்த நீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு 60 சதவிகிதம் வீணாகிறது. 40 சதவிகிதம் மட்டுமே குடிநீராக மாற்றப்படுகிறது.

அதேநேரத்தில் நன்னீர் வழங்குவதிலில் அரசுத் துறைகளுக்கு அப்பால் தனியார் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஏறக்குறைய ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நீர் வழங்கி வருகிறார்கள். தனியார் பங்களிப்பு அதிகமாகும்போது லாபம் பிரதானமாக இருக்கும். சேவை குறைந்துவிடும்.

கழிவுநீரை முறையாக சுத்திகரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சட்டங்கள் நிறையவே இயற்றப்பட்டுள்ளன.

சமீபகாலமாக சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. அதேபோல குடிநீருக்கு தவிர பிற பயன்பாடுகளுக்குமான நீர் நிலத்தடியிலிருந்துதான் நகராட்சிகளும், மாநகராட்சிகளும், பேரூராட்சிகளும் எடுத்து வருகின்றன. பொதுவாக நினைப்பதுபோல குடிநீர் வழங்கும் திட்டங்கள் சிறுவாணி, வீராணம், கிருஷ்ணா, அத்திக்கடவு பெரிய அளவில் தண்ணீர் வழங்கப் பயன்படுகிறது என்பதல்ல. பயன்படுத்துகின்ற சரிபாதி நீர், நிலத்திலிருந்துதான் எடுக்கப்படுகிறது.

மேற்பரப்பு நீரும், நிலத்தடி நீரும் நமது நீராதாரங்களாகப் பயன்படுகின்றன. மேற்பரப்பு நீர் மழையின் அளவைப் பொருத்து மாறும். நிலத்தடி நீர் காலங்காலமாக நிலத்துக்குக் கீழ் நீர்த்தேக்கங்களாக சேமிக்கப்பட்டதிலிருந்து பயன்படுத்தப்படுகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு நீரை எடுக்கிறோமோ அதே மாதிரி நிலநீர் செறிவூட்டல் நடைபெற வேண்டும். ஆனால் நில நீரை உறிஞ்சுவது அதிகமாக உள்ளது. நிலநீர் செறிவூட்டல் மிகவும் குறைவாக உள்ளது. எடுப்பதற்கும் சேமிப்பதற்கும் உள்ள இடைவெளி மிக அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் பலநூறு பிர்க்காக்கள் அதிகம் பயன்படுத்தியவைகளாக அரசு அறிவித்துள்ளது. 

நிலநீர் வளர்ச்சிக்காக மாநில நிலநீர் மையம், பொது்ப்பணித் துறையின் அங்கமாகவும் மத்திய நிலநீர் துறையும் இணைந்து செயலாற்றி வருகின்றனர். ஆனாலும் போதிய விழிப்புணர்வு பொது மக்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் இல்லை என்பதே நிதர்சனம்.

உலகளவில் தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது என்றாலும் ஒவ்வொரு நாடும் அதன் தன்மைக்கேற்ப நீர்ச் சட்டங்களை இயற்றி உள்ளனர். 

நீர் வழங்கல் அரசின் சேவைப் பிரிவில் இருந்து தனியார்மயமாகி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் ஏழைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், தண்ணீர் பெறுவதில் சிரமப்படுகினறனர்.

கழிவுநீர் கலந்து நல்ல நீரும் மாசடைகிறது. தமிழகத்தின் சில நீர்த்தேக்கங்கள் கழிவுநீர் தேங்கும் அணைகளாக மாறிவிட்டன. நொய்யல், ஒரத்துப்பாளையம் அணை, குடகனார் அணை, ஒசூர் கெலவரப்பள்ளி அணை என இந்த அணைகளில் மாசுபட்ட நீர் கலப்பதால் விவசாயத்துக்கும் பயன்படாமல் உள்ளது.

இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் யார். அனைத்துப் பயனீட்டாளர்களும்தான்.

குறிப்பாக விவசாயத்தில் பூச்சிகளை அழிக்கவும், களைகளை அகற்றவும், மண்வளத்தை மேம்படுத்தவும், பயன்படுத்துகின்ற ரசாயன மருந்துகள், தொழிற்சாலைக் கழிவுநீர், நகரங்களின் கழிவுநீருக்கு இணையாக மாசுபடுத்தப்படுகின்றன என்பதும் உண்மை.

இதனால் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகிறது. உணவு உற்பத்தியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. வேலைதேடி நகரங்களுக்கு மக்கள் குவியும் நிலை எப்போதுமில்லாத அளவுக்கு அதிகரிக்கிறது. தண்ணீர்ப் பங்கீடு குறித்து நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் இடையே சிக்கல் ஏற்படுகிறது. நீர்மாசடைவதால் பல நோய்களும் ஏற்படுகின்றன.

இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் அரசும், மக்களும் இணைந்து நீர் ஆதார வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதோடு மேலாண்மையும் செய்ய வேண்டும். 

நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் தயவுதாட்சண்யமின்றி அப்புறப்படுத்த வேண்டும். வரத்து வாய்க்கால், உபரி வாய்க்கால், நீர்ப்பிடிப்புப் பகுதி, நீர் தேங்கும் பகுதி அனைத்தையும் பராமரித்து தயார் நிலையில் வைக்க வேண்டும். குழாய்நீர், சொட்டுநீர், தெளிப்பு நீர்ப் பாசன முறைகளை விரிவுபடுத்த வேண்டும். 

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும், அலுவலக வளாகங்களிலும் ஏற்படுத்த வேண்டும். உலகைப் பசுமைமயமாக்க வாய்ப்புள்ள இடங்ளிலும் நேரங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரித்து தோட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். குடும்ப விழாக்களில் குப்பிகளில் தண்ணீர் வைப்பதற்குப் பதிலாக டம்ளரில் தண்ணீர் வைக்கப் பழக வேண்டும்.

இயற்கை வேளாண்மையில் 40 சதவிகிதம் தண்ணீர் சேமிக்கப்படும் என்பதால் விவசாயிகள் இயற்கை வேளாணமைக்கு மாற வேண்டும்.

நாம் நீரைச் சேமிப்பது என்பதும், பாதுகாப்பது என்பதும் நமக்காக மட்டுமல்ல, நம்முடைய சந்ததியினருக்காகவும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Exit mobile version