இலங்கையில் தற்போது வாழ்க்கைச் செலவு மோசமாக அதிகரித்திருப்பது ஒருபுறமிருக்க, உலகின் பல நாடுகள் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் ஆபத்து உள்ளதாக சர்வதேச நிபுணர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நெருக்கடிக்கு சில பிரதானமான காரணங்கள் உள்ளன.
இலங்கையில் கொவிட் பெருந்தொற்று காரணமாக இரு வருட காலம் அனைத்துமே முடங்கிப் போய்க் கிடந்தன. உள்நாட்டு உற்பத்திகள் எதுவுமே நடைபெறவில்லை. நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் பிரதானமாகத் திகழ்கின்ற உல்லாசப் பயணத்துறை முற்றாகவே முடங்கிப் போனது. உலகநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தராமல் போனதால், இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் முடங்கிப் போனது.
அதேசமயம் கொவிட் பெருந்தொற்றுக்கு உள்ளான மக்களுக்குச் சிகிச்சையளிக்கவும், அவர்களுக்கு உணவு நிவாரணம் வழங்கவும், வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் அரசாங்கம் திறைசேரியில் இருந்து பெருமளவு நிதியை செலவிட வேண்டியிருந்தது. நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்காக செலவிடப்பட்ட நிதியும் அதிகமாகும்.
இவ்வாறான பலவித செலவினங்கள் காரணமாகவும், உற்பத்தித்துறை வீழ்ச்சியடைந்ததாலும், அந்நிய செலாவணி முடங்கியதாலும் திறைசேரியின் நிதியின் அளவு குன்றிப் போயுள்ளது. அனைத்து திசைகளிலும் இருந்து பிரதிகூலங்களே சூழ்ந்து கொண்டதாலேயே இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளானது.
இவ்வாறான ஆபத்து நிலைமையானது இலங்கைக்கு மாத்திரமன்றி, உலகின் பல நாடுகளுக்கும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடுமென தற்போது எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இப்பிரச்சினைகளில் பிரதானமாக உணவுப் பற்றாக்குறை அமையலாமென சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். உலகில் ஏற்படப் போகின்ற உணவுத் தட்டுப்பாடு குறித்து உலக உணவு ஸ்தாபனமும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளை எடுத்துக் கொண்டோமானால் மக்கள் பெருக்கமானது கட்டுக்கடங்காமல் பெருகி விட்டது. அதற்கேற்ப உணவுப் பொருட்களின் நுகர்வும் அதிகரித்துச் செல்கின்றது. ஆனால் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்றவாறு உலகில் உணவு உற்பத்தியானது அதிகரிக்கவில்லை என்பதுதான் இங்கே ஆபத்துக்குரிய விடயமாக உள்ளது. மக்களின் அதிகரித்த நுகர்வுக்கேற்ப உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லையாயின் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் விலைகள் அதிகரித்துச் செல்வது தவிர்க்க முடியாததாகும்.
உலக நாடுகளில் தற்போது நிலவுவது இப்பிரச்சினையே ஆகும். மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்ப உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், குடும்பத்தைத் திட்டமிடுவது குறித்து மக்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவது குறித்தும் உலக நாடுகள் பொருட்படுத்தவில்லை. இந்த அலட்சியமானது எதிர்காலத்தில் தனியொரு நாட்டுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்துக்குமே நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கத் தொடங்கி விட்டனரென்பது குறிப்பிடத்தக்கது.
எமது அயல்நாடான இந்தியா உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடாகும். தானியங்கள், காய்கறிகள், பால், மாமிச உணவுகள் போன்ற பலவிதமான உணவுப் பொருட்களின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு கொண்ட நாடாக விளங்குகின்றது. அதுமாத்திரமன்றி இந்தியா தனது உணவு உற்பத்திப் பொருட்களை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகின்றது. இலங்கையில் நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற தானியங்கள் உட்பட ஏராளமான உணவுப் பொருட்கள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. உலகில் கோதுமை உற்பத்தியில் சிறந்து விளங்குகின்ற ஓரிரு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்று இந்தியாவில் கோதுமை உற்பத்தியானது தேவைக்குப் போதுமானதாக இல்லை. மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்ப கோதுமை உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. அத்துடன் கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் சிறுவீழ்ச்சி நிலைமையும் உள்ளது. எனவே இந்தியா தற்போது உஷராகிக் கொண்டுள்ளது. தனது கோதுமை உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை இந்தியா கட்டுப்படுத்தியுள்ளது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமையை உற்பத்தி செய்து வருகின்ற நாடுகளில் இந்தியா பிரதானமான நாடாகும்.
இந்தியாவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடு காரணமாக உலகின் பல நாடுகளில் கோதுமைமாவுக்கு கிராக்கி நிலைமையொன்று தற்போது ஏற்பட்டுள்ளது. உலகில் எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற உணவுத் தட்டுப்பாட்டுக்கு இதுவொரு உதாரணமாகும். தற்போது ரஷ்ய_- உக்ரைன் யுத்தம் காரமாக உலகின் பல நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு ஏற்கனவே பற்றாக்குறை நிலவி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த ஆபத்து நிலைமையை உலகம் வெற்றி கொள்ள வேண்டுமானால் உலக நாடுகள் அனைத்தும் உணவு உற்பத்தியில் உடனடிக் கவனம் செலுத்துவது மாத்திரமே தீர்வு ஆகும். இல்லையேல் உணவுத் தட்டுப்பாடானது உலகுக்கு மற்றொரு ஆபத்தாக உருவெடுப்பது தவிர்க்க முடியாததாகி விடலாம்.
-தினகரன் ஆசிரியர் தலையங்கம்
2022.05.27