Site icon சக்கரம்

இடதுசாரி பாதையில் பயணிக்கும் இலத்தீன் அமெரிக்க நாடுகள்

2J1JPJA Presidential candidate for the political alliance Pacto Historico Gustavo Petro (Left) and his running mate for Colombia's vice-presidency Francia Mar

– அனில் ராஜிம்வாலே (Anil Rajimwale)

லத்தீன் அமெரிக்க நாடுகள் இடதுசாரி பாதையில் தொடர்ந்து முன்னேறுகின்றன. பெரு, ஹாண்டுரஸ் மற்றும் சிலி எனும் வரிசையில் தற்போது கொலம்பியாவும் ஒரு இடதுசாரி தலைவரை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் உள்ள 12க்கும் அதிகமான நாடுகளில் தேர்தல் முறை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கங்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ளன.

2022 மே 29 அன்று கொலம்பியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஐந்து வேட்பாளர்களில் ஒருவர் கூட 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை. எனவே, ஜூன் 19 அன்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டாவது சுற்றில் இடதுசாரி மற்றும் இதர முற்போக்கு சக்திகளின் கூட்டணி (Historic Pact ) சார்பாக குஸ்தவோ பெட்ரோ (Gustavo Petro) மற்றும் வலதுசாரி வேட்பாளராக ரொடோல்ஃபோ ஹெர்னாண்டஸ் (Rodolfo Hernandez) ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. பெட்ரோ அணி சார்பாக துணை அதிபர் பதவிக்கு பிரான்சியா மார்க்கசும் (Francia Márquez), ஹெர்னாண்டஸ் அணி சார்பாக மெர்லின் காஸ்டில்லோவும் (Marelen Castillo) போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெட்ரோ 1,12,81,013 (50.44%) வாக்குகள் பெற்றார். ஹெர்னாண்டஸ் 1,05,80,412 (47.31%) வாக்குகள் பெற்றார். குஸ்தவோ பெட்ரோ இதுவரையில் மூன்று முறை அதிபர் தேர்லில் போட்டியிட்டுள்ளார்.

கொலம்பியாவில் விகிதாச்சார தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது. கொலம்பிய அதிபரின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் அமைப்பின் 191வது சரத்துப்படி, அதிபர் பதவிக்குப் போட்டியிடும் நபர், பிறப்பால் கொலம்பிய நாட்டு குடிமகனாகவும், 30 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

போகோடா மாநகரத்தின் முன்னாள் மேயராக பதவி வகித்த குஸ்தவோ பெட்ரோவை கடந்த அதிபர் தேர்தலில், இவான் டியூக் தோற்கடித்தார். அதிபர் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றவர் செனெட் சபை உறுப்பினராகவும், துணை அதிபர் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றவர் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராகவும் பொறுப்பேற்கும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.

வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஊழல், வரி உயர்வு, சுகாதார கட்டமைப்பில் தனியார்மயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இவான் டியூக் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர்.

Gustavo Petro

கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கொலம்பிய பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. மாபெரும் மக்கள் எழுச்சியானது, சுகாதாரம் மற்றும் வரி சீர்திருத்த சட்ட முன்வடிவுகளை, அரசாங்கம் வாபஸ் பெறச் செய்தது. பொது வாக்கெடுப்பு மூலமாக குஸ்தவோ பெட்ரோ அதிபர் தேர்தல் வேட்பாளரானார். வலதுசாரி உள்ளிட்ட இதர வேட்பாளர்களும் அத்தகையதொரு செயல்முறை மூலமாகவே தேர்வாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாட்டில் வாழும் கொலம்பிய மக்களின் வாக்குகளும் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்தியாவில் உள்ள கொலம்பிய வாக்காளர்களில் 35% வாக்காளர்கள் பெட்ரோவுக்கு வாக்களித்துள்ளனர்.

பெட்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்த ஹெர்னாண்டஸ், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் பெட்ரோ உறுதிப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, அர்ஜெண்டினா, சிலி, மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள் குஸ்தவோ பெட்ரோவுக்கு வாழ்த்து தெரிவிதுள்ளனர்.

இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பிய நாட்டின் மக்கள் தொகை 50 மில்லியன் ஆகும். இதில் வாக்களிக்க தகுதியுடைவர்கள் 39 மில்லியன் நபர்கள் ஆவர். மக்கள் தொகையின் படி இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் மூன்றாவது பெரிய நாடான கொலம்பியாவில், M-19 எனும் ஆயுதக்குழுவில் கிளர்ச்சியாளராக செயல்பட்ட பெட்ரோ சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானவர். பின்னர், மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். ஆயுதப் போராட்ட பாதையை கைவிட்ட அந்தக் குழு 1990ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது. அதன் நீட்சியாக M-19 ஜனநாயக முன்னணி என்ற அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு, அரசியல் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் அக்கட்சி பங்கேற்க தொடங்கியது; அந்நாட்டின் அரசியல் அமைப்பையே மாற்றி எழுதியது.

உள்நாட்டுப் போர்களின் நீண்ட வரலாற்றைக் கொண்ட கொலம்பிய நாட்டில் பெட்ரோவின் வெற்றி அதி முக்கியத்துவம் வாய்ந்தது. பல தசாப்தங்களாக அதி தீவிர இடதுசாரிக் குழுக்கள் மற்றும் ஆயுதப் போராட்ட பாதையை ஏற்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைக் கொலம்பிய நாட்டு அரசாங்கங்கள் எதிர்கொண்டு வந்தன. கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படைப்பிரிவு ((FARC) 1964ஆம் ஆண்டில் கொலம்பிய கம்யூனிஸ்ட் கட்சியின் படைப்பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. நீண்ட ஆயுதப் போராட்டங்கள் மற்றும் மோதல்களுக்குப் பிறகு 2016ஆம் ஆண்டில் ஆயுதப் பாதையை நிராகரித்துவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்பிட FARC முடிவு செய்து, அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் கியூப நாட்டின் தலைநகரமான ஹவானாவில் நடைபெற்றன. கியூபா, சிலி மற்றும் வெனிசுலா நாட்டின் அதிபர்கள் மற்றும் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆயுதப் போராட்டம் முடிவுற்றதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியது. ஐந்து தசாப்தங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரின் விளைவாக 2,60,000 நபர்கள் கொல்லப்பட்டனர்; 70 லட்சம் நபர்கள் புலம் பெயர்ந்தனர்.

Francia Márquez

அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் தற்செயலான ஒரு நிகழ்வு அன்று. கடந்த இரண்டு தசாப்தங்களாக, 12க்கும் மேற்பட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகள் இடதுசாரி வேட்பாளர்களை அதிபர் பதவிக்கு தேர்வு செய்ததுடன் செனெட் மற்றும் பிரிதிநிதிகள் சபையில் அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. 1960 மற்றும் 1970களின் காலகட்டங்களின் போது, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஜனநாயக நடைமுறைகள் மிகவும் பலவீனமாக இருந்தது. மக்களின் தேர்தல் வழிப்பட்ட தீர்ப்புகளுக்கு இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இராணுவங்கள் மதிப்பு அளித்தது இல்லை. 21ஆம் நூற்றாண்டில், பொதுவாக, இராணுவம் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதோடு, இடையூறுகள் எதுவும் செய்வதில்லை. மேலும், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் சமூக கட்டமைப்பு மாற்றங்கள் அரசியல் – சித்தாந்த மாற்றங்களுக்கு வித்திடுகிறது. மக்கள் தொகையில் பெரும்பாலோர் நகரப் பகுதிகளில் வாழ்ந்து வருவோர் ஆவர். நகரக் கட்டமைப்புகள் அதி வேகமாக வளர்ந்து வருகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக 20ஆம் நூற்றாண்டு வர்க்கப் பரிமாணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்  21ஆம் நூற்றாண்டில் பல புதிய வர்க்கப் பரிமாணங்களின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளன. தகவல் மற்றும் தொழில்நுட்பம் முக்கியமான பாத்திரம் வகித்து வருகிறது. ‘டிக் டாக் மன்னன்’ என்று அறியப்படும் ஹெர்னாண்டசை எதிர்த்து இடதுசாரி கூட்டணி திறம்பட பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஊடகங்களை இடதுசாரிகள் மிகச்சிறப்பாக பயன்படுத்தினர்.

தேர்தல் பிரச்சாரத்தில் வேலையின்மை உள்ளிட்ட இளைஞர்களின் பிரச்சினைகள், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பெண்கள் பெருமளவில் திரண்டனர். ஏழை மக்கள் வீறுகொண்டு எழுந்தனர். மக்கள் மாற்றத்தைக் கோரினர். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நாடாளுமன்ற போராட்ட வடிவங்களை முற்போக்கு சக்திகள் சீரிய முறையில் ஆய்ந்தறிந்து பயன்படுத்தி வருகின்றனர். புதிய எழுச்சியுடன் இடதுசாரிகள் மற்றும் இதர முற்போக்காளர்கள் களத்தில் முன்னேறி வருகிறார்கள்.

தமிழில்: அருண் அசோகன்  

Exit mobile version