இளம் தொழிலதிபர் மாடசாமி சுவேந்திரன் சிறு கைத்தொழில் துறை முனைப்புடன் செயலாற்றி வருபவர்.
இத்துறையில் அரச நிறுவனங்களினால் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று பணப்பரிசில்களும் சான்றுகளும் பெற்ற ஒருவர்.சமகாலத்தில் பெரு ளாதார நெருக்கடியான சூழலில் தன் தொழிற்சாலையை திறன்பட நடத்தி வரும் இவர் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி
நீங்கள் இளம் தொழில் அதிபராக வருவதற்கான காரணம் என்ன?
நான் யாழ்.பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டப்படிப்பை முடித்தவன். அதில் சிறுகைத்தொழில் சம்பந்தமான ஒரு பாடப்பிரிவு இருக்கிறது. அதில் ஏதாவது தொழில் ஒன்றை ஆரம்பித்துச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் படிக்கின்ற போது இருந்தது. ஆரம்பத்தில் இருந்து குடும்பச் சூழல் காரணமாக தொழில் செய்ய ஆரம்பித்து விட்டேன். கோழிகள் வளர்த்தேன். மாடுகள் வளர்த்தேன். இத்தொழிலைச் செய்வது என்பது கடினமானது. அது உயிரோடு சம்பந்தப்பட்டதால் கடினம்.
இப்படியான சந்தர்ப்பத்தில் கைத்தொழில் ரீதியாக முயற்சிகளில் ஈடுபடலாம் என்ற சிந்தனை ஏற்பட்டது. அதுவும் பொருளியல் பாடத்தில் கற்ற விடயங்களை மனதிற் கொண்டு உள்ளூரில் கிடைக்கக் கூடிய மூலப்பொருட்களை பயன்படுத்தி ஏற்றுமதிப் தொழில்களில் ஈடுபடலாம் என்ற யோசனை வந்தது. ஏனென்றால் வெளிநாட்டில் இறக்குமதி செய்வதென்றால் முழுக்க வெளிநாட்டுப் பொருட்களில் தங்கி இருக்க வேண்டும். எமது பிரதேசத்திலுள்ள சூழலில் என்ன கிடைக்கின்றதோ அதனை வைத்து ஆரம்பிக்கலாம் என்ற நோக்கில் தான் தென்னந் தும்புத் தொழிலை ஆரம்பித்தேன்.
2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கும் போது இதனை ஆரம்பித்தேன். இதற்கான முதலீட்டை வங்கியில் இரண்டு மில்லியன் கடனாகப் பெற்றேன்.
இதற்கான இயந்திரப் பொருட்களைப் பெற்றேன். நான்கு வகையான இயந்திரப் பொருட்கள் பயன்படுத்த வேண்டும். உறி மட்டையை எடுத்து அதனைச் சின்னச் சின்னத் துண்டுகளாகப் பிரிக்க வேண்டும். அதற்கென ஒரு இயந்திரம் இருக்கிறது. அதில் இருந்து மேலும் சின்னத் துண்டுகளாகப் பிரிக்க வேண்டும். அதனைச் ‘சிப்ஸ்’ என்று சொல்லுவார்கள். அதனை அரிப்பதற்கு ஒரு இயந்திரம் இருக்கிறது. இதில் அளவுக்கு அதிகமாக வரும் கழிவுகளை ஒதுக்குவதற்கு இயந்திரம் இருக்கிறது. அதனை இரண்டாக உடைப்பதற்கென இயந்திரம் இருக்கிறது. தோலைப் பிரிப்பதற்கு ஒரு இயந்திரம் இருக்கிறது. இவைகளை எடுத்துப் பின்னர் தளத்தில் போட்டு காய வைத்தல் வேண்டும். அதனை அளப்பெதற்கென வெப்பமானி இருக்கிறது. அது 13 விகிதத்திற்குள் இருத்தல் வேண்டும்.
இது சுமார் 39 அல்லது 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு பொருட்களை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யும் கம்பனி 22 வருடங்களாக இயங்கி வருகின்றன. இதன் பிரதான முகவர் நிலையம் குருநாகலில் அமைந்துள்ளது. குருநாகலில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாங்கள் உற்பத்தி செய்து குருநாகலில் அமைந்துள்ள முகவர் நிலையத்திற்கு கொடுக்கின்றோம்.
இன்றைய நாட்டின் பொருளாதார நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு அந்நிய செலவாணியைப் பெற்றுக் கொள்வதில் பாரிய பங்களிப்பை தும்பு ஏற்றுமதிப் பொருள் ஈடு செய்து வருகிறது. இறக்குமதி விடயத்தில் நாம் தங்கி இருக்க வில்லை. மூலப்பொருள் எங்களுக்கு தேவையில்லை. எனினும் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் உறி மட்டைகள் வருவது குறைவு. ஆனாலும் தேங்காய் எண்ணெய் ஆலையொன்றையும் நிர்மாணித்து செய்து வருகின்றேன். தேங்காய்களை கொள்வனவு செய்வதால் மட்டைகள் இலவசமாக கிடைக்கும். மட்டைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என விலை மதிப்பீடு இருக்கிறது. அந்த காய்ந்த தேங்காய்களில் இருந்து கொப்ராவும் உற்பத்தி செய்கின்றோம். இரண்டாவது தென்னை முக்கோணப் பிரதேசமாக மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. குருநாகல், புத்தளம், சிலாபம் போன்ற பிரதேசங்கள் தென்னை முக்கோண வலயம் இருப்பது போன்று வடபுல பிரதேசமும் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த அடிப்படையில் உற்பத்தி கூடிக் கொண்டு இருப்பதால் ஏற்றுமதி கூடிக் கொண்டு செல்லுகிறது. இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு தென்னை தும்பு ஏற்றுமதி பாரிய பங்களிப்பாக இருக்கிறது.
இலங்கையில் உண்மையிலேயே 90 விகிதமான கைத்தொழிகளில் சிறிய நடுத்தர கைத்தொழில்கள்தான் முக்கியத்துவம் பெறுகிறது. அதில் தான் இலங்கையின் பொருளாதாரம் கூடுதலாக இருக்கிறது. பாரிய கைத்தொழில் என்று ஒன்று எமது நாட்டில் இல்லை. கப்பல் கட்டுவதோ, விமானம் கட்டுவதோ, ஒட்டோ மொபைல் எமது நாட்டில் இல்லை. சிறு கைத்தொழில் நடுத்தர கைத்தொழில்களில் தெங்கு ஏற்றுமதி பிரதான இடத்தை விகிக்கிறது. அந்த வகையில் இந்த நெருக்கடியான கால கட்டத்திலும் பெரிய பங்களிப்பை நாம் செய்கிறோம்.
?.பொருளாதார நெருக்கடியான கால கட்டத்தில் நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள் யாவை?
எங்களுடைய தொழில் நிறுவனமும் எரிபொருள் காரணமாக கடினமான சவாலை உதிர்நோக்கியது என்பது உண்மையே.வாகனங்களில் சென்று தான் தேங்காய்கள் சேகரிக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாகனத்தில் ஏற்றி குருநாகலைக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். 20 லீட்டர் தான், டீசல் வாகனத்திற்கு அடிக்கலாம். ஒரு கிழமைக்கு 20 லீட்டர் என்றால் உண்மையிலே காணாது. இரண்டு தடவை போய் வரத்தான் காணும். ஒரு பக்கத்தில் இந்தப் பாதிப்போடு மறுபக்கத்தில் மின்வெட்டும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபேஸ் லைன் மின்சாரம் அவசியமாக இருக்கிறது.அது ஒரு பாரிய நெருக்கடி. ஏனென்றால் நாங்கள் ஆட்களை நாட் கூலிக்கு அமர்த்தி வேலை செய்கின்ற போது மூன்று மணித்தியாலம் மின்வெட்டு இடம்பெற்றால் நாங்கள் அதற்கு மாற்றீடாக வேறு வேலைகளை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். உரிய வேலையை உரிய நேரத்திற்கு முடிக்க இயலாமை உள்ளன.
கையால் பிரிக்கின்ற வேலை அல்லது பொதி செய்யும் வேலை ஏதாவது கொடுத்து சமாளித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இருந்த போதிலும் இயந்திரங்களின் செயற்பாடு தேவைக்கு ஏற்ப செய்து கொள்ள முடியவில்லை. எனினும் இந்த நெருக்கடியை ஓரளவு முகாமைத்துவம் செய்து செயற்பட்டு வருகின்றோம். இதை சரியாகச் செய்யா விட்டால் நாங்கள் பின்னடைவை எதிர்நோக்க வேண்டி வரும்.
ஆறு பேர் தொழில் புரிகிறார்கள். மாதத்திற்கு 8000- 12000 கிலோ வரையிலும் ஏற்றுமதிகள் செய்யப்படும். அவர்களுடைய பெரிய கண்டினர் வாகனங்கள் வரும். 4000 – 5000 கிலோ வரையிலும் ஏற்றுவோம். இதனை ஒரு வாரம் அல்லது ஐந்து நாட்களுக்குள் ஏற்றுவோம். சில வேளை மேலதிகமான நேரங்களையும் ஒதுக்கி வேலை செய்து ஏற்றுவோம். ஒரே நாளில் 800 கிலோவும் உற்பத்தி செய்வோம். அவ்வாறு வேலை செய்தால் 6000- – 8000 கிலோவும் உற்பத்தி செய்து ஏற்றுவோம்.
கிளிநொச்சி ரொட்ரிக் கழகத்தின் பழங்களிப்பு என்ன?
கிளிநொச்சி ரொட்ரிக் கழகம் வியாபாரத்தை விரிபடுத்துவதற்கு பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்தக் கழகத்தில் அங்கத்துவம் வகிப்பதால் அதிகளவிலான தொடர்புகள் ஏற்படுகின்றன. பல்வேறு துறைசார்ந்த தொழில் நிபுணர்கள் அங்கத்துவம் வகிக்கின்றார்கள். அந்த வகையில் என்னுடைய தொழில் துறையை மென்மேலும் விரித்தி செய்து கொள்ள முடியும். இக்கழகத்தினால் நடத்தப்படும் தொழில் முகாமைத்துவ செயலமர்வுகள், கருத்தரங்குகள் போன்றவை இடம்பெறும். அதன் சந்தைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் வியாபார தொழில் நுட்பங்கள் போன்றன கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றன. இதில் இணைந்து கொண்டமையால் வேறு நிறுவனத்தின் உதவி எனக்கு கிடைத்தது. அந்த உதவியினால் என்னுடைய தொழில் துறையை மேலும் விரிவுபடுத்திச் செல்வதற்கு உதவியாக இருக்கிறது. தற்போதைய தலைவராக யோசுவா அடிகளார் இயங்கிக் கொண்டு இருக்கிறார். அவர் சமூகச் செயற்பாட்டில் மிகுந்த அனுபவமிக்கவர். வீட்டுச் தோட்டச் செய்கை , மரம் நடுகைத் திட்டங்களை ஊக்குவித்தல், கால்நடை வளர்ப்புச் செய்கைப், பண்ணையாளர்களுக்கு மாட்டுத் தொழுவம் அமைத்துக் கொடுத்தல், நீர்வசதிகள் எற்படுத்திக் கொடுத்தல் போன்ற பெரியளவிலான உதவிகள் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இக்கழகத்தை திறன்பட நடத்தி வருகிறார் என்று குறிப்பிடலாம்.
நீங்கள் மாடுகள் வளர்ப்பது பற்றிக் கூறினீர்கள் அவை தொடர்பில்,..
சுமார் 30 மாடுகள் உள்ளன. இது கடினமா தொழில் தான். ஆனாலும் இத்தொழிலையும் செய்து வருகின்றேன். அதன் பால்களை எடுத்து விநியோகம் செய்து வருகின்றோம். தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றபடியால் தேங்காய் எண்ணெயில் இருந்து எடுக்கும் புண்ணாக்குகளை மாட்டின் உணவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள கூடியதாக இருக்கிறது. பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. கொப்பராவில் இருந்து தேங்காய் எண்ணெய் பிரிந்து போக மிகுதிக் கழிவாகிய சக்கையாக வருவதுதான் புண்ணாக்கு ஆகும். அதிகமான பால்களைக் கறப்பதற்காக மாடுகளுக்கு புண்ணாக்கைப் பயன்படுத்தி வருகின்றோம். அதே போன்று வேளாண்மையும் செய்து வருகின்றேன். சிறு தானியப் பயிர்களும் செய்து வருகின்றேன். பயறு பயிர்ச் செய்கை பண்ணி வருகின்றேன். உரம் பற்றிக் கவலை இல்லை. மாட்டுச் சாணி,கோமயம் ஆகிவையை உரத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றோம். இதில் நைட்ரசன் அதிகம் இருக்கிறது. திரவ உரமாகப் பயன்படுத்தலாம்.
என்னிடம் நேரடியாக ஆறு பேர் வேலை செய்தாலும் மறைமுகமாக 15 பேர் வேலை செய்கிறார்கள்.மறைமுகமாக பகுதிநேர தொழிலுக்காக 10 பேருக்கு மேல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிரந்தமாக வேலை செய்பவர்களில் ஐந்து பேர் பெண்கள் ஆவார்கள். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் இப்படி மிகவும் வறிய குடும்பப் பெண்கள் தான் இங்கு வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு முன்னுரிமை வழங்கித் தான் இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுகின்றேன்.
வேறு எவையேனும் புதிய முயற்சிகள் உள்ளதா?
தேங்காய் மட்டையை சிறிய துண்டுகளாக செய்து கொடுக்கின்றோம். அதனை எமது ஏற்றுமதியாளர்கள் சீமெந்து கல்லுமாதிரி பொதி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்களுக்கு ஐந்து தொழில் பேட்டைகள் இருக்கின்றன. இதனை வெளிநாடுகளில் அதாவது கனடா போன்ற நாட்டில் கழிவு நீரைச் சுத்திகரிப்பதற்கு இந்த தென்னை மட்டைத் துண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனை 40 வகையிலான தேவைகளுக்கு வெளிநாட்டவர்கள் பயன்படுத்துவதாகக் கூறுகின்றார்கள்.ஐரோப்பிய நாடுகளில் நிலத்தை பண்படுத்த பயன்படுத்துகின்றனர்.ஆறு கண்டங்களைச் சேர்ந்த 40 நாடுகளுக்கு இந்த தென்னம் மட்டை துண்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதை நாங்கள் ஏற்றுமதி செய்வதென்றால் ஏற்றுமதி திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும். அதை கப்பலில் அனுப்ப வேண்டும். அதற்கு வெளிநாட்டில் முகவர் வேண்டும். இதைப் பற்றி நான் தேடிக் கொண்டேதான் இருக்கின்றேன். மிகச் சிறியளவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இன்று பெரியளவில் வளர்ந்து விட்டது. அடுத்த கட்டமாக நாங்கள் இங்கே இருந்து அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.
?.நேரே வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான உங்களுடைய எதிர்கால இலக்கு என்ன?
//.நான் பொருளியல்துறை பட்டதாரியாக இருந்த போதிலும் அரசாங்க உத்தியோகத்தில் அதிகம் நாட்டம் இல்லை. முழுக்க வியாபாரத் துறையில் முன்னேறலாம் என்ற இலட்சியத்தைக் கொண்டுள்ளேன். நான் படித்த பாடத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றேன். படித்த கல்வியை நடைமுறை வாழ்க்கையோடு பயிற்சியாக செய்து கொண்டிருக்கின்றேன். உற்பத்தி என்றால் எப்படி, உற்பத்திக் கோட்பாடு, செலவுக் கோட்பாடு என்ற பாடங்கள் இருக்கின்றன. இலாபத்தை எப்படி உச்சப்படுத்தலாம் . செலவை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி படித்துள்ளேன், தேங்காய் கொள்வனவு செய்து அதில் இருந்து மட்டையை தும்புக்கு எடுத்து தேங்காய் எண்ணெய் உருக்கி அதில் இருந்து மாட்டு புண்ணாக்கைப் பெற்று பயன்படுத்தி வருகின்றோம். அதன் சிரட்டையினையும் விற்பனை செய்து வருகின்றோம்.
நீங்கள் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு என்ன அறிவுiரை கூற விரும்புகின்றீர்கள்?
எல்லாவற்றை விட தன் நம்பிக்கை இருத்தல் வேண்டும். இப்படியான நெருக்கடி நிலை வரும் போது அதனை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் தைரியம் இருத்தல் வேண்டும். மின்சாரம் வெட்டு, எரிபொருள் தட்டுபாடு நிலவுகின்றன. அதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு காரியங்களைச் செய்தல் வேண்டும்.இது ஒரு நெருக்கடியான கால கட்டம். தொடர்ந்து நாங்கள் முயற்சி செய்ய வேண்டும் . எங்களிடம் வளம் இல்லை. வசதி இல்லை என்று இருந்து விடக் கூடாது. உள்ளூரில் இருக்கக் கூடிய வளங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இறக்குமதி. மூலப் பொருட்களுக்குச் செல்லாமல் உள்ளூரில் உள்ள மூலப் பொருட்களை வைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளம் பட்டதாரிகள் தொழில் முனைவோர் என்ற போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் நான் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டேன்.
அதில் எனக்கு ரூபாய் 150,000 பணம் பரிசு தந்தார்கள். படிக்கும் போது நடைமுறையோடு தொழிலை செய்து கொண்டு சென்றேன். அதனால் எனக்கு தொழில் ஒரு பிரச்சினையாக இருக்க வில்லை. இன்றைக்கு நிறையப் பேர் வெறுமனே பாடத் திட்டத்தை மட்டும் படித்து விட்டு அரசாங்கத்திடம் வேலை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
வேலை இல்லை என்று குடும்பத்தில் தங்கி இருக்கத் தேவையில்லை. சில நபர்களுக்கு பயம். எப்படித் தொடங்குவது என்று. நான் ஆரம்பத்தில் கோழி வளர்ப்பிலே ஈடுபட்டேன்.
கலந்துரையாடியவர்: இக்பால் அலி