Site icon சக்கரம்

டொலர் மைய ஒழுங்கின் உடைப்பும் ஆசிய இணைவும்! – பகுதி 2

-பாஸ்கர் செல்வராஜ்

மது இந்திய வரலாறும் வணிகமும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களுடனும் தொடர்புடையது. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மத்தியக் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் நமது வரலாற்று மாற்றங்களிலும் எதிரொலித்திருக்கின்றன. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் துருக்கியையும் எகிப்தையும் ஒட்டோமான் பேரரசு கைப்பற்றுவது, பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் புதிய பாதை வழியாக இந்தியாவை அடைய வைக்கிறது. அது நம்மை பார்ப்பனிய ஆதிக்கத்தோடு ஐரோப்பிய காலனியாதிக்கத்தையும் சேர்த்து அனுபவிக்க வைக்கிறது. அதன்மூலம் முதாளித்துவமாகவும் ஏகாதிபத்தியமாகவும் மாறும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சந்தைக்கு அடித்துக்கொள்ளும்போது கிழக்கு ஐரோப்பாவும் ஆசியாவும் ரஷ்யாவின் தலைமையில் எழுகின்றன. பனிப்போரில் ஏகாதிபத்திய நாடுகள் ரஷ்யாவை வீழ்த்துவது ஒற்றைத்துருவ உலகம் உருவாக காரணமாகிறது.

ஏகாதிபத்திய நிதி மூலதன சுழற்சி!

இந்த உலகமய உற்பத்தியில் தன்னை இணைத்துக் கொண்ட சுயசார்பான பொருளாதார வளர்ச்சியையும் இராணுவ வலிமையையும் கொண்ட சீனாவும், ரஷ்யாவும் தொழிற்துறை உற்பத்தி மையமாகவும் இந்த உற்பத்திக்கான எரிபொருள், உலோக மூலப்பொருள் உற்பத்தி மையமாகவும் மாற்றிக் கொண்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உற்பத்தியை காலனிய நாடுகளுக்கு மாற்றி அதன் பலனை உறிஞ்சும் நிதி மூலதனமாக மாறிய இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஏகாதிபத்தியங்கள் உலகப்போர்களில் ஈடுபட்டு தங்களது ஆதிக்கத்தை இழந்தன. பின்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் அதன் அங்கமாக மாறி ஜெர்மனியும், பிரான்ஸும் இழந்த தனது தொழிற்துறை வலிமையை மீட்டுக் கொண்டன. இங்கிலாந்து அமெரிக்காவின் தயவில் நிதிமூலதன ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. அவர்களின் வழியில் அமெரிக்காவும் பொருள் உற்பத்தியை ஆசிய நாடுகளுக்கு மாற்றி உற்பத்தியின் இலாபத்தை உறிஞ்சும் கந்துவட்டி நிதி மூலதனமாக மாறியது.

இந்த பாதை ஏதோ கொள்கை முடிவுகளால் இலாப வெறியினால் ஏற்பட்ட பக்கவிளைவு அல்ல. ஏகாதிபத்திய நிதி மூலதனம் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் அது மென்மேலும் பெருக வேண்டுமானால் அது குறைகூலி தொழிலாளர்கள், மலிவான மூலப்பொருட்கள், புதிய சந்தைகள், விலையைக் குறைக்கும் போட்டியை ஒழிப்பது, பொருட்களின் விலையைக் கூட்டுவது, அதன்மூலம் இலாபத்தைப் பெருக்குவது, அது மக்களை வாங்கும் திறனற்ற ஓட்டாண்டிகளாக்குவது என்பது அதன் அடிப்படை சுழற்சி விதி. இந்தச் சுழற்சியின் முடிவில் மக்கள் தங்களிடம் இருக்கும் நிலம், நகை, உழைப்பை இழந்து பொருட்களைப் பெற்றிருப்பார்கள். முதலாளிகளும் செல்வந்தர்களும் தங்களிடம் இருந்த சொத்தையும் செல்வத்தையும் மேலும் பெருக்கி இருப்பார்கள். இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்; ஆள் மாற்றங்கள் நடக்கலாம் அவ்வளவே!

டொலர் மைய உலக ஒழுங்கின் உடைப்பு!

அந்தப் பொது சுழற்சி விதியின் அடிப்படையில் அமெரிக்காவின் டொலர் மைய நிதிய உலக ஒழுங்கு உச்சத்தை அடைந்திருக்கிறது. மக்கள் வாங்கும் ஆற்றலற்றவர்களாக மட்டுமல்ல; அதற்கு மேலும் சென்று கடனாளிகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் பொருளாதாரச் சுழற்சி மேலும் நடைபெற முடியாத நிலையில் தேக்கத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரம் வளரும்; அதாவது மக்கள் தொடர்ந்து வாங்குவார்கள்; உற்பத்தி தொடர்ந்து நடக்கும்; இலாபம் தொடர்ந்து பெருகும் என்ற நம்பிக்கையில் கட்டப்பட்ட பங்குச்சந்தை குமிழி கொரோனாவின்போதே உடைந்து போலியான செல்வ மதிப்பு ஆவியாகி இருக்க வேண்டும். ஒரு சொத்தை ஈடாக வைத்து இன்னொரு சொத்து, அதை ஈடாக வைத்து இன்னொரு சொத்து என உற்பத்தியில் உருவாகும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் இந்த மாய நிதிச்சந்தை செல்வமதிப்பு கட்டமைப்பு அதன் பொருளாதார அடித்தளம் உடையும்போது நஷ்டத்தைத் தவிர்த்து, தனது சொத்தை செல்வத்தைக் காக்க இந்தப் பொய்யான மதிப்பு கொண்ட சொத்துகளை விற்றுவிட்டு உண்மையான மதிப்பு கொண்ட சொத்துகளையும் பணத்தையும் தேடியலையும். போலியான ஊதி பெருக்கப்பட்ட சந்தை மதிப்புக்கும் உண்மையான செல்வ மதிப்புக்குமான இடைவெளி மதிப்பு குமிழி உடையும்போது ஒன்றுமில்லாத காற்றாக மாறுவதுதான் பொதுவான விதி.

ஆனால், இம்முறை அமெரிக்க அரசு அதற்கு செயற்கை ஒட்சிசனாக ஆறு ட்ரில்லியன் டொலர்களை அச்சிட்டு அந்த பலூனை உடையாமல் காக்க முயற்சி செய்ய அது பலூனை மேலும் பெரிதாக்கியது. அதற்கேற்ப உற்பத்தி பெருகாத நிலையில் இந்த நிதிச்சந்தை பெருக்கம் கோரும் இலாபத்துக்கு விலைகள் உயரவே உலகெங்கும் பணவீக்கம். பெருகிய பணத்தின் மதிப்பை எய்தவைக்க அது பங்குச்சந்தையில் உருவாக்கிய பெருக்கத்துக்கு ஏற்ற இலாபத்தை அடைய எண்ணெய் உற்பத்தியையும் பொருள் உற்பத்தியையும் கூட்டி அதை டொலரில் பரிவர்த்தனை செய்து இலாபத்தைப் பெருக்குவதன் மூலம்தான் இதைத் தீர்க்கமுடியும். பதிலாக பணப்புழக்கத்தைக் குறைத்தால் ஒட்சிசன் இன்றி பலூன் சிறுக்கும் அல்லது கிழியும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பொருள் உற்பத்தியாளர்கள் உடன்பட்டு பணியாத நிலையில் அவர்களை பணியவைக்க செய்யப்படும் அடாவடித்தனமும் அதற்கு எதிரான நகர்வுகளும் டொலர் மைய உலக ஒருங்கமைப்பை உடைத்துக் கொண்டிருக்கிறது.

உற்பத்தி – வணிக – வர்த்தக வழி இதயத்தின் ஒன்றிணைவு!

அதைத் தடுத்து நிறுத்த சீன, ரஷ்ய நாடுகளின் உற்பத்தியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அமெரிக்காவின் முயற்சியை அவ்விரு நாடுகளும் கூட்டமைத்துக் கொண்டு எதிர்க்கின்றன. ரஷ்யாவை உக்ரைன் பதிலிப்போரில் வீழ்த்தி மண்டியிட வைக்க முயன்ற மேற்கின் முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது. எண்பதுகளில் சவூதியைப் பயன்படுத்தி எண்ணெய் மிகை உற்பத்தி மூலம் எண்ணெய் விலையை வீழச்செய்து ரஷ்ய பொருளாதாரத்தையும் பொருளாதாரத் தடையின் மூலம் அதன் நாணயத்தையும் நிலைகுலைக்கும் அதே உத்தியை, 2014இல் ஐரோப்பிய எரிவாயு சந்தைக்கான சிரிய போரின்போதும் அமெரிக்கா பயன்படுத்தியது. சோவியத் காலத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்த சீனா, இம்முறை ரஷ்யாவுக்கு தனது சந்தையையும் பொருளாதார உதவியையும் அளித்துக் காப்பாற்றியது. இப்போது உக்ரைன் போரின் போதான உலக வர்த்தகக் கட்டமைப்பில் இருந்து ர‌ஷ்யாவை விலக்கி அதன் சொத்தை முடக்கி ரஷ்யாவை வீழ்த்தும் முயற்சியையும் சீனா இருவருக்கும் இடையிலான சொந்த பரிவர்த்தனை கட்டமைப்பின் மூலம் வர்த்தகம் செய்து தாங்கி நிற்கிறது.

இந்தப் போரின் எதிர்விளைவாக பெட்ரோ – டொலர் நிதியின் ஆதாரமான எரிபொருள் விலை மேலும் உயர்ந்து, பொருட்களின் விலைகள் விண்ணை முட்டிக் கொண்டிருக்கின்றன. இதைச் சமாளிக்க எண்ணெய் உற்பத்தியைப் பெருக்க ஓபெக் (OPEC) கூட்டமைப்பு மறுத்தது மட்டுமல்ல; இதுவரையிலும் அமெரிக்க அணியில் இருந்த சவூதி அரேபிய நாடுகள் எதிரணியை நோக்கி நகருகின்றன. ஈரான் ஏற்கனவே சீனாவுடன் 250 பில்லியன் டொலர் பெறுமான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது. சீன யுவானில் எண்ணெய் விற்க சவூதி, சீனாவுடன் பேசி வருகிறது. இதுவரையிலும் எதிரெதிர் துருவங்களாக இருந்த இந்த ஈராக்கின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளும் ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றன. முஸ்லீம் சகோதரத்துவ அரசியலுக்கு (Muslim Brotherhood) ஆதரவு வழங்கியதால் பகையுடன் பார்த்த துருக்கியின் அதிபரை சவூதி அழைத்துப் பேசியுள்ளது. சிரிய உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்ட அரபு நாடுகள் அந்நாட்டுடன் மீண்டும் உறவைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. மங்கோலிய பேரரசு கால எரிபொருள், உற்பத்தி, வர்த்தக வழி என அனைத்தும் ஒருங்கிணைந்த பூகோள அரசியலில் இதயமாக வருணிக்கப்படும் ஆசிய நாடுகளின் இணைவு உருவாகிக் கொண்டிருக்கிறது.

மேற்கு ஐரோப்பிய இந்தோ-பசிபிக் தெரிவு!

கிழக்கு ஐரோப்பிய ஒருங்கிணைப்பை உடைக்கும் உக்ரைன் போரில் ரஷ்யா வென்று, ஆசிய ஒருங்கிணைப்பு ஏற்பட்டு, சீனாவின் புதிய நவீன பட்டுச்சாலையான “ஒரே பாதை ஒரே மண்டலம்” திட்டம் நடைமுறைக்கு வந்தால், அது மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கடல்வழி வாணிக ஆதிக்கத்தை உடைக்கும். ஆதலால், அவர்கள் இயல்பாக அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் திட்டத்துடன் இணையும் அதேவேளை, உலகப்போருக்குப் பிறகு அமெரிக்காவிடம் இழந்த ஆதிக்கத்தைத் திரும்பப் பெறவும் எத்தனிக்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு இருக்கும் முக்கிய தடை ரஷ்ய எரிபொருள் சார்பு. ரஷ்ய நிலக்கரி தடையை அடுத்து எண்ணெய்க்கும் தடை விதிக்கும் முயற்சி வெற்றி பெற, எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கும் வாய்ப்புள்ள சவூதியும், ஐக்கிய அரபு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், ஒற்றுமையாக நின்றுகொண்டு மறுக்கிறார்கள்.

முன்பு உலக எண்ணெய் ஏற்றுமதியில் 30 விழுக்காட்டை வைத்திருந்த சவூதி, இப்போது 12 விழுக்காடுதான் வைத்திருக்கிறது. அதன் முக்கிய அமெரிக்க சந்தை முற்றிலும் இல்லாமல் போனது மட்டுமல்ல; அமெரிக்காவே மிகப்பெரும் உற்பத்தியாளராக மாறி போட்டியிடுகிறது. வருமானம் குறைந்து பட்ஜெட் பற்றாக்குறையில் இருக்கும்போது ஒற்றுமையை உடைத்து எண்ணெய் விலையைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு அவர்கள் துணை போய் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்களா என்ன? மற்றுமொரு முக்கிய எரிபொருள் உற்பத்தியாளரான ஈரானை இணங்கவைக்க அதன் முக்கிய படைப்பிரிவான ஐ.ஆர்.ஜி.சியின் மீதான தடையை நீக்க வேண்டும் என அந்நாடு அடம்பிடிக்கிறது. அப்படி ஒப்புக்கொண்டால், அது ஈரானின் “எதிர்ப்பியக்க அச்சை (Resistance Axis)” வலுப்படுத்தி இஸ்ரேலை பலவீனப்படுத்தும் என்பதால் இழுபறி நீடிக்கிறது.

ரஷ்ய எரிவாயுவை கத்தார், ஈரான், அல்ஜீரியா, அசர்பெய்ஜான் நாடுகளின் எரிவாயுவைக் கொண்டு மாற்றீடு செய்யப் போவதாக ஐரோப்பியக் கூட்டமைப்பு கூறுகிறது. கத்தார் நீண்டகால ஒப்பந்தம் வேண்டுமென கேட்பதால் பேச்சுவார்த்தை இழுக்கிறது. ர‌ஷ்ய வெளியுறவு அமைச்சர் அல்ஜீரியாவுக்குப் பயணம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கிறார். இவர்கள் எல்லாம் ஒப்புக்கொண்டாலும் உடனடியாக உற்பத்தியைப் பெருக்கவும் விநியோகிக்கவுமான உள்கட்டமைப்பு இல்லையாதலால், 2027 வரை ரஷ்ய எரிவாயுவை முழுமையாக மாற்றீடு செய்ய முடியாது என்கிறார்கள். இதில் எல்லாம் ஐரோப்பிய ஒன்றியம் வெற்றி பெற்றாலும், உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாகவும் சந்தையாகவும் விளங்கும் சீனாவின் தேவைக்கு மற்ற நாடுகள் அளிப்பது என மாறிக்கொண்டிருக்கும் இந்தப் பொருளாதார பசை இவர்களை நிச்சயம் இணைத்து வைத்திருக்கும். இந்த பசையில்லாத பொருளாதார வளர்ச்சியற்ற எதிர்த்தரப்பின் அரசியல் இராணுவ நடவடிக்கைகள் வெற்றிபெறும் வாய்ப்புகள் மிகக் குறைவே!

ஆசியானின் தெ(ரி)ளிவு

இந்த ஆசிய இணைவைத் தடுக்க முந்தைய காலனியகால உத்தியை நடைமுறைப்படுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட இந்தோ – பசிபிக் திட்டத்திலும் குவாட் (QUAD) இராணுவக் கட்டமைப்பிலும் முன்னாள் எஜமானர்களுடன் இந்தியா முதல் ஆளாக இணைத்துக்கொண்டாலும் மற்ற ஆசியான் (ASEAN) நாடுகளும், தென்கொரியாவும் மறுத்துவிட்டன. தென்கொரியாவுக்கு சீனா மிகப்பெரிய சந்தையாகவும், சாம்சுங் (SAMSUNG) தவிர்த்த மற்ற நிறுவனங்களின் ஆதரவு கட்சி ஆட்சியில் இருந்ததாலும் அது சாத்தியமின்றி இருந்தது. இப்போது மிகமிக குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வலதுசாரி பிரிவு ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் அமெரிக்க சாய்வுக்கு சமிக்கைகளைத் தெரிவிக்கிறது. ஆசியான் (ASEAN) நாட்டுத் தலைவர்களை அழைத்து அதிபர் பைடன் விருந்து வைத்திருக்கிறார். கடல்வழி பாதுகாப்புக்கும், சூரிய மின்னாற்றல் உற்பத்திக்கும் 150 மில்லியன் டொலர்களை அறிவித்திருக்கிறார். அமெரிக்காவைவிட சீனாவுடன் இருமடங்கு (878.2 பில்லியன்டொலர்) வர்த்தகம் செய்யும் இந்த நாடுகளுக்கு எந்த பொருளாதார மாற்றையும் வழங்காமல் இவர்களை இணங்க வைப்பது இயலாதது. கூடுதலாக முன்னாள் அமெரிக்க அணியான பிலிப்பைன்ஸ் இதில் பங்கேற்கவில்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் சீனாவுடன் தென்சீனக்கடல் எல்லை பிரச்சினையைத் தீர்க்க ஒப்பந்தம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார். அமெரிக்க – சீன மோதலிலோ, ரஷ்ய எதிர்ப்பிலோ பங்கேற்காமல் ஆசியான் நாடுகள் நடுநிலையாக சார்பின்றி தங்களின் சொந்த நலனை முன்னிறுத்தி அரசியல் செய்கின்றன.

தொடரும்

பகுதி 1

Exit mobile version