–மு.இராமநாதன்
உக்ரைன் போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. இப்போதைக்கு இது முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. இந்தப் போரால் பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருப்பது உக்ரைன். மேலை நாடுகள் விதித்திருக்கும் தண்டனைத் தடைகளால் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகியிருப்பது ரஷ்யா. இந்தப் போர் எல்லா நாடுகளையும் தீண்டியே தீரும் என்று டில்லி வந்திருக்கிற ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் பேசியிருக்கிறார். அப்படி ஆகிவிடுமோ என்ற அச்சம் நம்மை ஆட்கொள்கிறது!
உலகம் முழுமையும் அரசியலாலும் வணிகத்தாலும் இன்று பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லா நாடுகளும் இந்தப் போரால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்றன. இந்தப் போரில் இந்திய அரசு நடுநிலை வகிப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு ரஷ்யாவுக்குச் சாதகமானது என்கிறார் அவுஸ்திரிய அமைச்சர். அமெரிக்காவும், மேற்கு நாடுகளும், அமெரிக்க ஆதரவு இந்தியர்களும் அதையேதான் சொல்கிறார்கள்.
இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் சொல்வதற்காகத்தான் அவுஸ்திரிய அமைச்சர் டெல்லி வந்திருக்கிறார். இந்தியா இப்போது எடுத்துவரும் நிலைப்பாடு நமது திசை வழியை அடுத்துவரும் காலங்களில் தீர்மானிக்கக் கூடியவை. ஆகவே, அதன் காரணங்களையும், பின்னணியையும், பாதிப்புகளையும் விளைவுகளையும் பரிசீலிப்பது அவசியம் ஆகிறது. இந்தப் போர் பெப்ரவரி 24 அன்று தொடங்கியதாகத்தான் வரலாறு குறித்து வைக்கும். ஆனால், இதன் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில் இருக்கிறது.
போர் மூலம்
இரண்டாம் உலகப் போர் (1939-45) உண்டாக்கிய அழிவுகள் இந்த உலகத்தில் போரை எப்போதைக்குமாக நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் யாரும் அசோகர் அல்லரே! வெற்றியாளர்களுக்குப் பங்குகள் வேண்டியிருக்கின்றன. அவர்கள் உலகைத் துண்டு போட்டார்கள். அமெரிக்கா ஒரு துருவமும் சோவியத் ஒன்றியம் இன்னொரு துருவமும் ஆகின. இரண்டும் தத்தமது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கின.
1949இல் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 மேற்கு நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டது நேட்டோ (வட அட்லாந்திய ஒப்பந்த அமைப்பு -North Atlantic Treaty Organization- NATO). இது பரஸ்பரப் பாதுகாப்புக்கான இராணுவக் கூட்டணி. இதன் பிரதான நோக்கங்கள்: சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கத்தைத் தடுப்பது; ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளிடையே ஒற்றுமையை வளர்ப்பது; உறுப்பு நாடுகளை யார் (சோவியத் என்று படிக்கவும்) தாக்கினாலும் ஒன்றுபட்ட எதிர்த் தாக்குதலை மேற்கொள்வது.
நேட்டோவின் உறுப்பினர் பலம் கூடிக்கொண்டே வந்தது. 1955இல் மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்தது. தனது செல்வாக்குப் பிரதேசமான கிழக்கு ஜெர்மனியின் வாசலில் ஆபத்து வந்துவிட்டதாக நினைத்தது சோவியத் ஒன்றியம். இதுவே 1955இல் வார்சா (WARSAW)ஒப்பந்தமாக உருவெடுத்தது. இதுவும் ஒரு இராணுவக் கூட்டணி. இதில் சோவியத்துடன் கிழக்கு ஜெர்மெனி, ஹங்கேரி, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, போலந்து முதலிய அப்போதையக் கிழக்கு ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் நாடுகள் இணைந்தன. நேட்டோவைச் சர்வதேச அரங்கில் இராணுவரீதியாக நேரிட சோவியத் ஒன்றியம் உருவாக்கியதுதான் வார்சா கூட்டணி.
பனிப்போர் கூர்மையடைந்துகொண்டேவந்தது. 1979இல் சோவியத் ஒன்றியத்தின் படை ஆப்கானிஸ்தானில் நுழைந்தது. அதை ஆப்கான் முஜாகிதீன் படையினர் எதிர்த்தார்கள். அவர்களுக்கு அமெரிக்க ஆதரவு இருந்தது. இந்தப் போர் பத்தாண்டுகள் நீடித்தது. இறுதியில் தாக்குப் பிடிக்க முடியாத சோவியத், 1989இல் ஆப்கானிலிருந்து வெளியேறியது. அது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கான தொடக்கமாக அமைந்தது.
1990இல் லெஷ் வாலேசா (Lech Wałęsa) போலந்தில் தேர்தல் மூலமாகத் தெரிவானார். இது அங்கே சோவியத் ஆதரவு கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதே காலகட்டத்தில் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது, கிழக்கு ஜெர்மனி மேற்குடன் கைகோத்தது. உடன் நிகழ்வாக அது வார்சா கூட்டணியிலிருந்தும் வெளியேறியது. தொடர்ந்து ஹங்கேரி, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா முதலிய நாடுகளும் வார்சா உடன்படிக்கையிலிருந்தும் சோவியத் ஒன்றியத்தின் பிடியிலிருந்தும் வெளியேறின.
சோவியத் ஒன்றியம் பலவீனம் அடைந்தது. அதற்கு அடுத்த ஆண்டு சோவியத் ஒன்றியத்திலிருந்த 15 மாநிலங்கள் விடுபட்டுத் தனித் தனி நாடுகளாக மாறின. சோவியத் சாம்ராஜ்ஜியம் ரஷ்யாவாகச் சுருங்கியது. பனிப்போர் முடிவுக்கு வந்தது. வார்சா கூட்டணி 1991இல் முறையாகக் கலைக்கப்பட்டது.
சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகக் கட்டப்பட்டதுதான் நேட்டோ கூட்டணி. நேட்டோவிற்கு எதிராகக் கட்டப்பட்டதுதான் வார்சா கூட்டணி. சோவியத் ஒன்றியம் தகர்ந்ததும், வார்சா கூட்டணி கலைக்கப்பட்டதும், நேட்டோவிற்கு அவசியல்லாமல் போயிருக்க வேண்டும். நேட்டோ கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது அப்படி நடக்கவில்லை. மாறாக நேட்டோ விரிவாகிக்கொண்டேவந்தது. 1999இல் செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து ஆகிய முன்னாள் சோவியத் ஆதரவு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைத்துக்கொள்ளப்பட்டன. 2004இல் பல்கேரியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா முதலிய நாடுகள் இணைந்தன. அதே ஆண்டில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பங்காளிகளான பால்டிக் நாடுகள் (லிதுவேனியா, எஸ்தோனியா, லாட்வியா) நேட்டோவில் இணைந்தன. இது ரஷ்யாவிற்கு ஆத்திரம் ஊட்டியது. உச்சமாக, 2008இல் ரஷ்யாவின் அண்டை நாடும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பங்காளியுமான உக்ரைனை நேட்டோவில் இணைந்துகொள்ளுமாறு அதன் உறுப்பு நாடுகள் அழைப்பு விடுத்தன.
உக்ரைன் சோவியத் ஒன்றியக் கூட்டமைப்பில் அசௌகரியத்தோடுதான் நீடித்தது. எனினும் சோவியத்தின் தகர்ச்சிக்குப் பிறகு உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் பெரிய பிணக்கம் இல்லாமல்தான் இருந்தது. இரண்டு நாடுகளும் இனத்தால் மொழியால் நெருக்கமானவை. 2008இல் நேட்டோ உக்ரைனுக்கு நீட்டிய அழைப்பிதழ் இந்த நிலையை மாற்றியது. உக்ரைன் நேட்டோவில் இணைவதை அனுமதித்தால், அமெரிக்க, மேற்கு நாடுகளின் படைகள் ரஷ்ய எல்லையிலிருந்து சில மைல் தொலைவில் நிலை கொள்வதற்கு வழங்கும் உரிமமாக அது மாறிவிடும் என்று கருதியது ரஷ்யா. ஆகவே உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா கடுமையாக எதிர்த்துவந்தது.
மேலதிகமாக, 2014இல் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கும் முயற்சிகள் தொடங்கின. இதற்கு எதிர்வினையாக உக்ரைனின் பகுதியாக இருந்த கிரிமியாவைப் பிரித்துத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது ரஷ்யா. 2014 முதல் உக்ரைன் ஆட்சியாளர்கள் அமெரிக்க ஆதரவாளர்களாக இருந்தனர். அதாவது ரஷ்ய எதிர்ப்பாளர்களாக இருந்தனர். உக்ரைனில் ஒரு பகுதி மக்கள் ரஷ்ய மொழி பேசுகிறார்கள். உக்ரைன் மொழியும் ரஷ்ய மொழியும் நெருக்கமானவை. இவை இரண்டுமே ஆட்சி மொழிகளாக இருந்து வந்தன. 2014இல் புதிய ஆட்சியாளர்கள் உக்ரைன் மொழி மட்டுமே ஆட்சி மொழி என்று விதித்தார்கள். இது உக்ரைன் வாழ் ரஷ்ய இனத்தவருக்கும் ரஷ்யாவுக்கும் உவப்பாக இல்லை.
மேலும், உக்ரைனில் பல சிறுபான்மை இனங்கள் உள்ளன. இவர்களில் கிளர்ச்சியாளர்கள் இருக்கின்றனர். ரஷ்யா இவர்களை வெளிப்படையாக ஆதரித்து வந்தது. இதில் டொனஸ்க், லூகான்ஸ் எனும் பகுதிகளை பிப்ரவரி 21 அன்று விடுதலைப் பகுதிகளாக அறிவித்தது ரஷ்யா. இந்த நிழல் யுத்தத்தின் நீட்சிதான் பிப்ரவரி 24 அன்று நிஜ யுத்தமாக மாறிவிட்டது.
உக்ரைனில் அழிவுகள்
போருக்கான காரணங்கள் யாராகவும் இருக்கலாம், எதுவாகவும் என்னவாகவும் இருக்கலாம். ஆனால் போர் அழிவைக் கொண்டுவரும். போர் பல்லாண்டு காலத்திற்கு ஆறாத காயங்களை உண்டாக்கும். இது ரஷ்யாவுக்கும் தெரியும். எனினும் அது உக்ரைன் மீது போர் தொடுத்தது. இப்போது ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். லட்சக் கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்திருக்கிறார்கள். கடந்த ஒரு மாத காலத்தில் 953 உக்ரேனியக் குடிமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐநா சபை தெரிவிக்கிறது. உண்மையான எண்ணிக்கை 4000ஐத் தாண்டும் என்கின்றன மேற்கு ஊடகங்கள். உயிரிழந்த போர் வீரர்களின் எண்ணிக்கை தனி. உக்ரைனில் விமான நிலையங்கள், அணுமின் நிலையங்கள் முதலான உள்கட்டமைப்புகளும் ரஷ்யத் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.
ரஷ்யா மூன்று திசைகளிலிருந்து உக்ரைனைத் தாக்கிவருகிறது. ரஷ்யா எதிர்பார்த்ததைவிட உக்ரைன் சக்தியோடு எதிர்த்துப் போராடிவருகிறது. அதேசமயம், ரஷ்யா உக்ரேனிய நகரங்களை தரை மட்டமாக்கும் நோக்கத்தோடு தாக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் முன்னேற்றம் மிதமாகவே இருக்கிறது. போருக்குப் பிறகு நகரங்களைக் கட்டியமைப்பது பெரும் சிரமமாக ஆகிவிடக்கூடாது என்பது ரஷ்யாவின் நோக்கமாக இருக்கலாம்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் நேட்டோ படைகள் உதவிக்கு வரும் என்று உக்ரைன் எதிர்பார்த்தது. ஆனால், அது அப்படி நடக்கவில்லை. எனினும், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகின்றன. அவை கடந்த ஒரு மாதத்தில் உக்ரைனுக்கு வழங்கியிருக்கும் ஆயுதங்களின் மதிப்பு ஒரு பில்லியன் டாலர் (ரூ.7000 கோடி) இருக்கும் என்கிறார்கள். அமெரிக்கா 6.5 பில்லியன் டொலர் மதிப்பில் ஆயுதங்களும், 13 பில்லியன் டொலர் மதிப்பில் உதவிகளும் வழங்க முன்வந்திருக்கிறது.
ரஷ்யாவுக்குப் பாதிப்புகள்
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. ரஷ்யாவிலிருந்து எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறது பிரிட்டன். ஐரோப்பிய ஒன்றியமும் அவ்விதமே குறைக்கப் போகிறது. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் பல ரஷ்ய வங்கிகள் தடைசெய்யப்பட்டுவருகின்றன. ரஷ்ய விமானங்களுக்கும் அனுமதி இல்லை. இவையெல்லாம் ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கணிசமாகப் பாதிக்கும்.
சமாதானம்
ரஷ்யா இந்தப் போரை நிறுத்துவதற்காக முன்வைத்த நிபந்தனைகளுள் மூன்று முக்கியமானவை: முதலாவதாக, உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது. இரண்டாவதாக, கிரிமீயா ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். டொனஸ்க், லூகான்ஸ் பகுதிகள் தனி நாடுகளாக ஏற்கப்பட வேண்டும். மூன்றாவதாக, உக்ரைனிலிருந்து ராணுவம் அகற்றப்பட வேண்டும். இவற்றுள் முதல் இரண்டு நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக்கொண்டுவிட்டது. மூன்றாவது நிபந்தனை சிக்கலானது. உக்ரைன் ரஷ்யாவின் அண்டை நாடாக இருப்பதால் அது ஒரு பாதுகாப்பு மண்டலமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறது ரஷ்யா.
ரஷ்யாவை அச்சுறுத்த உக்ரைன் பூமியை மேலை நாடுகள் பயன்படுத்திவருவதே ரஷ்யாவின் பிரச்சினை. சுவீடன், பின்லாந்து, அவுஸ்திரியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்தபோதும் நோட்டோவில் இணையவில்லை. அவை நடுநிலை நாடுகள் என்றழைக்கப்படுகின்றன. அவை தமது நாட்டின் மீது போர் தொடுக்கக் கூடாது என்று எல்லா அண்டை நாடுகளுடனும் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கின்றன. இப்படியான ஒரு நடுநிலை நாடாக உக்ரைன் மாற வேண்டும் என்கிறது ரஷ்யா. இதற்கு உக்ரைன் ஆட்சியாளர்களும் மேலை நாடுகளும் சம்மதிப்பார்களா என்பது சந்தேகம்.
தற்சமயம் உக்ரைனின் மேற்கே அமைந்துள்ள போலந்து, ஹங்கேரி, பால்டிக் நாடுகளிலும், தெற்கே அமைந்துள்ள ருமேனியாவிலும் நேட்டோ படைகள் நிலைகொண்டுள்ளன. அண்டை நாடான உக்ரைனிலும் நேட்டோ படைகள் காலூன்றுவதை ரஷ்யா எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது.
உக்ரைன் அதிபர் ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார். ரஷ்யாவின் முதல் இரண்டு நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் சொல்கிறார். இது பேச்சுவார்த்தைக்கான நல்ல தொடக்கமாக அமையும். அதேசமயம், மறுபுறம் கடைசி உக்ரைன் குடிமகன் உயிர் தரித்திருக்கும் வரை போராடுவோம் என்றும் பேசிவருகிறார். அமெரிக்க- ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு கொம்பு சீவிவிடுவதும் தொடர்கிறது. எல்லாமாக இந்தப் போர் இன்னும் சில காலம் நீடிக்கும் என்று தெரிகிறது. இந்தச் சூழலில் இந்தியாவிற்கு நேரும் பாதிப்புகளும் இந்தியாவின் நிலைப்பாடும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தியாவில் பாதிப்புகள்
இந்தியா ரஷ்யாவோடும் உக்ரைனோடும் மேற்கொண்டுவரும் வணிகப் பரிமாற்றம் அளவில் சிறியது. இவ்விரண்டு நாடுகளும் இந்தியாவிற்குக் கணிசமாக மருந்துப் பொருட்களும் சூரிய காந்தி எண்ணெயும் ஏற்றுமதிசெய்கின்றன. இது பாதிக்கப்படும். இதைத் தவிர பிற பொருட்களின் வரத்து குறைவதால் இந்தியாவிற்குப் பெரிய பாதிப்பு இராது. எனினும் இந்தப் போரால் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 120 டாலராக உயர்ந்துவிட்டது. இதன் பாதிப்பு ஏற்கனவே நமது சந்தையில் காணக் கிடைக்கிறது. இது இன்னும் தீவிரமாகும்.
மேலும், இந்தியா ரஷ்யாவிலிருந்து கணிசமான ஆயுதங்களையும் அது சார்ந்த தொழில்நுட்பத்தையும் வாங்கிவருகிறது. அதனால் ரஷ்யாவுடனான உறவில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. மேலதிகமாக இந்திய-சீன உறவு மிகவும் சிக்கலாக மாறியிருக்கும் சூழலில், சீனாவின் நண்பனான ரஷ்யாவோடு நட்பு பாராட்டவே இந்தியா விழைகிறது.
இந்தியாவின் நிலைப்பாடு
ரஷ்யாவுக்கு எதிராக ஐநா மன்றத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இந்தியா நடுநிலை விகிப்பதாக அறிவித்தது; வாக்கெடுப்பைப் புறக்கணித்தது. பிரச்சினையை இரு நாடுகளும் சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும், அதற்கு இது போன்ற கண்டனத் தீர்மானம் உதவாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அதோடு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை மென்மையாகக் கண்டிப்பதாக மட்டும் கூறி நிறுத்திக்கொண்டது. ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு உள்நாட்டில் பல எதிர்க்கட்சிகளும் அறிவாளர்களும் ஆதரவாகவே இருந்தனர். எனினும் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்துவருவதால் அதை இந்தியா இன்னும் வன்மையாகக் கண்டித்திருக்க வேண்டும், அதுவே இந்தியாவைத் தார்மீகரீதியாக உயர்ந்த நிலையில் நிறுத்தும் என்கிற கருத்தைப் பல நோக்கர்கள் சொல்லிவருகின்றனர்.
மறுபுறம், இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்புடையதாக இல்லை. நாற்கரம் (Quad) என்கிற அமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் முதல் மூன்று நாடுகள் ரஷ்யாவை எதிர்க்கின்றன. ஆகவே இந்தியா தனது நடுவுநிலைமையைப் பரிசீலிக்க வேண்டும் என்று பைடன் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் சொல்வதற்காகவே அவுஸ்திரிய வெளியுறவு அமைச்சர் டெல்லிக்கு வருகை தந்திருக்கிறார்.
திசைவழி
உக்ரைன் அதிபரின் நேட்டோவில் சேர மாட்டோம் என்கிற அறிவிப்பு ஒரு வெளிச்சக் கீற்றாக வந்திருக்கிறது. கிரிமீயாவை அங்கீகரிப்போம் என்பதும் நல்ல முடிவுதான். ஆனால், ரஷ்யாவைப் போன்ற இனத்தால், மொழியால் நெருக்கமான, பலம் பொருந்திய ஒரு அண்டை நாட்டை, மேலை நாடுகளின் ஆதரவை நம்பிப் பகைத்துக்கொள்வது உசிதமல்ல என்பதை உக்ரைன் உணர வேண்டும். ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாடோ நேட்டோவிற்கு ஆதரவான நிலைப்பாடோ எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ரஷ்யாவும் மேற்கு நாடுகளும் உக்ரைனை ஒரு சமாதான மண்டலமாக அறிவிக்க வேண்டும். இது இந்தப் பகுதியில் பதற்றத்தைக் குறைக்கும், நீண்ட காலத் தீர்வாக அமையும், இந்தப் போரையும் முடிவுக்குக் கொண்டுவரும். இந்தியா, தான் எடுத்திருக்கும் நடுநிலைக்கான காரணங்களை உலக அரங்கில் உரக்கச் சொல்ல வேண்டும். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போக்கை எதிர்க்கவும் வேண்டும்.