-கலாநிதி எம்.கணேசமூர்த்தி
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் இறுக்கமடைந்து செல்வதை பொதுமக்களால் உணரக் கூடியதாக உள்ளது. தொடர்ந்து கொண்டே செல்லும் பெற்றோல் டீசல் மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு அவற்றைப் பெற்றுக்கொள்ள இரவு பகலாக நீண்டு கொண்டே செல்லும் மக்களின் வரிசைகள் என சிக்கல்கள் நீள்கின்றன.
வரிசைகளில் நின்ற முதியவர்கள் சிலர் மயங்கி விழுந்து இறந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் மின்வெட்டு நேரங்கள், சட்டபூர்வமாக நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புடன் சட்டரீதியற்ற விதத்தில் சில குடும்பங்கள் அருகில் உள்ள தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்கச் சென்றமை போன்ற சம்பவங்கள் பிரச்சினையின் தீவிரம் மேலும் அதிகரித்துச் செல்வதை உணர்த்துகின்றன.
இந்நிலையில் கடந்த வெள்ளி நள்ளிரவிலிருந்து சகல பெற்றோல் வகைகளினதும் விலைகளை 49ரூபாவினால் அதிகரித்துள்ளதாக IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 300ரூபாவைக் கடந்துள்ளது.
இது இலங்கையில் கடந்த ஆண்டு நிலவிய 117ரூபா விலையுடன் ஒப்பிடுகையில் 160சதவீத அதிகரிப்பாகும். ஆயிரம் ரூபாவுக்கு சுமார் 8.5லீற்றர் பெற்றோலை வாங்கிய ஒருவர் இப்போது அதே ஆயிரம் ரூபாவில் வெறும் 3.3லீற்றர் மாத்திரமே வாங்க முடியும். ஆயிரம் ரூபா மிக விரைவாக செல்லாக்காசாகி வருகிறது என்பது இதன் கருத்தாகும்.
விலைகள் அதிகரித்துச் செல்லும் அதேவேளை எரிபொருள் போன்றவற்றிற்குத் தட்டுப்பாடு நீங்கவில்லை. துறைசார்ந்த அமைச்சர்கள் அதோ கப்பல் வருகிறது அடுத்தவாரம் பிரச்சினை தீரும் என்று பல வாரங்களாக அறிக்கை விடுகின்றனர். ஆனால் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. நீரேந்து பகுதிகளில் மழை கிடைக்காத காரணத்தால் மின் வெட்டு நேரம் 10மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படலாம் என பயமுறுத்துகின்றனர்.
வழமையாகவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை குறைவு என்பது பாடசாலை மாணவருக்கும் நன்கு தெரியும். நாட்டில் அதிகரித்துச் செல்லும் மின்தேவையைக் கருத்திற்கொண்டு அதற்கேற்ப மாற்றுவழிகளைக் கையாண்டிருக்க வேண்டாமா? ஆண்டு முழுவதும் சூரிய ஒளியைப்பெறும் இந்த நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக சூரியசக்திக் கட்டமைப்புகளை அரசாங்கம் வழங்கினாலும் நாட்டிற்கு அது நட்டமில்லை.
இலங்கையில் வாழும் ஒரு சராசரிக் குடும்பத்திற்கு சூரிய சக்தி கட்டமைப்புகளை கொள்வனவு செய்யும் நிதி வல்லமை இல்லை. ஏற்கெனவே நாளாந்த மின்வெட்டுகளால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் விரக்தி நிலையும் ஆட்சி மீதான வெறுப்பும் தொடர்ந்து அதிகரித்துச் செல்வதைக் காணமுடிகிறது.
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தற்போதைய நெருக்கடிக்கு கோவிட் தொற்று ஏற்படுத்திய பிரச்சினை தான் காரணம். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் இதற்கு காரணம். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் பொருள்விலை அதிகரிப்புகள் தான் காரணம்.
முன்னைய அரசாங்கம் பெற்ற கடன்கள் தான் காரணம் என பல்வேறு காரணங்களைச் கூறி நிலைமையைச் சமாளிக்க முனைந்தாலும் அவை பொதுமக்கள் மத்தியில் எடுபட்டதாகத் தெரியவில்லை. தகவல் தொடர்பாடல் வசதிகளும் சமூக ஊடகங்களும் செல்வாக்குச் செலுத்தும் புறச்சூழலில் மக்களுக்கு கிடைக்கும் தகவல்கள் அதிகம்.
அத்தகவல்களின் உண்மைத்தன்மை பற்றி சிந்திக்கும் அளவுக்கு பொது அறிவுடையவர்களாக எல்லோரும் இருப்பதில்லை.
அண்மைக்காலமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக தமிழ்மொழி மூலம் வெளிவந்த இலத்திரனியல், அச்சு மற்றும் காட்சியூடாக வெளியீடுகளை நோக்குமிடத்து ஒவ்வொரு ஊடகமும் தமது இஷ்டப்படி கதைகளை அவிழ்த்து விடுவதை காணமுடிகிறது.
குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் முகப்புத்தகப் பதிவாளர்கள் ஒவ்வொருவரும் இலங்கைப் பொருளாதாரத்தின் சிறப்பு ஆய்வாளர்களாக நினைத்துக்கொண்டு கருத்துகளைக் கக்குகிறார்கள். அதே போலவே உலகப் பிரசித்தி பெற்ற ஊடகங்களும் தமது பார்வையை இலங்கையின் தற்போதைய நொருக்கடியின் பால் திருப்பியுள்ளன.
ஆகவே உண்மையும் பொய்யும் கலந்து இலங்கை தொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. ஆனால் உத்தியோகபூர்வமாக பொறுப்புவாய்ந்த அரசாங்கம் மக்களுக்கு நாட்டின் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் முடிவுகள் ஒரு பேச்சாளர் மூலமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது உதவும் நோக்குடன் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நட்பு நாடுகளின் உதவி இன்றைய சூழ்நிலையில் இலங்கைக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அதேவேளை இந்த நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கைகள் பற்றிய தகவல்கள் மக்கள் பிரதிநிதிகளின் மன்றமாகிய பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
அண்மையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்னாள் பிரதம மந்திரியும் நீண்டகால அனுபவமுள்ள அரசியல்வாதியுமான ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துகள் பற்றியும் அரசாங்கம் கவனத்திற்கொள்வது நல்லது. தனியன் யானை ஒன்று வந்துள்ளது முன்னைய ஆட்சியின் போது பொருளாதார வளர்ச்சி சீரழிந்தது போன்ற எகத்தாளங்கள் நிதி அமைச்சராலும் மத்திய வங்கி ஆளுனராலும் வெளிப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் வாயை அடைத்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மக்களை ஆசுவாசப்படுத்த வேண்டிய தேவையை முன்னிலைப்படுத்தினார் ரணில்.
–தினகரன் வாரமஞ்சரி
2022.03.27