Site icon சக்கரம்

நாட்டின் நிலைமை மேலும் மோசமடைய ஆர்ப்பாட்டங்கள் வழிவகுத்து விடக் கூடாது!

நாட்டின் பல பாகங்களிலும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். அவற்றிலும் குறிப்பாக தலைநகர் கொழும்பில் மக்களது தொடர் போராட்டம் சற்று உக்கிரமாகக் காணப்படுகிறது. 

உண்மையில் மக்களது இப்போராட்டங்கள் எத்தகைய பின்னணியில் நடைபெறுகின்றன? இதனை மக்கள் தாமாகவே முன்வந்து நடத்துகின்றார்களா? அல்லது இவற்றின் பின்னணியில் வேறு எவராவது காணப்படுகிறார்களா? இவ்வாறான வினாக்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்களது இப்போராட்டங்கள் மேலும் தொடருமாக இருந்தால், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை மேலும் மோசமடையவே வாய்ப்புள்ளது என்றே கூற வேண்டும். 

எமது நாட்டு மக்கள் தற்போது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. குறிப்பாக மக்களது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமானளவு கிடைக்காமல் போனமை, போக்குவரத்தை மேற்கொள்வதற்கு எரிபொருட்கள் பற்றாக்குறை மற்றும் பல மணி நேர மின்வெட்டு என்பவை மக்களை அரசாங்கத்தின்பால் வெறுப்படைய வைத்துள்ளன. 

அரசாங்கம் நிச்சயமாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டு, மக்கள் அன்றாட வாழ்வை முன்னரைப் போன்று அல்லாது விடினும் ஓரளவு சுமுகமாக கொண்டு செல்வதற்கேனும் வழிவகை செய்தே ஆக வேண்டும். 

அரசாங்கம் இந்த விடயத்தில் காலதாமதம் ஏற்படுத்தியதால் மக்களது வெறுப்புணர்வை சம்பாதிக்க நேர்ந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இன்று மக்களை அரசாங்கத்துக்கும், அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதிக்கும் எதிராக தூண்டி விட்டுள்ளன. இதுவே வெளிப்படையான உண்மை. 

ஆனாலும் அரசாங்கமென்ற ரீதியில் கடன் பெற்றாவது, மக்களது பொருளாதார சுமையை குறைத்து அவர்களது அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது அரசின் கடமையாகும். அந்த விடயத்தில் ஏற்பட்டு வரும் காலதாமதம், மக்களை மேலும் சலிப்படைய வைப்பதாகத் தோன்றுகிறது. 

சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற நிறுவனங்களிடம் கடன் பெற்றாவது மக்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது. இந்த விடயத்தில் ‘தூரதிருஷ்டியான பொருளாதார ஆளுமையை’ கையாள அரசாங்கம் தவறி விட்டதென்று கூறப்படுவதை நிராகரிக்க முடியாமலுள்ளது.  இருந்த போதிலும், அரசாங்கம் நாட்டில் தற்போது காணப்படுகின்ற பொருளாதார சுமைக்கு மேலதிகமாக இந்தியாவிடமிருந்து கடன்களைப் பெற்று தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து, எரிபொருட்களையும் இறக்குமதி செய்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்கி வருகிறது. எனவே நாட்டு மக்கள் எமது நாட்டின் இன்றைய நிலைமையை நன்குணர்ந்து, பொறுமையுடன் விடயங்களைக் கையாள வேண்டும். 

எமது நாடு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுமார் இரண்டு வருடங்கள் முடங்கிக் கிடந்தது. நாடு தற்போது மீண்டெழுந்து வருகையில், உலக யுத்தமாக மாறிவிடுமோ என அஞ்சிக் கொண்டிருக்கும் ரஷ்ய – உக்ரைன் நாடுகளுக்கிடையேயான யுத்தம் வெடித்தது. அந்த யுத்தமானது எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியையும் ஆட்டம் காண வைத்துள்ளது. எனவே இன்றைய இக்கட்டான நிலைமையை மக்கள் நன்குணர்ந்து பொறுமை காப்பது அவசியம். எமது தாய்நாட்டுக்காக சில விடயங்களை விட்டுக்கொடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும். 

எதிரணியின் கொள்கையானது ஆட்சியை கைப்பற்றுவதாகவே எவ்வேளையிலுமுள்ளது. அதற்காக அவர்கள் மக்களைத் தூண்டி விட்டு எந்த எல்லைக்கும் கொண்டு செல்வதற்குப் பின்னிற்க மாட்டார்கள். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்று நம்பி, மக்கள் ஒருபோதும் தமது நிதானத்தை இழந்து விடக் கூடாது. கடந்து வந்த காலத்தில் எந்தக் கட்சியின் அரசாங்கம் மக்களுக்கான பணிகளை உரியபடி ஆற்றியது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

கொடிய யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நாடு துன்பத்தில் மூழ்கி நின்ற போது அரசாங்கம் அன்றைய சவால்களை துணிவுடன் எதிர்கொண்டது என்பதை மக்கள் மறந்து விடலாகாது. ‘உசுப்பி விடும்’ எதிர்க்கட்சிகளின் அரசியலுக்குள் நாட்டு மக்கள் ஒருபோதும் சிக்கி விடக் கூடாது என்பதே எங்கள் கருத்தாகும்.

ஆசிரியர் தலையங்கம்
தினகரன் வாரமஞ்சரி, 2022.04.17

Exit mobile version