மூன்றாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளரகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சீத்தாராம் யெச்சூரியுடனான பேட்டி.
சந்திப்பு: வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் தமிழில்: அ.குமரேசன்
இந்தச் சூழலில், இந்தியாவின் ஜனநாயகத்தையும், கடுமையாகப் போராடி பெற்ற சுதந்திரத்தையும், நமது அரசமைப்பு சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க, பா.ஜ.க தனிமைப்படுத்தப்படுவதும் முறியடிக்கப் படுவதும் முற்றிலும் முக்கியத் தேவையாகிறது. ஆனால், முதலிலேயே நான் சொன்னது போல, இந்தப் போராட்டத்திற்குக் குறுக்குவழிகள் கிடையாது. பாஜக-ஆர்எஸ்எஸ் வஞ்சக ஆட்டங்களைக் கண்டு வந்திருக்கிற, அவர்களது சதிகளால் சலிப்படைந்துள்ள மக்கள், பஞ்சாப், தமிழ்நாடு, கேரளம் போன்ற சில மாநிலங்களில், தற்போதைய சூழலில் சாத்தியமான வகையில் சங் பரிவாரத்திற்கு மாற்றைத் தேடுகிறார்கள்.
கேள்வி: கண்ணூர் மாநாட்டில் நீங்கள் உங்கள் தொடக்க உரையிலும் நிறைவுரையிலும் நான்கு விஷயங்களுக்கு அழுத்தம் கொடுத்தீர்கள். மக்களுக்கு அதிகரித்து வரும் பொருளாதாரச் சிரமங்கள், குறிப்பாக விவசாயிகளின் துயரங்களும் குமுறவைக்கும் வேலையின்மை; அரசிய லில் தொடரும் வலதுசாரித் திருப்பம் மதவாத அணித் திரட்சி; சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற ஓராண்டுகால விவசாயிகள் போராட்டம் உள்பட மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிரான வெகுமக்கள் இயக்கங்கள்; இடதுசாரிக் கட்சிகள், திமுக உள்ளிட்ட மாநில மதச்சார்பற்ற கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவையே அந்த நான்கு விஷயங்கள். இவற்றைக் கையாள்வதில் கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கிற உங்களின் திட்டம் என்ன?
பதில்: இந்த எல்லா அம்சங்களும் இவற்றோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தனித்தனியாகவும் ஒரே நேரத்திலும் கையாளப்பட வேண்டியவை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக இதைச் செய்து வருகிறது. உங்களுக்கே தெரியும், சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற ஓராண்டு காலப்போராட் டம், விவசாயக் களத்தில் ஒரு பத்தாண்டு காலமாக நடந்திருக்கிற பல்வேறு போராட்டங்களின் உச்சம் தான். விவசாயிகளின் கடுமையான பொருளாதாரத் துயரத்தை முன்வைத்து அந்தப் போராட்டங்கள் நடந்தன. ஹைதராபாத்தில் நடைபெற்ற முந்தைய மாநாடு, விவசாயக்களத்தின் இந்தப் போராட்டங்களைக் குறிப்பாக எடுத்துக்கொண்டது. 2018இல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நில உரிமை இயக்கத்தில் (பூமி அதிகார் அந்தோ லன்) 165க்கு மேற்பட்ட அமைப்புகள் எப்படிப் பங்கேற்றன என்பது பற்றி அந்த மாநாடு சுட்டிக்காட்டி யது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தப் போராட் டங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன, தீவிரமடைந்துள்ளன என்பது தெளிவு. விவசாயிகளின் சங்கங்கள், இதர வேர்மட்ட இயக்கங்கள், இடதுசாரி கள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் பெருந்திரளான கூட்டுச் செயல்பாட்டிற்கு இந்தப் போராட்டங் கள் இட்டுச் சென்றுள்ளன. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற ஓராண்டு கால விவசாயிகள் போராட்டத்தில் இதுதான் பிரதிபலித்தது.
குமுற வைக்கும் வேலையின்மைத் துயரம் நேரடியாக இளைஞர்களைத் தாக்குகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் அவர்கள்தான். மக்கள்தொகை அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இளைய சமுதாயம் நரேந்திர மோடி அரசாலும் பாஜக-வாலும் வஞ்சிக் கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அளிக்கப் பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் பொய்யாக்கப் பட்டுவிட்டன. இந்தத் துரோகத்தால் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் நாடு முழுக்கத் திரும்பத் திரும்ப வெளிப்படுகிறது. தன்னெழுச்சியான தீவிர மான வெளிப்பாடுகளைக் காணமுடிகிறது. ஆனால் அந்த வெளிப்பாடுகள் பெரும்பாலும் அமைப்பு சார்ந்த திட்டமிடலோ, கட்டமைப்போ இல்லாமல் நடைபெறுகின்றன. 23ஆவது மாநாடு இந்த நிகழ்ச்சிப் போக்குகளைக் கவனத்தில் கொண்டது. வேலையின்மைப் பிரச்சனையையும் ஒட்டு மொத்தத்தில் இந்திய மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அது ஏற்படுத்தியுள்ள துயரத்தையும் கையில் எடுத்துக்கொள்வதற்கான ஒரு தெளிவான அமைப்பு சார்ந்த திட்டத்தை உருவாக்க முடிவு செய்திருக்கிறது. நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று – கோவிட் பெருந்தொற்று வேலை இழப்புகளையும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. வாடுகிற மக்கள் அனைவ ருக்கும் நிவாரணம் அளிப்பதிலிருந்துவெகு தொலைவு விலகி, பா.ஜ.க அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலைகளைத் தினமும் உயர்த்திப் பொருளாதாரச் சுமைகளைத் தொடர்ந்து சுமத்தி வருகிறது. இது பல மடங்கு பணவீக்கத்துக்கு இட்டுச்செல்கிறது. அதிகரித்துவரும் வேலையின்மை, வறுமை, பட்டினிக்கு மேலாக இது மக்களின் வாழ்க்கையைச் சூறையாடுகிறது. ஆனால் மோடி அரசுக்கு இதுபற்றியெல்லாம் சிறிதும் கவலையில்லை.
ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடும் கட்சிகளோடும் ஒரு விரிந்த மேடையில் இந்தப் பிரச்சனைகளை எடுத்துக்கொள்வதற்கான அமைப்பு சார்ந்த முயற்சிகளையும், பரப்புரை இயக்கம் சார்ந்த முயற்சிகளையும் கட்சியின் அகில இந்திய மாநாடு முடுக்கிவிட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் முடிவு பெறாத பணிகளோடு இந்த இயக்கம் மேற்கொள்ளப்படும்.வேளாண் சட்டங்களை விலக்கிக் கொண்டபோது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மோடி அரசின் அப்பட்ட மான துரோகத்தையும் முன்வைத்து இயக்கம் தீவிரப்படுத்தப்படும்.
கேள்வி: குறிப்பான பிரச்சனைகளையும் கொள்கைகளையும் சட்டங்களையும் இந்த இயக்கங்கள் எவ்வளவுதான் வெற்றிகரமாக எடுத்துக்கொண்டா லும், அரசியல் மட்டத்திலும் தேர்தலிலும் பிரதி பலிக்காத வரையில் இந்த இயக்கங்களால் ஒரு நிலையான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? பல ஆண்டுகளாகவே மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் செங்கொடியின் கீழ் பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் நடைபெறுவதாகக் கூறி வருவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் தேர்தல் வாக்குப்பதிவு என்று வருகிறபோது அந்தப் போராட்டங்களில் பங்கேற்ற அதே மக்கள் பச்சைக்கொடியையோ காவி கொடியையோ தூக்குவதைப் பார்க்கிறோம். இப்போதும் அதே நிலைமைதான் இருக்கிறது என்பது உண்மைதானே? விவசாயிகள் போராட் டத்தில் விவசாயிகள் சங்கம் பெருந்திரளாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பங்கேற்றது என்ற போதிலும், கடந்த சில ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தல்களில் இடதுசாரிகளால் திட்டவட்டமான அரசியல் பலனை அடைய முடியவில்லையே…
பதில்: தான் மேற்கொண்டுள்ள பணிகளை நிறை வேற்றுவதற்குக் குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்கு அறியும். மக்களிடையே பரவலாக ஒரு இந்துத்துவ அடையாளம் பற்றிய கருத்தாக்கத்தை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இரண்டும் வெற்றி பெற்றுள்ளன.வெறுப்பும் வன்முறையும் பரவுவதன் மூலம் மதவாத அடிப்படையில் அணிபிரிப்பது கூர்மையாவது இந்திய சமு தாயத்தை இரு துருவங்களாகப் பிரிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அரசியலாகவும் தேர்தலுக்கா கவும் மக்களைத் திரட்டுவதற்கான மையத் தளமே இவ்வாறு அணிபிரிவது கூர்மையடைகிற போக்குதான்.. உண்மையில் மதவாத அடிப்படையிலும் குறுகிய கண்ணோட்டங்களுட னும் பிளவுபடுத்தப்படுவதை மீறி, மக்களின் மையமான பிரச்சனைகளுக்காகவும் பொருளாதாரத் துயரங்களை எதிர்த்தும் பெருந்திரள் இயக்கங்கள் எழவே செய்கின்றன. ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்பரிவாரத்தின் பிரச்சார எந்திரம் திட்டமிட்ட முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திசைதிருப்புகிற பிளவுபடுத்துகிற பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வருகிறது. வெறும் மூன்று மாத காலத்தில் கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனையைக் கிளப்பிவிட்டது. அதை நாடு முழுவதும் பரப்ப முயல்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்றதொரு முன்னணிக் கல்வி நிறுவனத்தின் அறிவார்ந்த, சுதந்திரமான பண்பாடு, சங் பரிவார அடியாட்களின் வன்முறை உள்ளிட்ட வழிமுறைகளில் தாக்கப்படுகிறது. அந்த வரிசையில் கடைசியாக வந்ததுதான் ராம நவமி விழாவில் அசைவ உணவுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்.
எளிமையாகச் சொல்வதென்றால், எங்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் மீது மத்திய விசாரணை முகமைகள் ஏவப்படுகின்றன.அரசாங்கத்துடன் மாறுபடுவது தேச விரோதச் செயலாகச் சித்தரிக்கப்படுகிறது. மோடி ஆட்சிக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்படுகின்றன. இந்தச் சூழலில், இந்தியாவின் ஜனநாயகத்தை யும், கடுமையாகப் போராடி பெற்ற சுதந்திரத்தையும், நமது அரசமைப்பு சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க, பா.ஜ.க தனிமைப்படுத்தப்படுவதும் முறியடிக்கப்படுவதும் முற்றிலும் முக்கியத் தேவையாகிறது. ஆனால், முதலிலேயே நான் சொன்னது போல, இந்தப் போராட்டத்திற்குக் குறுக்குவழிகள் கிடையாது. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் வஞ்சக ஆட்டங்களைக் கண்டு வந்திருக்கிற, அவர்களது சதிகளால் சலிப்படைந்துள்ள மக்கள், பஞ்சாப், தமிழ்நாடு, கேரளம் போன்ற சில மாநிலங்களில், தற்போதைய சூழலில் சாத்தியமான வகையில் சங் பரிவாரத்திற்கு மாற்றைத் தேடுகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணியின் வெற்றியையும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியையும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் வெற்றியையும் இந்தப் பின்னணியில்தான் காண வேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க அணியில் எங்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது.
கேள்வி: பாஜக-வைத் தனிமைப்படுத்துவதும், முறியடிப்பதும் முக்கியத் தேவை என்று வலியுறுத்துகிற நீங்கள், காங்கிரஸ் கட்சி இந்துத்துவா பிரச்சனையில் தனது நிலைபாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தனது அமைப்பை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறீர்களே…
பதில்: மதச்சார்பின்மையில் எங்களுக்குள்ள தீர்மானகரமான உறுதிப்பாட்டின் வலிமையிலிருந்தும், மதவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் சமரசமின்றி அதை எதிர்ப்பதன் வலிமையிலிருந்தும் அதை நாங்கள் சொல்கிறோம். குறிப்பாக மதவாதத்தின் பெரிய வகையான, சங்பரிவாரத்தால் தீவிரமாகப் பரப்பப்படுகிற இந்துத்துவா மதவெறியை எதிர்ப்பதன் வலிமையிலிருந்து அதை நாங்கள் சொல்கிறோம். இந்துத்துவா தொடர்பான நிலைப்பாட்டில், மென்மையான இந்துத்துவா ஏற்கத்தக்க அரசியல் வழியாக இருக்குமா என்றெல்லாம் குழப்பம் இருப்பது உங்களுக்கு உகந்ததல்ல. இதில் தெளிவாக இருப்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மதவாதம்-கார்ப்பரேட் கூட்டின் மூலம் மக்கள் மீது பலமுனைத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. தீவிரமான நவீன தாராளமயச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது, தேசத்தின் சொத்துகளைச் சூறையாடுவது, கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தை வளர்ப்பது, அரசியல் ஊழலைச் சட்டப்பூர்வமாக்குவது, முழுமையான அதிகாரமயமாக்கலைத் திணிப்பது உள்ளிட்ட பலமுனைத் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாஜக-வையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்துப் போராடுகிறவர்கள் இந்த நிலைமைகளைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
கேள்வி: அரசியல் பத்திரிகையாளர்கள் என்ற முறையில் நாங்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உங்களது அரசியல் கருத்துக்களை மிகவும் மதிக்கிறார் என்று கேள்விப்படுகிறோம். தனிப்பட்ட உரையாடல்களில் அவர் உங்களை “பாஸ்” என்று குறிப்பிடுவதாகவும் எங்களுக்குச் சொல்லப்படுகிறது. ஆனாலும் மதவாதப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் அணுகு முறை குறித்து நீங்கள் இத்தகைய கருத்தை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்…
பதில்: எனக்கு மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களோடு பல மட்டங்களிலும் நட்பு உண்டு. மதவெறிக்கு எதிராகத் தொடர்ச்சியான, உறுதியான போராட்டம் நடத்துவதன் தேவை குறித்து அவர்கள் எல்லோரிடத்திலும் நான் பேசி வருகிறேன். எனது வாழ்க்கையைப் பொறுத்தவரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில், கட்சியில் எங்களது சக தோழர்களைப் பொறுத்தவரையில் தீவிர இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிப்பது எங்களது முதன்மையான நோக்கமும் பணியுமாகும். இந்தப் போராட்டத்தில் உறுதிப்பாட்டுடன், திட்டவட்டமான முறையில் இணையக் கூடிய எவருடனும் சேர்ந்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன்.
ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பற்றிச் சொல்வது இதர பல மாநிலக் கட்சிகளுக்கும் பொருந்தும். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள், பிஜு ஜனதா தளம் கூட, இந்துத்துவ மதவாதம் பற்றிய பிரச்சனையில் என்ன நிலைபாடு கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது. மதவெறிக்கு எதிராக உறுதிப்பாட்டுடன், திட்டவட்டமான முறையில் போராட வேண்டியதன் தேவை குறித்து அவர்களுடனும் நான் பேசி வருகிறேன். எங்கள் தரப்பில், அனைத்து இடது சாரி, ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து, ஒரு கூட்டு முன்னணியை உருவாக்குவதற்கு இடதுசாரிக் கட்சிகள் தெளிவான முறையில் பாடுபட்டு வருகிறோம்.
2024 தேர்தலுக்குப் பின் மதச்சார்பற்ற சக்திகளின் ஐக்கிய முன்னணி ஆட்சியமைக்கும்
கேள்வி: 2024 பொதுத்தேர்தலில் தேசிய அளவிலான மதச்சார்பற்ற மாற்று அணி உருவாவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் இதன் பொருளா?
பதில்: ஆட்சிக்கு மாற்றாக, தேசிய அளவிலான மாற்று அமைப்பதில் இந்தியாவின் வரலாற்றைப் பார்த்தீர்களானால், ஆகப் பெரும்பாலும் தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் அவ்வாறு அமைக்கப்பட்டு வந்துள்ளது. மாற்று அணிகள் ஆட்சியமைத்த 1989, 1996, 2004ஆம் ஆண்டுகளில் இதுதான் நிலைமை. 1989இல் விஸ்வநாத் பிரதாப் சிங் தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து இந்த வரலாற்றுத் தடத்தை நீங்கள் பார்க்கவேண்டும். மிகக் குறிப்பாக, 1996இல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்ததிலிருந்து இதை நீங்கள் பார்க்க வேண்டும். அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான 13 நாள் பாஜக-தேஜகூ அரசு வீழ்ந்த பிறகு அந்த ஆட்சி அமைக்கப்பட்டது. மாற்று அரசு அமைக்கப்பட்டாக வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக இருந்தது. அதற்கான குறைந்தபட்ச பொது திட்டத்தை உருவாக்குவதில், பொதுச்செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் தலைமையில் கட்சி முக்கியப் பங்காற்றியது. 2004இல், வாஜ்பாய் தலைமையிலான 6 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு மாற்றாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்ததிலும் இப்படித்தான் நடந்தது.
குறைந்தபட்ச பொதுத் திட்டம் ஒரு கொள்கை மாற்று. ஆனால் ஒவ்வொரு முறையும், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பது என்பதில் எங்கள் கட்சி தெளிவாக இருந்து வந்துள்ளது. நான் பலமுறை சொல்லியிருப்பது போல, இவ்வாறு “வெளியிலி ருந்து ஆதரவு” அளிப்பது என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு அறிவுச் சொத்துரிமை இருக்கிறது. அதையே இப்போதும் திரும்பச்சொல்ல வேண்டிய நிலையில், இத்தகைய நுணுக்கங்களைத் தாண்டி, இந்த நாட்டில் அரசியல் உட்பட அனைத்திலுமே பன்முகத்தன்மை இருப்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். வேறு சொற்களில் சொல்வதானால், இந்தியா தனது அரசியல் கட்டமைப்பிலேயே, பலவகைகளில் சமுதாயத்தில் பல்வேறு வட்டாரங்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிற ஒரு கூட்டமைப்புதான். சமுதாயத்தின் பன்முகத் தன்மைதான் அரசியல் பன்முகத்தன்மை யாகவும் பிரதிபலிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே சொல்லி வந்திருக்கிற கருத்து இது. இந்தப் பன்முகத் தன்மையை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும், மாநில அளவில் அந்த புரிதலுடன் கூடிய சமநிலையை உருவாக்க வேண்டும். அதன் ஒட்டுமொத்த விளைவுதான் மையத்தில் மாற்று ஆட்சியை உங்களுக்கு வழங்கும். இந்த நடைமுறை நமது ஜனநாயகத்தின் முதிர்ச்சியையும் காட்டுகிறது. ஆகவே எடுத்த எடுப்பிலேயே தேசிய மாற்று என்ற கருத்தோடு நீங்கள் போக வேண்டும் என்பதில்லை. தேர்தல் கூட்டணியைக் கட்டும்போதோ, கொள்கை மாற்றை உருவாக்கும் போதோ புரிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம் இது.
கேள்வி : இந்தப் புரிதலுக்கு வருவதில் காங்கிரஸ் கட்சி எங்கே பொருந்துகிறது? ஒரு தேசியக் கட்சி என்ற வகையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய தேசிய அளவிலான ஓர் ஐக்கியக் கூட்டணியை அந்தக் கட்சி விரும்பக்கூடும்…
பதில் : காங்கிரஸ் கட்சியின் வழிமுறை அல்லது திட்டம் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அடிப்படையான சில எதார்த்த நிலைமைகள் உள்ளன. அண்மையில் நடந்த தேர்தல்களில், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் நடந்தது என்ன? அடிப்படையாக பாஜக-வுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையேயான போட்டியாகத்தான் அங்கே தேர்தல் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 13 சதவீத வாக்குகளை பெற்றது, ஆனால் ஒரு இடம்தான் அதற்குக் கிடைத்தது. ஒற்றைப்படை சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன.ஆகவே அங்கே காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பங்கு இல்லை. எங்கள் கட்சி அதிக இடங்களில் போட்டியிடவில்லை. மதச்சார்பற்ற வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க விரும்பினோம். மாநிலம் முழுவதும் பரவலாக சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவளித்தோம். மற்றொரு பெரிய மாநிலமான பீகாரிலும் அடிப்படையில் பாஜக, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சுற்றியே அரசியல் நிகழ்வுப்போக்கு அமைந்திருக்கிறது. தென்னிந்தியாவை எடுத்துக் கொண்டால் கர்நாடகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு மையமான இடத்தை வகிக்கிறது?
அதேபோலத்தான் இடதுசாரிக் கட்சிகளும். தென்னிந்தியாவில் கேரளத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இடதுசாரிகள் மையமான இடத்தை வகிக்கவில்லை. ஒடிஷா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோ இடதுசாரிகளோ தற்போது மையமான பங்களிப்பை வழங்குகிற இடத்தில் இல்லை. தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கின்றன. ஆகவே மதவாதத்தையும், நாடு முழுக்கக் குறுகிய இந்து அடையாளத்தை ஏற்படுத்தும் அதன் திட்டங்களையும் எதிர்த்துப் போராட விரும்புகிறவர்கள் இந்தியாவின் இந்த அரசியல் பன்முகத்தன்மையை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
கேள்வி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முந்தைய மாநாட்டிலிருந்தே, பாஜக-வுக்கு மதச்சார்பற்ற மாற்று அமைப்பதில் காங்கிரஸ் கட்சியின் பங்கு ஒரு தீவிரமான விவாதத்திற்கும் குழப்பத்திற்கும் உரிய விஷயமாக இருந்து வருகிறது. இந்த மாநாட்டிலும், இந்தி யாவின் மிக மூத்த கட்சி மதச்சார்பற்ற அணியின் ஒரு அங்கமாக இருக்கக் கூடாது என்று விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன…
பதில் : காங்கிரஸ் கட்சியின் பங்கு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் குழப்பம் எதுவும் இல்லை. உண்மையில், ஹைதராபாத் மாநாட்டில் எடுக்கப்பட்ட நிலைபாட்டையே கண்ணூர் மாநாடும் வலியுறுத்தியிருக்கிறது. புதிய நிலைபாடு எதுவும் மேற் கொள்ளப்படவில்லை. ஹைதராபாத் மாநாட்டுத் தீர்மானத்தில், காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வு தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதாக இருந்த ஒரு வரி திருத்தப்பட்டு அரசியல் கூட்டு என மாற்றப்பட்டது. அப்போதிருந்து காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் கூட்டு இல்லை என்பதே எங்கள் நிலைபாடாக இருந்து வருகிறது. ஆனால், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களின் பிரச்சனைகளுக்கான பெருந்திரள் போராட்டங்களி லும் காங்கிரஸ் கட்சியுடன் இவ்வாறு உறவு வைத்துக் கொள்வது என்பது குறித்தும் ஹைதராபாத் மாநாடு வரையறுத்துள்ளது. இந்த அளவுகோலின் அடிப்படையில் நாங்கள் இணைந்து செயல்படுவது என தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
தேர்தல்களைப் பொறுத்தவரையில், பாஜகவுக்கு எதிரான அதிகபட்ச வாக்குகள் பதிவாவதை உறுதிப் படுத்தும் வகையில் பொருத்தமான வேண்டுகோளை எங்கள் கட்சி விடுக்கும், உரிய தேர்தல் அணுகுமுறை களை வகுக்கும். முந்தைய இரண்டு மாநாடுகளிலி ருந்து மாறுபட்ட இந்த நிலைபாடு மதச்சார்பற்ற கட்சிகளிடையே கூடுதல் வரவேற்பைப் பெற்று வரு கிறது. இந்த அளவுகோல்களின் அடிப்படையில் ஒன்று படும் எதிர்க்கட்சிகள், அதாவது நேரடிக் கூட்டாகவும், பல்வேறு மாநிலங்களில் பிரச்சனைகளின் அடிப் படையிலான புரிதலுடனும் ஒன்றுபடுகிற எதிர்க்கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை எதிர்த்து நிற்கும் என நான் உறுதியாகக் கருதுகிறேன். மாநிலங்களில் இதைச் செய்த பிறகு தேசிய அவில் ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்திற்கான ஒரு கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் இது நடைபெறும்.2024 தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற சக்திகளின் ஐக்கிய முன்னணி அரசு அமைக்கும்.
கேள்வி : முந்தைய மாநாட்டுக்குப் பிறகு அளித்த பேட்டியில், நீங்கள் பெருமுயற்சி செய்தும், கட்சியின் அரசியல் தலைமைக்குழுவுக்குள் தலித் தலைவர் ஒருவரைக் கொண்டுவர முடியாதது குறித்த ஏமாற்றத்தை நீங்கள் வெளிப்படுத்தினீர்கள். இந்த முறை அரசியல் தலைமைக்குழுவில் தலித் ஒருவர் இடம் பெற்றிருக்கிறார் – ராமச்சந்திர தோம்…
பதில்: உண்மையிலேயே கடந்த முறை அது ஒரு ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மாநாட்டிற்குப் பிறகு உங்களுக்கு நான் அளித்த பேட்டியில், இதைச் சரிப்படுத்த நாங்கள் அக்கறையுள்ள முயற்சிகளை மேற்கொள்வோம் என்று சொன்னேன். உண்மையிலேயே அந்த வாக்குறுதியைக் கட்சி இப்போது நிறைவேற்றியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் இது வெறும் அடையாளப்படுத்தும் நடவடிக்கை அல்ல. இடதுசாரி இயக்கங்களுக்கும் தலித் இயக்கங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிற, துடிப்புமிக்கதோர் இணைப்பை ஏற்படுத்துகிற செயல்.
கிட்டத்தட்ட பத்தாண்டு காலத்தில் இந்த இயக்கங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம். இதில் கணிசமான இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்திருக்கிறது. “ஜெய் பீம்-லால் சலாம்” (ஜெய் பீம்- செவ்வணக்கம்) என்ற முழக்கமும், “லால்-நீல் சலாம்” (சிவப்பு-நீல வணக்கம்) என்ற முழக்கமும் நாடு முழுவதும் இந்த மேடைகளில் எழுப்பப்படுகின்றன. மிகுந்த முன்னுரிமைக்குரிய களமாக இதனைக் கட்சி கண்டறிந்துள்ளது. அரசியல் தலைமைக் குழுவில் தோம் இணைக்கப்பட்டிருப்பது இந்த முன் னுரிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதே போன்று ஒரு முக்கியமான விஷயம், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அவர். மேற்கு வங்க மக்களிடையே புகழ்பெற்ற ஒரு மருத்துவரும் கூட.
மூலம்: ‘BJP’s defeat imperative to protect democracy’: Sitaram Yechury