Site icon சக்கரம்

இலங்கையின் நெருக்கடி நீங்குவதற்கு இந்தியா வழங்கும் உடனடி உதவிகள்

பி.ஹர்ஷன்

ந்நிய செலாவணிப் பற்றாக்குறையால் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்திரு க்கும் நிலையில், அயல்நாடான இந்தியா இதுவரை 2.5பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. மூன்றுசந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இந்தத் தொகை நிதியுதவிவழங்கப்பட்டுள்ளது.

எரிசக்தித் தேவைக்காக முதற்கட்டம் 5பில்லியன் டொலர் கடன்தொகை வழங்கப்பட்டிருந்ததுடன், நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் இந்திய விஜயத்தின் பின்னர் இந்தியா 1பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை வழங்கியது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய மேலும் ஒரு 1பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவியை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் தேவைக்கான எரிபொருள், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அரசாங்கம் இறக்குமதி செய்கிறது.

நிதியுதவிக்கும் அப்பால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை  பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமையை அமுல்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின்சக்தி திட்டங்களை அமுல்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை, காலி மாவட்டத்தில் உள்ள 200பாடசாலைகளில் பிரத்தியேகமான கல்வி மென்பொருளுடனான ஸ்மார்ட் அட்டைகள் மற்றும் நவீன கணனி ஆய்வு கூடங்களை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, வெளிநாட்டு சேவைக்கான சுஷ்மா ஸ்வராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை என்பன கைச்சாத்திடப்பட்டுள்ளன.

கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய் சங்கர் இலங்கை வந்திருந்த போதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இது தவிர, இந்தியாவின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாசார மையம் மெய்நிகர் முறையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இவற்றுக்கும் அப்பால் இந்தியாவின் கடன் உதவியின் கீழ்தான் தற்பொழுது நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் பிராந்தியத்தின் பலம்மிக்க நாடு என்பது மாத்திரமன்றி, இலங்கையின் நெருக்கமான நட்புநாடு என்பதே உண்மை. இலங்கை எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் முதலில் உதவும் நாடாக இந்தியாவே காணப்படுகிறது.

கொவிட் தொற்றுநோய்த் தாக்கத்தின் போது முதன் முதலில் இலங்கைக்குத் தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா. இது மாத்திரமன்றி இறுதி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரலைத் தாக்கத்தின் போதும் இலங்கைக்கு முதலில் உதவிக்கரம் நீட்டிய நாடு இந்தியாவாகும். இதற்கும் அப்பால் இலங்கை கடற்பரப்பில் கப்பல் விபத்து உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களின் போதும் உடனடியாக உதவிக்கு ஓடிவந்த நாடாக இந்தியா காணப்படுகிறது.

இந்த வரிசையில் இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் உதவி செய்ய இந்தியா முன்வந்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை இது பலப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுடன், பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பை இந்தியா வழங்கும் என்ற உறுதிமொழியைக் கொடுத்திருந்தார்.

அது மாத்திரமன்றி கொழும்பில் தங்கியிருந்த போது பேராதனை வைத்தியசாலையில் நிலவிய மருந்துத் தட்டுப்பாட்டினால் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்ற செய்தியை அறிந்த அவர், உடனடியாக இந்திய உயர்ஸ்தானிகரைத் தொடர்பு கொள்ளச் செய்து தேவையான உதவி பற்றி அறிந்து கொள்ளச் செய்திருந்தார். அத்துடன், கொழும்பில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தார். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பலரும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இந்தியா வழங்கிவரும் உதவிகளின் பின்னணியில் நிகழ்ச்சிநிரல் இருப்பதாக விமல் வீரவன்ச போன்ற சிலர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டின் தற்போதைய நிலைமைகளை சீர் செய்வதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது, மாற்று யோசனைகளை முன்வைக்காத இவர்கள், வீணாக மக்களைக் குழப்பும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர். கடந்த காலத்திலும் இவர்கள் இதுபோன்ற தேவையற்ற எதிர்ப்புகளை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்ததை மறக்க முடியாது.

இது இவ்விதமிருக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிம்ஸ்டெக் அல்லது வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பின் (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation) BIMSTEC உச்சிமாநாடு கொழும்பில் நடைபெற்று முடிந்துள்ளது. பிம்ஸ்டெக்கின் தற்போதைய தலைமைப் பதவியை வகிக்கும் இலங்கை இம்மாநாட்டை நடத்தியிருந்தது. நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கும் நிலையில் இம்மாநாடு முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது எனலாம். இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன.

-தினகரன் வாரமஞ்சரி
2022.04.03

Exit mobile version