Site icon சக்கரம்

நேஷனல் ஹெரால்டும், ஆதாய அரசியலும்!

-ச. அருணாசலம்

நேஷனல் ஹெரால்டு (National Herald)விவகாரம் தற்போது பரபரப்பாகவும், அரைகுறையாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது! ராகுல் காந்தியை அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை செய்து, அலைக்கழித்து வருகிறார்கள்! காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டக் களம் கண்டுள்ளனர்! உண்மையில் நடந்தது என்ன?

மலையை கிள்ளி எலியை பிடித்த கதையாக விசாரணை 11 மணிகளை தாண்டியதும் , தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் விசாரணை தொடர்வதும் காங்கிரஸ் தலைவர்களை தடுப்புக் காவலில் கைது செய்வதும், போராடும் தொண்டர்களை அடித்துத்தள்ளி அநாகரீகமாக நடத்துவதையும் நாம் கண்ணுற்றோம் .

அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் , முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் “மணி லான்டரிங்” வழக்கில் சம்மன் அனுப்பி உள்ளது. வருமான வரித்துறை ராகுல் காந்திக்கு “டிமான்ட்” நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உயர் நீதிமன்றம் ” சோனியாவும் ராகுலும் விசாரணையை எதிர் கொள்ள வேண்டும் ; விசாரணை  நியாயமாக நடைபெற வேண்டும் , விசாரணை செய்வதில் தவறில்லை” என்று கருத்து கூறியுள்ளது!

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி “இது ஒரு பொய் வழக்கு, போலியான முகாந்திரமற்ற வழக்கு, அரசியல் பழி வாங்கவே இவ்வழக்கு கையில் எடுக்கப்பட்டுள்ளது” என்று குரலெழுப்பி உள்ளது.

உண்மையில் இந்த வழக்கு தான் என்ன?

நேஷனல் ஹெரால்டு என்ற ஆங்கில பத்திரிக்கையை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் Associated Journals Limited (AJL)  என்ற நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சி 90 கோடிக்கு மேல் கடன் கொடுத்ததாகவும், அந்த கடன் தொகையை காங்கிரஸ் கட்சி யங் இந்தியா  (Young India) என்ற அமைப்பிற்கு மாற்றியதாகவும்,   அதன் பேரில் ஏ.ஜெ.எல் (AJL) நிறுவனத்தின் 2000 கோடி பெறுமான சொத்துக்களை யங் இந்தியா நிறுவனம் கபளீகரம் செய்து, நேரு குடும்பம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, இது கிரிமினல் குற்றமாகும்’’ என்பது சுப்பிரமணிய சுவாமியின் புகாராகும்! அந்த  அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தான் இவ்வழக்கு.

சில உண்மைகள், சில சரித்திர நிகழ்வுகள்;

1938ம் ஆண்டு ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கையில், மக்களின் நியாயங்களை தூக்கிப்பிடிக்க, பரப்ப ஒரு நாளிதழ் தேவை என்பதால் ஜவகர்லால் நேரு நேஷனல் ஹெரால்டு (National Herald) என்ற பத்திரிக்கையை தோற்றுவித்தார்.

இந்த பத்திரிக்கையை அச்சிட்டு வினியோகிக்கும் பதிப்பக வேலையை  Associated Journals Ltd,(AJL)  என்ற நிறுவனம் செய்தது. இந்த நிறுவனம் நேரு மற்றும் 5,000 தேசிய விடுதலை போராட்ட வீர்ர்கள் இணைந்து 1937ல் ஏற்படுத்திய பதிப்பக நிறுவனமாகும். இப்பதிப்பகம் குவாமி ஆவாஸ் (Qaumi Awaz) என்ற உருதுப் பத்திரிக்கையையும், நவஜீவன் (Navjeevan) என்ற ஹிந்தி நாளிதழையும் நடத்தியது.

அன்றிருந்த விடுதலை வேட்கை நிறைந்த மெத்த படித்த முக்கியமான தேசீய தலைவர்களால் வழிநடத்தப்பட்ட  நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கை அத்தகைய பங்களிப்பினால் விடுதலை போராட்டத்தின்  குரலாகவே ஒலித்தது!

இப் பத்திரிக்கையின் குரலும் அதில் ஜவகர்லால் நேருவினால் தீட்டப்பட்ட தலையங்கங்களையும் கண்டு, அன்றைய  பிரிட்டிஷ் அரசு அஞ்சி நடுங்கி, அலறிப்புடைத்து பத்திரிக்கைக்கு 1942ம் ஆண்டு தடை விதித்தது.  மூன்று வருடங்களுக்குப்பின் மீண்டும் நேஷனல் ஹெரால்டு வெளிவந்தது. காங்கிரஸ் கட்சியினரால் தொடங்கப்பட்டு அக் கட்சியினால் வழிநடத்தப்படும் இந்த நேஷனல் ஹெரால்டு  நாளிதழ் இந்தியாவின் தலைசிறந்த நாளிதழாக அறியப்பட்டதாகும்!

பல நிதி நெருக்கடிகளினால் மீண்டும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை 2008ம் ஆண்டு தனது சேவையை நிறுத்திக்கொண்டது. 2002 முதல் 2011ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி இந்த பத்திரிக்கைக்கு சுமார் 90கோடி ரூபாய்கள் கொடுத்து – வட்டியில்லா கடனாக – உதவியுள்ளது. இத்தொகை பெரும்பாலும் ஆசிரியர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களின் ஊதியம் மற்றும் நடைமுறைச் செலவினங்களுக்கே சென்றதாக கணக்குள்ளது.

2010ம் ஆண்டு இந்த 90 கோடி கடனை காங்கிரஸ் கட்சி ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் பொறுப்பில் இந்த தொகையை மாற்றி அமைத்தது. அப்படி ஏற்படுத்தப்பட்ட  non-profit இந்திய கம்பெனிகள் சட்டம் செக்‌ஷன் 25கீழ் ஏற்படுத்தப்பட்ட தனிப்பட்ட நிறுவனமே யங் இந்தியா லிமிட்டெட்டாகும் !

இதன் இயக்குனர்களாக சுமன் துபே, சாம் பிட்ரோடா , சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்ணான்டஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இது இலாப நோக்கமில்லாத நிறுவனமாதலால், இதன் இயக்குநர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் எவ்வித கைமாறும், டிவிடென்டும் அளிக்கப்படமாட்டாது. யங் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் மட்டுமல்ல, ஏ.ஜெ.எல் நிறுவனமும்கூட இலாப நோக்கில்லாத செக்‌ஷன் 25 கீழ்வரும் நிறுவனங்களாகும் . இந்த உண்மை  இந்திய வரி விதிப்பாணையங்களுக்கும் புரியும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் தெரியும்.

சோனியா, ராகுல்  வசம் தலா 38 சதவிகித பங்குகள் உள்ளன! மீதி 26% பங்குகள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்ணான்டஸ் வசம்  உள்ள காரணத்தால் சுப்பிரமணிய சுவாமி , காந்தி குடும்பத்தினர் முறைகேடாக ஏ.ஜெ.எல்லின் சொத்துக்களை கைவசப்படுத்தவே இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி,மும்பை, கல்கத்தா, லக்னோ போன்ற பல நகரங்களில் உள்ள கோடிக்கணக்கில் மதிப்பு வாய்ந்த ரியல் எஸ்டேட் சொத்துக்களை அபகரிக்கவே இந்த நாடகமெல்லாம் என்கிறது சுவாமியின் குற்றச்சாட்டு.

காங்கிரசின் பதில்தான் என்ன?

”இது ஒரு விசித்திரமான வழக்கு” என்கிறது காங்கிரஸ் கட்சி. ”பணப் பரிமாற்றம் ஏதும் இல்லாத போது பணக்கடத்தல் எங்கிருந்து வந்தது?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறது காங்கிரஸ் கட்சி.

நேஷனல் ஹெரால்டு பதிப்பத்தார் ஏ.ஜெ.எல் நிறுவனம் நிதி பற்றாக்குறையால் அல்லலுற்ற நேரம் கடன் கொடுத்து உதவியது காங்கிரஸ் கட்சி. ஏனெனில், நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையும் ஏ.ஜெ.எல் நிறுவனமும் காங்கிரஸ் வளர்ச்சிக்காக நடத்தப் பெற்று வரும் நிறுவனங்களாகும். அந்த வகையில் அமைந்தது தான் இந்த கடனுதவி. இதனால், ஹெரால்டு நிறுவனம் கடன் சுமையிலிருந்து விடுபட்டு தன் பணிகளை தொடருகின்றது.

ஏ.ஜெ.எல் நிறுவனம்தான் இன்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் உரிமையாளர், அச்சீட்டாளர், பதிப்பீட்டாளர் . அந்நிறுவனம் எந்த சொத்துக்களையும் பெயர்மாற்றம் செய்யவோ, உரிமை மாற்றம் – காங்கிரஸ் கட்சிக்கோ, யங் இந்தியா நிறுவனத்திற்கோ – செய்யவில்லை என்று அறுதியிட்டு கூறுகிறது.

# கடன் தொகையை யங் இந்தியா நிறுவனத்திற்கு ஏன் மாற்ற வேண்டும்?

# இப்பொழுது யங் இந்தியா நிறுவனத்தின் அங்கமாக ஏ.ஜெ.எல் நிறுவனம் மாறிவிட்டதே..?

# அந்நிறுவனத்தின் சொத்துக்களெல்லாம் இன்று யங் இந்தியா கைக்கு போய்விட்டதே..?

# இறுதியாக ஏ ஜெ எல் நிறுவனம் ஏன் தனது சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயலவில்லை? மோதிலால் ஓரா எப்படி மூன்று பதவிகளில் – அகில இந்திய காங்கிரஸ் பொருளாளர், ஏ.ஜெ.எல் நிறுவனத்தின் எம் டி. மற்றும் சேர்மன், யங் இந்தியா நிறுவனங்களின் பங்குதாரர் ஆகிய மூன்று பொறுப்புகளில் இருக்கிறாரே…?

இது போன்ற கேள்விகளை சுப்பிரமணிய சுவாமி தரப்பினரும் பாஜகவில் சிலரும் எழுப்புகின்றனர்.

சற்று கூர்ந்து கவனித்தால், இதன் அபத்தம் நமக்குப் புரிய வரும் . முதலாவதாக மோதிலால் வோரா 2002 முதல் ஏ.ஜெ.எல் நிறுவனத்தின் சேர்மனாகவும் எம் டி யாகவும் தொடர்ந்து அவரது இறுதிக்காலம் வரை இருந்து வந்துள்ளார் . மேலும் ஏ.ஜெ.எல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் எண்ணிக்கை சுமார் 1000மாக குறுகிய நிலையில், அவர்கள் யாரும், கடன் பெற்றதற்கோ , அதற்கு ஈடான பங்குகளை யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றியதையோ ஆட்சேபிக்கவில்லை என்ற சட்டப் பின்புலத்தில் இந்த குற்றச்சாட்டுகளின் நோக்கமும், பித்தலாட்டமும் அனைவருக்கும் விளங்கும்.

அடுத்து வருமான வரித்துறை ஏற்கனவே யங் இந்தியா சமர்ப்பித்த 2011-2012 வருமான வரிக் கணக்கை ஏற்றுக் கொண்டது. அந்நிர்வாகம் இரண்டு வருடங்கள் கழித்து மாற்றியமைத்து புதிய டிமான்ட் நோட்டீஸ் ராகுல் காந்திக்கு அனுப்பி உள்ளது. ஆனால், எந்த பரிமாற்றமும் லாப நோக்கில் நடைபெறவில்லை. ஈடாகத்தான் பங்குகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால், வருமான அதிகரிப்பு ஏதுமில்லை என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

வருமான வரித்துறை தாக்கீதின் அடிப்படையில் விசாரணை தொடங்கி பல வருடங்களாகியும்  அமலாக்கத்துறையோ  மற்ற மத்திய அரசின் நீண்ட கரங்கள் எதுவும் வழக்கு பதிவு செய்யவில்லை  F I R போடக் கூட முன் வரவில்லை!

மணி லாண்டரிங் ,விசாரணை ,அமலாக்கப்பிரிவு நடவடிக்கை என்று பரபரப்பு செய்திகளை, பரப்பி, அரசியல் ஆதாயம் அடைய மோடி அரசு முயற்சிக்கிறது . காங்கிரஸ் தலைவர்களை கிரிமினல் குற்றவாளிகள் போல் சித்தரித்து, பழி வாங்க பா.ஜ.க அரசு முயலுகிறது என்று அபிஷேக் மனுசிங்வி தெரிவிக்கிறார் .

மடியில் கனமில்லாவிட்டால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியதுதானே என்று பா.ஜ.கவினர் கேள்வி எழுப்ப காங்கிரஸ் கட்சியனரோ, ராகுல் காந்தி படத்தை போட்டு ”நான் ஒன்றும் சவார்க்கர் அல்ல, மன்னிப்பு கேட்க, நான் ராகுல் காந்தி, விசாரணையை எதிர் கொள்வேன்” என்ற போஸ்டர்களை டெல்லி முழுவதும் ஒட்டியுள்ளனர் . சமூக வலைதளத்திலும் இது வைரலாக பரவியுள்ளது.

வழக்கு நடந்தால் (ஒரு வேளை) தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை விட, இப்பொழுது நடக்கும் நாடகத்தில் கிடைக்கும் அரசியல் இலாபத்தில் தான் ஆளுங்கட்சிக்கு அதிக அக்கறை உள்ளது !

Exit mobile version