Site icon சக்கரம்

தவிலுக்கு ஒரு சரியாசனம் தந்த ஷண்முகசுந்தரம் பிள்ளை

-லலிதா ராம்

 

ண்பருடன் ஒரு நாகஸ்வர கச்சேரிக்குச் சென்றிருந்தேன். வாசித்த கலைஞர்களின் திறமைக்கு குறைவேயில்லை. இருந்தாலும் அந்தக் கச்சேரியை ரசிப்பது சிரமமாகயிருந்தது.

கச்சேரியில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை தவில் வித்வான் தனது சிஷ்யனை ஏவி தனக்கு வைக்கப்பட்ட மைக்கின் ஒலியளவை ஏற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். தவிலின் ஒலியளவு ஏற அதற்கு ஏற்றவாறு நாகஸ்வரத்தின் ஒலியை ஏற்றாவிட்டால் தார ஸ்தாயி சஞ்சாரங்கள் கூட சன்னமாய்க் கேட்கும் அபாயத்தை உணர்ந்து தனது ஒலியளவை ஏற்றச் சொன்னார் நாகஸ்வர வித்வான்.

நாகஸ்வரம் வெளியில் கேட்டதும் தவில் வித்வான் மீண்டும் சிஷ்யனை ஏவினார். இப்படி மாறி மாறி ஏற்றியதில் – ஒரு கட்டத்தில் அத்தனை விசைகளையும் உச்ச அளவில் வைத்துவிட்டு கேண்டீனுக்குச் சென்றுவிட்டார் சபாவின் ஒலியமைப்பாளர்.

அந்த சிறிய கூடத்தில் சத்தம் மண்டையைப் பிளக்க, நானும் நண்பரும் கேண்டீனுக்கு நகர்ந்தோம்.

கள்ளிச் சொட்டுக் காப்பியை உறிஞ்சியபடி நண்பர் சொன்னார். “தவில் எப்படி உருவாச்சுனு ஒரு செவிவழிக் கதையுண்டு. ராமாயண யுத்தத்தின்போது வெவ்வேற விதமா கும்பகர்ணனை எழுப்பினாங்களாம். வாசிச்சா ஊருக்கே கேட்கறா மாதிரியான வாத்தியத்தை அவன் காதுகிட்ட கொண்டு போய் அடிச்சா முழுச்சிப்பான்னு செஞ்ச வாத்யமாம் தவில். இப்ப வாசிக்கற தவில் வித்வானுக்கு வைத்தீஸ்வரன் கோயில்ல நாடி பார்க்கணும். பூர்வ ஜென்மத்துல அவர் பிறந்த ஊர் இலங்கை. கும்பகர்ணனை எழுப்ப தவில் வாசிச்சது அவர்தான்னு நாடி சொல்லும்.”

அவர் இப்படிச் சொன்னதும், அவர் சொன்ன கதையின் நம்பகத்தன்மையை ஆராயவோ, அல்லது அதை ஒட்டி அவர் செய்த நக்கலை ரசிக்கவோ மனம் செல்லவில்லை. இலங்கையில் உருவான ஓர் உன்னத தவில் வித்வானைப் பற்றி மனத்தில் அலையடித்தது.

இந்த வருடம் நூற்றாண்டு காணும் வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதான் அந்தக் கலைஞர். ”இலங்கையில் ஏது வலங்கைமான்?” என்று கேள்வி எழலாம். அவரைப் பற்றி தமிழிசைச் சங்க மலரில் வெளியாகியிருக்கும் குறிப்பு, அவர் பிறந்தது திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள சேகல் மடப்புரத்தில் என்றும், அவருடைய ஐந்தாவது வயதில் குடும்பம் இலங்கைக்குக் குடிபெயர்ந்துவிட்டது என்றும் கூறுகிறது.

தவிலின் ஆரம்பப் பாடங்களைத் தந்தையிடமும், அதன்பின் இணுவில் சின்னத்தம்பி பிள்ளையிடமும், இராஜகோபால பிள்ளையிடமும் யாழ்ப்பாணத்தில் பயின்றார் ஷண்முகசுந்தரம். சிறப்புத் தேர்ச்சிக்காக பின்னாளில் தவில்மேதை நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளையிடம் குருகுலவாசம் செய்த போதும், அவர் கச்சேரி வாசிக்க ஆரம்பித்த நாட்களில் ‘யாழ்ப்பாணம் ஷண்முகசுந்தரம்’ என்றே அறியப்பட்டிருக்கிறார்.

குருகுலவாசம் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்று நல்லபடியாய்த் தொழில் செய்துகொண்டிருந்த போதும் அவர் மனமெல்லாம் தஞ்சை ஜில்லாவும், அங்கு நடக்கும் கச்சேரிகளும் நிரம்பியிருந்தன. அதனால் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள வலங்கைமானுக்குக் குடிபெயர்ந்தார். சில காலங்களில் அது அவருடைய நிரந்தர இடமாகியது. நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளை வரிசையில் தவில் உலகில் முதன்மைக் கலைஞர் என்ற ஸ்தானம் அவருக்குக் கிடைத்த போது அவர் ‘வலங்கைமான்’ ஷண்முகசுந்தரமாக மாறி இருந்தார்.

அவர் வாசிப்பை நான் முதன் முதலில் மேண்டலின் ஸ்ரீநிவாஸின் இசைப் பதிவுகளில் கேட்டேன். மேண்டலினின் தொனிக்கு அத்தனை பாந்தமாய்ப் பொருந்தியிருந்தது அந்தத் தவில். 1994-ல் அவர் மறைந்த போது ஷண்முகா இதழில் அவர் மேண்டலினுக்கு வாசித்ததைப் பற்றி ஒரு குறிப்பு வெளியாகியுள்ளது. மேண்டலின் கச்சேரிக்குத் தலைமை தாங்கச் சென்ற ஷண்முகசுந்தரம் பிள்ளை, “இது போன்ற திறமைசாலிக்கு பெரிய பக்கவாத்தியங்கள் முன்வந்து வாசித்து முன்னேற்றிவிட வெண்டும்,” என்று கூறியுள்ளார். அப்போது கூட்டத்திலிருந்து யாரோ எழுந்து, “அப்படியெனில் நீங்களல்லவா முதலில் வாசிக்க வெண்டும்,” என்று கூறியிருக்கிறார். அதில் இருந்த நியாயத்தை உணர்ந்து அந்தக் கச்சேரியிலேயே மேண்டலினுக்கு வாசித்துள்ளார். 1985-க்குள் ஸ்ரீநிவாஸனுக்கு மட்டும் 100 கச்சேரிகளுக்கு மேல் வாசித்து ‘செஞ்சுரி’ அடித்துள்ளதாகக் கூறுகிறது அந்தக் குறிப்பு.

1990-களில் சிறு விழாக்களில் அல்லது திருமண விடியோ பதிவுகளில் மங்கல இசையாக மேண்டலின் இடம்பிடித்ததைக் காணலாம். மேண்டலினின் இனிமையான நாதமும், விறுவிறுப்பும் இதற்குக் காரணங்கள் என்றாலும், வலங்கைமானாரின் வாசிப்பு சேர்த்த கம்பீரத்துக்கும் குளுமைக்கும் அந்தப் பதிவுகளை மங்கல வாத்தியமாக்கியதில் சமபங்கு உண்டு.

இதைச் சொல்லும் போது தவில் வாசிப்பைக் குறிப்பிடும் இடத்தில் குளுமை என்ற சொல் எத்தனை கலைஞர்களின் வாசிப்புக்குப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்க்க வெண்டும். அதிலும் கம்பீரத்தை விட்டுவிடாத குளுமை. அந்த அபூர்வ கலவையே அவரை தனித்துக் காட்டியது.

நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளையின் இன்னொரு சீடரும், இன்றைய முன்னணி வித்வான்களில் ஒருவருமான தஞ்சாவூர் கோவிந்தராஜன், “தவிலில் ‘தா’ என்கிற சொல்லுக்குச் சொந்தக்காரர் என்று பெயர் வாங்கியவர் ராகவப் பிள்ளை. அவருக்குப் பின் அந்தச் சொல் ஷண்முகசுந்தரம் அவர்களுக்குத்தான் அமைந்தது. தவில் வாசிப்பது என்பது தாளத்துக்கு சரியாக வரும் கணக்கு வழக்குகள் மட்டுமல்ல. நாகஸ்வரக்காரருக்கு, அவர் இசைக்கும் பாட்டுக்கு, உடன் வாசிக்கும் தவில் கலைஞரின் திறனுக்கு ஏற்றாற்போல் வாசித்தால்தான் பரிமளிக்கும். எங்கள் தலைமுறை வித்வான்கள் அதை ஷண்முகசுந்தரம் பிள்ளையின் வாசிப்பைத் தேடித் தேடிச் சென்று கேட்டுத் தெரிந்து கொண்டோம்,” என்கிறார்.

கோவிந்தராஜன் சொல்வதன் முழுவீச்சை உணர இந்த உதாரணம் உதவும். இணையத்தில் நாகஸ்வர வித்வான் ஆண்டான்கோயில் செல்வரத்தினம் வாசித்திருக்கும் சங்கராபரணம் ராகத்தின் பதிவு உள்ளது. அந்த ஆலாபனையில் ஒலிக்கும் தவில் ஒரு நல்ல வாய்ப்பாட்டுக் கச்சேரியில் தேர்ந்த வயலின் வித்வானின் பங்களிப்பை ஒத்து இருப்பதை உணரலாம். வழக்கமாக ராக ஆலாபனையில் நாகஸ்வர வித்வான் ஒரு பகுதியை முடிக்கும் போது தவிலில் சில உருட்டுச் சொற்கள் வாசித்து ஒரு தீர்மானம் வைப்பதைக் கேட்க முடியும். இந்தப் பதிவில் அதற்கும் ஒரு படிக்கு மேல் சென்று நாகஸ்வரத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே சதுஸ்ரத்தில் அழகழகாய், விதவிதமாய் கோவைகளை பன்னீர் தெளித்தது போல வாசித்துள்ளது மொத்த அனுபவத்தை வேறு தளத்துக்கு நகர்த்தியுள்ளது.

ராகத்துக்கு வாசிப்பது என்பது ஷண்முகசுந்தரம் பிள்ளையின் சிறப்பு அம்சம் என்று எனக்குச் சொன்னவர் சங்கீத கலாநிதி ஷேக் சின்ன மௌலானாவின் பேரன், நாகஸ்வர வித்வான் காசிம்தான். அவர் கூறிய வேறு சில விஷயங்களிலும் ஷண்முகசுந்தரம் பிள்ளையின் அணுகுமுயை உணர உதவும்.

“என் தாத்தாவும் வலங்கைமான் தாத்தாவும் 33 வருடங்கள் தொடர்ந்து ஒன்றாக கச்சேரி வாசித்துள்ளனர். ரேடியோவில் தாத்தாவின் கச்சேரி என்றால் தவில் யாரென்று கேட்கவே வேண்டாம். அது வலங்கைமான் தாத்தாவாக மட்டும்தான் இருக்கும். நான் பார்த்த வரையில் ‘என்ன வாசிக்கப் போகிறீர்கள்?’ என்றோ, ‘எந்தத் தாளத்தில் தனி வாசிக்க வெண்டும்?’ என்றோ, ‘எவ்வளவு நேரம் தனி வாசிக்க வேண்டும்?” என்றோ அவர் என் தாத்தாவைக் கேட்டதேயில்லை. மூன்று மணி நேரக் கச்சேரிக்கு எப்படி வாசிக்க வெண்டும். அரை மணி நேர தொலைக்காட்சிக்கு எப்படி வாசிக்க வேண்டும். இரண்டு மணி நேரம் வாசித்தாலும், இரண்டரை நிமிடங்கள் வாசித்தாலும் உடன்வாசிப்பவர் சாதாரண தவில் வித்வான் என்றாலும் கூட அவர் குறை வெளியில் தெரியாமல் கச்சேரி சிறப்பாக அமைந்தது என்று நினைக்கும்படி எப்படி வாசிக்க வேண்டும் என்று அவரைப் போல உணர்ந்து வாசித்த வேறொருவரை நான் கண்டதில்லை.

தாத்தாவின் உடல்மொழியைப் பார்த்தே எப்படி வாசிக்க வெண்டும் என்று அவருக்குப் புரிந்துவிடும். ஒருமுறை சென்னை கந்தசாமி கோயிலில் புறப்பாட்டிற்கு தாத்தாவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. பல ஊர்களுக்குச் சென்று அடுத்தடுத்து கச்சேரி செய்துவிட்டு சென்னைக்கு வர நேர்ந்தது. அதனால் சற்று தளர்ந்திருந்தார். அன்று தோடி ராகத்தைப் பிரதானமாக எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அவர் வாசிப்பில் அந்தத் தளர்ச்சி தெரிந்தது. அதை உணர்ந்த வலங்கைமான் தாத்தா, அனல் பறக்கும் ஃபரன்களாக சில நிமிடங்களுக்கு வாசித்து ஒரு மோராவை வாசித்தார். அவர் முடித்த போது மொத்த சூழலே மாறிவிட்டது. தாத்தாவுக்கு இருந்த களைப்பெல்லாம் போன இடமே தெரியவில்லை. அதற்குப் பின் வாசித்த தோடியை வாழ்நாளில் மறக்க முடியாது,” என்கிறார் காசிம்.

ஷண்முகசுந்தரம் பிள்ளையைப் பற்றி பலர் சொல்லும் விஷயம் ஒன்று உண்டு. பெரிய ஜாம்பவான்களுக்கு வாசித்தாலும், தன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மிகக் குறைந்தவர்களுக்கு வாசித்தாலும் அவருடைய அணுகுமுறை ஒரே மாதிரிதான் இருக்கும். சிறியவர்கள் என்பதற்காக தன்னை அவர் ஒருநாளும் முதன்மைப் படுத்திக் கொண்டதில்லை. வெளியிலிருந்து கச்சேரி பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் தன் வாசிப்பின் மூலம் அனுபவத்தில் குறைவானவர்களை இன்னும் சில நிலைகள் உயர்த்தி வாசிக்கச் செய்தார் என்பதைப் பலர் கூறியுள்ளனர்.

உதாரணமாக வயலின் கலைஞர் குமரேஷ், “நாங்கள் வளர்ந்து வந்த காலத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியோடு பல கச்சேரிகள் வாசித்திருக்கிறார். ஒரு கச்சேரி அவர் ஊரில் அவரே ஏற்பாடு செய்து எங்களை அழைத்திருந்தார். நகர சபைகளில் வாசிப்பது போலவே வலங்கைமான் கிராமத்திலும் வாசிக்க வேண்டுமா என்று நாங்கள் யோசிப்பதை உணர்ந்து, “இங்க வாசிக்காத பெரிய நாயனக்காரங்களே இல்லை. இங்க வந்திருக்கறவங்க எல்லாம் அவங்களைக் கேட்டு வளர்ந்தவங்க. கேதாரகௌளை ராகத்தை நல்லா விஸ்தாரமா வாசிங்க தம்பி,” என்று வழிகாட்டினார். அன்று நாங்கள் வாசித்த ராகத்தை அந்த கிராமத்தில் வெகுவாக ரசித்தார்கள். இள வயதில் எங்களுக்கு அது ஒரு பாடமாகவும் அமைந்தது. அவர் பங்கு பெற்ற கச்சேரிகளில் அவர் பக்கவாத்யம் வாசித்தார் என்று சொல்வதைவிட பீஷ்மர் போல கச்சேரியை வழிநடத்தினார் என்று சொல்வதே சரியாக இருக்கும்,” என்கிறார்.

இன்று தவில் என்பது நாகஸ்வரத்துடன் வாசிக்கக் கூடிய துணைக் கருவி என்ற நிலையில்லை. தவிலுடன் சேர்ந்து வாசிக்காத வாத்யங்களே இல்லை எனலாம். வாய்ப்பாட்டுக் கச்சேரிகளில் கூட தவில் பக்கவாத்யமாய் இடம்பெறும் நிகழ்ச்சிகளும் அவ்வப்போது காணக் கிடைக்கின்றன. தவில் கலைஞர் கச்சேரியின் நாயகனாய் அமர்ந்து வழிநடத்தும் கச்சேரிகளும் உலகின் பல இடங்களில் இன்று சாதாரணமாய் நடப்பவையே. இந்த மாற்றத்துக்கான முதல்படியை எடுத்து வைத்தது வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதான். எல்.வைத்தியநாதன், எல்.சுப்ரமண்யம், எல்.சங்கர் சகோதரர்களுக்கு வாசிப்பதில் தொடங்கி, மாலியின் குழலுக்கு, ஸ்ரீநிவாஸின் மாண்டலினுக்கு, கணேஷ்-குமரேஷ் சகோதரர்களின் வயலினிசைக்கு என்று அவர் வாசித்த கச்சேரிகள் ஏராளம். எண்பதுகளில் ஒரு கட்டத்தில் அவர் நாகஸ்வரத்துக்கு வாசிப்பதே அரிது என்ற நிலை கூட இருந்துள்ளது.

முதன்மைக் கலைஞராகவும் புதிய தடங்களை அமைத்தவராகவும் இருந்த ஷண்முகசுந்தரம் பிள்ளைக்கு பல அங்கீகாரங்களும் பட்டங்களும் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை. 1985-ல் மத்திய அரசு அளிக்கும் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். அந்த கௌரவத்தைப் பெற்ற முதல் தவில் கலைஞர் அவர்தான். புகழின் உச்சியில் இருந்த போதும் எந்தக் கச்சேரியிலும் தன்னை முன்னிருத்துக் கொள்ள அவர் முயன்றதில்லை. தனக்குத் தெரிந்த அனைத்தையும் வாசிப்பில் கொட்டிவிட வேண்டும் என்று அவசியமில்லை என்பதில் ஸ்திரமாக இருந்துள்ளார். லயத்தில் ஆழ்ந்த தேர்ச்சியைப் பெற்றிருந்த சீதாராம பிள்ளையிடம் அதிகம் வழக்கில் இல்லாத 108 தாளங்கள் உட்பட பல நுணுக்கங்களில் சிறப்பான தேர்ச்சியைப் பெற்றவர் என்றாலும், “சாகஸத்துக்காக மற்ற நடைகளையோ, அரிய தாளங்களையோ பிரஸ்தாபிப்பதை விட கச்சேரியைப் பரிமளிக்க வைக்க என்ன தேவையோ அதைத்தான் வாசிக்க வேண்டும். நெருடலான விஷயங்களை அவ்வப்போது தொட்டுக் காட்டலாமேயின்றி அவற்றுக்கே பிரதான இடம் அளிப்பதில் எனக்கு ஒப்புதலில்லை,” என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

உயரங்களைத் தொட்ட போதும் சக கலைஞர்களை அவர் மதிக்கத் தவறியதில்லை. அதே வேளையில் தன்மானத்தைக் காத்துக் கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடன் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பைப் பெற்ற திருப்பூரைச் சேர்ந்த இசை ஆர்வலர் வி.கோ.செந்தில்குமார் நினைவுகூரும் நிகழ்ச்சியை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

“தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் கலைஞரை அச்சு அசலாகப் பிரதியெடுத்துக் காண்பித்ததற்காக நடிகர் பாலய்யா இன்றும் பேசப்படுகிறார். அவர் அப்படி நடிக்க முன்மாதிரியாகக் கொண்டது வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளையைத்தான். பாலய்யா இந்த விஷயத்தை ஷண்முகசுந்தரம் பிள்ளையிடம் கூறியபோது, எல்லாம் சரிதான். நான் எப்ப கக்கத்துல துண்டையிடுக்கிட்டு நாயனக்காரர்கிட்ட கையைக் கட்டி நின்னு இருக்கேன், என்று கேட்டாராம். இதை அவர் என்னிடம் நேரில் சொல்லியிருக்கிறார்,” என்கிறார்.

அழகுணர்ச்சியைக் கெடுக்காமல் வாசித்த போதும் தன் இருப்பை மனத்தில் பதியும்படி வாசித்த ஷண்முகசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை நினைக்கும் போதும் இன்னொரு கச்சேரிப் பதிவு நினைவுக்கு வருகிறது.

சங்கீத கலாநிதி மதுரை டி.என்.சேஷகோபாலனும் நாகஸ்வர வித்வான் மாம்பலம் சிவாவும் சேர்ந்து செய்த கச்சேரியின் பதிவு இணையத்தில் கிடைக்கிறது. லயத்துணைக்கு தவிலில் ஷண்முகசுந்தரம் பிள்ளையும், மிருதங்கத்தில் பெங்களூர் பிரவீனும் சேர்ந்துள்ளனர்.

கச்சேரியில் அவர்கள் வாசித்தது இருக்கட்டும். வாய்ப்பாட்டுக் கச்சேரியில் ஒலிப்பெருக்கியை தவிலுக்கு வைத்தால் பாடுவது எடுபடாமல் போய்விடும் என்பதற்காக ஒலிப்பெருக்கியே வைத்துக் கொள்ளாமல் அவர் வாசித்திருக்கும் காட்சியை இன்னொருமுறை மனத்தில் ஓட்டிப் பார்க்கிறேன்.

நாங்கள் அமர்ந்திருந்த கேண்டீனில் யாரோ ஸ்பீக்கருக்கு உயிரூட்டி யிருக்கிறார்கள். கச்சேரிக் கூடத்தில் கேட்ட நாராசம் எங்களைக் கேண்டீனிலும் துரத்துகிறது.

‘வலங்கைமானாரே! உங்கள் நூற்றாண்டிலாவது உங்கள் வாரிசுகளுக்கு உங்கள் அடக்கமும் அழகுணர்ச்சியும் வாய்க்க ஆசிர்வதியுங்கள்,’ என்று வேண்டியபடி மிஞ்சியிருந்த காப்பியை ஒரே மடக்கில் முழுங்கி வீதியில் இறங்கினோம்.

(பாரம்பரிய இசை மேதைகளின் வரலாற்றை கலாரசனையோடு எளிய தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் நம்மிடம் குறைவு. அவர்களில் ஒருவர் லலிதா ராம். சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவருடைய ‘பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம்’ நூல் பல மேதைகளைப் பற்றியும் அவர் எழுதியிருக்கும் சின்னச்சின்ன கட்டுரைகளின் தொகுப்பாக வந்திருக்கிறது. கவனிக்க வேண்டிய ஒரு நூல் என்று இதைச் சொல்லலாம். நூலில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான கட்டுரையை மேலே தந்துள்ளோம்)

Exit mobile version