Site icon சக்கரம்

திரும்பும் வரலாறு: நவகாலனியமா? சுயசார்பா? – பகுதி 3

பாஸ்கர் செல்வராஜ்

ரோப்பாவில் இருந்து தென்னாப்பிரிக்கா வழியாக இந்தியாவை அடையும் புதிய கடல்வழிக்கு முன்பாக மத்திய கிழக்கு, துருக்கி வழியான நில வழியும், எகிப்து வழியான கடல்வழியுமே ஆசிய – ஐரோப்பிய வர்த்தகத்தின் இதயமாக விளங்கியது. சீனாவும் இந்தியாவும் மூலப்பொருள் உற்பத்தி மையங்களாகவும் மத்தியக் கிழக்கு, இந்தப் பொருட்கள் ஐரோப்பாவை அடைய உதவும் பாலமாக இருந்து வந்தது. அவர்களின் தேவைக்கு அளிக்கும் வகையான நமது ஏற்றுமதி பொருளாதாரம் பார்ப்பனிய உருவாக்கத்துக்கும் மூவர்ண ஆதிக்கத்துக்கும் வித்திட்டது. ஐரோப்பாவுடனான நேரடி வர்த்தகம் கூடுதலாக காலனியாதிக்கத்துக்கு நம்மை இட்டுச் சென்றது. உலகப் போருக்கு பிறகான உலகின் உடைப்பு காலனியாதிக்க பிடியைச் சற்று தளர்த்தினாலும் பார்ப்பனிய ஆதிக்கப்பிடி தொடர்ந்தது. பனிப்போருக்கு பிறகான உலகமயம், பார்ப்பனிய ஆதிக்கப்பிடியைச் சற்று தளர்த்தியது. டொலர் மைய உலக ஒழுங்கின் உடைப்பு ஆசிய இணைவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. மற்ற ஆசிய நாடுகள் அமெரிக்க – ஐரோப்பிய பிடியிலிருந்து மேலும் விலகி இறையாண்மையுள்ள சுயசார்பான பாதையில் பயணிக்க முயலும் அதேவேளை, இந்தியாவின் பார்ப்பனிய ஆளும்வர்க்கம் மீண்டும் அவர்களிடம் சென்று இந்தியாவை முழுமையாக அடகு வைக்கப் பார்க்கிறது.

இந்தியாவின் தெரிவுக்கான காரணம்…

ஆசியானைப்போல் நடுநிலையாக சுயசார்புடன் அந்தந்த நாட்டு நலனை முன்னிறுத்தி செயல்படாமல், இந்தியா அவசர அவசரமாக அமெரிக்க அணியில் இணைந்து, ஒருசார்புநிலை எடுத்து சந்தையை அமெரிக்காவிடம் கொடுத்து தனது பேரவலிமையை இழந்தது. இந்திய பார்ப்பனிய முதலாளிகளுக்கு மென்பொருள் ஏற்றுமதியைத் தவிர கொடுக்க அமெரிக்காவிடம் எதுவுமில்லை. எதிரணிக்குச் சென்றால் அவர்களுடன் போட்டியிட்டு வெல்லும் உற்பத்தி தொழில்நுட்ப வலிமை இந்த தரகு முதலாளிகளிடம் இல்லை. நமது போட்டியாளரான சீனா ஆராய்ச்சிக்கு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காடு செலவு செய்கிறது; அதில் அந்நாட்டு நிறுவனங்களின் பங்கு 77 விழுக்காடாக இருக்கிறது; இந்தியாவிலோ அது வெறும் 0.65 விழுக்காடாகவும் அதில் தனியாரின் பங்கு 37% விழுக்காடாகவும் இருக்கிறது; நமது நிறுவனங்கள் எப்போதும் அரசின் பாதுகாப்பிலும் மானிய ஊக்கத்தையும் நம்பி இருக்கக் கூடாது; ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தந்து தொழில்நுட்ப வலிமையைப் பெருக்கி போட்டியில் வெல்ல முயற்சி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் இந்தியத் தலைமைப் பொருளாதார ஆலோசகர்.

அன்று முதல் இன்று வரை வாங்கி விற்கும் தரகு வேலையையும் சந்தையில் புதிய நுட்பம் வரும்போதெல்லாம் மேற்குலக சந்தையில் வாங்கி, உற்பத்தியைப் பெருக்கி, இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் இவர்கள் இன்று மட்டும் இவர் பேச்சைக் கேட்டு களத்தில் இறங்கி கழற்றி விடுவார்களா என்ன? அப்படியே இவர்கள் முயன்றாலும் அதற்கான செயல்திறனும் சிந்தனைத் திறனுமிக்க தொழிலாளர்கள் இந்த பார்ப்பனிய கட்டமைப்பில் உருவாக முடியுமா? அப்படி உருவாக அடிப்படையான சத்தான உணவு, தரமான கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை இந்த பார்ப்பனிய பா.ஜ.க அரசுதான் கொடுக்குமா? அப்படிக் கொடுத்து எல்லோரும் மேலே வந்து தங்களுடன் போட்டியிட முதல் மூவர்ணம்தான் ஒப்புக்கொள்ளுமா? இந்திய சட்டம் சொல்வதுபோல சாதியை ஒழிப்பது இருக்கட்டும். இதற்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வையாவது முதலில் களைந்து எல்லோருக்கும் சமமான வாய்ப்பைக் கொடுக்கும் சமூகநீதியை ஏற்படுத்தாமல் இந்தத் தொழில்நுட்ப சுயசார்பு முயற்சியில் இந்தியாவால் எள்ளளவும் முன்னேற முடியாது.

அம்பானி அதானி

இந்த தெரிவுக்குப் பின்னிருப்பவர்களின் நலன்!

இதையும் மீறி இப்படியான முயற்சியில் ஈடுபட்டால் இப்போதிருக்கும் கட்சி ஆட்சியில் இருக்க முடியாது. அவர்களின் பின்னிருக்கும் அம்பானியும் அதானியும் உலகப் பெரும் பணக்காரர்களாகவும் இருக்க முடியாது. ஆதலால் அமெரிக்கர்கள் அவ்வப்போது ஊமை குத்தாக குத்தினாலும், “இந்தியாவின் மனித உரிமை மீறல்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று மிரட்டினாலும் இவர்கள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, அவர்களிடமே போய் நிற்கிறார்கள். இந்த அழுத்தத்தைக் குறைக்க அவர்களுக்கு ஆயுத இறக்குமதி, ப்யூச்சர் குழுமத்தை அமேசானை முந்திக்கொண்டு அம்பானி கைப்பற்றுவதில் பின்வாங்கல் என அவர்களுக்கு பொருளாதார நலன்களை விட்டுக்கொடுத்து ரஷ்யா தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதைய டொலர் மதிப்பு உயர்வும், எண்ணெய் விலை உயர்வும், பங்குச்சந்தையில் அந்நிய முதலீடுகளின் வெளியேற்றமும் இந்தியாவின் டொலர் கையிருப்பையும் ரூபாய் மதிப்பையும் குறைக்கும். அதை நிலைப்படுத்த வட்டிவிகிதத்தை உயர்த்தும்போது தொழில் முதலீடுகள் குறைந்து வேலைவாய்ப்பு மேலும் அருகும். அது மக்களின் வாங்கும் அளவைக் குறைத்து சந்தையைச் சுருக்கி ஜிடிபி (GDP) யையும் அரசின் வருவாயையும் குறைத்து நடப்பு கணக்கு பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும். இதைத் தடுக்க முடியாவிட்டாலும் பிரச்சினையின் வீரியத்தைக் குறைக்க ரஷ்ய எண்ணெயை சொந்த நாணயத்தில் வாங்கி டொலரை சேமித்து இந்தியா சரிசெய்யப் பார்க்கிறது. அது டொலர் மைய நிதிய உடைப்பின் அங்கமாதலால் அதை எதிர்க்கும் அமெரிக்கா, இந்தப் எரிபொருள் மாற்றுக்கான சூரிய மின்னாற்றல் தொழில்நுட்பம், முதலீடு, சந்தையைக் கொடுக்காமல் இவர்களை வழிக்குக் கொண்டுவரப் பார்க்கிறது.

இதை உடைக்கும் விதமாக அமெரிக்க ஐரோப்பிய உள்முரணையும் போட்டியையும் பயன்படுத்த முனையும் இந்தியா ரைசினா (Raisina) கூடத்தைக் கூட்டிப் பேசி பிரதமர் மோடி ஐரோப்பா சென்று முன்னாள் ஆங்கில-டச்சு கிழக்கிந்திய கம்பெனி நாடுகளுடன் சூரிய மின்னாற்றல் தொழில்நுட்பத்துக்கான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறார். அம்பானிக்கும் அதானிக்கும் இந்த தொழில்நுட்பமும், முதலீடும் கிடைத்து உற்பத்திக்கான எரிபொருள், சந்தைக்கான எரிபொருளான தரவுகள், வர்த்தகத்துக்கான போக்குவரத்து, துறைமுகம் ஆகியவற்றை தங்களின் முற்றுருமையின் கீழ் கொண்டுவந்து அதிக விலையில் விற்று கொள்ளை இலாபம் பார்ப்பார்கள். அவர்களின் பங்குகளின் விலைகள் உயர்ந்து வாங்கிய டொலர் கடனை அடைத்து செல்வத்தை மேலும் குவித்து உலகின் முதல் பணக்காரர்கள் ஆவார்கள்.

நவகாலனியத்தை நோக்கி இந்தியா!

இந்த மாற்று எரிபொருள், மலிவான தொழிலாளர்களைக் கொண்டு உருவாகும் பொருட்கள் அமெரிக்க, ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதியாகும். இந்த ஏற்றுமதிக்கு ஏற்ப நமது இந்திய ரூபாயின் மதிப்பு அதளபாதாளத்தில் வைத்து இங்கிருக்கும் சொத்துகளின் மதிப்பை, தொழிலாளர்களின் கூலியை, வாங்கும்திறனை குறைப்பார்கள். நவீன மின்னணு சாதனங்கள் இன்றி வாழ முடியாது என்ற சூழலை அடைந்து கொண்டிருக்கும் நமது குடும்பங்கள் படிப்படியாக நிலத்தையும், கையிலும் காதிலும் கழுத்திலும் இருப்பதை விற்று வாழ நிர்பந்திக்கப்படுவார்கள். வலுவான மதிப்பு கொண்ட யூரோ டொலர் நிதி மூலதனம் மற்றும் மிகைமதிப்பு தொழில்நுட்பங்கள் குறைமதிப்பு ரூபாய், குறை மதிப்பு ஏற்றுமதி பொருள் உற்பத்தி, அதன் பலனை உறிஞ்சி வாழும் அதே ஏகாதிபத்திய பார்ப்பனிய முற்றுருமை ஆதிக்கம், பஞ்சத்தில் வாழும் மக்கள் என புதிய நவகாலனிய பழைய பத்தொன்பதாம் நூற்றாண்டு பஞ்சத்தில் வாழும் இந்தியா உருவாகும்.

இல்லையில்லை… முன்பு இதேபோல மேற்கு அணியில் சேர்ந்த ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் வளர்ந்ததைபோல இது இந்தியாவை தொழில்மயமாக்கி, வேலைவாய்ப்பைப் பெருக்கி, செல்வப் பெருக்கத்தை ஏற்படுத்தும் எனச் சிலர் வாதிடலாம். அமெரிக்க மக்களின் நுகர்வை மையமாகக் கொண்ட கீனிசிய அரச முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதுதான் இந்த டொலர் மைய நிதிய உலக ஒழுங்கு. இப்படி உருவாக்கப்படும் தேவைக்கு உலக நாடுகளை அளிக்க போட்டியிட வைப்பதன் மூலம் அமெரிக்க மலிவான விலையில் பொருட்களைப் பெற்று வருகிறது. இதை கீனிசிய முறையின் வெற்றியாகப் பேசுபவர்கள், இப்படி அரசு செலவிட பணம் அமெரிக்காவுக்கு எங்கிருந்து வந்தது என்பதையும், அந்த மக்களின் அதிகமான நுகர்வுத்திறனுக்கான காரணத்தையும் பேசுவதில்லை.

ஏற்றுமதிக்கான பொருளாதாரம் இழிநிலைக்குத் தள்ளும்!

1933இல் நியூடீல் எனும் பெயரில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களை மட்டும் ரூஸ்வெல்ட் நிர்வாகம் அறிவிக்கவில்லை. 100 டொலருக்கும் அதிகமான தங்கம் அது தொடர்பான சொத்துகளை ஒரு அவுன்ஸுக்கு 20.67 டொலர் பணம் கொடுத்து அரசுடைமையாக்கியது. அதற்கு அடுத்த வருடம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையை 35 டொலர்களாக நிர்ணயித்து அந்த பணத்தின் மதிப்பை குறைத்தது. நடுத்தர வர்க்க மக்களின் சொத்தைக் கொண்டு அரசு செலவு செய்தும் அவர்கள் கையில் கொடுத்த பணத்தை செலவு செய்ய வைத்தும் இந்த கீனிசிய சுழற்சி தொடங்கியது. இந்த தேவைக்கான அளிப்பை செய்த நிதி மூலதன கும்பலின் கையில் நிலத்தையும் தங்கத்தையும் செல்வதையும் மக்களின் கையில் பொருளையும் இந்த சுழற்சி கொண்டு சேர்த்தது.

அதன் பின்னர் மற்றவர்களை இந்த $35/அவுன்ஸ் மதிப்பை ஏற்கச் செய்தது; பின்பு அதை கைவிட்டது; சோவியத்தை வீழ்த்தி சந்தையை விரிவாக்கி உலகமயத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் உழைப்பையும் செல்வத்தைக் கைப்பற்றி அவர்களின் கையில் பொருட்களைக் கொடுத்ததன் மூலமும் வாங்கும் வக்கற்ற அமெரிக்க மக்களின் கையில் கடனைக் கொடுத்து வாங்க வைத்ததன் மூலமும் இந்தச் சுழற்சியை நீட்டிக்கச் செய்து வந்தார்கள். இந்தச் சுழற்சியின் முடிவில் அமெரிக்காவின் 10 விழுக்காட்டிடம் எல்லா செல்வமும் குவிந்து பெருமளவு மக்கள் கடனாளியாக நிற்கிறார்கள். இப்போது அமெரிக்காவை மீளக்கட்டமைபோம் என்கிறார் பைடன். இதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று அவர் சொல்லவில்லை. பணக்காரர்களின் பையில் கைவைக்கும் தைரியம் அவருக்கு இருக்கிறதா?

உலகப்போரில் தோற்ற முன்னாள் ஏகாதிபத்தியங்கள் அமெரிக்காவிடம் கடன் வாங்கி அதன் உலகச் சுரண்டலில் பங்கேற்று மக்களுக்கு உணவு, கல்வி, மருத்துவத்தை அடிப்படை உரிமையாக்கி அவர்களுடன் சமரசம் செய்து மீண்டன. அமெரிக்கா அப்படியான போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் போர்களின் முடிவில் சீனாவிடம் கடன் வாங்கி ஐரோப்பாவைப் போல சோசலிச திட்டங்களைச் செயல்படுத்தி அவர்களுடன் சமரசம் செய்துகொள்வதும் மீண்டும் தொழில்துறையைக் கட்டமைத்து மீண்டேழுவதும் தவிர்க்கவியலாதது. அவர்களுக்கு ஏற்றுமதி செய்து இந்தியா வளர முடியும் என நினைப்பது பகல் கனவாகத்தான் இருக்க முடியும். ஐரோப்பாவுடன் கூட்டமைத்து அவர்களுக்கு பொருள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து பின்பு அவர்கள் உலகம் முழுவதும் உள்ள சந்தைகளைப் பிடித்து செல்வத்தைப் பெருக்கும் சுழற்சியில் இந்தியா பங்கேற்று பலனடைய முடியுமா? அப்படி நடக்க வேண்டுமென்றால் 1. சீனாவைவிட மேம்பட்ட தொழில்நுட்பமும் உற்பத்தி வலிமையையும் ஐரோப்பா உருவாக்கிக் கொண்டு அவர்களை வீழ்த்த வேண்டும் அல்லது 2. ஒரு போரின் மூலமாக எதிரணியை வீழ்த்தி அதன் உற்பத்தியையும் சந்தையையும் கைப்பற்ற வேண்டும். இந்த இரண்டின் மீதும் நம்பிக்கை வைத்து அவர்கள் பின்னால் செல்வது நம்மை அவர்களின் நவகாலனியங்களில் ஒன்றாகத்தான் மற்றும்.

மக்கள் சார்ந்த சுயசார்பு உற்பத்தியே மாற்று!

இதற்கு மாற்றாக இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட நாம் நமது மக்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்களிடம் செல்லலாம். நம்முடைய பலம் பயிரிடத்தக்க பெரும் நிலப்பகுதி, சூரிய மின்னாற்றல் உற்பத்திக்கான தட்பவெட்ப சூழல், இவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்ய தேவையான பெருமளவு தொழிலாளர்கள் என அனைத்தும் ஓரிடத்தில் இருப்பது. இதை பயன்படுத்த முதல் நிபந்தனை மக்கள் சார்ந்த வலுவான அரசியல். அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை, ஆட்சி, நிர்வாகத்தில் அனைவருக்கும் பங்கு; எல்லோருக்கும் சத்தான உணவு, நவீன கல்வி, மருத்துவம், சுகாதாரம் என்ற மூவர்ண முற்றுருமைக்கு மாற்றான அரசியல் இந்த கொள்கை கொண்டவர்களை அரசியல் அதிகாரத்தில் அமர்த்தும்.

நம்மிடம் இருக்கும் இயற்கை செல்வத்தைக் கொண்டு அரசு இந்த திட்டங்களுக்குச் செலவிடுவதன் மூலம் நாட்டில் ஒரு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்த முடியும். இந்த உற்பத்திக்கான மூலதன தொழில்நுட்ப தேவைக்கு சீனா, மேற்கு ஆகிய இரு தரப்பையும் பங்களிக்க வைப்பதன் மூலம் நவீன தொழில்நுட்பங்களை நாடு கைக்கொள்ளும். நாட்டில் நிலவும் முற்றுருமையை முடிவுக்குக் கொண்டுவந்து பொருட்களின் விலைகளை குறைக்கும். குஜராத்தின் அம்பானி, அதானி என இரு முதலாளிகளின் நலனுக்கு பதிலாக நாடு முழுவதும் உள்ள எல்லா பிராந்திய முதலாளிகளின் நலனையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அது இருக்கும். நமது மக்களின் தேவைக்கும் இந்த நுட்பங்களை கொடுப்பவர்களின் தேவைக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும்போது ஏற்றுமதிக்கான குறைமதிப்பு ரூபாய் பணக்கொள்கையில் இருந்து படிப்படியாக வலுவான ரூபாய் மதிப்பை அடையும் பணக்கொள்கையாக மாறும். நிதி மூலதனம் மற்றும் தொழில்நுட்ப வலுக் கொண்டவர்களின் நேட்டோ கூட்டு, எண்ணெய், எரிவாயு உற்பத்தியாளர்களின் எரிபொருள் ஓபெக் பிளஸ் கூட்டு என்று உருவாகும் நிலையில் உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப நுகர்வாளர்களின் கூட்டை ஏற்படுத்தி மற்றவர்கள் மிகைமதிப்பு நாணயங்களின் மூலம் நம்மை சுரண்டுவதைத் தவிர்க்கலாம்.

இது மக்களின் வாங்கும்திறனைக் கூட்டி நமது மக்களின் நுகர்வை அதிகரிக்கும். இதன்மூலம் உருவாகும் மனிதவளமும் மூலதனமும் இந்த தொழில்நுட்பங்களில் நாம் தன்னிறைவை அடைந்து முழுமையான தொழில்துறைமயமான இறையாண்மையுள்ள சுயசார்பான நாடாக நம்மை மாற்றும். இது எல்லாம் நடந்து எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவில்லை என்றாலும்கூட குறைந்தபட்சம் சத்தான உணவு, தரமான கல்வி, மருத்துவ வசதிகளையேனும் அது வழங்கும். மாறாக அவர்கள் முன்னெடுக்கும் மேற்குலக சார்பு திட்டத்திற்கு வால்பிடித்து அதில் பலனடைவது என்ற பாதையில் சென்று அது உருவாக்கும் நவகாலனிய நாட்டில் மேற்குலகின் நவீன அடிமைகளாகப் போகிறோமா? இல்லை, இதற்கு மாற்றாக இந்த மண்ணின் மக்களை வறுமை, சாதிக் கொடுமைகளில் இருந்து விடுவிக்கும் சுயசார்பான பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்து ஒன்றிய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தெற்கிலிருந்து இந்திய வரலாற்றை திரு(த்தி)ப்பி எழுதப் போகிறோமா?

முற்றும்
பகுதி 1
பகுதி 2

Exit mobile version