Site icon சக்கரம்

முகமது ஜூபைர் : மதச்சார்பின்மைப் போராளி!

-ஜி.ராமகிருஷ்ணன்

த்திரிகையாளர் முகமது ஜுபைர் (Mohammed Zubair), கடந்த ஜூன் 27 ஆம் தேதி, டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட ஒரு டுவிட்டர் பதிவை தோண்டி எடுத்து தற்போது அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த வழக்கில் கைது செய்யும் அளவுக்கான முகாந்திரம் ஏதுமில்லை. ஜுபைரின் தரப்பை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால பிணை வழங்கியது. இருப்பினும், வேறு ஒரு வழக்கினை காரணம் காட்டி உ.பி., மாநில காவல்துறை அவரை மீண்டும் கைது செய்தது. உ.பி., மாநில காவல்துறை மட்டும் ஜுபைரின் மீது 5 வழக்குகளைத் தொடுத்திருக்கிறது.

உடனடிக் காரணம்

கைதுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் வழக்குகள் பழையவை. அவை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். முதலில், இந்த கைதுக்குப் பின் இருக்கும் உடனடிக் காரணத்தை அலசுவோம். பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா, டைம்ஸ் நவ் (Times Now) என்ற ஆங்கில ஊடகத்தில் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் கண்டனத்திற்குரிய விதத்தில் நபிகள் நாயகம் பற்றி ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார். அவரின் பேச்சு நாடு முழுவதும் போராட்டங்களுக்கு வித்திட்டது. அப்போதுதான் பத்திரிகையாளர் முகமது ஜுபைர், நூபுர் ஷர்மாவின் கருத்துக்கள் புதியவை  அல்ல என்பதையும், வன்முறையை விதைப்பதற்காக சங்பரிவாரம் தொடர்ந்து பயன்படுத்திவரும் வாதங்களே என்பதையும் அம்பலப்படுத்தினார். நூபுர் ஷர்மாவின் பேச்சுக்கள் இந்தியாவில் மட்டும் எதிர்வினைகளை உருவாக்கவில்லை. உலகம் முழுவதும் இருந்து இஸ்லாமிய நாடுகளின் கண்டனக் குரல் எழத் தொடங்கியது. இதனால் வேறு வழியே இல்லாமல் பாஜக சில நடவடிக்கைகளை மேற் கொண்டது. நூபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து நீக்குவதாகவும், எந்த மத கருத்துக்களையும் புண்படுத்தக் கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் அறிக்கை வெளியிட்டது.

இந்த நடவடிக்கை, சர்வதேச சமூகத்திற்காக மேற்கொண்ட மேற்பூச்சு நடவடிக்கையே. உண்மையில், நூபுர் ஷர்மாவுக்கு பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும் கனிவு காட்டின. நூபுர் ஷர்மா மீது தொடுக்கப்பட்ட வழக்கின் எஃப்.ஐ.ஆரை டெல்லி போலீஸ் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.  “ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதால் எதையும் பேசிவிட முடியாது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு இதுபோன்ற பொறுப்பற்ற உங்கள் செயல்களே காரணம்” என்று கூறி நூபுர் ஷர்மா ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தை பா.ஜ.கவினர் வெளிப்படையாக எதிர்த்தார்கள். உடனே, முகமது ஜுபைருக்கு எதிரான வன்மத்தை கக்கத் தொடங்கினார்கள். முதலில் பாஜகவின் ஐடி பிரிவை சேர்ந்தவர்கள் கடுமையான வார்த்தைகளில், முகமது ஜுபைரை கைது செய்ய வேண்டும் என எழுதத் தொடங்கினார்கள்.இதனைத் தொடர்ந்தே அவரின் கைது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு எதிராக சங்பரிவாரங்கள் பொங்கியெழுந்தார்கள். சில ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகளை பிடித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட வைத்தார்கள். இப்போது அதே  நீதிமன்றம், நூபுர் ஷர்மா கைதுக்கு இடைக்காலத் தடையும் விதித்துள்ளது. வெளிநாடுகளுக்கு ‘மதச் சார்பின்மை வேசம்’, உள்நாட்டில் ‘ஆத்திரமூட்டல் திட்டம்’ இதுதான் பா.ஜ.க மக்களுக்கு அறிவிக்கும் செய்தி.

ஏன் இத்தனை ஆத்திரம்?

முகமது ஜுபைர் மீதான பாஜக/சங்பரிவாரத்தின் ஆத்திரம் ஒரு நாளில் எழுந்தது அல்ல. பத்தாண்டு காலம் நோக்கியா நிறுவனத்தில் கணினி பொறியாளராக பணியாற்றிவந்த முகமது ஜுபைர், அவருடைய நண்பர் பிறரிக் சின்ஹா (Pratik Sinha) உருவாக்கிய ‘ஆல்ட் நியூஸ்’ (Alt News) என்ற இணையதளத்தில் பணியில் சேர்ந்தார். அது செய்தி நிறுவனம் அல்ல. உண்மைகளை கண்டறியும் நிறுவனம். சமூக ஊட கத்தின் பயன்பாடு அரசியலில் முக்கியமான இடத்தை பெற்றுவிட்ட பின்னணியில், உருவாகியிருக்கும் புதிய சூழலுக்கான ஊடகம் அது. வதந்திகளையும், போலிச் செய்திகளையும் உருவாக்கி தங்களுடைய விருப் பத்திற்கு ஏற்ப அரசியலை வடிவமைக்கும் சக்திகளுக்கு எதிரான செயல்பாடாக இது அமைகிறது. எனவே ஆல்ட் நியூஸ் இணையதளம் பா.ஜ.கவின் பல திட்டங்களை அம்பலப்படுத்தும் இடத்தை பிடித்துக் கொண்டது மிக இயல்பாக நடந்தது. இவர்களுடைய இணையதளத்தை 5 இலட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

முகமது ஜுபைர் உண்மைகளை ஆய்வு செய்து போலிச் செய்திகளை அம்பலப்படுத்தினார். சாதி மற்றும் மத அடிப்படையில் வன்முறையை தூண்டும் வீடியோ, ஆடியோக்களை ஆய்வு செய்து உடனுக்குடன் அவற்றின் பின்னணிகளை வெளியிட்டார். இவ்வாறு அவர் மேற்கொண்ட பணியினால் சாதி மற்றும் மத அடிப்படையில் நடக்கவிருந்த ஏராளமான கலவரங்களும், வன்முறைகளும் கூட தடுக்கப்பட்டன என்கிறார்கள் ‘ஆல்ட் நியூஸ்’ வாசகர்கள். இதே துறையில் தொடர்ந்து செயல்பட்டதன் காரணமாக முகமது ஜுபைர் போலியான செய்திகளின் ஆதாரம் எது என்பதையும் கண்டறிய முடிந்தது. திட்டமிட்ட விதத்தில் வதந்திகளை உருவாக்கி பரப்புவதையே முழு நேரப் பணியாக வைத்திருக்கும் சுமார் 40 இணையதளங்களை அவர் அம்பலப்படுத்தினார்.

சமூக செயல்பாட்டாளர்கள் மீது பாலியல் ரீதியிலான தாக்குதலை தொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ‘சுல்லி டீல்’ என்ற செயலியையும், அரசு பதவிகளிலும் ஊடகங்களிலும் செயல்படுவோர் குடும்பத்தினரை குறிவைத்து ஆபாச வசவுகள் வீசும் ‘புல்லி பாய்’ என்ற செயலியையும் அவர்கள் கண்டறிந்தனர். இந்த பிரத்யேக செல்போன் செயலிகளில் நீதிபதி ஒருவரின் இணையர் உட்பட ஏராளமான நபர்களுடைய தனிப்பட்ட விபரங்கள் பகிரப்பட்டிருந்தன. இதுபோன்ற சதிச் செயல்களை தேடித் தேடி அம்பலப்படுத்தியதுதான் ஜுபைர் மீது சங்பரிவாரத்தின் ஆத்திரம் குவியக் காரணமாக அமைந்தது.

என்ன வழக்கு?

இப்போது ஜுபைர் கைது செய்யப்படுவதற்கு காரணமாக சொல்லப்பட்டிருக்கும் வழக்குகளில் 2 வழக்குகள் ஹத்ராஸ் வன்கொடுமை தொடர்பானது. இன்னொரு வழக்கு லக்கிம் பூர் கேரி என்ற பகுதியில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது தொடர்பான செய்திகளைப் பற்றியது. முசாபர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மத வன்முறை தொடர்பான 2 வழக்குகள். இந்த வழக்குகள் அனைத்திலுமே முகமது ஜுபைர் செய்த பணி, மறைக்க முயற்சித்த உண்மைகளை அம்பலப்படுத்தி, வன்முறையைத் தூண்டும் வதந்திகளை உடைத்ததுதான். காவல்துறை, இதற்காகவே ஜுபைர் போன்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க அதை விரும்புமா? ‘டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்த அதே டுவிட்டர் பதிவுகள் மீது, உ.பி., காவல்துறையும் வழக்கு பதிந்திருப்பது ஏன்? இது ஒரு விஷச் சுழற்சியை உருவாக்கத்தானே. ஒரு வழக்கில் விடுதலை பெற்றால் இன்னொன்றில் அவரை கைது செய்து காவல்துறை கட்டுப்பாட்டிலே அவரை வைத்திருந்தார்கள். தற்போது, உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்ததோடு இணையதளப் பணியை அவர் தொடரலாம் எனவும் கூறியுள்ளது. அவரின் விடுதலைக்காக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்தன. 

உண்மை என்ன செய்யும்?

முதல் முதலாக முகமது ஜுபைர் வெளியிட்ட செய்தியின் மூலம், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது இணையதளத்தை திருத்தி அமைக்கவும், விளக்கம் கொடுக்கவும் நேர்ந்தது. அதன் பிறகு அவர் ஏராளமான போலிச் செய்திகளை அம்பலப் படுத்தியிருக்கிறார். மறைக்கப்பட்ட விபரங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ஹரித்துவாரில் நடந்த துறவியர் மாநாடு ஒன்றில், முஸ்லிம்களை இனப் படுகொலை செய்வோம் என்று உறுதிமொழி எடுத்தார்கள். மிக மிக ஆபத்தான இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை ‘ஆல்ட் நியூஸ்’ தளமே அம்பலப்படுத்தியது. அதன் பிறகே காவல்துறை அந்த வெறுப்பூட்டும் நிகழ்ச்சியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. மத நல்லிணக்கத்திலும், மதச்சார்பின்மையிலும் அக்கறையுடையோர் கடு மையான கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள். இத னால்தான் உண்மையின் மீதான தாக்குதலை பாஜக அரசாங்கம் முன்னெடுக்கத் தொடங்கியது. 

2021 மே மாதத்தில், சுதர்சன் என்ற செய்தி அலை வரிசையில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதல் பற்றி ஒரு செய்தி வெளியாகிறது. ஆனால் அந்த வீடியோவில் மதினாவில் அமைந்த ஒரு மசூதியை சித்தரித்து அதன் மீது குண்டு வீசுவது போல  காட்டுகிறார்கள். உடனே முகமது ஜுபைர் அந்த செய்தியை சுட்டிக்காட்டி ஒரு பதிவு செய்கிறார். அந்த செய்தி நிறுவனத்தின் இந்தச் செயல் வன்முறையை தூண்டும் நோக்கம் கொண்டது என்பதால் உத்தரப்பிரதேச காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பதிவு செய்திருக்கிறார். ஆனால் உ.பி., காவல்துறை வலதுசாரிகளிடம் புகார் பெற்று ஜுபைர் மீது வழக்குப் போட்டது. கர்நாடகத்தில் ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பின் தேசிய செயலாளரான பிரமோத் மாலிக் என்பவர் இஸ்லாமியர்களிடம் எந்த வணிகமும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்துக்களுக்கு அழைப்பு விடுப்பதுடன், முஸ்லிம்களை வேரோடு அகற்றுவோம் என பேசுவது ஊடகங்களில் வெளியாகிறது. அந்த செய்தியை சுட்டிக்காட்டி கர்நாடக காவல்துறைக்கு ஜுபைர் ஒரு பதிவு மேற்கொள்கிறார். ஆனால் டுவிட்டர் நிறுவனத்திற்கு புகார் கொடுக்கப்பட்டு அந்த வீடியோ அகற்றப்படுகிறது. செய்தி மறைக்கப்படுகிறது.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் தொலைக் காட்சி ஊடகங்கள் கைப்பற்றப்பட்டுவிட்டன. எனவே,  அவர்களால் தமக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையை அடைந்துவிட்ட பா.ஜ.க இப்போது இணைய வெளியிலும், தன் முயற்சியிலும் உண்மைக்காகப் போராடும் தனி நபர்களை குறிவைத்து வீழ்த்த முயற்சிக் கிறது. முகமது ஜுபைர், அவர்களின் சமீபத்திய இலக்கு. பா.ஜ.க அமைக்கத் துடிக்கும் இந்துத்துவ  இந்தியா, அராஜகத்தின் ஆட்சியாகவே இருக்கும் என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகளாக உள்ளன. நாம் பா.ஜ.க வின் திட்டத்தை முறியடித்திட வேண்டும். நாம் ஜுபைருக்காக கொடுக்கும் ஆதரவு, நமக்காக, நம் எதிர்காலத்திற்காக, மக்கள் ஒற்றுமைக்காக, மதநல்லிணக்கத்திற்காக தரும் ஆதரவு ஆகும்.

Exit mobile version